இலவசமாக இத்தனை வாய்ப்புகளா?

உங்கள் பிள்ளைகளை விளையாட்டுத் துறையில் மிளிர வைக்க வேண்டுமென்றால் லட்சங்களைக் கொட்டித்தான் அதனை சாதிக்க வேண்டும் என்பதில்லை. இலவசமாகவே அதனைச் சாதிக்க எவ்வளவோ வழிகள் உண்டு.

By கா.சு.துரையரசு  • 7 min read

 
இலவசமாக இத்தனை வாய்ப்புகளா?

பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளைச் சேர்க்கும்போது அங்கு உள்ள மைதானம், விளையாட்டு உபகரணங்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகிய விஷயங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்பது நாம் அறிந்ததே.

பொதுவான பள்ளிகளில் சேர்க்கும்போது நாம் இத்தகைய நடைமுறைகளை கவனிக்க வேண்டும். அதேநேரத்தில் விளையாட்டுக்காகவே உள்ள சிறப்புப் பள்ளிகள் குறித்துக் கொஞ்சம் பேசுவோம்.

அதற்கு முன்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் குறித்துத் தெரிந்துகொள்வது நல்லது. மாநிலத்தில் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கவும் இளைஞர்கள் அனைவரும் ஆரோக்கியமான உடல்நலனைப் பெறவும் பணியாற்றுவதே இவ்வமைப்பின் நோக்கம் ஆகும்.

இதற்காக அரசு, விளையாட்டு சங்கங்கள், விளையாட்டுத் துறையில் ஆர்வம் மிக்க புரவலர்கள், இதில் ஆர்வம் மிக்க தனி நபர்கள், அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது இவ்வாணையம்.

செயல்திட்டம்

இத்துறை செயல்படும் தளங்கள் இவை...

விளையாட்டுத் துறையில் திறமையும் ஆர்வமும் மிக்கவர்களைக் கண்டறிதல்

அவர்களை மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்குப் பயிற்றுவித்தல்

உடல்திறன்சார் போட்டிகளை ஊக்குவித்து மாநிலம் முழுவதிலும் ஆரோக்கியமும் உடல் கட்டுக்கோப்பும் மிக்க சூழலையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குதல்

உள்ளூர் முதல் உலகளாவிய போட்டிகள்வரை அனைத்தையும் எதிர்கொள்ளும் வகையில் அடிப்படைக் கட்டுமான வசதிகளை உருவாக்குதல், மேம்படுத்துதல்

என்னவெல்லாம் செய்கின்றனர்?

தங்களிடமுள்ள பள்ளிகள், விளையாட்டு விடுதிகளில் (விரிவான தகவலுக்கு: பார்க்க: பெட்டிச்செய்தி) பயிலும் மாணவர்களுக்கு மட்டும்தான் இவ்வாணையம் பயிற்சி தருவதாக நாம் எண்ணுகிறோம். ஆனால் உண்மையில் பொதுமக்களுக்கும்கூட இவ்வமைப்பு, பயிற்சியாளர்கள்மூலம் பல்வேறு விளையாட்டுக்களில் இலவசப் பயிற்சியை அளிக்கிறது.

தங்கும் வசதியுடன் குறுகிய காலப் பயிற்சி வேண்டும் என்றாலும் அதுவும் வழங்கப்படுகிறது. உணவு, சீருடை, பயிற்சி நிறைவில் சான்றிதழ்கள் ஆகியவையும் வழங்கப்படுவது குறிப்பிட வேண்டிய விஷயம்.

இது ஒருபுறமிருக்க, 6,7,8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்குத் திறன் சார்ந்த தேர்வுகளை இந்த ஆணையம் நடத்துகிறது. அதில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. கோடைகால விடுமுறையில் இருப்போருக்கும் பயிற்சிகள் உண்டு. எடுத்துக்காட்டாக, சென்னை கிண்டியில் உள்ள தனது நீச்சல் குளத்தில் உரிய பயிற்சியாளர்களைக்கொண்டு குறுகிய கால நீச்சல் பயிற்சியைக் குழந்தைகளுக்கு அளிக்கிறது விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.

ஊக்கமும் உதவியும்

மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெல்லும் குழந்தைகளுக்கு ஊக்கமளிப்பதோடு நின்றுவிடாமல் உதவித் தொகையையும் இந்த ஆணையம் தொடர்ந்து தருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்று அவரவர் நிலை, கலந்துகொள்ளும் போட்டிகள் ஆகியவற்றைப் பொறுத்து உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது ஒரு புறமிருக்க, ஓய்வு பெற்றபிறகு அவர்களுக்கு ஓய்வூதியமும் உண்டு என்பது பலருக்கும் அவ்வளவாகத் தெரியாது.

விளையாட்டுப் போட்டிகள்

பல்வேறு மட்டங்களிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு மாணவர்களைத் தயார் செய்வதுடன் விளையாட்டு ஆணையம் நின்றுவிடுவதில்லை. மாறாக, தானே விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ச்சியாக நடத்துகிறது. மாவட்ட, மாநில அளவில் இவை நடத்தப்படும். இதில் எந்த வயதினரும் கலந்துகொள்ள முடியும் என்பதே சிறப்பம்சம். கபடி, ஹாக்கி, கூடைப்பந்து, கால் பந்து மற்றும் தடகளப் போட்டிகள் உள்ளிட்ட விரிவான பட்டியலில் இருந்து வேண்டியதைத் தேர்ந்தெடுத்து பிள்ளைகள் விளையாடலாம். (ஏன், பெற்றோரும்கூட விளையாடலாமே!)

இலவசமாக இத்தனை வாய்ப்புகளா?

பரிசும் பாராட்டும்

விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயிற்சியும் சான்றிதழும் அளிப்பதுவுமே இதுபோன்ற அமைப்புகளின் வேலை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் பொருளாதார ரீதியிலும் வீரர்களுக்குப் பக்கபலமாக நிற்கிறது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற செய்தியையும் தெரிந்துகொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் பிள்ளை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றுவிட்டான்/ள் என்று வைத்துக் கொள்வோம். அவனு/ளுக்கு இந்த ஆணையம் ரொக்கப்பரிசாக எவ்வளவு தரும் தெரியுமா? ரூ. 2 கோடி! வெள்ளிப் பதக்கத்துக்கு ரூ.1 கோடியும் வெண்கலப்பதக்கத்துக்கு ரூ.50 லட்சமும் பரிசாக அளிக்கப்படுகிறது. இதுவே ஆசிய விளையாட்டுப்போட்டி/காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியாக இருந்தால் தங்கப் பதக்கம் வென்றால் ரூ.50 லட்சமும் வெள்ளிக்கு ரூ.30 லட்சமும் வெண்கலத்துக்கு ரூ.20 லட்சமும் பரிசாக அளிக்கப்படுகிறது. தெற்காசிய, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்வோருக்கு ரூ.5 லட்சம் கிடைக்கும். வெள்ளி, வெண்கலப் பதக்கம் வெல்வோருக்கு முறையே ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் பரிசாகக் கிடைக்கும்.

நாம் இங்கு சொல்லியிருப்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற அளவில்தான். உண்மையில் இலவசமாகப் பயிற்சி, உணவு, அங்கீகாரம், தங்குமிடம் என்று எல்லா வசதிகளையும் தர அரசின் பல்வேறு திட்டங்கள் தயாராக இருக்கின்றன. அவற்றை அறிந்து பயன்படுத்தினால் உங்கள் பிள்ளையும் தாராளமாக விளையாட்டுத் துறையை தனது எதிர்காலமாகக் கொள்ளலாம்.