வாயாடிப் பெண்

‘குழந்தைகள்தானே என்று நாம் பிள்ளைகளை எளிதாக நினைப்பதுண்டு. ஆனால், தங்களாலும் புரிந்துகொள்ள முடியும் என்பதை உணர்த்தியவள்தான் என்மகள் ஹயந்திகா.

By பிரதீபா ஜெயக்கண்ணன்

வாயாடிப் பெண்

எங்கள் சுட்டிப் பெண் ஹயந்திகா சரியான வாயாடி. அவளைச் சுற்றி பெரிய கூட்டமே இருக்கும். அத்தனை பேரிடமும் சரிக்கு சரியாக வாயாடி சமாளிப்பாள். அத்தோடு பள்ளியில் உடன் படிப்போரானாலும் சரி, எங்கள் வீட்டுக்கு அருகாமையில் வசிப்போரானாலும் சரி யாராக இருந்தாலும் பாரபட்சமே இல்லாமல் அத்தனைபேரையும் பிஸியாக வைத்திருப்பாள். அவளைச்சுற்றி இருக்கும்போது அவளது நண்பர்கள் யாருமே ‘போரடிக்கிறது என்ற வார்த்தையையே சொல்ல மாட்டார்கள்.

இவளது இந்த குணமே அவள் வகுப்பு நண்பர்களின் பெற்றோரின் கவன ஈர்ப்புக்கும் வழி வகுத்திருக்கிறது. பிறருடன் பழக கஷ்டப்படும் குழந்தைகளுக்குக்கூட அவளுடன் எளிதாக உரையாட முடிந்தது. இப்படி எல்லோரும் தங்குதடையின்றி பேசுவதற்கான ஒரு சுட்டிப் பெண்தான் ஹயந்திகா.

தகப்பன்சாமி என்றுதான் சொல்லக் கேட்டிருப்பீர்கள். அவள் எனக்கே பல முறை பல விஷயங்களை ஆசானாக இருந்து கற்றுக் கொடுத்திருக்கிறாள் என்பதைச் சொல்ல எனக்கு பெருமையாக இருக்கிறது.

பள்ளியில் சேர்த்த தொடக்க காலத்தில் ஆங்கில எழுத்துக்களை எழுத மிகவும் போராடினாள். அந்த வயதில் விளையாட்டுத்தனம் அவளுக்கு சற்று கூடுதல் என்பதால், ஒவ்வொரு நாளும் வீட்டுப்பாடத்தை முடிக்க அவளுக்கு 5 மணி நேரம் ஆகும். வீட்டிலுள்ள பணிகளையும் கவனித்துக் கொண்டு, இப்படி 5 மணி நேரம் அவளுடன் செலவு செய்ய வேண்டும் என்பது எனக்கு மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்தது.

எனவே, வீட்டுப்பாடங்களை அவள் இஷ்டம்போல் செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன். இப்படி ஒரு மாதத்துக்கும்மேல் சென்றது. இந்நிலை எனக்கு உறுத்தலை உண்டாக்கிவிட்டது. ‘அவள்தான் குழந்தை; நாமல்லவா அவளுடன் அமர்ந்து, உரிய நேரத்துக்குள் வீட்டுப்பாடங்களை முடிக்க வேண்டிய அவசியத்தை அவளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்! ஆனால், நாம் செய்வது சரியில்லையே!- என்ற எண்ணம் மேலோங்கிவிட்டது. இந்த எண்ணம் எனக்கு மிகுந்த அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கியது. இதை எண்ணி எண்ணி ஒரு சில நேரங்களில் மிகவும் மனமுடைந்து போயிருக்கிறேன்.

ஒரு நாள் வழக்கம்போல் வீட்டுப்பாடங்களைச் செய்ய வேண்டிய நேரம் தொடங்கியது. என்னையும், என் மகளையும் தவிர வீட்டில் யாருமே இல்லை. அவள் வழக்கம்போல் விளையாடியபடியே தனது வீட்டுப்பாடங்களை செய்து கொண்டிருந்தாள்.

5 மணி நேரத்துக்கும் மேல் கடந்துவிட்டது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த என் கண்களில் இருந்து என்னை அறியாமல் கண்ணீர் வரத் தொடங்கிவிட்டது. இதை உணர்ந்து நான், என் கண்களைத் துடைத்துக் கொள்வதற்கு முன்னர் என் மகள் அதைப் பார்த்துவிட்டாள். அவள் முகமே மாறிவிட்டது. அப்படியே எல்லாவற்றையும் வைத்துவிட்டு ஓடிவந்து என்னை அப்படியே வாரிஅணைத்துக் கொண்டாள்.

அவள் என்னை அணைத்ததும் நான் உடைந்துபோய் மேலும் அழத் தொடங்கினேன். இதைப் பார்த்து அவளும் அழுது கொண்டே அழாதீங்கம்மா, உங்களுக்கு நான் இருக்கிறேன். நீங்க அழுதா, அதைப் பார்த்து எனக்கும் அழுகை வருகிறது" என்று சொல்லி என் கண்ணீரைத் துடைத்துவிட்டாள். இதைக் கேட்டதும், அவளுக்கு என்மீது எவ்வளவு அன்பு என்பதை எண்ணி என் கண்ணீர் ஆனந்தக் கண்ணீரானது. நான் அழுகையை நிறுத்தாமல் இன்னமும் தொடர்ந்து அழவும் நான் வீட்டுப் பாடங்களை சீக்கிரம் முடிக்கிறேன். இனி இதுபோல் உன்னை எப்போதும் அழவிடமாட்டேன்" என்று கூறினாள். அன்று தொடங்கி இன்றுவரை அவள் தன் வீட்டுப்பாடங்களை அரை மணி நேரத்துக்குள் முடித்துவிடுவதை தன் வழக்கமாகக் கொண்டிருக்கிறாள். குழந்தைகள் உருவத்தில் சிறியவர்கள். ஆனால் தன்மையில் பெரியவர்கள்!

Like