பசி போக்கும் பத்மநாபன்

உணவை வீண் செய்வது எவ்வளவு பெரிய தவறு என்பதை நாம் உணர்ந்தே ஆக வேண்டும். அதனைத் தானும் உணர்ந்து, மற்றவர்க்கும் உணர்த்துகிறார் பத்மநாபன்.

By செல்லமே குழு  • 8 min read

பசி போக்கும் பத்மநாபன்

அது, 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவையில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி. அதில் மகிழ்ச்சியோடு கலந்துகொண்டிருந்தார் மணமகனின் நண்பரான பத்மநாபன் கோபாலன். திருமண விருந்தின் முடிவில் அங்கிருந்த தட்டுகளில் மீந்துபோன உணவுகள் அப்படியே குப்பைத் தொட்டிக்குள் கொட்டப்படுவதைக் கண்டார். அது அவரைத் துணுக்குறச் செய்தது.

அந்த மண்டபத்தைவிட்டு வெளியில் வந்தபோது, மூதாட்டி ஒருவர் அவரை நிறுத்தி, தான் பல நாட்களாக சாப்பிடவில்லை என்று சொல்லி, ஏதாவது சாப்பிடக் கொடுக்குமாறு பிச்சை கேட்டார். இந்த நிகழ்வு பத்மநாபனின் மனதை மிகவும் ஆழமாகத் தாக்கிவிட்டது. மண்டபத்துக்குள் உணவு வீணடிக்கப்படுகிறது; ஆனால், மண்டபத்துக்கு வெளியே பசித்த வயிற்றுடன் மனிதர்கள். இப்பிரச்சனைக்கு ஒரு முடிவு காணவேண்டும் என்று அங்கே முடிவு செய்தார் அவர்.

எப்படித் தொடங்கியது?

அந்த நிகழ்வுக்கு முன், பத்மநாபன் பல பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். மதிய இடைவேளை நேரத்தில் குழந்தைகள் அங்கும் இங்குமாக உணவை வீணாக்குவதைக் காண நேர்ந்தது. இதுவும் ஒரு நெருடலை ஏற்படுத்தியது. உடனே உதித்தது ஒரு திட்டம்!

அதன்படி எடை பார்க்கும் அளவையை பள்ளிக்குச் செல்லும்போது உடன் எடுத்துச் சென்றார். பிள்ளைகள் வீணாக்கும் உணவின் எடையை அவர்கள் முன்பே அளக்கவும் செய்தார்.

அதன்பின் அவர்கள் வீணாக்கும் உணவின் எடை குறித்து நாம் நேற்று 5 கிலோ உணவை வீண் செய்திருக்கிறோம் என்று பள்ளி வளாகத்திலேயே படிக்கத் தொடங்கினர். அது பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தேவையான அளவு மாற்றத்தைக் கொண்டு வந்தது. மெல்ல மெல்ல குழந்தைகள் வீணாக்காமல் இருப்பது குறித்த, தங்களது பொறுப்பை அறிந்து கொண்டனர்" என்று புன்னகையோடு விளக்குகிறார் பத்மநாபன்.

பசி போக்கும் பத்மநாபன்

இதுபோன்ற சிறு சிறு மாற்றம் அவருக்கு திருப்தியளித்தபோதும் இன்னமும் அவரது எண்ணம் முழுமையடையவில்லை. இதனை, மேலும், பலப்படுத்த வேண்டியதும் அவசியமல்லவா! 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாத அன்றைய இரவு, அந்த ஏழை மூதாட்டியின் பசித்த முகத்தைப் பார்த்தபின் அவரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. அந்த நாளின் அதிகாலை 2 மணிக்கு பத்மநாபன் ஒரு இணையதளத்தை உருவாக்கினார். அதன் ‘ஹெல்ப்லைன் எண்ணை முகநூலில் பதிவு செய்து, ‘யாரிடமேனும் அதிகப்படியான உணவு இருந்தால், இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்‘ என்றும், ‘அந்த உணவு தேவைப்படுவோருக்குக் கண்டிப்பாக சென்று சேரும் என்பது உறுதி என்றும் பதிவிட்டார். அந்த நேரம் அந்த நொடி பிறந்ததுதான் ‘நோ ஃபுட் வேஸ்ட்.

அடுத்த நாள், அவருக்கு ஒரு சில அழைப்புகள் வந்தன. இரண்டு பெரிய பைகள், பயணம் செய்ய கையில் 12 ரூபாய்... அவ்வளவுதான் அவரிடம் இருந்தன. ஆனால், இதை வைத்து அவரால் 52 பேருக்கு உணவு வழங்கி, அவர்களின் பசியைப் போக்க முடிந்தது. 

இது வெறும் தொடக்க நாள் மட்டுமே. இதன் பின் திரும்பிப் பார்க்கவே இல்லை. உண்ணும் உணவை தூக்கி எறிவதால் யாருக்கு என்ன பயன்? இந்த உணவுகள் தேவைப்படுவோருக்கு சென்று சேருவதில்லை என்பது மட்டுமல்லாமல் அந்த உணவை செய்வதற்கு ஆகும் செலவும் அதிகம்தானே!" என்கிறார் 26 வயதான பத்மநாபன்.

பசி போக்கும் பத்மநாபன்

வளர்ச்சியும் அங்கீகாரமும்

விரைவில், தன் நண்பர்களுடன் சேர்ந்து ‘இனி எங்கும் பசியே இல்லை‘ என்பதை அறிவுறுத்தும் ஒரு முகாம் ஏற்பாடு செய்தார். அவர்களின் ஒரு சிறு வெற்றியை ஆவணப்படுத்தி, அதனை ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். அவர்களது பணி எந்த அளவுக்கு பரந்து விரிந்து செயல்பட்டு வருகிறது என்பது குறித்த செய்தியாக அது இருந்தது. எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஆதரவும், அங்கீகாரமும் பெருமளவில் வந்தன.

அரசாங்கம் அவர்களுக்கு இலவசமாக உணவுகளை சேமித்து வைக்க ஒரு இடத்தை வழங்கியது. கோவை மக்கள் ஒரு வண்டியையும் பாத்திரங்களையும் இலவசமாக வழங்கினர்.

இந்திய அரசாங்கம் அவரது பங்களிப்பை அங்கீகரித்து, 2016-17ஆம் ஆண்டுக்கான ‘நேஷனல் யூத் விருது‘ வழங்கி சிறப்பித்தது. சமீபத்தில் காமன்வெல்த் அமைப்பு இவரது பணியைப் பாராட்டி ஆசிய பிராந்தியத்தின் 2019ஆம் ஆண்டுக்கான ‘காமன்வெல்த் யூத் விருது‘ வழங்கி கௌரவித்தது.

தொழில்நுட்பம் மூலம் உதவி

இந்த அமைப்பு பெரும்பாலும் தானாக முன்வந்து செயல்படும் மாணவர்களால்தான் இயங்கி வருகிறது. விரைவாக வளர்ச்சிக்கான இலக்கை இவர்களால் எட்ட இயலவில்லை. இதன் காரணமாக இவர்கள் ஜியோ டேக்ஸ் (geo-tags) வழியாக நகரில் பசியோடு இருப்போரின் இடங்களை அறிந்து கொள்வதற்கான கருவியை பயன்படுத்தத் தொடங்கினர். இதன் மூலம் ‘நோ ஃபுட் வேஸ்ட் செயல்படத் தொடங்கியது.

எடுத்துக்காட்டாக, கோயம்புத்தூரில் 63 இடங்களில் பசியோடு இருப்பவர்களை இவர்கள் கண்டுபிடித்தனர். யாரெல்லாம் உணவை வழங்க விரும்புகின்றனரோ அவர்கள் அனைவரும் அதற்கென இருக்கும் இணையதளத்தில் லாக் இன்(www.nofoodwaste.in) செய்ய வேண்டும். 

இந்த இணையதளம் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து 2 முதல் 3 கிலோமீட்டர் தொலைவுக்குள் உணவுகளை கொடுக்க வேண்டிய இடத்தை காண்பிக்கும். எனவே, இதன் மூலம் உணவை வழங்க விரும்புவோர் வெகு எளிதாக தாமே நேரில் சென்று அவர்களிடம் எஞ்சியிருக்கும் உணவை அங்கே கொடுத்துவிடலாம்.

பசி போக்கும் பத்மநாபன்

விளைவு

தொடங்கியதிலிருந்து இதுவரை, ‘நோ ஃபுட் வேஸ்ட் அமைப்பு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேலான மக்களுக்கு உணவை வழங்கியிருக்கிறது. அதேபோல் இந்த அமைப்பின் ஆப்-பின் வழியாகக் கூடுதலாக 50 ஆயிரத்துக்கும் மேலான மக்களுக்கு உணவை வழங்கியிருக்கிறது. இந்த அமைப்பின் மூலமாக 12.4 கோடி ரூபாய் பெருமானமுள்ள உணவு சேமிக்கப்பட்டுள்ளது என்கிறார் பத்மநாபன்.

இன்று, தன்னார்வலர்களால் தமிழ்நாட்டில் 15 நகரங்களில் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து திருமணம், நிகழ்ச்சிகள், உணவகங்கள் இன்னும் பிற இடங்களிலிருந்து சேகரிக்கப்படும் உணவுகள் வீடு இல்லாதவர்களுக்கும், குடிசைகளில் வசிப்போருக்கும், ஆதரவற்றோருக்கும், வயதானோர் இருக்கும் காப்பகங்களுக்கும், அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டுவருகிறது.

பார்வை

மக்கள் பெரும்பாலும் இளம் சமூக சேவகர்களைக் கேட்கும் கேள்வி இவரை நோக்கியும் கேட்கப்பட்டது. அதற்கான இவரது பதில் அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. இந்த அமைப்பு இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்று நான் சொல்வேன் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இந்த அமைப்பு, என்று தன் செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்திக் கொள்கிறதோ அன்று என் கனவு முற்றிலுமாக நிறைவடைந்த நாள்" என்கிறார். அத்துடன் நம் நாட்டில் பசி என்ற வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆசைப்படுகிறேன்" என்கிறார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஹெல்ப்லைன் எண்ணான 90877 90877 ஐப் பகிர்ந்து கொள்கிறார்.

(தமிழில்: சுகுணா ஸ்ரீனிவாசன்)