தமிழ்ப் பண்பாட்டை சொல்லிக் கொடுப்போம்

கொரொனா ஊரடங்கு விடுமுறை, ஓய்வு நேரத்தில் நம் பிள்ளைகளுக்கு எவ்வளவோ விஷயங்களைக் கற்றுத்தருகிறோமே, தமிழ்ப் பண்பாட்டையும் கொஞ்சம் சொல்லிக் கொடுத்தால் என்ன!

By கா.சு. துரையரசு

தமிழ்ப் பண்பாட்டை சொல்லிக் கொடுப்போம்

கொரொனா ஊரடங்கு நமக்கு கொஞ்சம் கூடுதல் நேரத்தைக் கொடுத்திருக்கிறது. இவ்வேளையில் குழந்தைகளுடன் செலவழிக்க நிறைய வாய்ப்புகளும் நேரமும் கிடைக்கிறது. அவர்களின் எதிர்காலத்துக்குத் தேவையான பல்வேரு விஷயங்களை நாம் கற்றுத் தந்து வருகிறோம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழரின் பண்பாட்டையும் வாழ்வியலையும் நம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தாலென்ன?

இங்கு தமிழ்க்கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகிய மூன்று சொற்களும் சேர்ந்து ஒரு மயக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன. எல்லாம் ஒன்றுதானா, அல்லது ஒவ்வொன்றும் வெவ்வேறா, ஒன்றுக்கொன்றுக்கு தொடர்பு இருக்கின்றனவா என்றெல்லாம் நமக்கு திகைப்பு ஏற்படும். இது நீங்க வேண்டுமென்றால் நாம் தமிழ்ச் சொல்லோடு மையப்படுத்திச் சிந்தித்தால் போதுமானது. அதாவது ‘கலாச்சார், ‘பாரம்பர்யம் போன்ற சமஸ்கிருதச் சொற்களை விட்டுவிட்டு ‘பண்பாடு என்ற தமிழ்ச்சொல்லை மட்டும் சிந்திப்போம்.

பண்பாடு என்பது என்ன?

எது நமது அடையாளமாக இருக்கிறதோ, எதை நம்மால் வழிவழியாகப் பெருமையுடன் பின்பற்றிவர முடிகிறதோ, எதை நாம் எவ்விதத் தயக்கமுமின்றி மற்ற இனத்தவரிடம், மொழியினரிடம், நாட்டினரிடம் சொல்லிப் பெருமிதப்பட்டுக்கொள்ள முடிகிறதோ, அதுவே நமது பண்பாடாகும்.

பாரம்பரியம் என்ற சொல்லை இப்போது கொஞ்சம் ஆராய்வோம். வழிவழியாக நாம் பின்பற்றிவரும் பழக்க வழக்கங்களையே பாரம்பரியம் என்ற வரையறைக்குள் நாம் அடக்க இயலும். ஆனால் அவை கால வெள்ள ஓட்டத்தில் மாறக்கூடியவை. சில வழக்கங்கள் மறைந்தும் போய்விடுகின்றன. சிலவற்றை நம்மால் மேம்படுத்த முடிகிறது. மற்ற சிலவோ, காலத்துக்குப் பொருந்தாதவை என்பதால் நாமே தவிர்த்துவிடுகிறோம். ஆக, பழக்க வழக்கம் என்று பொருள் கொள்ளப்படும் பாரம்பரியம் என்பது நமது பண்பாட்டின் ஒரு கூறுதானே தவிர அதுவே நமது பண்பாடு ஆகிவிடாது.

ஆக, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், வீட்டுக்கு உள்ளேயும் சமூகத்துடனும் நாம் கலந்து உறவாடுகிற முறை முதலிய எல்லாவற்றின் கூட்டுக்கலவைதான் பண்பாடு என்பது. எனவே, ஒரு இனத்தின் பண்பாட்டின் சாயலோ, தாக்கமோ இன்னொரு இனத்துக்கும் இருப்பது இயல்பானது. அதேநேரத்தில் குறிப்பிட்ட ஒரு பண்பு, தனது பண்பாடு என்று பெருமிதத்துடன் கூற எவருக்கும் உரிமையுண்டு. எடுத்துக்காட்டாக, பெரியவர்களைப் பார்த்தால் இருக்கையிலிருந்து எழுந்து நின்று வணங்குவது/இடம் கொடுப்பது தமிழர் பண்பு. ‘இதே வழக்கம் ஆந்திராவிலும் இருக்கிறதே என்று குழம்பவேண்டியதில்லை. மாறாக, நமது பண்பாட்டை நாம் பெருமிதத்தோடு பின்பற்றுவதுடன் மற்ற இடங்களிலும் இதன் சாயல் இருக்கிறது என்பதையும் அங்கீகரித்து மகிழவேண்டும்.

நான் மட்டும்தான் உசத்தியா?

என் பிள்ளை நல்லவன்" என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறதுதானே! அப்படியானால் என் பிள்ளை கெட்டவனா?" என்று பக்கத்துவீட்டுக்காரர் எதிர்க்கேள்வி கேட்டால் நம்மிடம் என்ன பதில் இருக்கும்? என் பிள்ளை நல்லவன் என்று சொல்வதற்கான உரிமை எனக்கு இருக்கிறது. அதற்காக மற்றவரெல்லாம் தீயவர் என்று புரிந்து கொள்ளவும் வேண்டியதில்லை. என் கருத்தின் பொருள் அதுவும் அல்ல" என்றுதான் நாம் விளக்க வேண்டியிருக்கும்.

இனம், மொழி

‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றி மூத்த இனம் என்று தமிழனத்தைக் கூறுவர். உலகின் மிக மூத்த மொழிகளில் ஒன்று தமிழ். கல்வெட்டுக்கள், வீரக்கற்கள் உள்ளிட்ட நடு கற்கள், ஓலைச்சுவடிகள், செப்புப்பட்டயங்கள், வட்டெழுத்து, கிரந்த எழுத்து என்று பல்வேறு ஊடகங்களை, வடிவங்களைத் தாண்டியே இன்றைய தமிழ் எழுத்துக்கள் பரிணாமம் அடைந்திருக்கின்றன. இத்தகைய நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட நம் தாய் மொழியாம் தமிழ் மீதும், இந்த ஆதிப்பழைய இனத்தின்மீதும் நாம் பற்றும் பாசமும் கொண்டிருக்க வேண்டும். இது குறித்து பெருமிதமும் அடைய வேண்டும். இதனை நாம் நம் குழந்தைகளுக்கும் கடத்த வேண்டும்.

விருந்தோம்பல்

மோப்பக் குழையும் அநிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

என்கிறார் வள்ளுவர். தமிழ்ப் பண்பாட்டின் மிக முக்கியமான கூறு என்பது விருந்தோம்பல்தான். சங்க காலப் பாடல்கள் முதல் அண்மைக்கால

இலக்கியம்வரை தமிழர்களின் அடையாளமாக விருந்தோம்பல் போற்றப்படுகிறது. ஆன்மீகக் கதைகளிலும் அடியார்கள் அனைவரும் வறுமையில் செம்மையாக வாழ்ந்த விருந்தோம்பல் மேன்மக்களாகவே திகழ்ந்திருப்பதாகப் படிக்கிறோம். கடவுளர்கள்கூட இவர்களின் விருந்தோம்பலை வேண்டி விரும்பி அனுபவித்து அருள் புரிந்ததாக ஏகப்பட்ட ஆன்மீகக் கதைகள் நம்மிடம் உண்டு.

இத்தகைய சிறப்பு வாய்ந்த விருந்தோம்பும் பண்பை நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தரவேண்டும். இது கல்வியாக இல்லாமல் குடும்பத்தின் இயல்பான வழக்கமாக ஆக்கப்படவேண்டும். நம் வீட்டுக்கு விருந்தினர் ஒருவர் வந்தால் அவரை மரியாதையோடு வரவேற்பது, தாகம் தணிக்க நீர் தருவது, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மரியாதையுடன் விடையளிப்பது ஆகிய அடிப்படை விஷயங்களை சிறு வயதிலேயே பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்.

பெரியோருக்கு மரியாதை

ஆசிரியர், வயதில் மூத்தவர்கள், விருந்தினர், பெற்றோரின் நண்பர்கள் ஆகியோருக்கு மரியாதை செலுத்துவது தமிழ்ப் பிள்ளைகளின் இயல்பான பண்பு ஆகும். ஆனால், இவை எவையும் விண்ணிலிருந்து குதித்துவிடுகிற தன்மைகளன்று. நாம்தான் குழந்தைகளுக்கு இவற்றைக் கற்றுக் கொடுக்க வேண்டும். வயதில் மூத்தோருக்கு இரு கைகூப்பி ‘வணக்கம் சொல்வது, கவனக் குறைவால் பெரியோர் மீது கால் பட்டுவிட்டால் தொட்டு வணங்கி மன்னிப்புக் கோருவது (கடவுள்களின் பெயரைச் சொல்லித் தொட்டுக் கும்பிடும் வழக்கமும் தமிழரிடத்தில் உண்டு) பெரியோர் அமர ஆசனம் அளிப்பது, பண்பான சொற்களைப் பயன்படுத்துவது ஆகிய பழக்கங்களை நாம் 5 வயது முதலாகவே கற்றுக்கொடுக்கத் தொடங்கிவிடலாம்.

அழகுணர்ச்சி

தமிழர்கள் மரபணுவிலேயே கவிதை மனம் கொண்டவர்கள். சங்ககால இலக்கியங்கள் முதல் இன்றைய திரைப்படப் பாடல்கள்வரை எல்லாமே கற்பனையின் உச்சம் எனவும் அழகுணர்ச்சியின் அற்புத வெளிப்பாடு எனவும் நாம் நிச்சயமாகக் கூறிவிடலாம். இந்த அழகுணர்ச்சியையும் இலக்கியச் சுவையையும் படைப்பாற்றலையும் பிள்ளைகளிடத்தில் ஊட்டி வளர்க்க வேண்டுமென்றால் நாம் இலக்கியங்களை எளிய மொழியில் அவர்களுக்கு அறிமுகம் செய்வதுதான் எளிய வழி எனலாம். எனவே வாய்ப்புள்ள அனைத்து வகையிலும் அவர்களது கவிதை மனத்தைப் பண்படுத்துங்கள். கம்பனும் ஒட்டக்கூத்தனும் ஒளவையாரும் வள்ளுவனும் சீத்தலைச் சாத்தனும் தமிழர்களே. நல் வளர்ப்பின் பிள்ளைகளே.

கவிதையும் கட்டுரையும் காப்பியமும் மட்டுமே அழகுணர்ச்சியின் வெளிப்பாடன்று. மாறாக, ஆடல், பாடல் போன்ற நிகழ்த்துகலைகள், கோலமிடுதல், கைவினைப்பொருட்கள் செய்தல் போன்றவையும் அழகுணர்ச்சியின் வடிவங்களே. இவற்றை ஊக்குவிப்பதன் மூலமாக மன ஒருமைப்பாடு, மன அழுத்தத்திலிருந்து விடுபடுதல் போன்றவை எதிர்காலத்தில் குழந்தைளுக்குக் கிடைக்கும்.

தமிழ்ப் பண்பாட்டை சொல்லிக் கொடுப்போம்

வீரம்

தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களுள் தலையாயது வீரமும் தன்மானமும்தான். தன்மானத்துக்குக் கேடு விளையும்போது உயிர் துறத்தலைத் தமிழர்கள் வழிவழியாகப் பின்பற்றி வந்திருக்கின்றனர். போரில் தோல்வியடைந்து சிறையில் இருக்கிறான் சேர மன்னன் கணைக்கால் இரும்பொறை. மன்னனுக்கு நா வறள்கிறது. சிறைக்காவலனிடம் நீர் கேட்க, வெகு தாமதமாக, இடக்கையால் நீர் கொண்டு வந்து தருகிறான். ஒரு மன்னன், இவ்வாறு இழிந்த நிலையில் நீர் பருகித்தான் உயிர் வாழ வேண்டுமா என்று மனம் வெதும்பிய இரும்பொறை, வடக்கிருந்து (வட திசை நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர் நீப்பது) உயிர் நீத்தான். பிழைத்துக் கிடப்பதற்காக எந்த சமரசத்தையும் தமிழ் மனம் செய்வதில்லை. இது பலமுறை உலகத்தோரால் ஏளனம் செய்யப்பட்டுத்தான் வந்திருக்கிறது. ஆனால் உயிரைவிட மானமே பெரிது என்பதே நமது பண்பாடு, வரலாறு.

இத்தகையை பெருமைமிகு பண்பாட்டைப் பிள்ளைகளுக்குக் கதைகள் வாயிலாகச் சொல்லிக் கொடுக்கலாம். அதே நேரத்தில் உயிர் எனும் உயரிய பொருளை எந்த நோக்கத்துக்காகக் காப்பாற்றி வைக்க வேண்டும் என்றும் சொல்லித் தரவேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் அறிவுக்குப் புறம்பாக இருக்கும் என்பதையும் நிச்சயம் கற்றுத் தரவேண்டும்.

தன்மானமும் வீரமும் நமது அடையாளங்கள்தாம். அதே நேரத்தில் விவேகமற்ற வீரம் முட்டாள்தனமாக ஆகிவிடும் என்பதையும் அடிக்கோடிட வேண்டும். தன்மானத்தைக் காக்க, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவுப்பூர்வமான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும், அதை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை வாய்ப்புள்ள பொழுதுகளிலெல்லாம் அறிவுறுத்தி வரவேண்டும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது -என்கிறார் பொய்யாமொழிப் புலவர். தமிழர்கள் குருதியிலேயே அன்பு மிக்கவர்கள். வீட்டுக்கு உள்ளே மட்டுமல்ல, மொழி, இனம் தெரியாத எவருடனும் அன்பு பாராட்டுவோர் தமிழர்கள். அதனால்தான் உலகமெங்கும் தமிழர்களால் ஒருங்கிணைந்து வாழ முடிகிறது. பெரும் பதவிகளை அலங்கரிக்கின்றனர். உலக மக்களால்

நேசிக்கப்படுகின்றனர். நேர்மை மிகுந்த எந்த மனிதனையும் தமிழர்கள் அன்பு செலுத்தி அரவணைத்துவிடுவர். இந்தப் பண்பை நீங்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தரவே முடியாது. ஆனால் உங்கள் வாழ்க்கை முறையைப் பார்த்து குழந்தைகளால் எளிதில் இதனைக் கற்றுக் கொண்டுவிட முடியும்.

புதியன விரும்பு

மக்கள் இனம் யாவரையும் தம் இனத்தவராய்க் கருதி அன்பு செய்யும் இயல்பும் புதிய விஷயங்களை நாடிச்சென்று கற்கும் விருப்பமும் இருப்பதால் பல துறைகளிலும் தமிழர்கள் கோலோச்சுகின்றனர். அதனால்தான் உலகளாவிய பார்வை தமிழர்களுக்கு உண்டு. 1000 ஆண்டுகளுக்கு முன்னரே மாமன்னர் ராஜ ராஜ சோழனின் குடும்பம் வெளி நாடுகளில் திருமண உறவு பூண்டிருந்தது.

தமிழர்கள் உலகமெங்கும் வணிகம் செய்துவந்தனர். இதுபோன்ற ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருப்பதால்தான் மற்றவர்களின் பண்பாடு, வரலாறு ஆகியவற்றை மதிக்கும் பண்பு நமக்கு வந்துவிடுகிறது. மற்ற எவரையும்விட தமிழர்கள்தான் பிற மொழிகளைக் கற்பதில் வித்தகர்களாக இருக்கின்றனர். தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா இந்தியையும், மாக்ஸ் முல்லர் பவன் ஜெர்மனையும், அல்லயன்ஸ் ஃப்ரான்சாய்ஸ் அமைப்பு ஃப்ரெஞ்ச் மொழியையும், ரஷ்யக் கலாச்சார மையம் ரஷ்ய மொழியையும், சமஸ்கிருதக் கல்லூரி சமஸ்கிருதத்தையும், பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கிலத்தையும் சிறப்புற இங்கு கற்றுக்கொடுத்து வருகின்றன.

இவைதவிர தனியார் அமைப்புகளான தொசாக்காய் ஜப்பானிய மொழியையும் தெலுங்கு உலகக் கூட்டமைப்பு தெலுங்கு மொழியையும் கற்றுக்கொடுத்து வருகின்றன. மேலும் பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள் போர்த்துகீசியம், சீனம், ஸ்பானிஷ் என்று ஐரோப்பிய, தென்கிழக்காசிய மொழிகளைக் கற்றுக்கொடுக்கின்றன. அவற்றை ஆயிரம் ஆயிரம் தமிழ்க்குழந்தைகள் (பெரியவர்கள்கூட) கற்றுக் கொண்டு தங்கள் எல்லைகளையும் பண்பாட்டுப் புரிதலையும் விசாலமாக்குகின்றனர். இந்தப் பாதையில் உங்கள் பிள்ளையும் வீறு நடை போடட்டும்.

நிறைவாக ஒன்றை நாம் இங்கு பேசியாக வேண்டும். நாம் மட்டுமே சிறந்தவர் என்பதல்ல நம் பண்பாடு. சிறந்தவற்றைக் கைக்கொண்டு, அவற்றைப் பழக்கமாக்கி, பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். அதுவே நமது பண்பாடாக ஆகட்டும்.


More For You

More for you

We are unable to find the articles you are looking for.