ஆயிரம் கேள்விகள் மலரட்டும்

குழந்தைகள் நம்மிடம் ஆயிரக்கணக்கான கேள்விகளைக் கேட்கின்றனர். எப்படி இவர்களை சமாளிப்பது?

By ஜெயமேரி  • 6 min read

ஆயிரம் கேள்விகள் மலரட்டும்

குழந்தைகளின் கிள்ளை மொழி அழகுதான். குழந்தைகள் பேசத் தொடங்கி விட்டாலே (அதுவும் 35 வயதில்) அவர்களுக்கு ஓராயிரம் கேள்விகள் இருக்கும். அவர்கள் அதைக் கேட்கவும் தயங்கமாட்டார்கள். ஒரு கேள்விக்கு பதில் சொல்லி விட்டு திரும்புவதற்குள் அடுத்த கேள்வியுடன் தயாராய் நிற்பர் குழந்தைகள். இதற்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். வேறு வழியே இல்லை. அவர்களுக்குள் ஏன் இத்தனை கேள்விகள்? இவர்களை எப்படி சமாளிப்பது? சரி இதுபோல் கேள்விகளே கேட்காமல் சில குழந்தைகள் அமைதியாக இருக்கிறதே? இப்படி நமக்குள்ளும் தோன்றும் கேள்விகளுக்கான விடைதான் இக்கட்டுரை.

அண்மையில் நான்புகை வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த போது என் எதிரே துறுதுறு  என முட்டைக் கண்களோடு ஒரு 8 வயது ஆண் குழந்தை தன் அப்பாவிடம் நடத்திய உரையாடலைக் கேட்க முடிந்தது.

”அப்பா! இந்த trees எல்லாம் டிரெய்ன் போகும்போது கூடவே வருமாப்பா?; அந்த பிக் அங்கிள் வயிறு மட்டும் ஏன்பா பெருசா இருக்கு? உள்ளே பாப்பா இருக்குதா?; நிலா எல்லா ஊருக்கும் வருமாப்பா?; நான் லீவு போடுற மாதிரி நிலாவும் லீவு போட்டுருமா?; அதனால்தான் ஒரு நாள் வர மாட்டேங்குதா?"

இப்படி அடுக்கடுக்காய் கேள்விகளால் அவன் அப்பாவைத் துளைத்துக் கொண்டிருந்தான். அவரும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் சோர்ந்துபோனது கண்கொள்ளாக் காட்சி. இந்த சம்பவத்தை நான் முதலிலிருந்து ரசித்துக்கொண்டிருந்தேன்.

என் அருகே இருந்த நடுத்தர வயது பெண்மணிக்கோ சற்றும் பொறுமை இல்லை. அந்தக் குழந்தையின் கேள்விகளைப் பார்த்து எரிச்சலுற்ற அவர், ”லொட லொடனு கேட்டுக்கிட்டே வர்றதப் பாரு" என்று அலுத்துக் கொண்டார்.

அத்தோடு நிற்காமல் அக்குழந்தையின் தந்தையிடம், ”ஏங்க, சின்னக்குழந்தைக்குத்தான் விவரம் தெரியாது. ஏதேதோ கேட்டுக்கிட்டே இருக்கு. நீங்களும் இப்படி எல்லாத்துக்கும் பதில் சொல்லிக்கிட்டிருக்கீங்களே, ஒரு அதட்டல் போட்டா வாயை மூடிக்கப்போகுது" என்றார். 

அதற்கு ஒரு புன்னகையையே விடையாக அளித்தார் அக்குழந்தையின் தந்தை. ஆலோசனை சொன்ன பெண்மணி முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டார்.இப்படித்தான் நாமும் பல நேரங்களில் குழந்தைங்களின் கேள்விகளுக்கு சலித்துக் கொள்கிறோம். அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல நாம் தயாராக இல்லை.

ஆயிரம் கேள்விகள் மலரட்டும்
ஆயிரம் கேள்விகள் மலரட்டும்
ஆயிரம் கேள்விகள் மலரட்டும்


தருமி காலத்து பந்தம்

இந்தக் கேள்விகள் எப்படி தோன்றின என்று யோசித்து பார்த்தால் இது நம் இதிகாச கால பந்தம் என்பதை நம்மால் உணர முடியும். ”கேள்விகளை நீ கேட்கிறாயா, அல்லது நான் கேட்கட்டுமா?" என்று கேட்டஇறைவனிடமே தைரியமாக பதிலளித்த தருமியின் கேள்விகளை ரசித்த கூட்டமல்லவா நாம்! ஆனால் நம் குழந்தைகள் கேள்வி கேட்கும் போது மட்டும் அதிகப்பிரசங்கித் தனமாக் கேட்காதே" என்று அவர்களை அடக்கி விடுகிறோம். இதுதான் குழந்தைகளுக்கு எதிரான ஆகச்சிறந்த அடக்கு முறையாகும்.

கேள்வியின் நாயகர்கள் குழந்தைகள்

குழந்தைகளைக் கேள்வி கேட்க விடுங்களேன். இதன் மூலம் அவர்களின் உலக அறிவு விரிவடைகிறது. ‘ஏன்? எதற்கு?’ என்ற கேள்விகள் அறிவியல் மனப்பான்மையை உண்டுபண்ணுகின்றன. பல புதிய கண்டுபிடிப்புகளுக்கான அடித்தளமே கேள்விகள்தான். கேள்விகள் நமக்கும் நம் குழந்தைகளுக்குமான நெருக்கத்தை உண்டாக்குகின்றன.

ஆயிரம் கேள்விகள் மலரட்டும்
ஆயிரம் கேள்விகள் மலரட்டும்

கேள்விகளின் தன்மை

பொதுவாகக் குழந்தைகள் கேட்கும் கேள்விகள் அறிவுப்பூர்வமானவையாக, ஆச்சரியப்படுத்துபவையாக, புரியாதவையாக என நேரத்திற்கு நேரம் வித்தியாசப்படுகின்றன. சமீபத்தில் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் அடிப்படையாய் இருப்பது தாயின் புத்திசாலித்தனம் என்றும் தந்தைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை

என்றும் தெரியவந்துள்ளது கூடுதல் ஆச்சரியம். ஆக, சதா கேள்விகள் கேட்கும் குழந்தைகளே பின்னால் அறிவாற்றல் நிறைந்த மனிதர்களாக உருவெடுக்கிறார்கள். எனவே கேள்விகளை கேட்க உங்க வீட்டு செல்லங்களை ஊக்கப்படுத்துங்கள். கேள்விகள் கேட்க அனுமதியுங்கள்.

அவர்களின் கேள்விகளுக்கு நாம் பதில் அளிக்கத் தவறும் பட்சத்தில் அவர்கள் தங்களது கேள்விகளுக்கான பதில்களை தவறானவர்களிடம் கேட்கும் சூழல் ஏற்பட்டுவிடும். இத்தகைய மனிதர்கள் தரும் தவறான விளக்கங்களால் குழந்தைகள் தடம் மாறும் வாய்ப்புகளும் அதிகம். உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் பெற்றோராக இருங்கள். 

குழந்தை வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகள், கட்டுரைகளைப் படிக்க விரும்பினால் இங்கே க்ளிக் செய்யவும். Connect with us on Facebook | Twitter | Instagram | YouTube