குடும்பத்துடன் குதூகலித்திருப்போம்!

கொரொனா ஊரடங்கு உத்தரவால் நாம் அனைவரும் அவரவர் வீடுகளில் இருக்கிறோம். இந்த விடுமுறையை, குடும்ப உறவுகளைப் பலப்படுத்த பயன்படுத்திக்கொள்ளலாமே!

By நளினா ராமலட்சுமி

குடும்பத்துடன்  குதூகலித்திருப்போம்!

பொதுவாக நமக்குத் தேவையானபோது அலுலவகத்துக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருப்பது என்பது வேறு. ஆனால், நம்மை கட்டாயப்படுத்தி ‘நீ நாள் முழுவதும் வீட்டில்தான் இருக்க வேண்டும்‘ என்று சொல்வது வேறு. அதுவும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இதே நிலைதான் எனும்போது அது இன்னமும் மோசமான சூழல்தான்.‘ஒரு இடத்துக்குச் செல்ல வேண்டாம்‘ என்றால் அங்குதான் செல்லத் தோன்றும். ஒரு விஷயத்தைச் ’செய்யாதே!’ என்றால் அதைத்தான் செய்யத் தோன்றும். இது மனித இயல்பு. சரி, இப்போது வெளியில் செல்ல முடியாத நிலை.. இப்படி குடும்ப உறுப்பினர் நாள் முழுவதும் ஒன்றாக இணைந்திருக்கும் இந்த காலகட்டத்தை எப்படி கடந்து வருவது? இதைத்தான் நாம் இங்கு பேசப்போகிறோம்.

கொரொனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு நீங்கள் மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே மக்கள் அவரவர் குடும்பத்தோடு கட்டாயமாக வீட்டில் இருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர். எங்கும் செல்ல முடியாது. யாரையும் பார்க்க முடியாது. 24 X7 அனைவரும் வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும். இது நம் அனைவரின் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாராத ஒரு மாற்றம். வீட்டிலிருந்து அலுவலக பணியை செய்யும் பெற்றோர்;விடுமுறையில் இருக்கும் குழந்தைகள்; வீட்டில் இருக்கும் அம்மாக்கள் என்று அனைவருக்குமே எதிர்பாராத ஒரு மாற்றம்தான் இது. ஆனால்,இந் நாட்களை மிக இயல்பாகக் கடந்து செல்ல முடியும். வழியுண்டு.

அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்

வீட்டின் சூழல் எப்படி இருந்தாலும் அதனை எதிர்கொள்ள, முதலில் உங்களை நீங்கள் அமைதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

மீ டைம் (Me time)

இறை வணக்கம், தியானம், யோகா அல்லது ஏதேனும் ஒரு பொழுதுபோக்கு விஷயம் என்று ஒவ்வொரு நாளும் உங்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்கள் இளைப்பாறுதலுக்கும் ஏதேனும் ஒரு விஷயத்தை அவசியம் செய்யுங்கள்.

சூழலைக் கையாளுதல்

கத்தல்கள், குழந்தைகளுக்கிடையே சண்டைகள், அவ்வளவு ஏன் வீட்டின் மூத்த தலைமுறைக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான மோதல்களையும்கூட எதிர்நோக்க நீங்கள் தயாராக இருங்கள். அதுபோன்ற நேரங்களில்…

• அமைதியாக இருங்கள். யார் பக்கமும் தீர்வு சொல்லாதீர்கள். யாரையும் தண்டிக்காதீர்கள்.

• நீங்கள் பார்த்ததை விளக்குங்கள்.

• உங்கள் குழந்தைகளை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.

• ஒருவர் சொல்வதை எப்படி பொறுமையாக கேட்க வேண்டும்?, ஒரு தகவலை எப்படிச் சொல்ல வேண்டும்?, தீர்வைக் கண்டறிவது எப்படி ?... என்றெல்லாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். எடுத்துக்காட்டாக… “உன் தங்கை எதற்காக உன்னிடமிருந்து தொலைக்காட்சியின் ரிமோட்டை பறித்தாள் என்று கேட்டாயா?, நீ உன் சகோதரியைத் தாக்கும்போது அவள் எப்படி உணர்வாள் என்று உனக்குத் தெரியுமா?, இந்த விஷயத்தை இதைவிட சிறப்பாக எப்படி கையாள முடியும்?” என்றெல்லாம் கேளுங்கள்.

• சூழலை விளையாட்டாக, வேடிக்கையாக மாற்றுங்கள்.எடுத்துக்காட்டாக “இந்த ரிமோட் இப்போது என்னுடையது. எங்கே என்னைப் பிடித்து ரிமோட்டை உன்னால் பெற முடிகிறதா பார்ப்போம்” என்று கூறுங்கள்.

குடும்பத்தினர் அனைவரும் பேசுங்கள்

குடும்பத்தினர் அனைவரும் மனம் திறந்து பேசி உங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இது ஒருவர் மற்றவரின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கான நேரம் மட்டுமல்ல, குடும்பமாக நீங்கள் அனைவரும் எப்படி ஒன்றாக இருக்கிறீர்கள் என்பதும் புரியும் நேரம். இப்படி அனைவரும் இணைந்திருக்கும் இத்தருணத்தை மகிழ்ச்சியாக எப்படி கடப்பது? பொருளாதாரத்தைக் குறித்து பேசக்கூடிய நேரமல்ல இது. அப்படியென்றால் எதைத்தான் பேசுவது?

கூடிப் பேசக் கூப்பிடுங்கள்

”எல்லோரும் சேர்ந்து பேசலாம், வாருங்கள்” என்று வீட்டிலிருக்கும் பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரையும் அழைக்கவும். குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு நாள் இதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்.

ஆலோசனைப் பெட்டி

ஆலோசனைப் பெட்டி ஒன்றை உருவாக்குங்கள். அவரவரின் ஏமாற்றங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை இந்த ஆலோசனைப் பெட்டியில் எழுதிப் போடச் சொல்லுங்கள்.

விவாதியுங்கள்

அண்மையில் கொரொனாவைரஸ் நோய் தொற்றால் ஏற்பட்ட இந்த திடீரென மாற்றம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் எப்படி பாதித்துள்ளது என்று அவர்தம் உணர்வுகள் குறித்து பேசச் சொல்லுங்கள்.

குடும்பத்தில் ஒவ்வொருவரின் பயம், பதற்றம், சவால்கள், ஏமாற்றங்கள், எதை விரும்புகிறார்கள்?; எது அவர்களுக்கு வெறுப்பை அளிக்கிறது?; அவர்களது மகிழ்ச்சி… இப்படி பல்வேறுவிதமான உணர்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள். இது குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் அடுத்தவரின் தேவையை அறிந்து கொள்ளவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

கொரொனாவைரஸ் குறித்து எந்தவிதமான கேள்விகள் கேட்டாலும் நம்பிக்கையான தளத்திலிருந்து நீங்கள் தெரிந்துகொண்டவற்றிலிருந்து விடையளிக்கவும்.

நீங்கள் வைத்திருந்த ஆலோசனைப் பெட்டியை திறந்து அதில் எழுதிப் போடப்பட்டிருக்கும் ஆலோசனைகளைப் படியுங்கள். ஒருவரையோ அல்லது ஒருவிஷயத்தையோ மேம்படுத்திக்கொள்ள யாரேனும் ஆலோசனை கூறியிருக்கலாம். எடுத்துக்காட்டாக “அலுவலகம் தொடர்பான தொலைபேசி அழைப்புகளுக்கு உரிய பதில் அளிக்க தினமும் காலை 8 மணியிலிருந்து 9 மணிவரை அமைதியான சூழல் எனக்குத் தேவை“ என்று ஒருவரும், “தினமும் நாம் ஒவ்வொருவரும் குளியலுக்கான நேரத்தை உரிய முறையில் தனித்தனியாக வகுத்துக் கொள்வோமா? இதன் மூலம் குளிப்பதற்கான நம் தினசரி சண்டைகளைத் தவிர்க்கலாம்“ இப்படி ஒருவரும், “எனது நூல் வாசிக்கும் நேரத்தில் எனக்கு தனிமை வேண்டும்“ இப்படி மற்றொருவரும், “நான் காலை 10 மணிக்கு முன் படுக்கையிலிருந்து எழுந்து வர மாட்டேன்” என்று ஒரு குழந்தையும் “நாம் ஏன் தினசரி இரவு உணவுடன் ஒரு ஐஸ்க்ரீமைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது?“ என்று ஒருவரும் பல்வேறு விஷயங்கள் இந்த ஆலோசனைப் பெட்டியில் இருக்கலாம்..

திட்டத்தை ஏற்பது

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்வதன் நோக்கமே இதன் மூலம்,

• போடப்படும் திட்டத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்…

• இவற்றை தினசரி நடவடிக்கைகளில் பின்பற்ற வேண்டும்…

• ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்…

• ஒவ்வொருவரும் தங்களை ஏதேனும் ஒரு விஷயத்தில் ஈடுபடுத்திக் கொள்ளும் பட்டியலைத் தயார் செய்ய வேண்டும் - என்பதுதான்.

திட்டத்தை உருவாக்குங்கள்

திடீரென உருவான இந்தச் சூழலால் நமது அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதுவே ஒரு அழுத்தம் கொடுக்கக்கூடிய விஷயம்தான். எனவே, நமக்காக, நம் குழந்தைகளுக்காக தினசரி திட்டத்தை நமக்கேற்ற வகையில் இலகுவாக நாமே உருவாக்கினால் என்ன! செய்யலாம் தவறேதுமில்லை அதேநேரம் இந்தத் திட்டங்கள் நெகிழும் தன்மை கொண்டதாக இருத்தல் அவசியம் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்குமான திட்டத்தைத் தனித்தனியாக உருவாக்குங்கள்.

தினசரி நடவடிக்கைகள்

ஞாயிறு அன்று இளைப்பாறும் நாளாக வைத்துக் கொள்ளுங்கள். எனவே, அன்று ‘நோ‘ திட்டம். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். மற்றபடி தினசரி திட்டங்களை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரின் வயது, விருப்பம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். எடுத்துக்காட்டாக…

காலை 7 மணி - எழுந்திருக்கும் நேரம்

காலை 7.15 – 8.00 – யோகா மற்றும் தியானம்

காலை 8,00 – 8.30 குளித்து தயாராகும் நேரம்

காலை 8.30 – 9.00 காலை உணவு

காலை 9.00 – 11.00 வாசித்தல் (session1)

காலை 11.00 – 11.15 சிற்றுண்டி மற்றும் இளைப்பாறுதல்

காலை 11.15 – மதியம் 12.30 அந்த நாளின் ஆக்டிவிடி

மதியம் 12.30 – 1.30 மதிய உணவு

மதியம் 1.30 – 3.30 வாசித்தல் (session 2)

மதியம் 3.30 – 4.00 மாலைச் சிற்றுண்டி

மாலை 4.00 – 5.30 விருப்ப நேரம்/பொழுதுபோக்கு

மாலை 5.30 – 7.00 குடும்ப நேரம்

இரவு 7.00 – 8.00 இரவு உணவு நேரம்

இரவு 8.00 – 8,30 வாசிக்கும் நேரம் / கதை சொல்லும் நேரம்

இரவு 8.30 – 9,00 உறங்கச் செல்வது

இரவு 9.00 அன்றைய நாள் முடிந்தது. விளக்கை அணைத்துவிடுங்கள்.

வாரத் திட்டங்கள் – வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு சிறப்பு செயல்பாடு இருப்பதுபோல் திட்டமிடலாம். எடுத்துக்காட்டாக,

திங்கட்கிழமை – கலை மற்றும் கைவினை

செவ்வாய்க்கிழமை – சமையல்

புதன் கிழமை – இசை/ நாடகம்

வியாழக்கிழமை – அறிவியல் ஆராய்ச்சிகள்

வெள்ளிக்கிழமை – வடிவமைப்பு

சனிக்கிழமை – கலாச்சாரம் தெரியுமா?

வரம்புகளை உருவாக்கவும் – உங்கள் குழந்தையிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று அவளுக்கு/னுக்கு தெரிந்திருக்கும் பட்சத்தில் அவள்/ன் தான் மேலும் பாதுகாப்பாக இருப்பதை உணர்வாள்/ன். அத்துடன் இது தேவையற்ற விவாதத்தையும் குறைக்கும்.

உங்கள் குழந்தையுடன் இணைந்திருக்கும்போது எளிமையான விதிகளை அமையுங்கள். தேவையான எதிர்பார்ப்புகளைக் கொண்டவராக இருங்கள். அப்போதுதான் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உங்கள் குழந்தையால் தெரிந்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக ‘இன்று 30 நிமிடங்கள் மட்டும்தான் தொலைக்காட்சி பார்க்க வேண்டும்‘, ‘இரவு உறங்கச் செல்வதற்கு முன் உன் பொம்மைகளை எல்லாம் ஒரு இடத்தில் ஒதுக்கி வைக்க வேண்டும்‘ இப்படி இருக்கலாம்.

நீங்கள் உருவாக்கிய விதிகளை உங்கள் குழந்தை பின்பற்றும்போது அதனை பாராட்டுங்கள்.

விதிகளை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருங்கள்.

நீங்கள் வகுக்கும் விதிகளை உங்கள் குழந்தை தொடர்ச்சியாக கடைபிடிக்காமல் போகிறாள்/ன் எனும்போது, அதன் விளைவையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதை அவர்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்துதல் அவசியம். எடுத்துக்காட்டாக..“இன்று நீ 30 நிமிடங்களுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கலாம். ஆனால், நாளை உனக்கு வழக்கமான தொலைக்காட்சி பார்க்கும் நேரம் கிடையாது‘ என்று சொல்ல வேண்டும்.

ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்

திடீரென உருவான இந்தச் சூழல் காரணமாக வீட்டில் நாள் முழுவதும் அனைவரும் சேர்ந்தே இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். நீங்கள் அலுவலகப் பணிக்காக அமரும் நேரம், உங்களது இடத்தில் அமர்ந்து கொண்டு, மேசையில் உங்கள் குழந்தை வெகு தீவிரமாக ஏதேனும் வரைந்து கொண்டிருக்கிறாள்/ன் . அல்லது நீங்கள் சமையல் வேலையில் இருக்க உங்களைச் சுற்றி பந்தைத் தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான்/ள் . இந்தச் சூழல் நாம் சொல்லவே வேண்டாம் கண்டிப்பாக ஒரு காரசாரமான விவாதத்தில், மோதலில் கொண்டுவந்து நிறுத்தவே செய்யும்.

இந்த விவாதத்தை, மோதலைத் தவிர்க்க வீட்டிலேயே, விளையாட , நூல் வாசிக்க, அலுவலகப் பணிக்காக என்று ஒவ்வொரு அறையைத் தனித்தனிய ஒதுக்குங்கள். இப்படித் தனித்தனியே அறை ஒதுக்கப்படுவதன் காரணமாக நீங்கள் அலுவலகப் பணியை அதற்கான அறையில் செய்து கொண்டிருக்கும்போது குழந்தைகள் தேவையில்லாமல் வந்து உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். குழந்தைகள் மட்டுமல்ல, அங்கு வேறு யாருமே வரமாட்டார்கள். நீங்களும் நிம்மதியாக உங்கள் பணியைச் செவ்வனே செய்யலாம்.

ஒவ்வொருவரின் நேரத்தையும் மதித்தல்

அன்று உங்களுக்கு ஆன்லைனில் அலுலவக வேலை தொடர்பான முக்கியமான ஒரு கூட்டம் உள்ளது. ஆனால், அதே நேரம் உங்கள் குழந்தை தன்னோடு வந்து விளையாட வேண்டும் என்று கேட்கிறாள்/ன் . நீங்கள் என்ன செய்வீர்கள்?

தொல்லை செய்யாதே - தினசரி உங்களின் அலுவலகப் பணிக்கென யாருடைய குறுக்கீடும் இல்லாத நேரம் என்று ஒன்று உண்டு என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அறிந்திருப்பர். எனவே, உங்களுக்கு மிக முக்கியமான அலுவலகக் கூட்டம் இருக்கும்போது ‘தொந்தரவு செய்யாதீர்கள்‘ என்று எழுதி அந்த அறையின் கதவின்மேல் ஒட்டிவிடவும். இங்கு நீங்கள் அமர்ந்து பணி செய்யும்போது குழந்தை, தானாகவே எந்தவித விளக்கமும் இன்றி புரிந்து கொள்ளும்.

சிறப்பு நேரம்: ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் தனியாக நேரத்தை ஒதுக்குங்கள். இதன் மூலம் தாங்கள் ஒவ்வொருவரும் அவர்தம் பெற்றோருக்கு முக்கியமானவர்கள்தான் என்பதை குழந்தைகள் உணர்வர்.

நேரத்தைப் பிரித்துக் கொள்ளுங்கள்: ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு வயது கொண்ட குழந்தைகள் இருப்பர். உங்கள் வீட்டில் இளம் வயது குழந்தைகள் இருப்பின் அவர்களைக் கண்காணித்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். இதில் பெற்றோர் இருவரின் பங்கும் அவசியம். அல்லது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் யாரிடமேனும் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கலாம்.

குடும்ப நேரம்: நமக்கான நேரம் என்பது எவ்வளது முக்கியமோ குடும்ப நேரமும் அந்த அளவு முக்கியமான ஒன்றுதான். இந்த நேரம், குடும்ப உறுப்பினர் அனைவரும் இணைந்து உணவு உண்ணும் நேரமாக இருக்கலாம், விளையாடும் நேரமாகவும் இருக்கலாம். இவற்றில் எதுவாக இருப்பினும் இந்த வாய்ப்பை யாரும் தவறவிடக்கூடாது.

வேலை கொடுங்கள் (Engaged)

குழந்தைகளை எப்போதும் ஏதேனும் ஒரு விஷயத்தில் என்கேஜ்ட்டாக வைத்துக் கொள்வது மிக மிக அவசியம். அது சிந்தனையைத் தூண்டச் செய்யும் விளையாட்டாகக்கூட இருக்கலாம். ஆனால், எதுவும் அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சலிப்பு வந்துவிட்டால் கூடவே வருவது சோர்வும் சோம்பேறித்தனமும்தான். அத்துடன் குழந்தைகள் தேவையில்லாமல் சண்டையிட்டுக் கொள்வர். ஆக, குடும்ப உறுப்பினர் அனைவரையும் எப்படி ஏதாவது ஒருவிஷயத்தில் ஈடுபடுத்துவது?

பட்டியல் தயார் செய்யவும்

என்ன செய்வது என்று முடிவெடுப்பதற்கு முன் உங்கள் குழந்தைக்குப் பிடித்த செயல்முறைகள் குறித்து அவனையே/ளையே ஒரு பட்டியலைத் தயார் செய்யச் சொல்லுங்கள். தேவைப்பட்டால் ஒருசில ஆலோசனைகளையும் கூறலாம். ஆனால், தனக்கு என்ன தேவை என்பதை உங்கள் குழந்தையே தேர்ந்தெடுக்கட்டும். இது அவனை/ளை மிகவும் ஈடுபாட்டோடு செயல்பட வைக்கும்.

திரை நேரம்: குழந்தைகளின் உணர்வுகளைத் தூண்டுவதற்கான பல்வேறு விஷயங்கள் நாள் முழுவதும் உள்ளன. எனவே, வீடியோ கேம்கள், தொலைக்காட்சி பார்ப்பது, டிஜிட்டலில் கற்றல், பிற ஆன்லைன் செயல்பாடுகள் ஆகியவற்றில் அவர்களை ஈடுபட அனுமதிக்கலாம். இதில் தவறேதுமில்லை. ஆனால், உங்கள் குழந்தை இவற்றில் செலவழிக்கும் நேரத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியமான ஒன்று.

என்னவெல்லாம் செய்யலாம்?

1. புதிதாக ஏதேனும் கற்கலாம் – புதிய மொழி, வீடியோக்களை எப்படி உருவாக்குவது?, க்ராஃபிக் வடிவமைப்பு, சமையல், பெயிண்டிங் இப்படிப் பல…

2. சவாலான ஒன்றைச் செய்வது

3. திரைப்படம், பொழுதுபோக்கு மற்றும் கல்வி தொடர்பான வீடியாக்களைப் பார்த்தல்

4. ஒற்றை நபருக்கான விளையாட்டுக்கள் மற்றும் புதிர்களை விடுவித்தல்

5. வீடியோ கேம்

6. ஆன்லைன் கற்பித்தல்

7. பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களை ஆராய்தல்

8. படிப்பு தொடர்பானவை

9. பிடித்த இசையைக் கேட்டு ரசித்தல்

10. கலை மற்றும் கைவினை செய்தல்

11. தாத்தா, பாட்டிக்காக வாழ்த்து அட்டை தயாரித்தல்

12. அறிவியல் அராய்ச்சிகளைச் செய்தல்

13. வலைப்பூக்களில் (blog) கதை எழுதுதல்

14. பள்ளிப்பாடங்களை படித்தல்/ வீட்டுப்பாடங்களைச் செய்தல்/ப்ராஜக்ட்டுகளைச் செய்தல்

15. வீட்டில் பெற்றோருக்கு உதவுதல்

16. பொம்மைகளை வைத்தும் பில்டிங் ப்ளாக்குகளை வைத்தும் விளையாடுதல்

17. பழைய அட்டைப் பெட்டிகள் மற்றும் வீட்டைச் சுற்றியிருக்கும் பொருட்களைக் கொண்டு கற்பனையாக ஒன்றை உருவகித்து அவற்றுடன் விளையாடுவது

18. யோகா , உடல் பயிற்சி

19. கற்பனை விளையாட்டுக்கள் ( எடுத்துக்காட்டாக…இளம் குழந்தைகளுக்கு ஒருவரைப்போல் உடை அணிந்து கொண்டு அவரைப்போல கற்பனை செய்த விளையாடுவதில் விருப்பம் அதிகம்)

20. சற்றே பெரிய குழந்தைகள் என்றால் அடுத்த வீட்டில் வசிப்போருக்குத் தேவையான மளிகை சாமான் மற்றும் அத்தியாவசிய சமான்கள் கிடைக்க உதவி செய்யச் சொல்வது

குடும்பமாக என்ன செய்யலாம்?

• வார்த்தை விளையாட்டு, எண் விளையாட்டு

• புதிர்களை விடுவித்தல்

• பலர் விளையாடும் வீடியோ கேம்

• அனைவரும் சேர்ந்து ஒரு நாடகத்தை உருவாக்கி நடிக்கலாம்

• பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்தலாம்

• பணிகளைச் சேர்ந்து செய்யலாம்

• வீட்டை அனைவருமாக சேர்ந்து சுத்தம் செய்தல்

• வீட்டை அழகுபடுத்துதல்

• கைவினை ப்ராஜக்டை சேர்ந்து செய்வது

• வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுக்கள்

• உணவை திட்டமிட்டு இணைந்து சமைக்கவும்

• இசைக்கு ஏற்ப அனைவரும் சேர்ந்து நடனமாடுங்கள்

• யோகா, உடற்பயிற்சி இணைந்து செய்யுங்கள்

• இறைவனை வணங்குதல், தியானம் இந்த இரண்டையும் சேர்ந்து செய்யுங்கள்

• கதைகள் சொல்வது மட்டுமல்ல கதைகளை அனைவரும் சேர்ந்தே படிக்கவும் செய்யலாம்.

• மொட்டை மாடிக்கு குட்டி சுற்றுலாவோ அல்லது ஒரு கூடாரம் ஒன்றை அமைத்து எல்லோரும் அதில் அமர்ந்து திரைப்படங்களையோ பார்க்கலாம்.

• வீட்டுக்கு உள்ளேயோ அல்லது வீட்டுக்கு வெளியேயோ தோட்டம் அமைக்கலாம்.

• புதிய மொழி ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள். அல்லது ஒரு நாட்டைக் குறித்து அல்லது கலாச்சாரம் குறித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

• கற்பனை விளையாட்டு :  எடுத்துக்காட்டாக…கடை, மருத்துவர், நோயாளி, ஆசிரியர், வகுப்பறை இப்படி அனைத்தையும் கற்பனை செய்து குடும்பமாக விளையாடுங்கள். உங்கள் குழந்தையை மசாஜ் செய்பவர், சிகையலங்கார நிபுணர் அல்லது ஒப்பனைக் கலைஞராக மாற்றுங்கள். நீங்கள் ஒரு விண்கலத்தில் உங்கள் குழந்தையுடன் பயணம் செல்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். நாற்காலிகள், தலையணைகள், தாள்கள் இவற்றைக் கொண்டு ஒரு வீட்டைக் கட்டுங்கள். உங்களது இந்த கற்பனை உங்கள் குழந்தைக்கு ஒரு வழிகாட்டுதலாக அமையும்.

தொடர்பில் இருங்கள்

இப்போது உங்கள் குழந்தைகள் அவர்தம் பாட்டி, தாத்தாக்கள், மிகவும் பிடித்த, அத்தை, மாமா, அவர்தம் பிள்ளைகள், நண்பர்கள் என யாருடனும் உடல் சார்ந்த தொடர்பில் இல்லை. இவர்களுடனான தொடர்புகளை டிஜிட்டல் முறையில் இணைக்க வேண்டிய அசாதரணமான சூழலில் இருக்கிறோம் நாம்.

கால், சாட் (call. chat): உங்கள் குடும்ப உறவினர்களை, குழந்தைகளின் நண்பர்களை வீடியோ காலில் அழைக்கவும், அவர்களுக்கு தகவல்கள் அனுப்பவும் உங்கள் குழந்தைகளுக்கு அனுமதி கொடுங்கள்.

ஆன்லைனில் விளையாடு: அவர்களோடு சேர்ந்து ஆன்லைனில் விளையாடலாம்

திரை நேரத்துக்கு வரம்புகளை அமையுங்கள்: குழந்தைகள் குடும்பத்தினரோடும் குடும்பத்தில் பிற செயல்பாடுகளில் கலந்து கொள்ளவும் நேரம் ஒதுக்க வேண்டும். எனவே, நண்பர்களுடன் விளையாடவும், தகவல் அனுப்புவதற்கும் நேரக்கட்டுப்பாடு அவசியம்.

ஆம், யாருமே எதிர்பாராத ஒரு சூழலில் நாம் அனைவரும் இருக்கிறோம். நம் அனைவரின் வாழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டது கொரொனாவைரஸ். இருப்பினும், நம்மில் யாருக்குமே இதுபோன்ற ஒரு நேர அவகாசம் கிடைத்ததில்லை என்பதையும் நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 

இதில் பல சிக்கல்கள் இருப்பினும், அவற்றையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு இப்போது குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து இருக்கக் கிடைத்திருக்கும் இந்தத் தருணத்தை எப்படி அழகாக, மகிழ்ச்சியுடன் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து கடந்து வரலாம் என்று யோசியுங்கள். நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பாக இதனை எடுத்துக் கொண்டு செயல்படுங்கள்.

(தமிழில்: சுகுணா ஸ்ரீனிவாசன்)

(நளினா ராமலட்சுமி, பேரண்ட் சர்க்கிள், செல்லமே இதழ்களின் நிறுவனர், தலைமை ஆசிரியர்)