இது விளையாட்டுக் காரியமல்ல!

விளையாட்டு என்பது உண்மையிலேயே சீரியஸான விஷயம். உடலை உறுதி செய்வதற்கு மட்டுமல்ல, எதிர்காலத் தொழில் வாழ்க்கையாக ஆக்கிக்கொள்ளவும் தகுதியானது விளையாட்டு.

By கா.சு.துரையரசு  • 7 min read

இது விளையாட்டுக் காரியமல்ல!

விளையாட்டு என்பது உண்மையிலேயே சீரியஸான விஷயம். உடலை உறுதி செய்வதற்கு மட்டுமல்ல, எதிர்காலத் தொழில் வாழ்க்கையாக ஆக்கிக்கொள்ளவும் தகுதியானது விளையாட்டு. உங்கள் பிள்ளைகளை அத்துறையில் மிளிரச்செய்ய என்ன செய்ய வேண்டும் என்று இங்கு பேசுவோம்.

விளையாட்டு என்பதை நாம் எப்படிப் பார்க்கிறோம்? ஒரு பொழுதுபோக்குக் கருவியாக, நோய் வராமல் தடுக்கும் ஒரு ஆயுதமாக, உடல் எடையைக் குறைக்கும் நண்பனாக... இப்படித்தானே! இப்படிப் பார்த்தாலாவது பரவாயில்லை. பலரும் விளையாட்டை ஒரு விளையாட்டான விஷயமாகத்தான் பார்க்கின்றனர். அதாவது அது வெட்டிப் பொழுதுபோக்கு, சீரியஸாக வாழ்க்கையைப் பார்க்காதவர்களின் விஷயம் என்று நினைக்கின்றனர்.

ஆனால், அங்குதான் நாம் தவறு செய்கிறோம். இன்றைக்குத்தான் விளையாட்டு என்பதை நாம் வேற்று உலக ஜந்துவைப்போலப் பார்க்கிறோம். ஆனால், தமிழர்களின் வாழ்க்கையில் விளையாட்டுக்கள் பின்னிப் பிணைந்தவையாக இருந்திருக்கின்றன. பிரிக்க முடியாதவையாக இருந்திருக்கின்றன. சங்க காலம் தொட்டே அந்த வரலாற்றுப் பின்னணியை, பண்பாட்டுப் பின்னணியை நாம் பார்த்து வந்திருக்கிறோம்.

விளையாட்டுக்கு முக்கியமான தேவை என்பது ஆரோக்கியமான கட்டுடல். அது வேண்டுமென்றால் உடல் உழைப்பு, சத்தான உணவு ஆகியவை தேவை. இவை இரண்டுக்கும் அன்றைக்கே தமிழர்கள் பல்வேறு சூத்திரங்களை வகுத்து வைத்துவிட்டனர். பதார்த்த குண சிந்தாமணி என்ற நூல், எந்த உணவுக்கு என்ன தன்மை உண்டு, அது உடலில் என்னென்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று விளக்குகிறது.

எளிய மக்களுக்கும் டிப்ஸ்

இவையெல்லாம் மெத்தப் படித்தவர்களுக்குத்தான்... சாமானிய மக்களுக்கு என்ன விதமான அறிவுரைகளை நமது முன்னோர் சொல்லி வைத்தனர்? அவர்களுக்குப் பழமொழிகளாக, சொலவடைகளாக இந்த உடல் நலக்குறிப்புகள் சொல்லி வைக்கப்பட்டன.

இவை எடுத்துக்காட்டுகள்:

‘சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்!

‘கொழுத்தவனுக்கு கொள்ளைக் கொடு. இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு

‘மருந்தேயாயினும் விருந்தோடு உண்’

‘சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை’

‘ஒருவேளை உண்பான் யோகி; இருவேளை உண்பான் போகி; முப்போதும் உண்பான் ரோகி; எப்போதும் உண்பான் துரோகி’

கட்டுக்கோப்பும் முக்கியம்

உணவின் மூலம், உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் உடலைப் பேண வேண்டும் என்று நமது முன்னோர் சொன்னார்கள். அதேபோல உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வழிமுறைகளையும் தெரிந்து வைத்திருந்தனர்.

அதிகாலையில் துயில் எழுவது, காலையில் நீராகாரம் அருந்துவது, உடல் உழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடுவது, பள்ளி செல்லும் பிள்ளைகளை மாலையில் விளையாட அனுமதிப்பது, சேர்ந்து விளையாடுவது என விளையாட்டை அன்றாட வாழ்க்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே ஆக்கி வைத்திருந்தனர்.

வகைகள் ஏராளம்

தமிழர்கள், பொழுதுபோக்கு விளையாட்டுகள், உடலினை உறுதி செய்வதற்கான வெளிப்புற விளையாட்டுகள் என்று இரண்டையும் சமமாகப் பிரித்து வைத்திருந்தனர்.

ஆண்கள் விளையாடுபவை,பெண்கள் விளையாடுபவை,இருவரும் இணைந்து விளையாடுபவை என்ற வகைப்பாடும் இருந்தது. வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுக்கள், பெரும்பாலும் பெண்கள் தங்களுக்குள் விளையாடுவதாக அமைந்திருந்தன. (எ.கா: பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம், தாயக் கட்டம் முதலியவை). அதேபோல் பெண்கள் வீட்டுக்கு வெளியே விளையாடும் விளையாட்டுக்கள் என்றால் கோகோ, ஓடிப்பிடித்து விளையாடுதல், கைப்பந்து முதலியவற்றைச் சொல்லலாம்.

பெரும்பாலும் ஆண் குழந்தைகளின் விளையாட்டுகள் மைதானத்தில் விளையாடும் வகையில் அமைந்தன. கிட்டிப்புள், பச்சைக்குதிரை, கோலி, எறி பந்து முதலியவை எளிய எடுத்துக்காட்டுகள். இவை எல்லாமே பெருமளவு உடல் வலிமையை சோதிக்கும் விளையாட்டுகள் ஆகும். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கபடி முதலிய தனி நபர்கள் விளையாடும் விளையாட்டுகள் தவிர, வீரக்கலைகளான சிலம்பாட்டம், மல்யுத்தம் (குஸ்தி), வர்மக்கலை ஆகியவை தனிப்பட்டியலில் வரும். தேர்ந்த ஆசிரியரிடம் பயிற்சிபெற்று இவற்றில் மிளிர்ந்தனர் அன்றைய தமிழ்ப்பிள்ளைகள்.

காலம் மாறிப்போச்சு!

காலம் மாற மாற நமது விளையாட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. கால் பந்தாட்டம், தடை தாண்டும் ஒட்டம், கிரிக்கெட், துப்பாக்கி சுடுவது, அம்பெறிவது, பளு தூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ் என்று ஒரு புதிய பட்டியல் இப்போது நம்மிடம் இருக்கிறது. உள்விளையாட்டு, வெளி விளையாட்டு, தனி விளையாட்டு, குழு விளையாட்டு என்று வகைவகையாக இவற்றைப் பிரிக்க முடியும்.

இப்படிப்பட்ட சீரியஸான பாரம்பரிய விளையாட்டுப் பின்னணி கொண்ட நாம், நமது குழந்தைகளை விளையாட விடுகிறோமா என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். படிப்பது மட்டுமே குழந்தைகளின் வேலை என்று நாம் முடிவு கட்டிவிட்டோம். அதனால்தான் விளையாடும் குழந்தைகள், நேரத்தை வீணடிப்பதாகக் குறை கூறுகிறோம்.

அதுவும் கல்வியே!

ஆனால், உண்மையில் விளையாட்டு என்பதும் கல்வியின் ஒரு பகுதியே. குழந்தை வளர்ப்பின் முக்கியமான பங்கு, இந்த விளையாட்டுக்கு இருக்கிறது.

விளையாட்டே வாழ்க்கையாக ஆகலாம்

நம்மிடம் சில கேள்விகள் இருக்கின்றன. விளையாட்டுத் துறையைத் எதிர்காலத் துறையாகப் பிள்ளைகள் தேர்ந்தெடுக்கலாமா?; அதற்கு வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன?; விளையாட்டு வீரர்/வீராங்கணையாக ஆவது தவிர, வேறு என்னென்ன வாய்ப்புகள் இத்துறையில் இருக்கின்றன?; எத்தகைய பயிற்சிகள் தேவை?; அவை எங்கு கிடைக்கும்?... இப்படியெல்லாம் நீள்கின்றன அக்கேள்விகள்.


 வாய்ப்பு கிடைக்கும்பொதெல்லாம் எல்லாவற்றையும் பேசுவோம்.

(வளரும்)