ஊரடங்கில் வீட்டில் இருக்கும்போது எதிர்மறை எண்ணங்களிலிருந்து எப்படி வெளிவருவது?

ஊரடங்கு வாழ்க்கை நம்மை வீட்டுக்குள் முடக்கிவிட்டிருக்கிறது. இதனால் எழும் எதிர்மறை எண்ணங்களிலிருந்து நம்மை நாம் எப்படி காத்துக்கொள்வது?

By அருந்ததி ஸ்வாமி (தமிழில்: சுகுணா ஸ்ரீனிவாசன்)

ஊரடங்கில் வீட்டில் இருக்கும்போது எதிர்மறை எண்ணங்களிலிருந்து எப்படி வெளிவருவது?

இந்த ஊரடங்கு நம் அனைவரின் மனநிலையையும் கண்டிப்பாக நிலை கொள்ளவிடாமல் ஆக்கிவிட்டது. தவிர, இதன் காரணமாக நம் எல்லோர் மனதிலுமே எதிர்மறையான எண்ணங்கள் பெருகிவிட்ட நிலையில் அது நம் மனதின் அமைதியை பெரிதும் கலைத்துவிட்டது என்றே சொல்லலாம். இதில் நீங்கள் இரண்டு விஷயங்களைச் செய்யலாம். ஒன்று அந்த எண்ணங்களுக்குள்ளேயே அப்படியே இருந்துவிடலாம் அல்லது உங்களது எதிர்மறை எண்ணங்களை நேர்மறையான எண்ணங்களாக மாற்றலாம்.

வாழ்க்கை மிகவும் அற்பதமானது. இந்த ஊரடங்கு வரும்வரை வாழ்க்கையில் எல்லாம் நன்றாக இருப்பதாகவே நீங்கள் நம்பினீர்கள். ஆனால், ஒரே இரவில் தொற்றுநோய், தனிமைப்படுத்துதல், ஊரடங்கு என பல்வேறு சொற்கள் உங்கள் கண் முன்னால் வந்து வந்து போகின்றன. இதன் காரணமாக மன அழுத்தத்துக்கான சமிக்ஞை உங்கள் மூளையில் அடிக்கத் தொடங்குகிறது. விளைவு உங்கள் எண்ணங்களில் பயம் மற்றும் எதிர்மறையான விஷயங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. எப்போதும் ‘ஒருவேளை இப்படி ஆனால்‘ என்ற கேள்வியே எழுந்து கொண்டு இருக்கிறது. உங்கள் பயம் பிறரிடமும் தெரிய ஆரம்பிக்கின்றன. இந்த அச்சத்தை தகர்த்தெறிய, எதிர்மறை எண்ணங்களை உடைத்துக் கொண்டு வெளிவர நேர்மறையான மனநிலைக்கு மாற நிச்சயம் ஒரு சக்தி வாய்ந்த கருவி தேவை.

எதிர்மறையான எண்ணங்கள்

சில நேரங்களில் நம் உள்ளத்தில் எழும் எதிர்மறையான எண்ணங்களை நம்மால் எதுவுமே செய்ய இயலாது போகும். இத்தகைய எண்ணங்கள் தாமாகவே சென்றால்தான் உண்டு. அதே சமயம், அவை மீண்டும் மீண்டும் வந்துகொண்டேதான் இருக்கும். அதற்காக நீங்கள் மனம் தளர்ந்துவிடாதீர்கள். ‘நீ எனக்குள் இருக்கிறாய் என்பதை நான் அறிவேன். ஆனால், எனக்கு உன்னை தவிர சிந்திக்க வேறு விஷயங்களும் இருக்கின்றன‘ என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து சொல்லிக் கொண்டே வரும்போது உங்கள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக நேர்மறையான உணர்வுகளைப் பின்பற்றத் தொடங்கிவிடும்.

சரி, இப்போது எதிர்மறையான எண்ணங்கள் உங்களை எப்படி பாதிக்கின்றன என்று பார்ப்போம்…

எதிர்மறையான எண்ணங்களிலிருந்து வெளிவருவதற்கான டிப்ஸ்

ஒருவேளை எனக்கு கொரொனாவைரஸ் வந்தால்…

நீங்கள் உணர்வது - பயம், கோபம், அச்சுறுத்தல்.

உங்கள் செயல்பாடுகள் – உங்கள் மனம் முழுவதும் பயம் இருக்கிறது எனும்போது அதிகப்படியான முன்னெச்சரிக்கை மற்றும் அதிகப்படியான தூய்மையையும் பின்பற்றுபவர்களாக இருப்பீர்கள். நோய்த்தொற்று குறித்த பயத்தின் காரணமாக சோர்வடைவதுடன், ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டப்படுவீர்கள். அருகில் இருக்கும் வீட்டினரும் பிறரும் உங்களை பார்த்து சந்தேகப்படக்கூடும்.மனைவி/கணவன் மற்றும் குழந்தைகளிடம் உங்களால் பொறுமையாக இருக்க முடியாது. அதிகப்படியாக யோசித்து முக்கியமான விஷயங்களை கவனம் செலுத்தத் தவறுவீர்கள். உங்கள் மனம் சொல்ல முடியாத எண்ணங்களால் நிறைந்திருக்கும்.

நேர்மறையான எண்ணம் எப்படி இருக்கும் – பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருக்க பயிற்சி எடுத்தால்…

நீங்கள் உணர்வது – திடப்படுதல், அதிக அளவு நம்பிக்கை

உங்கள் செயல்பாடுகள் – உங்கள் எண்ணங்கள் தெளிவாகவும் கூர்ந்த கவனம் கொண்டதாகவும் இருக்கும். சிறப்பான முடிவை எடுப்பதற்கான கட்டுப்பாடு உங்களுக்குள் இருப்பதை உணர்வீர்கள். வீட்டுக்குள் உங்கள் குடும்ப உறப்பினர்களுடன் சேர்ந்து உங்களால் அன்றாட சவால்களை எளிதில் எதிர்கொண்டு அவற்றுக்குத் தீர்வு காண முடியும். சூழலுக்கு ஏற்றாற்போல் தேவையான நடவடிக்கையை உங்கள் குடும்பப் பாதுகாப்புக்காக உங்களால் எடுக்க முடியும். உங்கள் குடும்பத்திலுள்ளோர் நீங்கள் கட்டாயமாக அவர்களை பாதுகாப்பீர்கள் என்று உங்கள் மீது நம்பிக்கை கொள்வர்.

எதிர்மறையான எண்ணம் – ஒருவேளை அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்துவிட்டால்…

நீங்கள் உணர்வது – பயம், பாதுகாப்பற்ற நிலை, கலவரம், உதவி செய்ய யாருமில்லை என்ற எண்ணம்.

உங்கள் செயல்பாடுகள் – வேண்டுமோ வேண்டாமோ எதையும் யோசிக்காமல் தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்கிக் குவித்துவிடுவீர்கள். குறைந்தபட்ச பொருட்கள்தான் வாங்கக் கிடைக்கிறது என்ற நிலை ஏற்படும்போது உங்களை அறியாமல் பதட்டமடைவீர்கள். தேவையே இல்லாமல் கோபத்தில் யார் என்ன என்றே பாராமல் அவர்களை கத்தத் தொடங்குவீர்கள். இறுதியில் புரிந்துகொள்ளாமல் போனோமே என்று வருந்தக்கூடிய நிலையும் வரும்.

இதற்கு மாறாக…

நேர்மறையான எண்ணம் – ஓருவேளை நான் சரியாக திட்டமிட்டால்

நீங்கள் உணர்வது -அமைதியாக சூழலைக் கட்டுப்பாட்டுடன் கையாளமுடியும்.

உங்கள் செயல்பாடுகள் – உங்கள் திட்டமிடும் திறமையில் முதலில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அத்துடன் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவைபடும் சூழலில் அவர்தம் பிரச்சனைகளைத் தீர்க்கவும் உங்களால் முடியும். வீட்டில் இருக்கும் பொருட்கள் குறித்த ஒரு பட்டியல் தயார் செய்து அதைக் கொண்டு உங்கள் குடும்பத்தினருக்கு தேவையான பொருட்கள் குறித்தும் உங்கள் பட்டியலில் சேர்க்க முடியும். இதன் பின் நீங்கள் வாங்கும் பொருட்கள் கட்டாயம் தேவையானதாகவே இருக்கும். உங்கள் திறமைகளை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அறிவர்.

எதிர்மறையான எண்ணம் – ஜூன் மாதமும் பள்ளிகள் திறக்கவில்லை என்றால்…

நீங்கள் உணர்வது – தாமதம் குறித்த அதிருப்தி, கவலை, விரக்தி,

உங்கள் செயல்பாடுகள் – அழுத்தம் காரணமாக அதிகப்படியாக எதிர்வினையாற்றுவீர். உங்கள் குழந்தையின் கல்வி குறித்து அதிகப்படியான ஆர்வம் கொள்வீர்கள். இதன் காரணமாக தேவைக்கு அதிகமான நேரம் உங்கள் குழந்தையை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவீர்கள். குடும்ப சூழ்நிலை பதட்டமாக மாறுவதுடன் அவர்களின் உணர்வுகளும் எதிர்பாரததாக இருக்கும். இதன் விளைவாக உணர்ச்சி ரீதியாக வீடு பாதுகாப்பு அற்றதாக மாறிவிடும்.

மாறாக…

நேர்மறையான-குழந்தைகள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கின்றனர். அத்துடன் வீட்டில் தங்கு தடையின்றி கல்வி கற்கிறார்கள் என்றால்

நீங்கள் உணர்வது – தாமதமானாலும் அதை ஏற்றுக் கொள்வீர்கள். அமைதி, அன்பு

உங்கள் செயல்பாடுகள் – உங்கள் குழந்தைகளின் பாதுகாப்புதான் முதலானதும் முக்கியமானதும்கூட. வீட்டில் பாடங்களை படிக்க அதற்கென்று ஒரு நேரத்தை ஒதுக்குவதுடன் உங்கள் குழந்தைகளுக்கு நீங்களும் உதவலாம். உங்கள் பொழுதுபோக்கு விஷயங்களுக்கும் நேரம் செலவிடுங்கள். இது போன்ற உங்கள் செயல்பாடுகள் காரணமாக , நீங்கள் எதிர்பாராத அளவு அவர்களை உங்கள் வீட்டு வேலைகளில் உங்களுக்கு உதவும் வகையில் பங்கேற்க வைக்கும். உங்கள் குடும்பத்தினர் உங்களை பொறுமையான ற்றோராக, துணைவராகப் புரிந்து கொள்வர்ள்.

எதிர்மறையான எண்ணம் – எனக்கு சம்பளம் வரவில்லை என்றால்

நீங்கள் உணர்வது – அதிர்ச்சி, திகைப்பு, கோபம், விரக்தி மற்றும் உதவியற்ற நிலை

உங்கள் செயல்லபாடுகள் – வித்தியாசமான உணர்வுகள். குடும்பத்துக்கான விஷயங்களைச் செய்வது உங்கள் பொறுப்பு என்று சிந்திக்கத் தொடங்குவீர்கள். அத்துடன் பெரிய சுமை என்ற உணர்வும் தோன்றும். இது சம்பந்தமில்லாத முடிவை எடுக்க உங்களை வழிநடத்தும்.நீங்களே உங்களை குறைகூறும் நிலையும் உண்டாகும்.உங்கள் குடும்பத்தினர் உங்கள் மீதுள்ள நம்பிக்கைக்கு ஏற்ப நீங்கள் வாழவில்லை என்று ஏமாற்றமடையக்கூடும்.

மாறாக…

நேர்மறையான எண்ணம் – செலவுகளைக் குறைக்க குடும்பத்தினர் உதவி செய்தால்

நீங்கள் உணர்வது – நம்பிக்கை, குறைவான மன அழுத்தம்

உங்கள் செயல்பாடுகள் – நீங்கள் தனி இல்லை என்பதும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உங்களுக்கு உதவுவர் என்பதும் உங்களுக்குத் தெரியும். இனி என்றும் சுமையாகத் தோன்றாது. குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஆலோசனைகள், யோசனைகள், பரிந்துறைகள் ஆகியவற்றை வரவேற்பீர்கள்.எளிய, குறைந்த செலவு கொண்ட விருந்தளிப்புக்கு அவர்களை ஊக்கப்படுத்துவதுடன். அவர்களது ஒருங்கிணைப்பையும் கொண்டாடுவீர்கள்.இவை அனைத்துமே உங்களுக்கு உதவியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் பொறுப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்வதால் குடும்பப் பிணைப்பு அதிகரிக்கிறது.

எதிர்மறை எண்ணம் – வீட்டில் இருக்கும் எவரேனும் உடல் நலம் குன்றினால் அல்லது காயப்பட்டால்…

நீங்கள் உணர்வது – பயம், பதற்றம், அழுத்தம், விரக்தி

உங்கள் செயல்பாடுகள் – பதற்றம், கவலை காரணமாக வீட்டில் யாருக்கேனும் நோய் அல்லது காயம் ஏற்பட்டால் என்னவெல்லாம் செய்வோமோ, அது சார்ந்த விஷயங்கள் பலவற்றை செய்யத் தொடங்குவீர்கள். வீட்டில் இருக்கும் அனைவரையும் எப்போதும் சந்தேகத்துடனேயே பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். சாதாரண இருமல், தும்மல்களுக்கே உங்களது எதிர்வினை அதிகபட்சமானதாக இருக்கும். மொத்த வீடுமே ஒரு பதற்ற நிலையிலேயே இருக்கும்.

மாறாக…

நேர்மறை எண்ணங்கள் – அவசர நிலைக்கு தயாராக இருந்தால்…

நீங்கள் உணர்வது – மனதை அமைதிப் படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதுடன் சவால்களை எதிர்கொள்ளும் தைரியமும் ஏற்படும்.

உங்கள் செயல்பாடுகள் – எந்த சூழலையும் எதிர்கொள்பவராக, பொறுப்பேற்பவராக மாறுவீர்கள். அவசர நிலைக்கு உங்களுக்கு உதவக்கூடிய நபர்கள் குறித்து ஒரு பட்டியல் ஒன்று தொடங்குவீர்கள்.உங்கள் குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வர். அத்துடன் அவர்களுக்கு நீங்கள் எந்த வித சூழலையும் சமாளித்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையும் ஏற்படும்.

எதிர்மறையான எண்ணம் – அலுவலகப் பணி, வீட்டு வேலை இரண்டையும் சரிவர செய்ய இயலாது போனால்

நீங்கள் உணர்வது – ஆதரவற்ற நிலை, குற்றமனப்பான்மை, கோபம், விரக்தி.

உங்கள் செயல்பாடுகள் – இந்த உணர்ச்சிகள் அனைத்துமே நீங்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் உங்களை கோபப்பட வைக்கும். உடல் சோர்வடையும்வரை நீங்கள் அதிகமாக வேலை செய்வதை தேர்வு செய்யலாம். உங்கள் உடல்நலம் குறையக்கூடும். நோயின் அபாயத்தையும் அதிகரிக்கும். இவை அனைத்துமே குடும்பத்தினருடனான உங்களது உறவை சேதப்படுத்திவிடும். எல்லா வேலைகளையும் நான்தான் செய்வேன் என்றால் குடும்ப உறுப்பினர்களை நீங்களே உதவி செய்வதிலிருந்து புறக்கனிப்பதாக ஆகிவிடும்.

மாறாக…

நேர்மறையான எண்ணம் – குடும்ப உறுப்பினர்கள் எனக்கு உதவினால்…

நீங்கள் உணர்வது – மகிழ்ச்சி, பாராட்டு, அன்பு, அக்கறை

உங்கள் செயல்பாடுகள் – மிகப்பெரிய பாரம் குறைந்ததுபோல் உணர்வீர்கள். உங்களது திட்டங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் உதவியும் இருக்கும்போது உங்கள் மன நிலையும் சிறப்பானதாகவே இருக்கும் இதன் காரணமாக குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து பணி செய்யத் தொடங்குவீர்கள். விளைவு குழந்தைகளும் துணைவியரும் அவரவர் பொறுப்புகளை கற்றுக் கொள்ளவும் ஆதரவாக இருக்கவும் குழுவாக பணியாற்றவும் கற்றுக் கொள்வர். குடும்பத்தில் ஒவ்வொருவரும் பொறுப்புள்ள ஒரு குழு ஆட்டக்காரர் ஆகிறார். குடும்பச் சூழலும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். ஊக்கம். பாராட்டு இரண்டும் குடும்பத்தின் இரு சக்கரங்களாக இருந்து தாளம் தப்பாமல் முன்னேறிச் செல்ல பெரிதும் உதவியாக இருக்கும். நமக்கு வேண்டியதும் அதுதானே…

எனவே எதிர்மறை எண்ணங்களை தள்ளிவைத்து நேர்மறை எண்ணங்களை மனதில் கொண்டுவாருங்கள். சுதந்திரமாக மூச்சுவிடுங்கள். இசை உங்கள் மனதை இளகுத் தன்மையோடு இருக்க வைக்கும்.உங்கள் அழுத்தமெல்லாம் மாயமாகி அமைதியான சூழல் ஏற்படும் உங்களைச் சுற்றி அனைத்துமே மகிழ்ச்சி நிறைந்ததாகவே இருக்கும்.

மேடு பள்ளங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. அவை இல்லாவிட்டால் நம் வாழ்க்கை சுவாரஸியமாகவே இருக்காது. இவற்றைக் கடந்து வாழ்வதுதான் வாழ்க்கை. தற்போதுள்ள ஊரடங்கு காலகட்டத்தில் இக்கட்டுரை உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

எதிர்மறைக் கருத்துக்கள் மனதுக்குள் நுழையும்போதே அதற்குமாறாக நேர்மறை எண்ணங்களுக்கு வழிவிட்டாலே பல பிரச்சனைகள் விலகிவிடும். எடுத்துக்காட்டாக, கீழே கொடுக்கப்பட்டிருப்பதை முயன்று பாருங்களேன்.

எதிர்மறை எண்ணங்கள் – அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துவிட்டால்

நேர்மறை எண்ணங்கள் – முன்னரே திட்டமிட்டு வாங்கி வைத்துவிட்டால்

எதிர்மறை எண்ணங்கள் – பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கவில்லை என்றால்

நேர்மறை எண்ணங்கள் – குழந்தைகள் வீட்டில் பாதுகாப்புடன் இருக்கின்றன

எதிர்மறை எண்ணங்கள் – எனக்கு ஊதியம் தொடர்ந்து வரவில்லை என்றால்

நேர்மறை எண்ணங்கள் – செலவுகளைக் குறைக்க என் குடும்ப உறுப்பினர்கள் எனக்கு உதவினால்

எதிர்மறை எண்ணங்கள் - வீட்டில் இருக்கும் யாருக்கேனும் காயம் ஏற்படும் பட்சத்தில்

நேர்மறை எண்ணங்கள் – அவசர நிலைக்கு நாம் ஏற்கனவே தயாராக இருந்தால்

எதிர்மறை எண்ணங்கள் – என்னால் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய இயலாது போனால்

நேர்மறை எண்ணங்கள் – குடும்ப உறுப்பினர்கள் எனக்கு உதவினால்

More For You

More for you

We are unable to find the articles you are looking for.