”சுவரை வைத்துத்தான் சித்திரம்”-மனம் திறக்கிறார் நடிகர் தலைவாசல் விஜய்

தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகர் திரு.’தலைவாசல்’ விஜய் செல்லமேவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.

By கா.சு.துரையரசு  • 11 min read

”சுவரை வைத்துத்தான் சித்திரம்”-மனம் திறக்கிறார் நடிகர் தலைவாசல் விஜய்

செல்லமே: உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்.

தலைவாசல் விஜய்: எனது அப்பா வேலூர்க்காரர். அம்மா, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர். தந்தையார் ரயில்வே ஊழியர். எங்கள் குடும்பத்தில் மூன்று பிள்ளைகள். நான்தான் மூத்தவன். 

தந்தையார் அரசு ஊழியர் என்பதால் வட இந்தியாவுக்கு அடிக்கடி மாற்றலாகிச் சென்றுவிடுவார். நாங்கள் எனது 4 வயதிலேயே சம்பல் பகுதிக்குச் சென்றுவிட்டோம். அடிக்கடி பள்ளி மாற வேண்டுமே என்பதற்காக சென்னையில் எனது பாட்டிவீட்டில் இருந்து நான் வளர்க்கப்பட்டேன்.

எனது தாத்தா பர்மாவில் ரயில்வே வேலையில் இருந்தவர். பாட்டி இல்லத்தரசி. எப்போது அன்பு செலுத்தவேண்டுமோ,அப்போது அன்பும், எப்போது கண்டிப்பு காட்ட வேண்டுமோ, அப்போது கண்டிப்பும் இவர்கள் இருவரிடமிருந்தும் எனக்குக் கிடைத்தது.

செல்லமே: படிப்பு?

தலைவாசல் விஜய்: நான் சென்னை சைதாப்பேட்டையில் மாதிரி உயர்நிலைப்பள்ளியில் படித்தேன். பின்னர் குருநானக் கல்லூரியில் பி.யூ.சி.யும், கெளரிவாக்கத்தில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் பி.எஸ்சி கணிதமும் படித்தேன். பின்னர் திரைப்படக்கல்லூரியில் நடிப்புப் படிப்பில் சேர்ந்து அதனை முடித்தேன்.

செல்லமே: அதனையடுத்து திரைப்பட வாய்ப்பு வந்தனவா?

தலைவாசல் விஜய்: இல்லை. திரைப்படக் கல்லூரி படித்தவுடனேயே வாய்ப்பு வந்துவிடவில்லை. எனது வகுப்புத்தோழனான ரகுவரனுக்கு வாய்ப்புகள் வந்தன. சீனியரான நாஸர், திரைப்படங்களில் மும்முரமாகிவிட்டார். ராம்கி, அருண் பாண்டியன் முதலிய சீனியர்களும் ஏறத்தாழ செட்டில் ஆகியிருந்தனர். ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே சோர்ந்துபோய் பாரதிய வித்யா பவனின் பவன்ஸ் கல்லூரியில் மார்க்கெட்டின் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்துவிட்டு அப்பல்லோ மருத்துவமனையில் பணியில் சேர்ந்தேன்.

செல்லமே: அதன்பிறகு என்ன நடந்தது?

தலைவாசல் விஜய்: இதற்கிடையில் எனது நண்பர் நாஸர் ஒருமுறை என்னை அழைத்து, “நீ நடிப்புக்கலையைப் படித்துவிட்டு ஏன் வேறு ஒரு துறையில் பணிபுரிகிறாய்?” என்று கேட்டார். அத்தோடு நிற்கவில்லை. என்னை பிரபல நடனக் கலைஞர் சந்திரலேகாவிடம் அறிமுகப்படுத்தினார். அந்த அறிமுகம் மூலம் இயக்குநர் செல்வா முதலியோரின் நட்பு கிடைத்தது. இடையில் ரஷ்யாவுக்குச் சென்று கோர்பச்சேவ் முதலிய தலைவர்கள் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகளெல்லாம் நடத்தி வந்தோம்.

இந்நிலையில் எனக்கு நீலா-மாலா (1991-92) என்ற தொலைக்காட்சித்தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வேறு சில பிரபல இயக்குநர்கள் மூலமும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் ’26 வயதாகிவிட்டதே, இனி திரைத்துறையில் சாதிக்க முடியுமா?’ என்ற கேள்வி எழவே, வாய்ப்புகளை மறுத்துவந்தேன். ஆனால் நடிகர் நாசர் ஆகியோரின் வலியுறுத்தலின்பேரில் வாய்ப்புகளை ஏற்றேன். நீலா மாலா தொடர் மட்டுமல்லாமல், தலைவாசல் படமும் ஹிட்! அங்கு தொடங்கி, இதோ, இன்று உங்கள் முன் நிற்கிறேன். தென்னிந்திய மொழிகளில் சுமார் 300 படங்களில் நடித்துவிட்டேன். ஒரு ஃப்ரெஞ்ச் படத்திலும் ஒரு இந்திப் படத்திலும் நடித்திருக்கிறேன்.

செல்லமே: திருமணம்?

தலைவாசல் விஜய்: 1992ல் எனக்குத் திருமணமாயிற்று. எனது மனைவி ஓர் ஆசிரியை. நாளடைவில் குடும்பப் பொறுப்புகள் அதிகமாகவே, பணியை விட்டுவிட்டார். அவருக்கு 11 மொழிகள் தெரியும்.

செல்லமே: உங்களுக்கு?

தலைவாசல் விஜய்: எனக்கு 5 மொழிகள் தெரியும். என் பிள்ளைகளுக்கு 4 மொழிகள் தெரியும். அதனால் அவர்களுக்கு வெளி மாநிலங்களுக்குச் செல்லும்போது அயல் மொழி என்ற தடையே இருக்காது.

செல்லமே: உங்கள் பிள்ளைகள் குறித்துச் சொல்லுங்கள்.

”சுவரை வைத்துத்தான் சித்திரம்”-மனம் திறக்கிறார் நடிகர் தலைவாசல் விஜய்

தலைவாசல் விஜய்: எனக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். மகன் மூத்தவன். இங்கிலாந்தில் உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணியிடத்து உளவியல் (work psychology) படிப்பை முடித்திருக்கிறார். என் மகள் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு அறிவியல் (sports Science) மூன்றாமாண்டு படிக்கிறார்.

செல்லமே: நீங்கள் வளர்க்கப்பட்ட விதத்துக்கும் உங்கள் பிள்ளைகளை நீங்கள் வளர்க்கும் விதத்துக்கும் வேறுபாடுகள் உண்டா?

தலைவாசல் விஜய்: நிறையவே உண்டு. எனது தாத்தா கண்டிப்பானவர். தினமும் மாலை 5-8 மணி வரை அன்றாடப் பாடங்களைப் படித்தே ஆகவேண்டும். ‘சத்தம் போட்டுப்படி’ என்பார் அவர். அந்தப்பழக்கம் எனக்கு ரொம்பவே உதவியது. எல்லாமே ஒரு ஒழுங்குக்குள் இருக்க வேண்டும் என்று எனது தாத்தா-பாட்டி விரும்பினர். அதன்படியே நான் வளர்க்கப்பட்டேன். இதற்கிடையில் எனது தந்தை பிலாய் நகரத்தில் பணிபுரிந்துவந்தார். கோடை விடுமுறையில் நான் அங்கு சென்றுவிடுவேன். அப்பா ஜாலியான ஆசாமிதான். ஆனாலும் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

நான் எப்படி எனது தாத்தா-பாட்டியிடம் வளர்ந்தேனோ, அதேபோல என் பிள்ளைகள் அவர்களது தாத்தா-பாட்டி புடைசூழ (எனது பெற்றோர், என் மனைவியின் பெற்றோர்) வளர்கின்றனர். நான் கொஞ்சம் நட்பான அப்பா.

செல்லமே: கண்டிப்பு கிடையாதா?

தலைவாசல் விஜய்: எங்கு வேண்டுமோ, அங்கு கண்டிப்பு உண்டு. எடுத்துக்காட்டாக சாப்பிடும்போது செல்பேசியை வைத்துக்கொள்ளக்கூடாது, மென் பானங்கள் எனப்படும் (soft drinks) குளிர் பானங்களைப் பருகக்கூடாது; ஆரோக்கியம் தரும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்; போதுமான அளவு உறங்க வேண்டும்; அதிகாலையில் எழ வேண்டும் -என்கிற விஷயங்களில் நான் கறார்தான். பிள்ளைகளும் அந்த வழக்கத்துக்கு வந்துவிட்டனர்.

செல்லமே: உடல் நலனுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்களா?

தலைவாசல் விஜய்: ஆம். அடிப்படையில் நான் ஒரு விளையாட்டு வீரன். எனவே உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். அதனால்தான் குழந்தைகளையும் விளையாட்டில் ஈடுபடுத்தினேன் . என் மகன் கிரிக்கெட், ஸ்கேட்டிங் போன்றவற்றில் ஆர்வம் செலுத்த, என் மகளோ நீச்சலைப் பிடித்துக்கொண்டாள்.

செல்லமே: உங்கள் மகள் ஜெயவீணா பிரபல நீச்சல் வீராங்கணையாயிற்றே!

தலைவாசல் விஜய்: ஆம். ஆறரை வயதிலிருந்தே நீச்சலில் அவளுக்கு ஆர்வம் அதிகம். முதன்முதலாக அவர் நீச்சல் குளத்தில் இறங்கியபோது நான் ஹைதராபாதில் படப்பிடிப்பில் இருந்தேன். அவளுக்கு நீரைக் கண்டு பயம் ஏற்படுமோ என்னவோ என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது அவளது பயிற்சியாளர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “உங்கள் மகள் நீரை அனுபவிக்கிறாள். அவளுக்கு நீச்சல் பிடித்துவிட்டது” என்றார். அதன்பிறகுதான் எனக்கு நிம்மதியே வந்தது. 

ஆசிய அளவில் டோக்கியோவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில்  ஜெய்வந்த வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார்.  தேசிய விளையாட்டுப்போட்டிகளில் 6 பதக்கங்கள் (11 வயதில்) உள்ளிட்ட பல கோப்பைகளை வென்றிருக்கிறாள் என் மகள் ஜெய வீணா.  

இந்த வயதில் இவ்வளவு பதக்கங்களை வென்றவர்கள் இந்தியாவில் வேறு யாருமில்லை. இன்றைக்கு தேசிய அளவில் விரைவாக நீந்தக்கூடிய  (50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல்) பெண் நீச்சல் வீராங்கணை என்றால் அவர்  ஜெயவீணாதான்.

செல்லமே: நீச்சலுக்கு தினசரி எவ்வாறு ஜெயவீணா தயாராகிறார்?

தலைவாசல் விஜய்: காலையில் 4.30 மணிக்கே நாங்கள் எழுந்துவிடுவோம். பின்னர் நீச்சல் குளத்துக்குப் பயிற்சிபெற அழைத்துச் செல்வோம். பெரும்பாலும் என் மனைவிதான் அவளை அழைத்துச் செல்வார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நான் அழைத்துச் செல்வேன். தினசரி 12 கி.மீ. தொலைவு என்ற அளவுக்கு நீச்சல் பயிற்சி இருக்கும். வாரத்தில் 6 நாட்கள் இவ்வாறு பயிற்சி பெறுவார்.

செல்லமே: பெற்றோர், இதற்காக அதிகம் மெனக்கெட வேண்டுமோ?

தலைவாசல் விஜய்: ஆம். இப்பயிற்சிகளின் காரணமாக பெரும்பாலான விழாக்கள், சுப நிகழ்ச்சிகளிலும் எங்களால் கலந்துகொள்ள முடிவதில்லை. ஆனால் பிள்ளைகளின் வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கிறோம் என்ற உணர்வே திருப்திகரமாக இருக்கிறது. ஜெயவீணாவின் வெற்றிக்கு என் மனைவி ராஜேஸ்வரியின் பங்களிப்பு மிகப்பெரிய காரணம். இவர்களின் பயணம் முதலான விஷயங்களை நான் கவனித்துக்கொள்வேன்.

செல்லமே: பிரபலத்தின் பிள்ளைகள் என்ற எண்ணம் பொதுவாக குழந்தைகளுக்கு வருமல்லவா!

தலைவாசல் விஜய்: என் பிள்ளைகளுக்கு அது வரவேயில்லை. நானே எளிமையாகத்தான் வாழ்கிறேன். என் பிரலபத்தைப் பயன்படுத்தி இதுவரை அவர்களுக்கு எந்தவிதமான பரிந்துரை, முன்னுரிமையையும் பெற்றுத் தந்ததில்லை. அவ்வளவு ஏன், அவர்கள் இதுவரை எனது படப்பிடிப்பைக்கூடப் பார்த்ததில்லை. அதிலெல்லாம் ஆர்வம் இருந்தால்தானே பிரபலத்தின் பிள்ளைகள் என்ற எண்ணம் வரும்!

செல்லமே: விளையாட்டுக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் தரும் காரணம் என்ன?

தலைவாசல் விஜய்:  சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்! விளையாட்டுக்கள் மூலமாக பிள்ளைகள் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். இது அவர்கள் தங்களுக்குத் தாங்களே செய்துகொள்ளும் நல்ல காரியம். இவர்கள் இவ்வாறு இருப்பதால் அடுத்த தலைமுறையும் ஆரோக்கியமானதாக உருவெடுக்கும். இது, அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து நாம் செய்யும் நல்ல காரியம்.

செல்லமே: படிப்பு, வேலை விஷயத்தில் உங்கள் கொள்கை என்ன?

தலைவாசல் விஜய்: ’யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக எதையோ படித்து, எங்கோ வேலை செய்து லட்சக்கணக்கில் சம்பாதிப்பதைவிட, உனக்குப் பிடித்ததைப் படித்து, அதையே தொழிலாகச் செய்யும்போது மன திருப்தியும் கிடைக்கும், அதில் சாதிக்கவும் முடியும்’ என்பதுதான். இதில் சுதந்திரம்தான் முக்கியம்.

செல்லமே: நாளைக்கே உங்கள் ’மகள் நீச்சல் வேண்டாம், வேறு துறைக்குப் போகிறேன்’ என்று சொன்னால் என்ன சொல்வீர்கள்?

தலைவாசல் விஜய்: அது அவர்கள் விருப்பம்தான். இதில் எந்தக் கட்டாயமும் இல்லை.

செல்லமே: இன்றைய பெற்றோருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தலைவாசல் விஜய்: மூன்று விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

1.சரியான தகவல் தொடர்பு: இது (பெற்றோருக்குள்ளும் பிள்ளைகளிடத்தும்) சரியாக இருந்தால் பல குழப்பங்கள் தவிர்க்கப்படும்.

2.முன்னுரிமை: நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் சரியாக இருங்கள்.

3.நேரம் தவறாமை: இதுதான் வாய்ப்புகளை உருவாக்குகிறது. எனவே இதில் சால்ஜாப்பு வேண்டாம்.