விழாமலே இருக்க முடியுமா?

நம் குழந்தைகள் ஓடியாடி விளையாட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் தப்பித்தவறிக்கூட கீழே விழுந்து அடிபட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். ஆனால் காயம் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது?

By சு. கவிதா  • 9 min read

விழாமலே இருக்க முடியுமா?

குழந்தைகளுக்கு விளையாட்டு ஏன் முக்கியம்?; விளையாட்டின்போது முடிந்தவரை அடிபடாமல் தவிர்ப்பது எப்படி?; விளையாட்டு சார்ந்த அடிப்படை முதலுதவிகள் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறார் சென்னை ஸ்பார்க் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் தலைவரும் பிரபல விளையாட்டுத்துறை மற்றும் பிட்னெஸ் மருத்துவருமான கண்ணன் புகழேந்தி...

"விளையாடும்போது அடிபடுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க எச்சரிக்கை நடவடிக்கைகளோடு விளையாடவேண்டுமே தவிர, விளையாடாமலேயே இருப்பது குழந்தைகளின் உடல் மன நலனுக்கு ஏற்றது அல்ல.

என்ன மாதிரியாக அடிபடக்கூடும்?

விளையாட்டைப் பொறுத்து அடிபடுதலின் தன்மை மாறுபடும்

மோதல் விளையாட்டு

ஒருவருக்கொருவர் கழுத்துப்பகுதி முதல் இடுப்புப் பகுதி வரை மோதிக்கொண்டு விளையாடும் ரக்பி, ஐஸ் ஹாக்கி, கபடி போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை. இதுபோல் மோதிக்கொண்டு விளையாடும் விளையாட்டுக்களில் அடிபடுவது சற்று அதிகமாக இருக்கும்.

தொடர்பு விளையாட்டுக்கள் எதிராளியைத் தொட்டு விளையாடலாம்; அதற்கு மேலே எதுவும் செய்யக் கூடாது. கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, குத்துச்சண்டை, ரெஸ்லிங் போன்ற விளையாட்டுக்கள் இந்த வகையைச் சேர்ந்தவை. எதிராளியை குறிப்பிட்ட இடங்களில் தொட்டு பாயிண்ட்கள் எடுப்பதுதான் பாக்ஸிங் மற்றும் ரெஸ்லிங்.

தொடர்பற்ற விளையாட்டுக்கள் எதிராளியைத் தொடாமல் விளையாடுவது. தடகள விளையாட்டுக்கள், கிரிக்கெட் போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை.

பொதுவாக மோதல் விளையாட்டில் கபடியைத்தான் நாம் அதிகம் விளையாடுகிறோம். அதேபோல தொடர்பு விளையாட்டில் கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுக்களை அதிகம் விளையாடுகிறோம். இதுபோன்ற விளையாட்டுக்களை விளையாடும்பொழுது பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக முழங்காலில் அடிபடாமல் இருக்க அதற்கான பாதுகாப்பு சாதனங்களைப் (knee cap) பயன்படுத்த வேண்டும்.

அடிபடாமல் சைக்கிள் ஓட்ட முடியுமா?

நம் ஊரில் ‘அடிபடாமல் சைக்கிள் கற்றுக்கொள்ள முடியுமா? என்று சொல்வதுண்டு. ஆனால் சைக்கிள் ஓட்டும்பொழுது முழங்காலில் அடிபடாமல் இருக்க உறை (knee cap), மணிக்கட்டு உறை, தலைக்கு தலைக்கவசம் என்று பாதுகாப்பு உபகரணங்களோடு செல்வதால், அடிபடும் வாய்ப்பைக் குறைக்௧லாம்.

அடுத்தது, விளையாடும் தளம் சீராக இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும். அது மண் தரையா? புல் தரையா? சரியாகப் பராமரிக்கப்பட்டிருக்கிறதா? என்பதைக் கவனிக்க வேண்டும். அந்தத் தரைக்கு ஏற்ற சரியான ஷூக்களைப் பயன்படுத்தி விளையாடவேண்டும்.

அதேபோல கிரிக்கெட் விளையாட்டு என்றால் சரியான ஆடுகளம் தேவை. கால்பந்து விளையாட்டுக்களில் பந்து கோல்கீப்பரின் தலையைப் பதம் பார்த்துவிட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல ஹாக்கி பந்து தலையைத் தாக்க வாய்ப்பு இருப்பதால் ஹாக்கி கோல்கீப்பரும் தலைக்கவசம் அணிந்து விளையாட வேண்டும். அதேபோல கிரிக்கெட்டிலும் கீப்பர், பேட்ஸ்மேன் போன்றவர்கள் தலைக்கவசம் அணிந்து விளையாடுவர். பந்து அதிக வேகத்துடன் வந்து தலையைத் தாக்கினால் சிலசமயம் உயிர்போகும் ஆபத்துக்கூட இருப்பதால் இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

இதுபோன்று விளையாட்டை முறையாக விளையாடினாலே அடிபடுவதை பெருமளவில் தடுக்க முடியும். விழாமலே இருக்க முடியுமா?

விழாமலே இருக்க முடியுமா?

சாதனங்கள் ஓ.கே.வா?

முறையான பயிற்சி இல்லாமல் திடீரென்று கிரிக்கெட் பந்தை கேட்ச் பிடிக்க முயலும்போது அதிக வேகத்துடன் வரும் பந்து விரல்களில் படும்பொழுது காயம் படலாம். அதனால் முதலில் டென்னிஸ் பந்தில் கேட்ச் பிடிக்கப் பழக ஆரம்பித்து மெல்ல மெல்ல கிரிக்கெட் பந்தைப் பயன்படுத்த முயலவேண்டும்.

போட்டியின் தன்மையும் காரணம்

பிள்ளைகள் எந்த மாதிரியான ஒரு விளையாட்டுப் போட்டியில் விளையாடுகின்றனர் என்பதைப் பொறுத்து அடிபட வாய்ப்பு இருக்கிறது. ஆரம்ப நிலைப் போட்டி என்றால் இயல்பாக விளையாடும் பிள்ளைகள், பள்ளிகளுக்கு இடையில் நடத்தப்படும் இறுதிப் போட்டி என்ற சூழ்நிலைகளில் ‘எப்படியாவது நாம் ஜெயித்தே ஆகவேண்டும் என்கிற எண்ணத்தோடு இருப்பர்.

இது போதாதென்று பார்வையாளர்கள் வெறித்தனமாகக் கூச்சலிட்டு புறஅழுத்தத்தை அதிகமாக்கி விடுவார்கள். இந்த சூழ்நிலையில் இரண்டு அணிகள் மோதும்போது விளையாடுபவர்கள் பதட்டமான மனநிலையில் இருப்பர். அப்போது எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்கிற மனநிலையில் அந்த விளையாட்டின் விதிமுறைகளை மீறுவர். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அடிபடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

விதிகளை மீறினால்....

பிள்ளைகளுக்கு விளையாட்டைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் விளையாட்டை கற்றுகொடுப்பதோடு மட்டுமல்லாமல் விளையாட்டு விதிகளையும், அவற்றை எப்போதும் மீறாமல் விளையாடவேண்டும் என்பதையும் சேர்த்துச் சொல்லிக்கொடுக்க வேண்டும். விதிகளைப் பின்பற்றாமல் எப்படியாவது ஜெயித்தாகவேண்டும் என்கிற நோக்கத்தில் எதிராளியை அடித்து வீழ்த்தி ஜெயிப்பது உண்மையான வெற்றி ஆகாது.

அநியாயமாக விளையாடி ஜெயிக்கக்கூடாது; தோல்வியை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும் என்பனவற்றைப் பிள்ளைகள் உணர்ந்து விளையாட ஆரம்பித்தாலே அவர்கள் விளையாட்டையும் கடந்து பொறுப்பான நல்ல மனிதர்களாக தங்கள் வாழ்க்கையில் நடந்துகொள்ளத் தொடங்குவர். விளையாட்டின்போது தேவையில்லாமல் அடிபடுவதும் கணிசமாகக் குறையும்.

உத்திகளைக் கற்பதே உத்தமம்

கிரிக்கெட் விளையாடும்பொழுது பேட்ஸ்மேனின் மேல் பந்து பட்டு காயங்கள் ஏற்படலாம். அதேபோல பந்தைப் பிடிக்கும்பொழுதும், பந்தைப் போடுபவர் மீதே பந்து பட்டும் காயங்கள் உண்டாகலாம். இது தவிர எல்லைக் கோட்டுக்குப் பந்தைத் துரத்திக் கொண்டு செல்லும்பொழுது கீழே விழுந்து காயங்கள் உண்டாகலாம். இப்படி கீழே விழுந்து காயங்கள் ஏற்படாமல் தடுக்க ப்ரேக் ஃபால்ட் டெக்னிக் (BREAK FALL TECHNIQUE) என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். அடிபடாமல் விழுந்து எழுந்திருப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொடுப்பதுதான் ப்ரேக் ஃபால் டெக்னிக் (BREAK FALL TECHNIQUE). இது போன்ற விளையாட்டு நுணுக்கங்களை முறைப்படி கற்றுக் கொள்வதன் மூலம் பெரிய காயங்களைத் தவிர்க்கலாம்.

கால அவகாசம் இருக்கிறதா?

அடுத்து தடகளப் பிரிவுக்கு வருவோம். பொதுவாக அளவுக்கு மீறிய தடகளப் பயிற்சிகளை மேற்கொள்ளும்பொழுது காயங்கள் ஏற்படலாம். அதாவது புதிதாக ஒவ்வொரு பயிற்சியைக் கொடுக்கும்பொழுதும் அந்தக் குறிப்பிட்ட பயிற்சியைப் பிள்ளைகள் ஏற்க கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

அதன் பிறகு அடுத்த பயிற்சியைக் கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. இதற்கு பதிலாக கொஞ்சம்கூட அவகாசமே கொடுக்காமல் தொடர்ந்து அடுத்தடுத்த பயிற்சிகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தால் காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் விளையாட்டுப் பயிற்சியாளர்கள் இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு பயிற்சிகளைக் கொடுப்பது நல்லது.

அதேபோல தினமும் பயிற்சிகளை எடுக்காமல், நாளைக்கு விளையாட்டுப்போட்டி என்றால் இன்றைக்கு திடீரென்று அளவுக்கு அதிகமாகப் பயிற்சிகளை எடுத்துகொண்டாலும் உடலில் பிரச்னைகள் உருவாகலாம். குறிப்பாக போட்டிகளுக்கு முதல்நாள் பயிற்சிக்கு ஓய்வு கொடுத்து உடலையும்,மனதையும் போட்டிக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். விழாமலே இருக்க முடியுமா?

விழாமலே இருக்க முடியுமா?

கையை ஊன்றாதே!

எந்தவொரு விளையாட்டை விளையாடினாலும் சரி, கீழே விழும்போது கையை ஊன்றுவதால் COLLAR BONE முறிவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதேபோல மணிக்கட்டுக்கு மேல் உள்ள எலும்பில் முறிவு ஏற்படவும் வாய்ப்புண்டு.

ஏதாவது ஒரு தற்காப்புக் கலையையும் கற்று கொள்வது நல்லது. ஏனென்றால் தற்காப்புக் கலைகள் எந்தவிதமான அடிகளையும் தாங்கிக் கொள்ளும் மனவலிமையைக் கொடுத்துவிடும்.

காயம் ஏற்படாமல் இருக்க...

குறிப்பாக விளையாடும் மைதானம் முறையாகப் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு விளையாட்டுக்கும் தகுந்த காலணிகளை,ஷூக்களைப் பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு விளையாட்டுக்கும் பாதுகாப்புக் கவசங்களை சரிவர அணிந்து கொள்ள வேண்டும்.

மிகமிக முக்கியமாக விதிகளை மீறாமல் விளையாட வேண்டும்.

காயமே ஏற்படாமல் விளையாட முடியாது. ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் பெரிய அளவில் காயம் ஏற்படாமல் தவிர்க்கலாம்." 

Looking for expert tips and interesting articles on parenting? Subscribe now to our magazine. Connect with us on Facebook | Twitter | Instagram | YouTube