குழந்தைகளுடனான உறவு மேம்பட 21 வழிகள்

மகிழ்ச்சியான, ஆரோக்கியமான உறவை பேணுவதற்கு ஒவ்வொரு எதிர்மறையான தொடர்புக்கும் 5 நேர்மறையான தொடர்புகள் நமக்குத் தேவைப்படுகிறது.

By டாக்டர்.லாரா மார்கம்.

குழந்தைகளுடனான உறவு மேம்பட 21 வழிகள்

"கலைந்த கேசத்துடன் அயர்ந்து உறங்கும் குழந்தைகளைக் காண்கிறேன். கவலை என்னைப் பீடிக்கிறது. நான் இப்பிள்ளைகளுடன் நான் போதுமான அளவுக்கு சிரிப்பும் புன்னகையும் தழுவலுமாக நான் இருந்திருக்கிறேனா? அல்லது அவர்களது தினசரி கடமைகளோடு நான் சுருங்கிவிட்டேனா? பிள்ளைகள் வேகமாக வளர்கின்றனர். ஒரு நாள் உறங்கி எழும் நாளில் என் மகள்களில் ஒருத்திக்கு திருமணமாகியிருக்கக்கூடும்.

 ’போதுமான அளவுக்கு இவர்களுடன் நான் விளையாடியிருக்கிறேனா?; அவர்களின் வாழ்க்கையில் போதுமான அளவுக்குப் பங்கெடுத்திருக்கிறேனா?’-என்றெல்லாம் நான் என்னையே கேட்டுக்கொண்டு கவலைப்படக்கூடும்.

-ஜேனெட் ஃபேக்ரெல்.

தினசரி நடைமுறைகளுக்கு நம் குழந்தைகளை வழிநடத்துவது பெற்றோரான நம் பணிகளில் ஒரு பகுதி. அவர்களுக்கான எல்லைகளை வரையறுப்பது, தேவையற்ற வேண்டுகோள்களை மறுப்பது, அவர்களின் நடத்தையைச் சரிசெய்தல் ஆகியவை அவற்றில் அடக்கம்.

சில நேரங்களில் நாம் உணர்ச்சி வசப்பட்டு நம் குழந்தைகளிடம் தாராளம் காட்டிவிடுகிறோம். இதன் காரணமாக நம் குழந்தைகள் நாம் அவர்களை ‘ஒழுங்குபடுத்தினால்கூட’ எதிர்மறையாகப் புரிந்துகொள்வதில்லை. அன்பான, நேர்மறையான உரையாடல்கள் உறவை பலப்படுத்தவே செய்யும். அதனால்தான் நேர்மறையான உரையாடல்கள் தேவை என்கிறோம்.

மகிழ்ச்சியான, ஆரோக்கியமான உறவை பேண வேண்டுமென்றால் ஒவ்வொரு எதிர்மறையான தகவல் தொடர்புக்கும் 5 நேர்மறையான உரையாடல்கள் தேவைப்படுகின்றன.

எனவே, வங்கிக் கணக்கில் இருப்புக்கு அதிகமான அளவு தொகை எடுக்கும்போது என்ன விளைவு ஏற்படுமோ அதேபோல் நம்மிடம் நேர்மறையான தொடர்புகள் குறையும்போது நம் உறவுமுறையும் நலிந்துவிடுகிறது. இந்நிலையில் குழந்தைகள் நம்மிடம் முரண்படுகின்றனர் (அது 2 வயதுக்குழந்தையாக இருந்தாலும் சரி, 12 வயதுப்பிள்ளையாக இருந்தாலும் சரி).

வாழ்க்கை மிகவும் துரித கதியில் சென்று கொண்டிருக்கிறது. இதில் நீங்கள் செய்ய வேண்டியவை என்று வைத்துள்ள பட்டியலில் புதிதாக எதையும் சேர்க்கவேண்டியதில்லை. மாறாக குழந்தைக்கும் உங்களுக்குமான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் சில தினசரி பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டால் என்ன! 30 நாட்களுக்குப் பின் இதுவே வழக்கமாகவும் மாறிவிடுமே!

உங்கள் குழந்தைகளுடனான பிணைப்பை மேலும் அதிகப்படுத்த 21 வழிகளை உங்களுக்காகக் கொடுத்துள்ளோம்

1. ஒவ்வொரு குழந்தையையும் காலையில் உறக்கத்திலிருந்து எழும்போது ஒரு 5 நிமிடம் அணைத்துக் கொள்ளுங்கள்.

2. காலை உணவின்போது சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொண்டு உங்கள் குழந்தை ஒவ்வொருவரிடமும் இன்று என்னவெல்லாம் செய்ய இருக்கிறார்கள் என்று கேளுங்கள்.

3. காலை நேரத்தில் தினசரி செய்ய வேண்டிய வேலைகளுக்காக உங்கள் குழந்தைகளிடம் முணுமுணுப்பதற்கு மாறாக புகைப்படத்துடன்கூடிய ஓர் அட்டவணை தயார் செய்ய உதவுங்கள். அவற்றில் இடம்பெறும் பணிகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களைச் சார்ந்தது. நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் கேளுங்கள்.

4. மதிய உணவு டப்பாவில் அன்புடன் இரண்டு வரிகள் எழுதி அனுப்புங்கள்.

5. பள்ளிக்குச் செல்ல விருப்பமின்மையை உங்கள் குழந்தை தெரிவிக்கும்போது, ”இன்று வீட்டில் இருக்க வேண்டும்போல் தோன்றுகிறதா? நான் உன் உணர்வைப் புரிந்துகொள்கிறேன்” என்று ஆதரவாகப் பேசுங்கள்.

6. பள்ளிப் பேருந்தை அடையும்வரை உடன் சென்று ஏற்றிவிடும் பழக்கத்தை நிறுத்துங்கள். காரில் செல்லும்போது ஏதேனும் பாடுங்கள்

7. குழந்தையை அணைத்து விடைபெறும்போது, “உன்னை மறுபடியும் காண்பதற்கு மதியம்வரை காத்திருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா….” என்று சொல்லுங்கள். திரும்பி வந்தவுடன் அன்றைய நிகழ்வுகளைக் கேளுங்கள். அதேபோல் ”நல்ல பிள்ளையாய் இருக்க வேண்டும்” என்று சொல்வதற்கு மாறாக ”மகிழ்ச்சியாக இரு” என்று சொல்ல மறக்காதீர்கள்.

8. பகல் நேரத்தில் ஒரு 5 நிமிடம் கண் மூடி இருங்கள். அதேபோல் அலுவலகத்தைவிட்டு வெளியேறுவதற்கு முன் அனைத்தையும் ஒழுங்காக அதனதன் இடத்தில் வைத்துவிட்டு கிளம்புங்கள். இதன் மூலம் வீடு திரும்பினால் அலுவலகப் பணியை அப்படியே பின்னுக்குத் தள்ள முடியும். உங்கள் அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட முடியும். மாலை நேரத்தில் உங்கள் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட முடியும்.

9. உங்கள் குழந்தை உங்களுடன் காரில் பயணப்படும்போது உங்கள் அலைபேசி, பாடல் ஆகியவற்றை அணைத்துவிடுங்கள். உங்கள் குழந்தை சொல்வதை காதுகொடுத்து கேளுங்கள்.

10. குழந்தைகள் சண்டையிடும்போது உங்களுக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வை தக்கவைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் பக்கம் மட்டுமே பேசுவதைத் தவிர்த்து, குழந்தைகள் ஒவ்வொருவர் சொல்வதையும் கேளுங்கள். அத்துடன் பிரச்சனையை அவர்களே சரி செய்து கொள்ள அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

11. நீங்கள் அவனது சான்ட்விட்சை தவறாக வெட்டி விட்டீர்கள் என்பதால் அவனுக்குக் கோபம் இருக்கும். அதற்காக புதிதாக ஒன்றை தயார் செய்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் பிடிவாதத்துக்கும் இடமளிக்கக்கூடாது என்பதையும் நினைவில் வையுங்கள். நீங்கள் இந்த நேரத்தில் குழந்தையுடன் நெருக்கமாக இருங்கள். தான் பாதுகாப்பாக இருப்பதை உணர்வதுடன் தன் உணர்வை அழுகையின் வழியாக வெளிப்படுத்தவும் இலகுவாக இருக்கும்.

12. அவர்களது உச்சரிப்பு தேர்வு தயாரிப்புக்கு உதவுங்கள்; ஊக்கமளியுங்கள்.

13. அவர்கள் கூறும் நகைச்சுவையை ரசித்துச் சிரிக்கலாம்.

14. உங்கள் குழந்தை என்ன சொன்னாலும் பரவாயில்லை, உங்களை, அதன் இடத்தில் வைத்துப்பாருங்கள். குழந்தையின் உணர்வைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் இருவருக்குமான இணைப்பு இன்னமும் பலப்படும்.

15. ஒவ்வொரு குழந்தையுடனும் 15 ஸ்பெஷல் நிமிடங்களை செலவழிக்கவும். உங்களின் அன்பைக் கொட்டுங்கள். இந்தப் பழக்கம் மட்டுமேகூட உங்கள் குழந்தையுடனான உங்கள் உறவை மாற்றும். தலையணை, திண்டு (சோஃபாவில் பயன்படுத்தப்படும் தலையணை) முதலியவற்றைப் பயன்படுத்தி அவள் ஒரு கோட்டை கட்ட விரும்புகிறாளா? விடுங்கள், செய்யட்டும். நீங்களும் உதவலாம், தப்பில்லை..

16. இரவு உணவின்போது சுவையான கேள்விகளைக் கேட்டு, அதற்கு பதில் அளிக்க ஒவ்வொரு குழந்தைக்கும் நேரமளியுங்கள். (காண்க: 230 ideas for questions to ask.)

17. குளியலுக்கு முன்னர் தலையணை சண்டை நடக்கிறதா? நடக்கட்டும்!

18. நீங்கள் சொன்னபிறகும்கூட உறங்கச் செல்லாமல் ஆட்டம் போடுகிறார்களா? நகைச்சுவையாகப் பேசி காரியத்தை சாதியுங்கள்.

19. வகுப்பில் தான் எதிர்கொண்ட பிரச்சனை குறித்து குழந்தை சொல்லும்போது, அது ஒரு நீண்ட கதைபோன்று இருந்தாலும்கூட பொறுமையுடன் கேளுங்கள். இடைமறிக்காதீர்கள்; உணர்ச்சிவசப்படாதீர்கள்.

20. குழந்தைகளை உறக்க நேரத்துக்குத் தயார் செய்வதில் பொறுமையிழக்கிறீர்களா? அமைதியடையுங்கள். பின்னர் உங்கள் முயற்சியைத் தொடருங்கள்.

21. குழந்தைகள் ஒவ்வொருவரையும் ஒருசில நிமிடங்கள் தனித்தனியாக அணைத்துக் கொள்ளுங்கள். ”உங்களைக் குழந்தைகளாக பெறுவதற்கு நாங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்கிறோம்” என்று கூறுங்கள். ஒவ்வொரு நாளும் இரவில் உறங்கச் செல்லும்போது தன் உலகில் அனைத்தும் சரியாகவே நடந்திருக்கிறது என்ற எண்ணம் மட்டுமே குழந்தைகள் மனதில் இருத்தல் அவசியம்.

நேரம் அதிகமாக செலவாகுமே? ஆம், கண்டிப்பாக. இங்கே கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் எல்லா நாளும் ஒவ்வொரு குழந்தையுடனும் உங்களால் செய்ய இயலாது போகலாம். ஆனால் , இவற்றில் பெரும்பாலானவை அதிக நேரம் எடுக்காது. அதே நேரம், இவை எல்லாமே மேலும் இலகுவாக உங்கள் குழந்தைகளை வழிநடத்தும் என்பதும் உண்மை.

இவற்றை நீங்கள் ஒரு பழக்கமாகக் கொண்டுவரும்போது உங்கள் குழந்தைகள் மேலும் உங்களுடன் ஒத்துழைப்பர். சண்டைகள் குறையும். உங்களது வழிகாட்டலை விரும்புவர். ஒவ்வொரு நாளும் உங்கள் உறவுமுறையை பலப்படுத்தலாம். ஆக, பருவ வயதை அடையும்போது, உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மனம் திறந்து பேசுவது மட்டுமில்லாமல் உங்கள் ஆலோசனையையும் கேட்பர். அது பணம், காசு, சொத்து, சுகம் எல்லாவற்றையும்விட சிறப்பானது…இல்லையா!.                                                         

(டாக்டர் லாரா மார்கம் அவர்களின் ஒப்புதலுடன் மறுபதிவிடப்பட்டது.

மூலக் கட்டுரையைப் படிக்க…: https://www.ahaparenting.com/blog/What_will_you_do_with_your_child_today

கட்டுரையாளரைப்பற்றி:

லாரா மார்கம், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்ற மனநல ஆலோசகர். கீழ்க்கண்ட பிரபல நூல்களின் ஆசிரியர்:

• Peaceful Parent, Happy Kids: How to Stop Yelling and Start Connecting

• Peaceful Parent, Happy Siblings: How to Stop the Fighting and Raise Friends for Life

• The Peaceful Parent, Happy Kids WORKBOOK

AhaParenting.com தளத்தின் நிறுவனர்-ஆசிரியர்.

Join our Circles to share, discuss and learn from fellow parents and experts!

Looking for expert tips and interesting articles on parenting? Subscribe now to our magazine. Connect with us on Facebook | Twitter | Instagram | YouTube