ஃபேஸ் புக்: சரியாகத்தான் பயன்படுத்துகிறார்களா பிள்ளைகள்?

முகநூலின் தாக்கம் இல்லாத பிள்ளைகளே இன்று இல்லை. ஆனால் அதில் உள்ள நல்லது, கெட்டது என்னென்னவென்று நாம்தானே சொல்லிக்கொடுக்க வேண்டும்!

By கமலன்

ஃபேஸ் புக்: சரியாகத்தான் பயன்படுத்துகிறார்களா பிள்ளைகள்?

‘மழைக்குக்கூட பள்ளிக்கூடம் போனதில்லை. பாடப்புத்தகமும் படித்ததில்லை. ஆனால், இந்தப் புத்தகத்தில் இவர் இருக்கிறார். அது எந்த புக்?’ எனக் கேள்வி கேட்டால், சட்டென “ஃபேஸ்புக்” என்று பதில் வரும். அந்த அளவுக்குப் படித்தவர்கள் மட்டுமின்றி பாமரர்களிடமும் பரவலாகி விட்டது ஃபேஸ்புக் என்னும் முகநூல்.

சிறுவர் முதல் பெரியவர்வரை எல்லோருக்கும் செல்லப்பிள்ளை இதுதான். ஆனால் உங்கள்வீட்டுக்குள் நுழையும் முகநூல் உங்களுக்குப் பாதுகாப்பானதுதானா? முகநூலின் கைக்குள் உங்கள் பிள்ளை பாதுகாப்பாக இருக்கிறதா?

இந்த உலகில் எந்த விஷயமானாலும் நாணயத்துக்கு இரண்டு பக்கமும் இருப்பதுபோல நல்லதும் கெட்டதும் கலந்தாகவே இருக்கும். இந்த ஃபேஸ் புக்கும் இதற்கு விதிவிலக்கல்ல. முகநூலை வைத்து சமூகப்புரட்சியும் இலக்கியப் புரட்சியும் ஒருபக்கம் நடக்கிறது. இன்னொருபுறம் வதந்தியும் வெட்டி அரட்டையும் பொழுதுபோக்கும் நடக்கிறது.

ஆக நல்லது, கெட்டது என்ற இரு பக்கங்களையும் கொண்டது முகநூல் எனப்படும் ஃபேஸ்புக். அதனைப் பிரித்துப்பார்க்க பெரியவர்களான நமக்குத் தெரியும். ஆனால் நம் பிள்ளைகளுக்கு?

முகநூலின் விதிப்படி 13 வயதைக் கடந்தவர்கள் மட்டுமே அதில் உறுப்பினராக ஆக முடியும். ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது? பெரியவர்களுக்குத்தெரிந்தோ தெரியாமலோ பதின்பருவப் பிள்ளைகள் முகநூலில் கணக்குத் தொடங்கி மும்முரமாகிவிடுகின்றனர். இந்தச் சூழலில் அவர்களைக் காப்பதும் கண்காணிப்பதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இது குறித்து நாம் இங்கு பேசியே ஆகவேண்டும்.

ஃபேஸ் புக்: சரியாகத்தான் பயன்படுத்துகிறார்களா பிள்ளைகள்?

எதற்காக ஃபேஸ்புக்?

 • எழுத்தாளனாகவோ, கவிஞனாகவோ விரும்புவர்கள் ஒரு காலத்தில் பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பி, அதற்காகப் பல வாரங்கள் காத்திருக்க வேண்டும்.
 • இப்போது ஃபேஸ்புக் இருக்கிறது. காதல், சோகம், வீரம், சுற்றுலா, திருமண உறவு, படிப்பு, குழந்தை வளர்ப்பு, கதை, கவிதை, கட்டுரைகளை எழுதி நிமிடத்தில் பதிவிடலாம். உடனடி லைக், உடனடி கருத்து. இப்படி மனித மனங்களில் அழுந்திக் கிடப்பவற்றை இறக்கி வைக்கும் உடனடி சுமைதாங்கிக் கல் ஃபேஸ் புக்தான்.
 • மேலைநாடுகளில் கொஞ்சம் வித்தியாசமாய் புரட்சிக்கான ஆயுதமாய் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மாறின. சிரியாவில் நடந்த புரட்சிக்கு அவைதான் கட்டியம் கூறின. அதன் நீட்சியாகப் பல்வேறு நாடுகளில் சமூக வலைத்தளங்களின் மூலம் போராட்ட அலை எழத்துவங்கியது.
 • தமிழர்களின் பாரம்பரிய உரிமையான ஜல்லிக்கட்டைப் பாதுகாக்க சென்னை மெரினா, மதுரை அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுக்க ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் துணை புரிந்தன.
 • சென்னை வெள்ளத்தில் நீண்ட ஆதரவு கரங்களின் பின்னணியில் ஃபேஸ்புக்கின் பங்கும் இருந்தது மறுக்க முடியாத உண்மை.

இவையெல்லாமே முகநூலின் நேர்மறைப் பக்கம். அதேநேரத்தில் இதற்கு மறு பக்கமும் உண்டு.

யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள்?

 • சமூக வலைத்தளங்களில் 13 வயதுக்குக் குறைந்தவர்கள் கணக்கு வைத்திருக்க கூடாது என்பது கட்டுப்பாடு. ஆனால், உலகம் முழுவதும் இந்த விதியை மீறி எண்ணற்றோர் கணக்குகளை வைத்துள்ளனர்.
 • இங்கிலாந்தில் 10 முதல் 12 வயதுக்குட்பட்ட 75 விழுக்காடு சிறுவர்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்பதாக பிசிசி மேற்கொண்ட ஆய்வறிக்கை சொல்கிறது.
 • உலகம் முழுவதும் 2017ம் ஆண்டு மார்ச் மாதம்வரை ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 165 கோடியாகும்.
 • இதில் 66 விழுக்காடு ஆண்கள். இந்த விழுக்காட்டில் 15 விழுக்காடு பேர் 13 வயதிற்குட்பட்டவர்கள். போலிக்கணக்கு வைத்திருப்போர் 8.7% பேர்.
 • அடுத்து, 13வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஃபேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்தியாவில் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் சிறுவர்களின் எண்ணிக்கை 73 விழுக்காடாக இருக்கிறது. இதிலும் 25 விழுக்காட்டினர் சிறுவர்கள்.
 • இவ்வளவு பேர் சமூக வலைதளங்களில் இயங்குவதற்குக் காரணம் அவர்தம் பெற்றோர்தான் என்று அசோசெம் அமைப்பு கூறியுள்ளது.
 • தவிர, 82 விழுக்காடு குறிப்பாக, சிறுவர்கள் தங்கள் வயதை மறைத்து சமூக வலைத்தளங்களில் கணக்கைத் துவக்குவதற்கு அவர்களது பெற்றோரே உதவியாக இருந்துள்ளனர் என்று அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
ஃபேஸ் புக்: சரியாகத்தான் பயன்படுத்துகிறார்களா பிள்ளைகள்?

பாதைமாறிப்போன பிள்ளைகள்

13 வயதிற்குள்ளேயே இணையத்தில் ஒரு போலியான முகவரியை உருவாக்கி அதன்மூலம் முகநூலில் கணக்குத் தொடங்க வயதுச்சான்றோ, இதர சான்றுகளோ தேவையில்லை என்பதால் சில நிமிடங்களில் ஒரு பதின்பருவப்பிள்ளைக்கு முகநூலில் கணக்கு கிடைத்துவிடுகிறது. இப்படி ஆர்வமாய் போலிக்கணக்கு துவங்கி அப்படியென்னதான் அவர்கள் பார்த்தார்கள் என்று பார்க்கும்போது கிடைக்கும் விடை நம்மைத் திடுக்கிடவைக்கிறது.

அங்கு கொட்டிக்கிடக்கும் கோடிக்கணக்கான முகங்களில் நமது இளம் பிள்ளையின் முகமும் ஒன்று. ஆனால் போலி முகம். குப்பையென கொட்டிக் கிடக்கும் ஆபாச படங்கள், வீடியோக்களில் சரணடைகிறார்கள்.

காட்சிகளில் இருந்து நேரடியாக அந்த தவறுகளுக்கு அவர்கள் தூண்டப்படுகிறார்கள். இதற்காக சாட்டிங்கில் துவங்கி அதன்மூலம் தவறுகளுக்கான வாசல்களைத் திறக்கிறார்கள். தொடுதிரை காட்சிகளை நேரடியாகப் பார்க்கும்போது குற்றங்களின் தன்மை மாறுபடுகிறது.

பாலியல் சீண்டலில் துவங்கி கொலை, கொள்ளைவரை குற்றங்களில் அவர்கள் தள்ளப்படுகிறார்கள். இது ஒருபுறமிருக்க, பெற்றோரின் வங்கிக்கணக்கு, கடன் அட்டை விபரங்கள், முகவரி, புகைப்படங்களை முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் குழந்தைகள் பகிர வாய்ப்புண்டு.

ஃபேஸ் புக்: சரியாகத்தான் பயன்படுத்துகிறார்களா பிள்ளைகள்?

பெற்றோர் செய்ய வேண்டியது...

ஃபேஸ்புக் குறித்த புரிதலை முதலில் பெற்றோரிடமிருந்தே துவக்க வேண்டியிருக்கிறது. கல்வி என்பது அறிவியல் சார்ந்து இருக்க வேண்டும் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு அதில் உள்ள தீமைகளைப் பற்றியும் சுட்டிக் காட்ட வேண்டும்.

இன்றைய நவீன உலகில் சைபர் க்ரைம் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இணையதள வசதி பெற்ற அனைத்துச் சாதனங்களையும் உளவு பார்க்க முடியும். அன்றாடம் 6 லட்சம் முறை ஃபேஸ்புக் கணக்குக்குள் திருட்டுத் தனமாக நுழைவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே, உங்களை அறியாமலே உங்கள் குழந்தைகள் உளவு பார்க்கப்படுகிறார்கள். அவர்களது அந்தரங்க தகவல்கள் அபகரிப்படுகின்றன. ஹேக்கிங் எனப்படும் குற்றங்களால் உலக நாடுகள் தங்கள் தகவல்களைப் பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கின்றன.

எனவே இப்போதும்கூட காலம் தாழ்ந்துவிடவில்லை. உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இந்த ஃபேஸ்புக்கின் நன்மை தீமைகளை எடுத்துக் கூறி அவர்கள் ஆக்கப்பூர்வமான பாதையில் செல்ல வழிகாட்டுங்கள் பெற்றோரே!

குழந்தை வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகள், கட்டுரைகளைப் படிக்க விரும்பினால் இங்கே க்ளிக் செய்யவும். Connect with us on Facebook | Twitter | Instagram | YouTube