இரட்டை சந்தோஷம்!

புதுச்சேரியைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் 10 ஆம் வகுப்பு தேர்வில் தலா 484 மதிப்பெண்கள் பெற்று ஆச்சரியமூட்டியிருக்கின்றனர். அவர்களுடன் ஒரு நேர்காணல்.

By கா.சு.துரையரசு  • 10 min read

இரட்டை சந்தோஷம்!

இரட்டைக்குழந்தைகள் பிறந்த வீட்டில் எல்லாமே இரட்டையாகத்தான் இருக்கும். மகிழ்ச்சி, பரவசம், செலவு, வரவு…எல்லாமே…அக்குழந்தைகள் ஒரே வகுப்பில் படிக்கும்போது அதுஒரு இனம் புரியாத நிறைவைத்தரும். அப்பிள்ளைகள், தங்களது 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் (தமிழக அரசுப் பாடத்திட்டம்) ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால்? மகிச்சிக்கு எல்லையுண்டா!

அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது புதுச்சேரியில். சோபியா கோம்ஸ், ஜூலியா கோம்ஸ் ஆகிய இரட்டை சகோதரிகள் தலா 484 (500க்கு) மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அவர்களுடனும் அவர்களது தாயார் திருமதி மேரி மேக்டலின் அனிதா அவர்களுடனும் நாம் பேசியவற்றிலிருந்து..

முதலில் உங்களுக்கு செல்லமேவின் சார்பில் வாழ்த்துக்கள்!

அனிதா: ரொம்ப நன்றி. எல்லாமே கடவுளின் அனுக்கிரகம். இவர்கள் பள்ளியில் ஏற்கனவே 6-7 இரட்டையர் இருந்தனர். ஆனால் இவர்கள் இருவர் மட்டுமே ஒரே மாதிரி மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றர். எனக்கு இரட்டிப்பு சந்தோஷம்.

தொடக்கத்தில் இருந்தே உங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் கிடைத்திருக்கிறது, இல்லையா!

அனிதா: உண்மை.

உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். எவ்வாறு தேர்வு தயாரிப்பில் ஈடுபட்டீர்கள்?

ஜூலியா, சோபியா; நன்றி. நாங்கள் தனித்தனியாகத்தான் படிப்போம். சேர்ந்து படிப்பதில்லை. நாங்கள் தேர்வுக்காக என்று தனியாகப் படிப்பதில்லை. தினசரி படிப்பது ஒரு வழக்கமாகவே இருந்தது. ஆண்டுமுழுவதும் இப்படித்தான்.

உங்கள் அன்றாடம் எப்படி இருக்கும்?

ஜூலியா, சோபியா: பள்ளி திரும்பியவுடன் மாலை 6-9 மணிவரை படிப்போம். விடுமுறை நாட்களில் முழு நாளும் படிக்க உட்கார்ந்துவிடுவோம். அதாவது 7-12, மதியம் 2-9 என்று படிப்போம்.

அவ்வளவு தொடர்ச்சியாகப் படிக்கமுடியுமா?

அனிதா: உண்மைதான். அவர்கள் அப்படித்தான் படிப்பார்கள். தேவைப்படும்போதெல்லாம் சிறிய சிறிய இடைவெளி எடுத்துக்கொள்வார்கள். நானும் ஓர் ஆசிரியை என்பதால் இவர்கள் படிக்கும் முறை குறித்து நன்கு தெரியும். எனவே கண்காணிப்பதற்காக நான் இவர்களுடன் உட்காரமாட்டேன். அவர்களாகவே படிப்பார்கள். எந்த வகுப்புக்காகவும் அவர்கள் டியூஷன் சென்றதே இல்லை.

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இடைவெளியா?

ஜூலியா, சோபியா: அப்படி ஒரு நேரம் வகுத்துக்கொண்டு இடைவெளி எடுக்க மாட்டோம். ஒரு குறிப்பிட்ட பாடத்தை முடித்துவிட்டால் 5-10 நிமிடங்கள் இடைவெளி என்ற வீதத்தில் எடுத்துக்கொள்வோம். சும்மா வீட்டை சுற்றிச் சுற்றி வருவோம்.

நீங்கள் இருவரும் இணைந்து  படிப்பதில்லையா?

ஜூலியா, சோபியா: ஆங்கிலம், ப்ரெஞ்ச் ஆகிய மொழிப்பாடங்களை மட்டும் சேர்ந்து படிப்போம். மற்ற பாடங்களைத் தனித்தனியாகவே படிப்பது வழக்கம்.

ஏன் அப்படி?

ஜூலியா, சோபியா: எங்களுக்கு சத்தம் போட்டுப்படிக்கும் பழக்கம் உண்டு. அதனால் சண்டை வந்துவிடக்கூடம் என்பதால் மற்ற பாடங்களுக்கு சேர்ந்து படிப்பதைத் தவிர்த்துவிடுவோம். தனித்தனி அறைகளில் படித்தாலும் நாங்கள் ஒவ்வொருவரும் எந்தெந்தப் பாடங்களை முடித்துவிட்டோம் என்பதை பரஸ்பரம் பரிமாறிக்கொள்வோம்.

உங்களுக்குள் படிப்பில் போட்டி உண்டா?

ஜூலியா, சோபியா: உண்டு. ஆரோக்கியமான போட்டிதான். ஒருவர் வாங்கிய மதிப்பெண்ணை மற்றவருடன் ஒப்பிட்டுப்பார்ப்பது, எதனால் குறிப்பிட்ட பாடத்தில் மதிப்பெண் குறைந்தது என்பதையெல்லாம் அலசி ஆராய்வோம்.

நல்லது. தேர்வு காலத்தில் எப்படித் தயாராவீர்கள்?

ஜூலியா, சோபியா: ஜனவரி மாதத்திலிருந்தே தொடங்கிவிட்டோம். மாலை 5 மணி முதல் 10 மணி வரை படித்தோம். எங்களுக்கு ஏற்படும் ஐயங்களை எங்களுக்குள் பேசித் தீர்ப்போம். எங்களால் தீர்த்துக்கொள்ள முடியாவிட்டால் அம்மாவிடம் கேட்போம். அங்கும் தெளிவு கிடைக்கவில்லை என்றால் மறுநாள் பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் கேட்டுத்தெளிவாகிவிடுவோம்.

டி.வி. இருந்தால் படித்தது மறந்துவிடுமாமே?

ஜூலியா, சோபியா: நாங்கள் சாப்பிடும்போது டிவி பார்ப்போம். லேப்டாப் பயன்படுத்துவோம். டிவி பார்ப்பதால் படித்தது மறந்துவிடும் என்பதெல்லாம் சும்மா.

படிப்பில் நீங்கள் கெடுபிடியா?

அனிதா: அவ்வளவாக இல்லை. போதுமான அளவுக்கு பொழுதுபோக்குக்கும் வழி ஏற்படுத்திக் கொடுப்பேன். படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று கடிவாளம் போட்ட குதிரைபோல அவர்களை வளர்த்ததில்லை.

உங்கள் பள்ளி எப்படி?

ஜூலியா, சோபியா: எங்களுடைய எல்லா பெருமைகளுக்கும் எங்கள் பள்ளியே உரித்தானது. கட்டுப்பாடான பள்ளி என்றபோதும் கடுமையான பள்ளியல்ல. படிப்பை வலுக்கட்டாயமாகத் திணிக்க மாட்டார்கள். தேவையான அளவுக்கு சுதந்திரம் உண்டு. டென்ஷன், அழுத்தம் இல்லாமல் படித்தோம்.

பாடத்தில் சந்தேகம் வந்தால் என்ன செய்வீர்கள்?

ஜூலியா, சோபியா: பாடம் நடத்தி முடித்தபிறகு ஐயங்களை மொத்தமாகக் குறித்துவைத்துக்கொண்டு கேட்போம்.

அப்பா என்ன செய்கிறார்?

ஜூலியா, சோபியா: எங்களது அப்பா மைக்கேல் கோம்ஸ், அமெரிக்காவில் நாக்கா லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தில் மேலாண் இயக்குநராகப் பணிபுரிகிறார். ஆண்டுக்கு ஒருமுறைதான் நாங்கள் அவரைச் சந்திக்க முடிகிறது.

அனிதா: நான் எங்கள் குழந்தைகளுக்கு 2 வயது இருக்கும்போது அவர்களை இந்தியாவுக்குக் கொண்டுவந்துவிட்டேன். அவர்கள் நம்மூரில், இந்தியக் கலாச்சாரத்தின்படி வளர வேண்டும் என்பது என் விருப்பம். மேலும், இந்தியாவில் அடிப்படைக்கல்வி என்பது மிகவும் பலமான அஸ்திவாரம் போன்றது. அதனை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதும் எனது விருப்பமாக இருந்தது.

மொழிப்பாடத்தில் ஏன் ஃப்ரெஞ்ச்?

ஜூலியா, சோபியா: 5 ஆம் வகுப்புவரை அவர்களுக்கு தமிழ் ஒரு பாடமாக இருந்தது. எதிர்காலத்தில் வெளிநாட்டில் கல்வி கற்க வேண்டியிருக்கும் என்பதால் 6 ஆம் வகுப்பிலிருந்து ஃப்ரெஞ்ச் மொழியை ஒரு பாடமாக எடுத்துப் படிக்கின்றனர். 5 ஆண்டுகள் பரிச்சயமாக இருந்தாலும் ப்ரெஞ்ச்-சில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

தற்போது என்ன பாடத்தை எடுத்திருக்கின்றனர்?

அனிதா: இருவருமே 11 ஆம் வகுப்பில் கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவைத்தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இதற்கும் டியூஷன் தேவையில்லை என்று அவர்களது ஆசிரியர்கள் சொல்லிவிட்டனர்.
உங்கள் இருவருக்கும் எதிர்கால ஆசை என்ன?

ஜூலியா: பொறியியலில் முனைவர் பட்டம் பெற்று, பேராசிரியர் பணிக்குச் செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்.

சோபியா: எனக்கு அஸ்ட்ரோ பிசிக்ஸ் படிக்க வேண்டும். பின்னர் விண்வெளிவீரராக ஆக வேண்டும். நாஸாவில் பணியாற்ற வேண்டும் என்பதே ஆசை.

இரட்டை சந்தோஷம்!

இதைத்தான் படிக்க வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்துவார்களா?

ஜூலியா, சோபியா: இல்லை.

அனிதா: பிள்ளைகளை அவர்களது விருப்பத்துறையில் ஈடுபடுத்துவதே சரி. என் உறவினர்கள் பலரும் ‘மருத்துவத்துறைக்கு அனுப்பலாமே’ என்றனர். ஆனால் அவர்களின் விருப்பமே முக்கியம் என்று சொல்லிவிட்டேன்.

உங்கள் இருவருக்கும் திரு.ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களை மிகவும் பிடிக்குமாமே!

ஜூலியா, சோபியா: கஷ்டப்பட்டு முன்னேறி மேலே வந்தவர். அப்படி இருந்தாலும் எளிமையைக் கடைபிடித்தார். எனவே அவர்தான் எங்களுக்கு முன்னுதாரணம்.

உங்களது பாட்டியும் ஆசிரியரா?

ஜூலியா, சோபியா: ஆம். அவர்கள் மாண்டிசோரி ஆசிரியை. தாத்தாவும் பேராசிரியர்.

ஓர் ஆசிரியராக விடை சொல்லுங்கள். பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள் உண்மையிலேயே நமக்கு உதவுமா?

அனிதா: நிச்சயமாக. என்னுடைய அனுபவத்தில் நான் செல்ல முடியாத சூழலில்கூட எனது தாயாரை அக்கூட்டங்களுக்கு அனுப்புவேன். வாய்ப்பு கிடைக்கும்போது ஆசிரியர்களைச்சந்தித்து பேசுவேன். பொதுவாகப் பார்க்கும்போது இதுபோன்ற கூட்டங்களுக்குப் பெற்றோர் செல்வது முக்கியம். பிள்ளைகள் எவ்வாறு படிக்கின்றனர் என்பதை மட்டுமல்ல, அவர்களது வகுப்பறை நடத்தை போன்றவற்றையும் அந்த சந்திப்புகளில் தெரிந்துகொள்ள முடியும். கூட்டம் நடைபெறும் நாட்களில் செல்ல முடியாவிட்டாலும் பின்னொரு நாளில் ஆசிரியர்களைச் சந்தித்துவிடுவது நல்லது.

நீங்கள் ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தவர்.  நீங்களே ஆசிரியையும்கூட. மேலும் சாதனை இரட்டையரின் தாயாரும்கூட. அந்த வகையில் இன்றைய பெற்றோருக்கு நீங்கள் சொல்ல விரும்பும் ஆலோசனைகள் என்னென்ன?

அனிதா: என்னதான் வேலைகள் நமக்கு இருந்தாலும் தினமும் சில மணி நேரங்கள் அமர்ந்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரவேண்டும். தந்தையைவிட தாயார் இதில் சிறப்பாக செயல்பட முடியும். 1-5 வகுப்புகள் வரையாவது வழிகாட்டுவது அவசியம். நாம் எந்த அளவுக்கு குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்குகிறோம் என்பதைக் குழந்தைகள் உணரவேண்டும். அப்படிச் செய்ததால் கிடைத்த வெற்றியை நான் பார்க்கிறேன்.

படிப்பாளிக் குழந்தைகளுக்கு நண்பர்கள் குறைவாக இருப்பார்களாமே!

ஜூலியா, சோபியா: அப்படியெல்லாம் இல்லை. எங்களுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அவர்களுடன் சேர்ந்து விளையாடுவோம். உறவினர்களுடனும் நிறைய நேரத்தை செலவிடுவோம்.

பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

ஜூலியா: தினமும் அன்றாடப் பாடங்களைப் படித்துவிடுங்கள். தேர்வு எளிதாக இருக்கும். முழுப்பாடத்தையும் படிக்கும் வழக்கம் வேண்டும். கைடுகளைப் பயன்படுத்தும் பழக்கம் எனக்குக் கிடையாது.

சோபியா: எப்போதும் புத்தகப்புழுவாக இருக்க வேண்டியதில்லை. எந்நேரமும் புத்தகத்தோடு சுற்ற வேண்டியதில்லை. சிறிதுநேரம் படித்தாலும் முழு கவனத்தையும் செலுத்திப் படித்தாலே போதும்.

அனிதா: இவர்களின் பள்ளியான க்ளூனி, அவர்களது நிர்வாகம், முதல்வர் ரோஸ்லின் ஆகியோர் சுதந்திரத்துக்கும் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். மேலும் இறைவழிபாட்டுக்கு அங்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. பிள்ளைகளின் வெற்றிக்கு இதுவும் முக்கியக் காரணம். இதையே நான் மற்ற பெற்றோருக்கும் வலியுறுத்துவேன். 

(எ.செல்வராணி உதவியுடன்)