இணையவழி கற்றல் சவாலா? சாத்தியமா?

நீண்ட நாள் ஊரடங்கின் விளைவாக பல பள்ளிகள் இணைய வழியில் வகுப்புகளை நடத்தும் முறைக்கு மாறியிருக்கின்றன. இப்படி வீட்டிலிருந்தே கற்பதில் உள்ள நன்மைகள், சவால்கள் குறித்துப் பேசுகிறது இக்கட்டுரை.

By சு. கவிதா

இணையவழி கற்றல் சவாலா? சாத்தியமா?

இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பல்வேறு விஷயங்களைக் கற்றுத்தரும் செயலிகள் பெற்றோரால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று இணையவழிக்கற்றல் பிரபலமடைந்து வருகிறது.

இணையவழி கற்றல் என்றால் என்ன?

இணையம் எனப்படும் மின்னணு ஊடகம் வழியாகக் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்வதற்குத்தான் இணையவழி கற்றல் என்று பெயர். இணையவழி கற்றல் சிறப்பு வாய்ந்ததா?; அதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லையா?- என்று பெற்றோர் சிலரிடம் கேட்டோம்:

சென்னையைச் சேர்ந்த அனு குருநாதன் சொல்வதைக் கேட்போம்.

இந்த ஊரடங்கு நேரத்தில் ஸ்மார்ட்போன் பார்த்தபடி வீட்டுக்குள்ளேயே சோம்பிக் கிடக்கும் பிள்ளைகளைச் சுறுசுறுப்பாக வைக்க இணையவழி கற்றல் மிகவும் உதவுகிறது என்கிறார் அவர். அனு மேலும் கூறுவது... என்னுடைய மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறாள்.மகன் ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறான். இந்த இணையவழி கற்றல் இருப்பதால் இருவரது நாட்களும் சுறுசுறுப்பாக நகர்கின்றன. ஆனால், இணையவழி கற்றல் விஷயத்தில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதையும் நான் உணர்கிறேன். 

அதாவது குறிப்பிட்ட ஒரு செயலியைப் பயன்படுத்தித்தானே இந்த இணையவழி கற்றல் முறையில் பாடம் கற்க முடியும்? ஆனால், சில சமயங்களில் இந்தச் செயலிக்குள் நுழைந்த பின்னர் இணைப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுவிடுகிறது. அதற்குள் வகுப்புகள் ஆரம்பமாகி ஆசிரியர் பாடம் நடத்த ஆரம்பித்துவிட்டால் அதன் பின்னர் பாடம் நடத்தும் ஆசிரியருக்குத் தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதற்காக இடையில் அந்த ஆன்லைன் வகுப்பிற்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக தாமதமாக இணைப்புக் கிடைக்கும் மாணவர்கள் வகுப்புக்களை சிலசமயங்களில் தவறவிடும் சூழ்நிலையும் உண்டாகிறது. குறிப்பாக இணையத்தில் பாடங்களை கவனிக்கும்போது வகுப்பறையில் பாடங்களைக் கவனிப்பதுபோன்று அவ்வளவு கவனத்துடன் கற்க முடிவதில்லை என்பதும் என் பிள்ளைகள் மற்றும் அவர்களது நண்பர்களின் கருத்தாக உள்ளது.

அதேபோல ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்தபடி கணினியில் பாடங்களைக் கவனிப்பதால் என் பிள்ளைகள் கண்கள், முதுகில் வலி வருவதாகவும் கூறுகின்றனர்.

ஆனால்,இதுபோன்ற அசௌகர்யங்களைத் தவிர்த்துப் பார்த்தால் இணையவழி கற்றல் முறையில் பள்ளிக் கல்வியைக் கற்பதோடு அதுசார்ந்த கூடுதல் தகவல்களையும் செயலிகள் மூலம் குழந்தைகளால் எளிதில் கற்றுக் கொள்ள முடியும்.

எடுத்துக்காட்டாக, ஆஹாகுரு (AhaGuru) என்கிற செயலி சற்று வளர்ந்த பிள்ளைகளுக்கு முன்னோக்கிய கணிதம், இயற்பியல், வேதியியல் போன்றவற்றைக் கற்றுக்கொள்ள உதவும் ஒரு செயலியாகும். குறிப்பாக ஐஐடி-, ஜேஇஇ(IIT-JEE) மற்றும் நீட் (NEET) போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பிள்ளைகளைத் தயார் படுத்த இதுபோன்ற செயலிகள் உதவிகரமாக இருக்கும்.

பிள்ளைகளுக்கு பாடத்தில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் குறிப்பிட்ட வகுப்பின் பதிவுகளை

(RECORDED PORTION) திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள முடியும். இந்த வசதியையும் இப்போது செயலிகள் கொண்டு வந்துவிட்டன. கல்வியைத் தவிர, விருப்பம் மற்றும் திறன் சார்ந்த கலைகளைக் கற்றுக்கொள்ள உதவும் செயலிகளும் நிறைய இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஸ்டாப் மோஷன் (stop motion) என்கிற செயலியைப் பயன்படுத்தி ஒரு பொருளை நகர வைக்க முடியும். மிகுந்த சுவாரசியத்தை ஏற்படுத்தும் இந்தச் செயலியை ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் என் மகன் மிகுந்த விருப்பத்துடன் பயன்படுத்தி வருகிறான். அதேபோல காகிதங்களைக் கொண்டு விதவிதமான வடிவங்களைச் செய்யும் ஒரிகாமி கலையைக் கற்றுத்தரும் செயலிகளையும் அவன் விரும்பிப் பயன்படுத்துகிறான்.

கல்வியை அல்லது கலையை எப்போதுமே குருவிடமிருந்து நேரில் கற்றுக்கொள்வது சிறந்தது என்றாலும் இப்போதுள்ள சூழ்நிலையில் குழந்தைகள் அலுப்படையாமல் தொடர்ந்து இயங்கவைக்க, நாட்களைப் பயனுள்ள வகையில் நகர்த்த இணையவழி கற்றல் முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை" என்கிறார் அனு குருநாதன்.

திருச்சியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியரான வெண்ணிலாவின் பார்வை வேறு விதமாக இருக்கிறது.

பள்ளிக் கல்வியைப் பொறுத்தமட்டில் கரும்பலகையில் எழுதிப்போட்டு வகுப்பறையில் நடத்துவதுபோல ஆன்லைன் வகுப்புக்களில் ஒருபோதும் சொல்லித்தர முடியாது என்பதுதான் என் கருத்தாக உள்ளது.

நீங்கள் இணையம் மூலமாக அறிவியலைப் போதிக்க முடியும். வரலாற்றுத் தகவல்களை சுவாரசியமாகப் பேசிப் புரியவைக்க முடியும். ஆனால், கணிதத்தைக் கரும்பலகை இல்லாமல் எப்படி ஒரு ஆசிரியரால் அவரது வீட்டிலிருந்தபடியே இணையத்தில் நடத்தமுடியும்? கரும்பலகையைப் பயன்படுத்தாமல் எப்படி ஆங்கில இலக்கணத்தைப் புரியவைக்க முடியும்? அதிலும் பலர் ஸ்மார்ட் போன் வழியாகவே வகுப்புக்களில் பங்கேற்கிறார்கள். அத்தனை சிறிய ஊடகத்தின் வழியாகக் குழந்தைகள் பாடங்களைப் புரிந்துகொள்வதென்பது உண்மையிலேயே அவர்கள் சந்திக்கின்ற பெரிய சவால் என்றே நான் நினைக்கிறேன்.

எனக்கு இரண்டு மகள்கள். என்னுடைய இளைய மகளுக்கும் இணையம் மூலமே தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், எனது மகளின் வகுப்பில் பாதிப்பேரால் மட்டுமே இணைய வகுப்பில் பங்கேற்க முடிகிறது. இந்த இணையவழி கற்றல் நம் ஊருக்கு மிகவும் புதிது என்பதால் நிறையப் பேருக்குக் கொடுக்கப்பட்டுள்ள APP CODE-ஐ பயன்படுத்தி எப்படி உள்ளே செல்வது என்று தெரியவில்லை. இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் நிறைய இடங்களில் இணையத்தின் வேகம் மிகக் குறைவாகவே உள்ளது. இவை எல்லாவற்றையும் செயலிக்குள் நுழைந்து வகுப்பில் பங்கேற்றால்கூட பாதியிலேயே இணையசேவை துண்டிக்கப்பட்டால் மறுபடியும் இணைய வகுப்பிற்குள் நுழைவது என்பதே பெரும் போராட்டமாகவே இருக்கிறது.

தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளே இத்தனை பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள் என்றால் கொரோனா ஊரடங்கு தொடர்வதன் காரணமாக ஒருவேளை இந்த இணையவழி கற்றல் முறை அரசுப் பள்ளிகளுக்கும் கொண்டுவரப்பட்டால் அது எவ்வளவு தூரம் குழந்தைகளுக்குப் பயனுள்ளதாக அமையும் என்று தெரியவில்லை. ஏனென்றால் பார்ப்பவர்கள் கையில் எல்லாம் ஸ்மார்ட்போன்கள் இருப்பதால் இணையவழி கற்றல் எல்லா இடத்திலும் சாத்தியம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், இணையம் என்றாலே என்னவென்று தெரியாத கிராமங்கள் நம் நாட்டில் நிறைய இருக்கின்றன. இன்னும் பட்டன் அலைபேசியை மட்டுமே பயன்படுத்தும் எளிய குடும்பங்கள் கிராமங்களில் நிறைய இருக்கின்றன. எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் வாழ்கின்ற பிள்ளைகளுக்கு இணையவழிக் கற்றல் என்பது எட்டாக்கனியாகவே அமையும் என்பதுதான் உண்மை.

பொதுவாக. கல்வி மற்றும் தனித்திறன் சார்ந்த விஷயங்களுக்காகச் செயலியைப் பயன்படுத்துவது பலரின் வழக்கம். எனது மகள்கள்கூட தங்களது பள்ளிக் கல்விக்காக பைஜூஸ்(BYJUS ) என்கிற செயலியைப் பயன்படுத்துகிறார்கள். அதேபோல எனது பெரியமகள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சியைப் பெறுவதற்காக வேதாந்து (Vedantu) என்கிற செயலியைப் பயன்படுத்துகிறாள்.

இப்படி எத்தனையோ செயலிகள் புழக்கத்திலிருந்தாலும் கணிதத்தில் விகிதமுறு எண் (rational number) என்கிற குறிப்பிட்ட ஒரு பாடத்தை இணைய வகுப்பில் எவ்வளவுதான் சொல்லிக்கொடுத்தாலும் அது எல்லா மாணவர்களாலும் புரிந்துகொள்ளப்படும் என்று சொல்லமுடியாது. ஆனால், இது குறித்த யூ-டியூப் காணொலிகள், ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் நடத்துவதுபோல தெளிவாக பாடத்தை மாணவர்களுக்குப் புரியவைத்து விடுகின்றன. அதேபோல DIY எனப்படும் Do it yourself

வகைக் காணொலிகளும் யூ-டியூபில் கொட்டிக் கிடக்கின்றன. எனவே ஓவியம்,கைவேலைகள் என்று தனித்திறன் சார்ந்து கற்றுக்கொள்வதற்கும் யூ-டியூப் கைகொடுக்கும்.

இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு ஆசிரியராக முக்கியமான ஒரு விஷயத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த இணையவழி கற்றல் என்பது தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையைக் கையாள உதவுகிறது என்பதில் சந்தேகமில்லை. குழந்தைகள் தொடர்ந்து கல்வியோடு தொடர்பில் இருக்க இது உதவும். ஆனால், மாணவர்களின் கல்வித் தாகத்தை முழுவதுமாகப் பூர்த்தி செய்ய இந்த இணையவழி கற்றல் அத்தனை சிறப்பானது என்று சொல்வதற்கில்லை என்பதே என் கருத்து" என்கிறார் வெண்ணிலா.

இணையவழி கற்றல் சவாலா? சாத்தியமா?

இணையவழி கற்றல் மூலமாகக் கல்வி கற்பது என்பதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. ஏனென்றால் ஆசிரியர் நடத்துவதை நேரில் கேட்டுப் படிப்பது போல இந்த இணையவழி கற்றல் அமையாது. குறிப்பாக நம்முடைய தாய்மொழியாம் தமிழை இணையவழி கற்றல் மூலம் கற்றுக்கொடுப்பதில் எனக்கு முற்றிலும் உடன்பாடில்லை. வகுப்பறையில் புத்தகத்தைக் கைகளால் தொட்டுணர்ந்து ஆசிரியரின் முகபாவங்களை உற்றுநோக்கி மொழியைக் கற்றறிதலே சிறப்பாகும். ஆனால் தனித்திறன் சார்ந்த கலைகளைக் கற்றுக்கொள்ள இந்த இணையவழி கற்றல் ஒரு அற்புதமான ஊடகமாக இருக்கிறது.

என்னுடைய மகன் ஹிந்தி மொழியையும், வேதத்தையும் இணையம் மூலமாகவே கற்றுக்கொள்கிறான். ஒவ்வொருமுறையும் குழந்தையைச் சிறப்பு வகுப்புக்களுக்கு கொண்டு போய் விட்டுவிட்டுத் திரும்ப அழைத்துவரும் வேலை அம்மாக்களுக்குக் குறையும்.

அதுமட்டுமல்லாமல், ஒருவர் உலகத்தின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் தான் விரும்பிய ஒரு கலையை இணையம் மூலமாகக் கற்றுக்கொண்டுவிட முடியும். எடுத்துக்காட்டாக, என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன். நான் ஒரு வாய்ப்பாட்டுக் கலைஞர். நான் ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கும், பிரிட்டனைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் இணையம் மூலமாக வாய்ப்பாட்டு சொல்லித் தருகிறேன். அதுமட்டுமல்லாமல் ஆம்பூர் அருகில் இருக்கின்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் என்னிடம் இணையத்தில் சங்கீதம் கற்கிறார்கள்.அந்த கிராமப்புற மாணவர்களுக்கு சங்கீதம் கற்றுக்கொடுப்பது எனக்குப் பெரும் மனநிறைவைத் தருகிறது. அவர்களின் கனவை மெய்யாக்கியது இந்த இணையவழி கற்றல்தானே! அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்றில்லாமல் இப்படி மூலை முடுக்கில் வசிப்பவர்களும் தாங்கள் விரும்பியதைக் கற்றுக்கொள்ள உதவியாக இருப்பதுதான் இந்த இணையவழி கற்றலின் பலமே.

தொழில்நுட்பம் சார்ந்த அறிவு பல கிராமப்புற மாணவர்களுக்கு அற்புதமாக இருக்கிறது. ஆனால், ஆங்கிலத்தில் பேசும் திறன் இல்லாததால் பல கிராமப்புற மாணவர்களால் பிரகாசிக்க இயலாமல் போகிறது. இந்தக் குறையை சரி செய்வதில் செயலிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, கேம்ப்லி

(Cambly) போன்ற பல செயலிகள் இணையத்தில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவுகின்றன. இது கிராமப்புற மாணவர்களுக்குப் பெரும் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தருவதாக இருக்கின்றன. ஆங்கிலத்தில் பேசத் தெரியாததால் வேலை வாய்ப்பை இழக்கும் பல மாணவர்களின் வயிற்றில் பாலை வார்ப்பது இதுபோன்ற இணையவழி கற்றல் வழிக் கல்விதான்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த இணையவழி கற்றல் உலகத்தைக் கையில் கொண்டுவந்து கொடுத்துவிட்டது. உங்களிடம் ஒரு கணினி, இணைய இணைப்பு மற்றும் ஒரு ஹெட்செட் இருந்தால்போதும், குழந்தைகளை அவர்கள் இருந்த இடத்திலிருந்தே இணையவழி கற்றல் மூலம் சுறுசுறுப்பாக வைக்கலாம்" என்கிறார் உஷா.