பாலின சமத்துவம் - நீ இன்னும் வளரணும் தம்பி

இன்று சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு அடிப்படையான காரணம், பாலின சமத்துவத்தைப் பிள்ளைப் பருவத்தில் கற்றுத்தராததே.

By கா.சு.துரையரசு  • 13 min read

இன்று சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு அடிப்படையான காரணம், பாலின சமத்துவத்தைப் பிள்ளைப் பருவத்தில் கற்றுத்தராததே. பெண்மையை மதிக்கும் வகையில் ஆண் பிள்ளைகளை வளர்ப்பதே இந்நிலையை மாற்றுவதற்கான முதல் படி.

இன்றைய நாகரீக உலகில் நமது பெண்கள் எல்லா சுதந்திரங்களையும் பெற்று விட்டனர்; அவர்கள் படிக்கின்றனர்; வேலைக்குச் செல்கின்றனர்; சம்பாதிக்கின்றனர்; சுதந்திரமாக உலவுகிறார்கள்; எல்லாமே சரியாகி விட்டது... என்றெல்லாம் நமக்கு தோன்றுகிறது இல்லையா! ஆனால் அது உண்மை அல்ல. நான் மேலே சொன்னவற்றில் ஒருபகுதி மட்டுமே உண்மை. மற்றவையெல்லாம் அந்த உண்மையைச் சார்ந்து நாம் கற்பித்துக் கொள்ளும் கற்பிதங்கள் ஆகும்.

கல்வி கற்பதில் தொடங்கி பணிக்கு செல்வது, சம்பாதிப்பது, விரும்பிய துணையைத் தேர்ந்தெடுப்பது ஆகியவற்றில் பெண்களுக்கு ஓரளவுக்கு சுதந்திரம் கிடைத்திருப்பது என்பது உண்மைதான். ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி இன்றளவும் பாலின சமத்துவம் என்பது எட்டப்படாத இலக்காகவே தோன்றுகிறது.

பெண்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் குடும்பமோ, சமூகமோ ஏதாவது ஒன்று தனது ஆளுமையை செலுத்திக் கொண்டே இருக்கிறது. எனவேதான் இதனை ஒரு வரம்புகளுடன்கூடிய சுதந்திரம் என்று நாம் அழைக்கலாமேயொழிய முழுமையான சுதந்திரம் என்று அழைக்க இயலாது.

ஏன் அவ்வாறு சொல்ல இயலாது என்று கேட்டால் அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, இன்றளவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருவதை நாம் சொல்ல முடியும். பெண்களை பின் தொடர்தல், உருவத்தை கேலி செய்தல், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொள்ளுதல், பாலியல் வன்முறையில் ஈடுபடுதல், பணியிடத்தில் ஏற்படும் தொந்தரவுகள் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

காலம் மாறுகிறதே!

இவற்றையெல்லாம் தாண்டி பெண் ஒரு இரண்டாம் தர குடிமகள் என்று காலங்காலமாக சொல்லி வந்திருக்கிறது கடந்த காலம். நாகரீகம் பெருகிவிட்ட இந்த டிஜிட்டல் யுகத்தில் இன்னும் இந்நிலை தொடர்வதை நாம் அனுமதிக்க இயலாது. ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ எதுவாக இருந்தாலும்

பெற்றோரைப் பொறுத்தவரையில் இரண்டுமே ஒன்றுதான். ஆனால், சமூகத்துக்கு? நாம் என்னதான் ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் சமமான உரிமைகளுடன் வளர்த்தாலும்கூட சமூகத்துக்கு அவர்களை அறிமுகப்படுத்தும்போது அது பாலின வேறுபாட்டை பார்க்கவே செய்கிறது. இதை எப்படி சரி செய்வது? ஆண் குழந்தைகளுக்கு பெண் உலகத்தைப் புரியவைப்பதன் மூலமாகத்தான்.

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பெண்களுக்கு மரியாதை தரக்கூடிய, பெண்களுடைய பாடுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய கண்ணியமான ஆண் மகன்களை நாம் உருவாக்க முடியும். சமூகத்துக்கான ஒவ்வொரு பிரதிநிதியும் வீட்டில் இருந்துதான் புறப்படுகிறான் என்பதால் அதனை வீட்டுக்குள் தொடங்குவதுதான் சரியாக இருக்கும்.

அதற்கு முன்பாக ஏன் பாலின சமத்துவத்தை குழந்தைகளிடம், குறிப்பாக ஆண் குழந்தைகளிடம் சொல்லித்தர வேண்டும் என்பது குறித்து கொஞ்சம் பின் நோக்கிப் பார்க்கலாம்.

வரலாறு முக்கியம்

அடிப்படையிலேயே நமது சமூகம் ஒரு ஆணாதிக்க சமூகம்தான். பெண் குழந்தைகள் கருவில் உருவாவது முதல் கல்லறைவரை ஒவ்வொரு கட்டத்திலும் யாராவது ஒரு ஆணைச் சார்ந்து வாழ வேண்டிய சூழ்நிலையை அது உருவாக்கி வைத்திருந்தது. தந்தை, சகோதரன், கணவன், சமூகம் என்று அவள்மீது ஆளுமையையும் அதிகாரத்தையும் செலுத்தாத நபர்களே இல்லை என்று சொல்லலாம்.

பெண், காலம்காலமாக குடும்ப கௌரவத்தின் குறியீடாகப் பார்க்கப்பட்டு வந்திருப்பதால், அவள் ஒரு பொருளாக மதிக்கப்பட்டு வந்திருக்கிறாள். அவ்வாறு நடத்தப்பட்டதால் குடும்ப கௌரவத்தைப் பாதுகாத்து,மேம்படுத்த வேண்டிய பொறுப்பும் அவளுக்கு இருப்பதாக சமூகம் கருதிக் கொண்டது. இது தவிர, பொருளுக்கு மதிப்பு கூட்டுகிறேன் பேர்வழி என்று பெண்ணை ஒரு அலங்காரப் பதுமையாகவும் ஆக்கி வைத்தது. அலங்காரம் என்றால் பொருளாதாரம் இல்லாமலா? அப்படித்தான் வரதட்சணை என்கிற விஷயம் உருவானது.

பெண்கள் வாழ்வின் எல்லா சடங்குகளுக்கும் பொருளாதாரம் ஒரு அடிப்படையான தேவையாக இருந்ததால், பெண் குழந்தையையே தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் அன்றைய சமூகத்துக்கு ஏற்படத் தொடங்கியது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைக் கண்டறிவது முதல் கருவில் இருக்கும் சிசுவை அழிப்பதுவரை தொடக்கத்திலேயே பெண்ணுக்கு எதிரான அனைத்து விஷயங்களையும் சமூகம் செய்யத் தொடங்கியது.

உலகம் எங்கும் இதே நிலைதான். இதைக்கண்டு பெண்களும் அறிவுசார் சமூகங்களும் பெண் உரிமைக்கான குரலை எழுப்பத் தொடங்கின. அது பெரிய இயக்கமாகப் பரிணமித்தது. பெண்ணுரிமைக்காக தொடங்கப்பட்ட அந்த குரல் பெண்ணியக் குரலாகவு அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தது. இது வரவேற்கத்தக்க போக்குதான். ஆனால், அதே நேரத்தில் இந்த உற்சாகத்தில் ஆண் பிள்ளைகளை கவனிக்கத் தவறிவிட்டோம். அங்கு ஒரு பிரச்சனை தொடங்குகிறது .

பாலின சமத்துவம் - நீ இன்னும் வளரணும் தம்பி

ஏன் கற்பிக்க வேண்டும்?

1பெண் குழந்தைகள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும்பொழுது ஆண் குழந்தைகள் என்ன நினைக்கின்றனர், என்ன செய்கின்றனர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இன்றைய சூழலில் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது. பெண் குழந்தைகளையும் இணையாக கவனிக்க வேண்டும் என்பதை நாம் இந்த உரிமைக்குரல் உற்சாகத்தில் மறந்துவிட்டோம்.

பெண்குழந்தைகள் பல்வேறு வகைகளிலும் ஆண் குழந்தைகளைவிட சமர்த்து என்று பலரும் சொல்வதை இப்போது பார்க்கிறோம். போதாக்குறைக்கு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வெளி வந்தால் போதும்... ஊடகங்கள் ‘இம்முறையும் பெண்கள் ஆண்களை முந்திவிட்டனர் என்று செய்திகளை எழுதுகின்றனர். ஆனால், ஆண் பெண் குழந்தைகளை தேவையின்றி ஒப்பிடுவது மிகத் தவறானது.

இவ்வாறு நாம் ஒப்பிடுவதால் மனம் தளரும் ஆண்பிள்ளைகள், தாங்கள் மரியாதை குறைவாக நடத்தப்படுவதாகக் கருதுகின்றனர். இதுவே அவர்களை பெண்களுக்கு எதிராகக் கொண்டுபோய் நிறுத்துகிறது.

2 அடுத்தபடியாக இப்பிரச்சனைக்கு நமது குடும்ப சூழலையே முக்கியக் காரணமாகச் சொல்லலாம். ஆண் பிள்ளைகள்தாம் உயர்ந்தவர்கள் என்கிற ரீதியில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண் பிள்ளைகளை மட்டம் தட்டி வளர்க்கும் போக்கு பல குடும்பங்களில் இன்றும் காணப்படுகிறது. குடும்பத்தின் தலைவன் ஆண்; அவன் சொல்வதையே பெண் கேட்க வேண்டும் என்ற செய்தி, விரும்பியோ விரும்பாமலோ குழந்தைகள் மனங்களுக்குள் சென்றுவிடுகிறது. குழந்தைகள் இதனை தங்களது வாழ்க்கைக்கும் நீட்டித்துக் கொள்ள வாய்ப்புண்டு.

3 ஆண்தான் பொருளீட்டி குடும்பத்தை காப்பாற்றுகிறார். எனவே, அவரே குடும்பத்தின் முதல்வர் என்ற கருத்து பல குடும்பங்களில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படுகிறது. அக்குடும்பங்களில் பெண்கள் பணிக்குச் செல்வது பெரும்பாலும் குறைவுதான். எனவே பெண், வீட்டுக்குள்ளேயே இரண்டாம் தரக் குடிமகளாக நடத்தப்படுவது இயல்பானதாகக் காட்டப்பட்டுவிடுகிறது. இதனைக் காணும் குழந்தைகள் தங்கள் மனதுக்குள் இவ்விஷயத்தைக் குறித்து வைத்துக் கொள்கின்றனர்.

4 அதேபோல பல குடும்பங்களில் காணப்படும் மனப்போக்கு பெண்பிள்ளைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஆண் குழந்தை ஏதாவது தவறு செய்துவிடும் பொழுது அதனை பெற்றோர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவற்றை சரிசெய்து ஆண் குழந்தைகள் வெற்றி பெறுவர் என்று அவர்கள் நம்புகின்றனர். 

அதே நேரத்தில் பெண் குழந்தைகள் செய்யும் தவறுகள் பெரிதுபடுத்தப்படுகின்றன. அவர்கள் எதையும் செய்ய லாயக்கற்றவர்கள் என்ற முத்திரை குத்தப்படுகிறது. இது பெண் குழந்தைகளை உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கும் என்பதுடன் ஆண் குழந்தைகளுக்கு ‘தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற கருத்தையும் மனதில் பதிய வைக்கும்.

5 ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவர் தனது மனைவியை எப்படி நடத்துகிறார் என்பது முக்கியம். ‘தாங்களும் தமது தாயை அப்படித்தான் நடத்தவேண்டும் போல என்று பிள்ளைகள் புரிந்து கொள்வர்.‘ஆண் அடக்குபவன்; பெண் அடங்கிப் போக வேண்டியவள் என்ற கருத்து பல குடும்பங்களில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது இது சரியல்ல.கணவனோ மனைவியோ இருவரும் பரஸ்பரம் மதித்து நடந்தால்தான் பிள்ளைகள் தங்களுடைய வாழ்க்கையிலும் அதனைப் பின்பற்ற முயல்வர்.

ஒரு பெண், தான், மதிக்கப்படவில்லை என்று உணரும்பொழுது, அவளது குடும்ப வாழ்க்கையில் பிணக்கு ஏற்படுகிறது . அது மணமுறிவு வரை கொண்டு போய் விடுகிறது. அதேபோல அந்நிலை தொடர்ந்தால் அப்பெண்ணால் வளர்க்கப்படும் குழந்தைகள்மீதும் இந்த எதிர்மறை தாக்கத்தை நாம் பார்க்கமுடியும்.

6 இன்றைய பெண் பொருளாதார ரீதியிலும் சிந்தனையிலும் சுதந்திரமானவனாக ஆகி வருகிறாள். அவளது சொல்லிலும் செயலிலும் சிந்தனையிலும் அது வெளிப்படுகிறது. ஆனால், இதற்கேற்ற வகையில் எப்படி நடந்துகொள்வது என்பது குறித்த பயிற்சி ஆண் பிள்ளைகளுக்கு இருப்பதில்லை என்பதுதான் எதார்த்தம். இந்த விஷயத்தில் நடைமுறையைவிட்டு ஆண் குழந்தைகள் ரொம்பவே பின்தங்கி இருக்கிறார்கள் என்பதே உண்மை. பெண் தன்னை சுதந்திரமாக வெளிப்படுத்தும்பொழுது அது தன்னை அவமதிப்பதாக ஆண் புரிந்துகொண்டு விடுகிறான். இது நிலைமையை மேலும் சிக்கலாகி விடுகிறது.

7 சமூகத்தில் பெண்கள்மீதான பார்வைக்கு ஊடகங்களின் பங்கு மிக கணிசமான து.திரைப்படங்கள், தொலைக்காட்சித் நெடுந்தொடர்கள் ஆகியவற்றில் பெண்ணை எதிர்மறை எண்ணம் கொண்டவளாக அல்லது அடிமையாக சித்திரிக்கப்படுவதைக் காண்கிறோம். இது சமூகத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண், காதலின் மதிப்பை உணராதவள்; எளிதில் துரோகம் செய்துவிட்டுப் போகிறவள்; புரிந்துகொள்ள முடியாத புதிர் என்பதுபோல பல ஊடகங்கள் சித்தரிக்கின்றன. 

காதலை ஏற்க மறுக்கிற அல்லது பிரிய விரும்புகிற பெண்ணை வெட்டிக் கொலை செய்வதும் ஆசிட் வீசுவதும் தவறில்லை என்பதுபோன்ற கருத்துக்களை திரைப்படங்கள் தெரிந்தோ, தெரியாமலோ பரப்பி வருகின்றன. ‘வெட்றா அவளை, குத்துடா அவளை என்ற பாடலை வெறும் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள முடியுமா?" என்கிறார் மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் என்ற மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் கதிர்.

ஆக, இதுபோன்ற பல்வேறு காரணிகள் பெண்களை கண்ணியமாக நடத்தப்படவேண்டியதன் தேவையை ஆண் குழந்தைகளுக்கு வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன. பெண்களை எப்படி மதிப்பது என்பதை சிறு வயதிலிருந்தே ஆண் குழந்தைகளுக்கு நாம் கற்றுத் தந்துவிட வேண்டும். நம் குழந்தை வளர்ப்பின் ஒரு அங்கமாகவே அது ஆகிவிடவேண்டும். அதற்குக் கீழ்க்காணும் விஷயங்களைக் கருத்தில் கொண்டால் நல்லது.

பாலின சமத்துவம் - நீ இன்னும் வளரணும் தம்பி

பாலின சமத்துவம்

இயற்கையின் படைப்பில் ஆணும் பெண்ணும் சமம்தான் என்பதை சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு சொல்லித் தந்து விடுவது சரியானது. ஒரு சக மனுஷியாக பெண்ணை, பெண் குழந்தைகளை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை நாம் ஆண் குழந்தைகளுக்கு சொல்லித் தருவது முதல்படி. ஆணும் பெண்ணும் சமம்; இதனை இருபாலரும் புரிந்து மதித்து நடக்க வேண்டும் என்பதை இருபாலருக்கும் சேர்த்தே சொல்லித்தர வேண்டும். இந்த பாலின சமத்துவம்தான் இரண்டாவது படி.

அவர்களும் நண்பர்களே!

இருபாலர் படிக்கும் பள்ளிகளில்கூட பரவலாக ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகள் நண்பர்களாக இருப்பதில்லை. தமது பாலினத்திலிருந்தே தமக்கான நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போக்கு சிறு வயதிலேயே தொடங்கி விடுகிறது. இது மாற வேண்டும். எதிர்பாலினத்தவரை நண்பர்களாகப் பெறுவது இயல்பானது என்று நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தரவேண்டும். நட்பு பாராட்டுவதன் மூலமாகத்தான் எதிர் பாலினத்தின் இயல்புகள், பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளமுடியும்.

அதிகாரம் எவருக்கும் இல்லை

பெண் பிள்ளைகள் இப்படித்தான் உடை உடுத்த வேண்டும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எட்டுத்திக்கும் இருந்தும் அறிவுரைகளும் ஆலோசனைகளும் மிரட்டல்களும் வருகின்றன. அவர்களின் ஒழுக்கக் கோட்டை நிர்ணயிப்பது, அவர்களது உடல் மீதான உரிமையை எடுத்துக்கொள்வது ஆகியவற்றுக்கு எவருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. எனவே, பெண்ணை பாலியல் ரீதியாகவோ மன ரீதியாகவோ துன்புறுத்தவோ இழிவுபடுத்தவோ எவருக்கும் உரிமை இல்லை என்பதை பிள்ளைகளுக்கு நாம் எடுத்துக்காட்டுகள் மற்றும் கதைகள்மூலம் கற்றுத் தரலாம்.

வீட்டில் ஜனநாயகம்

ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, தான், நினைப்பதைப் பேசவும் அதை வெளிப்படுத்தவும் போதுமான சுதந்திரம் வீடுகளுக்குள் இருக்கவேண்டும். அந்த சூழலில் வளர்க்கப்படும் குழந்தைதான் பிற்காலத்தில் தனது சொந்த வாழ்க்கையிலும் சமூகத்திலும் ஜனநாயகத்தை கடைபிடிக்கும்.

உடல் வலிமையா/மன வலிமையா?

ஆணை விட பெண் உடலளவில் வலிமை குறைந்தவள் என்ற கருத்து வெகுகாலமாகப் பெண்ணுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மனநிலை எங்கிருந்து வருகிறதென்று பார்க்கவேண்டும். ஆதிகாலத்தில் ஆண் மிகுந்த உடல் வலிமை மிகுந்தவனாக இருந்தான். வேட்டையாடி குடும்பத்துக்கு தேவையான உணவை கொண்டு வருவது அவனது பணி. அப்பொழுது பெண், குழந்தைகளை பராமரித்தல், வீட்டை கவனித்துக் கொள்ளுதல் ஆகிய வேலைகளை செய்து கொண்டிருந்தாள். ஆனால், இன்றைக்கு நாகரீக வாழ்க்கை என்பது வெறும் உடல் வலிமையை மட்டும் வைத்து சாதிக்கக் கூடியதாக இல்லை. மாறாக சமூகப்-பொருளாதார வலிமைதான் இன்று வாழத் தேவையானதாக இருக்கிறது. எனவே, இன்னும் பெண்ணின் உடல் வலிமையை கேள்விக்கு உள்ளாக்குவது அர்த்தமற்றது என்பதை குழந்தைகளுக்கு கதைகள் மூலம் எடுத்துச் சொல்லலாம்.

குடும்பமே முன்மாதிரி

என்னதான் அறிவுரைகளை நாம் சொன்னாலும் பெற்றோரைப் பார்த்துத்தான் பிள்ளைகள் பல விஷயங்களையும் கற்றுக்கொள்கின்றனர். எனவே, நமது வீட்டில் பாலின சமத்துவத்தை நாம் முதலில் உறுதிப்படுத்த வேண்டும்.

(அருந்ததி ஸ்வாமி உதவியுடன்)

More For You

More for you

We are unable to find the articles you are looking for.