எப்போது பள்ளிகள் திறக்கும்? நாட்டின் முன்னணி கல்வி நிறுவன முதல்வர்கள் விவாதம்

கோவிட் பெருந்தொற்றுக்குப்பிறகு பள்ளிகள் எப்போது திறக்கும், எதிர்கால சவால்கள் என்னென்ன என்று நாட்டின் முன்னணி கல்வியாளர்கள் விவாதம்.

By செல்லமே குழு

எப்போது பள்ளிகள் திறக்கும்? நாட்டின் முன்னணி கல்வி நிறுவன முதல்வர்கள்  விவாதம்

கொரொனா பெருந்தொற்றின் விளைவாக பள்ளிகளின் மறுதிறப்பு தாமதமாகிவருகிறது. இது பிள்ளைகளின் கல்வியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? இதைப்பற்றி விவாதிக்க நாட்டில் கொரொனா பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, தில்லி, மும்பை முதலிய நகரங்களைச் சேர்ந்த பிரபல பள்ளிகளின் முதல்வர்களின் கலந்துரையாடலை இணைய வழியில் பேரண்ட் சர்க்கிள் நடத்தியது.

அதில் கலந்துகொண்டோர்:

முனைவர் ஷீலா ராஜேந்திரா, டீன், இயக்குநர், பி.எஸ்.பி.பி (பத்மா சேஷாத்ரி பால பவன்), சென்னை.

அல்கா கபூர், முதல்வர், மாடர்ன் பப்ளிக் பள்ளி, புதுதில்லி.

ஃபாத்திமா அகர்கர், கல்வியாளர், நிறுவனர்-ஏ.சி.இ

நளினா ராமலட்சுமி, நிர்வாக இயக்குநர், பேரண்ட் சர்க்கிள்

சிம்மி கால்சி, முதுநிலை ஆசிரியர், டி.ஏ.வி. பப்ளிக் ஸ்கூல், தானே, மும்பை.

முனைவர் என்.கே.சார்லஸ், நிர்வாக உறுப்பினர், அகில இந்திய ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் சங்கம்.

இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த விவாதத்தில் பெற்றோரின் பள்ளி மறுதிறப்பு தொடர்பான பல்வேறு கவலைகள் அலசி ஆராயப்பட்டன. பெரும்பாலோரின் கருத்து செப்டம்பர் அல்லது அக்டோபரில்தான் பள்ளிகள் மறுபடி திறக்கும் என்பதாக இருந்தது.

அக்கலந்துரையாடலில் பகிரப்பட்ட கருத்துக்கள் இதோ, உங்களுக்காக…

சென்னையைச் சேர்ந்த பிஎஸ்பிபி பள்ளியின் இயக்குனரான ஷீலா ராஜேந்திரன் இது குறித்து பேசுகையில் அக்டோபர் மாதம் பள்ளிகள் மறுபடி திறப்பதற்கான வாய்ப்பு 20 முதல் 50% வரை மட்டுமே உள்ளது அப்படியே திறந்தாலும் பாடத்திட்டத்தைவிட பிள்ளைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் இருக்கும். டிசம்பர் ஜனவரி அல்லது ஒட்டுமொத்த கல்வியாண்டு முழுமையும் திறக்காமல் இருந்தாலும்கூட குழந்தைகளின் பாதுகாப்பு தான் மிக முக்கியமானது“ என்றார்.

தில்லியைச் சேர்ந்த மாடல் பப்ளிக் ஸ்கூல் பள்ளியின் முதல்வர் அல்கா கபூர் பேசும்பொழுது, ” இந்த சூழ்நிலை சரியாகும் வரை பள்ளி மறுதிறப்பை யாரும் விரும்பவில்லை அல்லது கொரொனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரையாவது பள்ளிகள் திறக்கப்பட கூடாது என்று அனைவரும் நினைக்கின்றனர். ஒரு கொள்கையை விதிகளுடன் கொண்டுவரவேண்டும். பள்ளிகள் மறுபடி திறப்பதற்கு முன்பு வடிவில் கடைபிடிக்கவேண்டிய தூய்மைபாதுகாப்பு குறித்த குறிப்பான செயல்முறைகளை அறிவிக்க வேண்டும் ஒவ்வொரு பள்ளியும் அதனை தவறாது பின்பற்ற வேண்டும் என்றார்.

பருவ மழைகள் இவ்வேளையில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். “மும்பை போன்ற பெருநகரங்களில் பருவக்காற்று, தொடர்மழை ஆகியவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே நிலைமையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்கிறார் மும்பையில் ஊர்ல டிஏவி பள்ளியின் முதுநிலை ஆசிரியர் சிம்மி கால்சி.

சமூக இடைவெளியில் சவால்கள்

முகக்கவசம் சமூக இடைவெளி ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும் பள்ளிகளால் அவற்றை நடைமுறைப்படுத்துவது மிக எளிதான விஷயமல்ல சென்னையின் புகழ்பெற்ற பள்ளியான பிஎஸ்பிபி கூட அது குறித்த கவலையை பகிர்ந்தது. “ 10 விழுக்காடு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தால் கூட அந்த எண்ணிக்கை சுமார் 300 பேரை தொடும். அப்படி அவர் பின்பற்ற. வைப்பது சவாலான விஷயம்தான். இப்போது சில கேள்விகள் எழுகின்றன. குழந்தைகள் எப்போது பள்ளிக்கு வந்து எப்போது திரும்புவார்கள்? ஒரு வகுப்பு முடிவதற்காக இன்னொரு வகுப்புக் குழந்தை காத்திருக்க வேண்டுமா?” என்கிறார்.

பாலர் பள்ளிகளுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. பலர் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

”பெரிய வகுப்புகளை மறுபடி திறப்பதற்கான விதிமுறைகளை மகாராஷ்டிர அரசு உருவாக்கியிருக்கிறது. ஆனால் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பொறுத்தவரை டிசம்பர்வாக்கில் பள்ளி திறப்பு நிகழ்ந்தாலும் மாணவர்களை எதிர்பார்க்கவில்லை. ஓடி வந்து கட்டிக்கொள்ளும் சிறு குழந்தைகளிடம் எப்படி சமூக இடைவெளியை எதிர்பார்க்க முடியும்? ” என்கிறார் விருது பெற்ற கல்வியாளரும் அகர்கர் செண்டர் ஆஃப் எக்ஸலென்ஸ் அமைப்பின் நிறுவனருமான ஃபாத்திமா அகர்கர் தெரிவிக்கிறார்.

உணர்வுப்பூர்வ சவால்கள்

கடந்த சில மாதங்களாக பள்ளிகளோடு தொடர்பின்றி இருந்த குழந்தைகள் திடீரென்று பள்ளிக்கு வரும்போது அவர்களுக்கு ஏற்படும் அழுத்தம் கவனத்தில் கொள்ளத்தக்கது. ”பள்ளிகள் மறு திறப்புக்குப் பிந்தைய சில வாரங்களுக்கு வெறும் பாடத்திட்டத்தோடு மட்டும் பள்ளிகள் இயங்கக்கூடாது. மாணவர்களும் ஆசிரியர்களும் மனம் திறந்து பேசவும் விவாதிக்கவும் அனுமதிக்க வேண்டும்” என்றார் ஷீலா.

பெற்றோரும் தங்களது எதிர்பார்ப்புகளை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த உரையாடல் கேட்டுக்கொண்டது. அதன்மூலம், தேவையற்ற அழுத்தம் ஆசிரியர்கள்மீதும் மாணவர்கள்மீதும் திணிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

பேரண்ட் சர்க்கிளின் நிர்வாக இயக்குநர் நளினா ராமலட்சுமி பேசுகையில், “நிலையாமை ஒன்றுதான் நிலையான விஷயமாக இப்போது இருக்கிறது. இந்தக் கல்வியாண்டில் குழந்தைகளிடமிருந்து எதை எதிர்பார்க்கலாம் என்பதுகுறித்து பெற்றோர் தெளிவடைய வேண்டும். பிள்ளைகளின் மதிப்பெண்களா அல்லது அவர்களது கற்றலா?-இரண்டில் எதுகுறித்து அவர்கள் கவலைப்பட வேண்டும்? கல்வியின் அவசியம் குறித்து உங்கள் குழந்தையிடம் நீங்கள் பேசலாம். எப்போது பள்ளிகள் மறுபடி திறக்கும் என்றோ, மதிப்பெண்கள் குறித்தோ அல்ல!” என்றார்.

ஆன்லைன் வகுப்புகள்?

பள்ளிகள் பலவும் இணையவழி வகுப்புகளை நடத்தத் தொடங்கியிருக்கின்றன. இதன் பயன்கள் அனைவரையும் சென்று சேர்கிறதா என்பது முக்கியக்கேள்வி. உண்மையில் 30% மாணவர்களை மட்டுமே இணைய வகுப்புகள் சென்றடைந்திருக்கின்றன என்பதே யதார்த்தம்.

அல்கா பேசும்போது, “ 25 கோடி குழந்தைகள் வீட்டில் இருக்கும் இந்த சூழலில் 30-35% மாணவர்களை மட்டுமே இணைய வகுப்புகள் சென்றடைந்திருக்கின்றன” என்றார்.

“இந்த சூழலில் பெரிய வகுப்புகளைப் பொறுத்தவரை பாடங்களை மாணவர்களிடம் கொடுத்துவிட்டால் வீட்டிலேயே அவர்கள் தங்களுக்கு வசதிப்பட்ட நேரத்டில் படித்துக்கொள்வார்கள் அல்லவா! அவர்கள் சிறிய குழுக்களை உருவாக்கிக்கொண்டு, ஐயங்களை ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ள முடியுமல்லவா!” என்றார்.

ஆசிரியர்களும் தொழில்நுட்பமும்

ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு ஏற்ற அளவுக்கு போதுமான அளவுக்கு தொழில் நுட்பத்திறன்களைப் பெற்றிருக்கின்றனரா என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. வழக்கமான கற்பித்தலிலிருந்து அவர்கள் எப்படி இப்புதிய முறைக்கு மாறுவர் என்ற கேள்வி எழுகிறது.

“கல்வியாளர்கள் கையில் மந்திரம் ஏதுமில்லை. அவர்களும் ஒவ்வொரு விஷயத்தையும் செய்து பார்த்து கற்றுக்கொள்பவர்களே. அரூபமான ஒரு வகுப்பறை அனுபவம் எளிதானதல்ல என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்” என்கிறார் சிம்மி கால்சி.

கட்டண சர்ச்சை

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டோர், கல்விக்கட்டண வசூல் குறித்து வலுவான கேள்விகளை எழுப்பினர். இணைய வழி வகுப்புகளுக்கு பள்ளிகள் கட்டணம் பெறுவதை எப்படி நியாயப்படுத்த முடியும் என்று பெற்றோர் பலரும் ஆவேசமாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். ஆனால் ஆசிரியர் ஊதியம் என்ற விஷயத்தை முன்வைக்கின்றனர். உரையாடலில் கலந்துகொண்டோரின் கருத்துப்படி கல்விக்கட்டணத்தில் 80% ஆசிரியர் ஊதியத்துக்கே சென்றுவிடுகிறது.

“எங்கள் பள்ளி உட்பட பெரும்பாலான பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் ஆசிரியர் ஊதியத்துக்கே ( சுமார் 80%-90%) செலவிடப்படுகிறது. இதனைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார் ஷீலா.

மதிப்பீட்டில் சவால்கள்

இணைய வகுப்புகளில் மாணவர்களை மதிப்பிடுவது எப்படி என்று குழு விவாதித்தது. முறைகேடுசெய்யும் மாணவர்களைக் கண்டறிவது எப்படி எனவும் வெளிப்படையான, நேர்மையான முறையில் மதிப்பீடுகளைச் செய்வது எப்படி என்றும் விவாதிக்கப்பட்டது. ”வழக்கமாகப் பள்ளிகளில் செய்யப்படும் மதிப்பீடுகளை இப்போது செய்யப்போவதில்லை (குறிப்பாக பெரிய வகுப்புகளுக்கு). மாறாக, வெளிப்படையான மற்றும் நேர்மையான மதிப்பீட்டு முறைகளை அனைத்து மாணவர்கள் விஷயத்திலும் பின்பற்றப்போகிறோம்” என்றார் சிம்மி.

மதிப்பெண் சலுகை உண்டா?

இவ்வாண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் சலுகை தர வேண்டுமா என்ற கேள்வியும் விவாதத்தின்போது எழுப்பப்பட்டது. அதற்கான விடையை அகில இந்திய ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் முனைவர் என்.கே. சார்லஸ் அளித்தார். “என்னைப்பொறுத்தவரை இவ்வாண்டு மதிப்பெண்களைப்பற்றிப் பேசவே கூடாது. நம் பிள்ளைகளின் பாதுகாப்பான இருப்பைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். அவர்கள் மன ரீதியில், ஆன்ம ரீதியில், உணர்வு ரீதியில் வலுவானவர்களாக ஆவதை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார் அவர்.

உள்ளடக்கிய கல்விக்கு நாம் தயாரா?

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட அனைவரின் ஒட்டுமொத்த கருத்தின்படி கல்வி தொடர்பான அடிப்படைக்கட்டுமான வசதிகளை உயர்த்துவதன்மூலமாக அனைவரையும் உள்ளடக்கிய கல்வி சாத்தியப்படவேண்டும். அதுவும் நீண்டகால அடிப்படையில் அமைய வேண்டும். 

அல்கா பேசும்போது “ பள்ளிகள் திறக்கப்பட்டாலும் உடனடியாக முழு எண்ணிக்கையில் மாணவர்கள் வர மாட்டார்கள். நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ள குழந்தைகள் பள்ளிக்கு வராமல் இருக்கக்கூடும். எனவே, அவர்கள் வகுப்புகளை இழக்க அனுமதிக்கக்கூடாது. வகுப்புகள் நடத்தப்படும் அதே வேளையில் வீட்டிலுள்ள மாணவர்களும் அங்கிருந்தே வகுப்புகளில் கலந்துகொள்ளும் அளவுக்கு அடிப்படைக்கட்டுமான வசதிகளை மேம்படுத்த வேண்டும்” என்றார

வீட்டிலிருந்தே கல்வி

இன்றைய சூழலைக் கருத்தில்கொண்டு வீட்டிலிருந்தே கற்கும் முறையை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று கலந்துரையாடலில் கலந்துகொண்ட அனைவரும் வலியுறுத்தினர். பள்ளியில் இருந்து மட்டுமல்ல, வீட்டிலிருந்தும் கற்க முடியும் என்பதைப் பெருந்தொற்று காலம் மெய்ப்பித்திருக்கிறது. ஆக, பெற்றோருக்கு இதில் பெரும்பங்கு உண்டு.

நளினா பேசும்போது, “வீட்டில் உங்கள் குழந்தைகளுடன் செலவழிக்க இப்போது கூடுதல் நேரம் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி கற்பித்தல், புது விஷயங்களை அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகளை ஊக்குவிக்கலாம். நீங்கள் சமைப்பதாக இருந்தால் சமைத்தபடியே உங்கள் குழந்தைகளை எளிய உதவிகளில் ஈடுபடுத்துவதுடன் அவர்களின் கேள்விகளுக்கு விடையளிக்கலாம். அவர்களின் திறன்களை மேம்படுத்த இது நல் வாய்ப்பு. வீட்டிலிருந்தே கல்வி கற்கும் முறைகளில் இணைவது அவசியம்” என்றார்.

நிறைவாக ஒரு விஷயம். இந்தப் பெருந்தொற்று பள்ளி மறுதிறப்பைப் பாதித்திருக்கிறது. ஆனால், குடும்பங்களை ஒருங்கிணைத்திருக்கிறது. “இந்த சூழலிலும் நேர்மறையான விஷயங்களை நாம் பார்க்கப் பழக வேண்டும். பெற்றோர் பலருடனும் பேசும்போது முன்னெப்போதையும்விட தற்போது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுவதை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். பல திறன்களையும் பிள்ளைகள் வீட்டிலேயே கற்றுக்கொள்கின்றனர்” என்றார் முத்தாய்ப்பாக.

“பெற்றோர், தாத்தா-பாட்டியிடமிருந்து நிறைய அனுபவங்களைக் குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும். அதுதான் குடும்ப முறையின் அழகே! ஒட்டுமொத்தத்தில் மோசமான சூழலில் ஒரு அழகிய விஷயத்தையும் நம்மால் நிகழ்த்த முடிகிறது” என்றார் அல்கா.

முழு கலந்துரையாடலையும் காண: https://bit.ly/31mcfOJ