இயற்கை காய், கனிகள்: ஒர் அலசல்
இயற்கை காய்கறிகளை இனம் கண்டு வாங்குவது எப்படி?
By என்.ஜே.கந்தமாறன் • 4 min read

நாம் வாழும் வாழ்க்கை சிறப்பானதாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கமே அடிப்படை. இன்று எல்லா உணவு வகைகளும் நமக்கு தாராளமாகக் கிடைக்கின்றன. ஆரோக்கியமான, சத்தான உணவு என்று பல விஷயங்களை நம்பிச் சாப்பிடுகிறோம். உண்மையில் அவை எல்லாம் ஆரோக்கியமானவையா?, பாதுகாப்பானவைதானா? என்பதைத் தெரிந்து கொள்ள நம்மில் எத்தனைபேர் முயற்சிக்கிறோம்.
எங்கே நாம் ஏமாறுகிறோம்?
காய்களும், கனிகளும் பளபளவென்று ஒரே அளவினதாக இருக்கின்றன. பருப்பு வகைகளும் தானியங்களும் தூசி தும்பு இல்லாமல் பேக் செய்யப்பட்டிருக்கும். இவை ஒரே நிறம் கொண்டவையாகவும் காணப்படுகின்றன. இவை நம் கண்களை மறைத்துவிடுகின்றன.
பதப்படுத்தப்பட்ட பொருள் என்றால் அவை பேக் செய்யப்பட்ட நாள், எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் ஆகியவற்றை எல்லாம் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, பாக்கெட்டின் மேல் எழுதப்பட்டுள்ள ‘ஆரோக்கியப் பலன்கள் தரும் கவர்ச்சியில் மயங்கிவிடுகிறோம்.

எப்படிக் கண்டறிவது?
ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் முதலில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கனிகளைக் கண்டறிந்து வாங்கிச் சாப்பிட வேண்டும்.
எந்தப் பழங்கள், காய்களில் பூச்சியின் தாக்குதல் இருக்கிறதோ அவைதான் இயற்கையாக விளைவிக்கப்பட்டவை.
கண்ணைப் பறிக்கும் வண்ணத்துடன், அனைத்தும் ஒரே அளவு கொண்டதாக, பளபளப்பாக இருக்கும் காய்கள் பழங்கள் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக அவற்றை வாங்காதீர்கள்.

கட்டுப்பாடு
இந்திய உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வழங்கும் சான்றிதழ் முன்பு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. தற்போது அதில் ஒருசில மாறுதல் விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ‘இயற்கை உணவுப் பொருள் என்ற அடையாளத்துடன் விற்பனைக்கு வரும் பொருட்கள் அனைத்தும் மூன்றாம் தரப்புச் சான்றிதழ் பெற்றதாக (Third Party Certification) இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருக்கிறது.