கொரொனா கால நிதி நிர்வாகம்

கொரொனா கால ஊரடங்கு பலரையும் ஒரு பொருளாதார ரீதியில் பதம் பார்த்திருக்கிறது. இச்சூழலில் ஒவ்வொரு குடும்பத்திலும் நிதித்திட்டமிடல் அவசியமாகும்.

By சு.கவிதா

கொரொனா கால நிதி நிர்வாகம்

கொரொனா வைரஸ் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும் என்று இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு வரை கனவிலும் நினைத்திருக்க மாட்டோம். ஆனால், பெற்றோர் கொஞ்சம் அக்கறை எடுத்து சில முறையான சேமிப்பு சார்ந்த திட்டமிடல்களைச் செய்தால் வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கும் எதிர்பாராத பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளித்து, குடும்பத்தை ஓரளவுக்கு இலகுவாகக் கொண்டுசெல்ல முடியும் என்கிறார் நிதித்துறை ஆலோசகர் டாக்டர் ஏ.வி.செந்தில்

குறிப்பாக அடுத்து வரும் மாதங்களுக்கும் எதிர்காலத்துக்கும் குடும்பங்கள் எவ்வாறு பொருளாதார ரீதியில் தயாராவது என்பது குறித்தும் மேற்கொள்ள வேண்டிய சிக்கனம், சேமிப்பு, முதலீடுகள், காப்பீடு போன்றவை குறித்தும் அவர் அளிக்கும் மிக முக்கியத் தகவல்கள் இதோ உங்களுக்காக...

வருமானம், சேமிப்பு, செலவு, முதலீடு போன்ற பல காரணிகள் ஒரு குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலையைத் தீர்மானிக்கின்றன. எனவே, கீழ்க்காணும் சில ஆலோசனைகளைக் குடும்பங்கள் பின்பற்றினால் எதிர்காலம் குறித்து அதிக பயமின்றி வாழ்க்கையை எதிர்கொள்ளலாம்.

அட்டவணையை உருவாக்குங்கள்

சீரிய இடைவெளிகளில் வருமானம் மற்றும் செலவு குறித்த அட்டவணையை உருவாக்குங்கள். மாதம் ஒரு முறை அல்லது குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது வரவு, செலவு குறித்த ஒப்பீடுகளை மேற்கொள்ளுங்கள்.

உங்களது மாத வருமானத்தில் அதிகபட்சமாக தொண்ணூறு விழுக்காடுவரை நீங்கள் செலவு செய்யலாம். ஆனால், உங்களது வருமானத்தில் மீதமுள்ள பத்து முதல் 20 விழுக்காட்டை நீங்கள் மாதாமாதம் கட்டாயம் சேமிக்கவேண்டும்.

தற்போது கொரொனா வைரஸ் உருவாக்கிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைப்பதிலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலை ஒருவேளை உங்களுக்கு வந்தால் சட்டென்று குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்க நீங்கள் மாதாமாதம் சேமித்த உங்கள் வருமானத்தின் பத்து முதல் 20 % தொகை உங்களுக்குக் கைகொடுக்கும்.

அதுமட்டுமல்லாமல் திடீரென உங்களுடைய வேலை பறிபோனாலோ அல்லது வேலையை இழக்கப்போகும் அபாயக் கட்டத்தில் நீங்கள் இருந்தாலோ உங்களுக்கு பெரும் நம்பிக்கையை இந்த சேமிப்பு கொடுக்கும். இதன் காரணமாக உங்களை நீங்கள் சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு அடுத்த வேலையைத் தேட முடியும்.

செலவைப் பிரித்தல்

மாதாமாதம் வருமானம் வருவதைப் போலவே அதற்கேற்ற செலவுகளும் ஒரு குடும்பத்தில் இருப்பது இயல்பானதே. ஒரு குடும்பத்தில் மாதாமாதம் ஏற்படும் செலவுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

முன்பு செய்த வேலைக்கான செலவுகள்

எடுத்துக்காட்டாக, குழந்தைகளின் கல்விக்காக வாங்கிய கல்விக்கடனுக்கான மாதாந்திரத் தவணை, வீட்டுக் கடனுக்கான மாதாந்திரத் தவணை, கிரெடிட் கார்டுக்கான மாதாந்திரத் தவணை, பெர்சனல் லோன் எனப்படும் தனிப்பட்ட தேவைகளுக்காக வாங்கிய கடனுக்கான மாதாந்திரத் தவணை மற்றும் கார் கடனுக்காகச் செலுத்தும் மாதாந்திரத் தவணை போன்றவை இந்த வகைச் செலவுகளில் அடங்கும்.

உங்களது இத்தகைய கடன்களில் வீட்டுக்கடனும் சேர்ந்திருந்தால் உங்கள் வருமானத்தில் அதிகபட்சமாக ஐம்பது விழுக்காடுவரை அத்தவணைகளைக் கட்ட நீங்கள் செலவழிக்கலாம்.

ஆனால், உங்களுக்கு வீட்டுக்கடன் எதுவும் இல்லாத பட்சத்தில் மற்ற மாதாந்திரத் தவணைகளுக்கு அதிகபட்சமாக உங்களது வருமானத்தின் பதினைந்து முதல் இருபது விழுக்காட்டை மட்டுமே செலவழிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்காக வாங்கிய கல்விக் கடன் மற்றும் வீடு வாங்குவதற்காகப் பெற்ற வீட்டுக்கடன் போன்றவற்றை செலவாகப் பார்க்காமல் முதலீடாகப் பார்க்கவேண்டும்.

நிகழ்கால வாழ்க்கைச் செலவுகள்

ஒரு குடும்பத்தை தினசரி நகர்த்தத் தேவைப்படும் செலவுகள் இதில் அடக்கம். எடுத்துக்காட்டாக, பால், காய்கறி, மளிகை, வாகனங்களுக்கான எரிபொருள் செலவு, மின்சாரக் கட்டணம், குழந்தைகளின் கல்விக் கட்டணம் போன்ற மாதாந்திரச் செலவுகளைச் சொல்லலாம்.

நீங்கள் வாடகை வீட்டில் வசிப்பவர் என்றால் வீட்டு வாடகையையும் சேர்த்து உங்களது மாதாந்திரச் செலவுகள் உங்களது வருமானத்தின் அறுபது விழுக்காடுவரை இருக்கலாம்.

அதுவே நீங்கள் சொந்த வீட்டில் வசித்தால் உங்களது மாத வாடகை உங்களுக்கு மிச்சம் ஆகும் இல்லையா? எனவே, இது தவிர, மற்ற வீட்டுச் செலவுகள், அதிகபட்சமாக உங்களது வருமானத்தின் இருபது முதல் முப்பது விழுக்காடுவரை மட்டுமே இருக்கவேண்டும்.

எதிர்காலத்துக்கான செலவுகள், சேமிப்புகள்

ஒரு குடும்பத்தின் மாதாந்திரச் செலவுகளில் இந்தப்பகுதி மிகமிக முக்கியமானது. இதனை செலவு என்று குறிப்பிடுவதைவிட எதிர்காலத்துக்கான சேமிப்பு என்று குறிப்பிடுவதே சரியானது. குழந்தைகளின் எதிர்காலக் கல்வி மற்றும் திருமணம் போன்றவற்றுக்காகவும், ஓய்வு காலப் பாதுகாப்பு, புதிய வீடு வாங்குதல், கனவு வாகனத்தை வாங்குதல் ஆகியவற்றுக்காவும் வங்கி வைப்புத் தொகை, மியூச்சுவல் பண்ட், இந்திய ரிசர்வ் வங்கிப் பத்திரங்கள், அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் சேமிக்கலாம். இவை போன்ற இலக்குகளுக்காக உங்களது மாத வருமானத்தில் குறைந்தபட்சம் பத்து முதல் இருபது விழுக்காடாவது சேமிக்க வேண்டியது அவசியம். ஒருவேளை உங்களது இலக்கை அடைவதற்கான கால இடைவெளி உங்களுக்கு அதிகமாக இருந்தால் நிதி ஆலோசகரின் ஆலோசனையின் பேரில் பங்குச்சந்தை, -மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ்

தன்னை நம்பியிருக்கும் துணை மற்றும் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும். குறிப்பாக குடும்பத்தை நிர்வகிப்பவரின் கடன் பிரச்சனைகள் அவசர காலத்தில் அவர் சார்ந்திருக்கும் குடும்பத்துக்கு ஒருபோதும் சுமையை ஏற்படுத்திவிடக் கூடாது. எனவே, குடும்பத்தின் ஒட்டுமொத்த நிதி நிலைமை மற்றும் எதிர்கால இலக்குகளை அடிப்படையாகக்கொண்டு டேர்ம் இன்ஷூரன்ஸ் (Term Insurance) எடுப்பது நலம்.

எடுத்துக்காட்டாக, முப்பது வயதில் இருக்கும் பெற்றோர் அதாவது குடும்பத்தலைவருக்கு ஒரு வருடத்துக்கு முன்புதான் குழந்தை பிறந்திருக்கிறது என்றால், அவர் ஐம்பது லட்ச ரூபாய்க்கு, 25 ஆண்டு காலத்துக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டியது அவசியம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்த அந்த நபர், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவராகவும் இருக்கும் பட்சத்தில் அவர் கட்டவேண்டிய டேர்ம் இன்ஷூரன்ஸ்-க்கான மாதாந்திரப் பிரிமியத் தொகை 750 ரூபாய் அல்லது எண்ணூறு ரூபாய் என்கிற அளவில் இருக்கலாம்.

அதேபோல உங்களுக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருக்கிறது என்றால் மற்றுமொரு ஐம்பது லட்ச ரூபாய் பாலிசி எடுத்துவிட்டு அதற்கு நாமினியாக உங்களது மனைவியைக் கொண்டுவரலாம்.

நீங்கள் சொந்தமாகத் தொழில் செய்பவர் என்றால் MWPA (Married Womens Property Act) என்கிற சட்டத்தைப் பயன்படுத்தி ஐம்பது லட்ச ரூபாய்க்கான பாலிசி எடுக்கலாம்.

ஒருவேளை இந்தப் பாலிசியை எடுத்தவர் உயிரிழக்க நேரிட்டால் அவரது துணைக்கு அப்படியே அந்த ஐம்பது லட்ச ரூபாய் போய்ச்சேரும்.

உயிரிழந்தவர் செய்துவந்த தொழிலில் ஏற்பட்ட நட்டங்கள் எதுவும் இந்தப் பாலிசி மூலம் அட்ஜஸ்ட் செய்யப்பட முடியாது. எனவே, இந்த முழுத்தொகையும் அவரது துணையைப் போய்ச் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு செய்யுங்கள்!

சீரிய இடைவெளிகளில் அல்லது ஆண்டுக்கு ஒருமுறையாவது உங்கள் நிதிநிலையை மதிப்பீடு செய்யுங்கள்.

வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்த உங்களுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் நிறைய நேரம் கிடைக்கும் இல்லையா! இந்த நேரத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துங்கள். குறிப்பாக உங்களது குடும்பத்தின் நிதி நிலைமை குறித்து கணவன்-மனைவி ஆகிய இருவருமே கலந்து ஆலோசியுங்கள்.

உங்களுடைய சொத்து மதிப்பு, நீங்கள் வாங்கியிருக்கும் கடன் குறித்த விவரம் ஆகியவற்றை மதிப்பிடுங்கள். உங்களது நிதிப்பிரச்சனைகள் தீர என்னென்ன செய்யவேண்டும்? இப்போது நீங்கள் பின்பற்றி வரும் நடைமுறையை எவ்வாறு சீரமைக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசியுங்கள். இதுபோன்ற ஆலோசனைகளை மேற்கொள்ள அதிகபட்சம் மூன்று அல்லது நான்குமணிநேரம் ஆகும். அவ்வளவுதான்.

உயில், வாரிசுதாரர் நியமனம்

வங்கிக் கணக்குகள், வருங்கால வைப்பு நிதி, கிராஜுவிட்டி, அஞ்சலக சேமிப்புகள், மியூச்சுவல் பண்ட், டீமேட் அக்கவுண்ட்கள், லாக்கர்கள் போன்ற உங்களது முதலீடுகளுக்கும் மறக்காமல் வாரிசுதாரரை நியமியுங்கள். குறிப்பாக ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையும் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்ப நாமினேஷனை மறு ஆய்வு செய்யுங்கள். ஒருவேளை நாமினேஷனில் மாற்றங்கள் செய்யவேண்டிய சூழல் வந்தால் அதற்கேற்ப மாற்றங்களை மேற்கொள்ளுங்கள்.

அதேபோல உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சொந்த வீடுகள் இருந்தால், அந்த அசையா சொத்துக்கள் குறித்த உயிலை இரண்டு சாட்சிகளுடன் தெளிவாக எழுதி வைப்பது புத்திசாலித்தனம். அதுமட்டுமல்லாமல் அப்படி எழுதி வைத்த உயிலையும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்வதும் நல்லது.

கைகொடுக்கும் மருத்துவக் காப்பீடு!

திடீர் என்று வரும் நோய்களுக்கான மருத்துவச் செலவுகள், ஒவ்வொரு வருடமும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. பொதுவாக ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான மருத்துவக் காப்பீட்டை சம்பந்தப்பட்ட நிறுவனமே எடுத்துவிடும் என்றாலும் அந்தக் காப்பீட்டுத் தொகை சில சமயங்களில் போதுமானதாக இருப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் கோவிட் போன்ற அவசரநிலை காரணமாக வேலையிழக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் அல்லவா?

அதிலும் புற்றுநோய் சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை போன்ற பெரிய நோய்களுக்கான சிகிச்சைக்கு பல லட்சங்கள் செலவாகும்தானே?

இதுபோன்ற சமயங்களில் கையில் மருத்துவக் காப்பீடு இல்லாமல் போனால், சிகிச்சைக்காக நமது ஒட்டுமொத்த சேமிப்பையும் இழக்கவேண்டிய சூழ்நிலை வந்துவிடுமே?

எனவே, நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தாலும் நீங்களும் உங்கள் குடும்பத்துக்காக ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் கூடுதலாக (Family floter cover) மருத்துவக் காப்பீடு எடுக்கவும்.

நீங்கள் முப்பது வயதுப் பெற்றோராகவும் உங்களது இரண்டு குழந்தைகளும் மிகவும் சின்னஞ்சிறு குழந்தைகள் என்றால், நீங்கள் எடுத்துள்ள மருத்துவக் காப்பீட்டின் சிறப்பம்சங்கள் மற்றும் தன்மையைப் பொறுத்து ஆண்டுக்கு ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரை பிரீமியம் கட்டவேண்டிவரும்.

தகவல்கள் ஓரிடத்தில் இருக்கட்டும்!

எதிர்கால வாழ்க்கை வளமாக அமைய முதலீடு எவ்வளவு முக்கியமோ அதேபோல முதலீடு குறித்த தகவல்களை, ஆவணங்களை ஒரே இடத்தில் வைக்கவேண்டியதும் மிக அவசியம். எடுத்துக்காட்டாக, கணினியில் எக்ஸெல் ஸ்பிரெட்ஷீட்(Excel Spread sheet) ஒன்றை உருவாக்கி, அதில் உங்களது முதலீடுகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் சேர்த்து வைக்கலாம். ஆனால், இத்தகவல்களைப் பாதுகாக்க பாஸ்வேர்டு போட்டு வைத்துக்கொள்ள மறக்காதீர்கள்.

போர்ட்போலியோ முக்கியம்!

அதேபோல எந்தெந்தப் பெற்றோரின் ஆண்டு வருமானம் பத்து லட்சத்துக்கும் அதிகமாக உள்ளதோ, அவர்கள் தங்களது வருமானம் மற்றும் முதலீடு குறித்த போர்ட்போலியோ ஒன்றைத் தயார் செய்தல் நலம்.

ரியல் எஸ்டேட், தங்கம் போன்ற Physical assets குறித்த தகவல்கள், ஈக்விட்டீஸ் (Equities), மியூச்சுவல் பண்ட், வைப்பு நிதி, வங்கியின் சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணம், ஆகிய Financial Assets எனப்படும் நிதி சார்ந்த முதலீடுகள் ஆகியவை அந்த போர்ட்போலியோவில் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும்.

ஒட்டுமொத்தமாக அந்தப் போர்ட்போலியோவைப் பார்த்தால் அதிலுள்ள முதலீடுகளில் பத்து முதல் பதினைந்து விழுக்காடு முதலீடு, வைப்பு நிதியாகவோ அல்லது வங்கிக் கணக்கில் பணமாகவோ இருக்கவேண்டும். அப்போதுதான் அப்பணத்தைக் கொண்டு கொரொனா தாக்குதல் போன்ற அவசர நிலையின்போது அதிக பாதிப்பின்றி குடும்பத்தை கொண்டு செல்ல முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக நிதி நிர்வாகம் என்பது பெற்றோர் இருவரும் சம்பந்தப்பட்ட ஒரு விஷயமாகும். அதனால் ஒரே ஒருவர் மட்டும் குடும்பத்தின் நிதிநிர்வாகம் சார்ந்த முடிவுகளை எடுக்காமல், கணவன், மனைவி இருவரும் சேர்ந்து குடும்பச் சூழ்நிலைக்கேற்ப புத்திசாலித்தனத்துடன் நிதிநிர்வாக முடிவுகளை எடுப்பது வளமான வாழ்க்கைக்கு உதவுவதோடு, இது அவர்களுக்கு இடையிலான பிணைப்பையும் அதிகப்படுத்திவிடும்.

வளமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்!