குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கு முக்கியமா? ஏன்? எப்படி?

குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு முக்கியமானது. அதிலும் அப்பாவின் பங்கு ரொம்பவே விசேஷமானது.

By யெஸ். பாலபாரதி

குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கு முக்கியமா? ஏன்? எப்படி?
குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கு முக்கியமா? ஏன்? எப்படி?

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்? என்பது பழமொழி. நம் குழந்தைகளின் உடல் அமைப்புகள் எப்படி நம் ஜீன்களால்  கட்டமைக்கப்படுகிறதோ, அதுபோல குழந்தைகளின் எண்ணங்களும் செயல்களும் நம் செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும்.

குழந்தைகள் நாம் எதைச் செய்தாலும் அப்படியே பிடித்துக்கொள்ளும் வல்லமை கொண்டவர்கள். ஆனால் எது தவறு, எது சரி என்று பிரித்து அறிய தெரியாதவர்கள். அப்பா செய்வது அனைத்துமே சரி என நினைக்கும் வயதில், நாம் சரியானதை மட்டுமே அவர்கள் முன்னால் செய்ய வேண்டும்.

இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, எப்போதும் சாலை விதிகளை மீறாமல் செல்வது என் பழக்கம். ஒழுக்கம் என்பது பிள்ளைகளுக்கு சொல்லி வருவதில்லை. நம்மைப் பார்த்துத்தான் வருகிறது. நாம் பக்கத்தில்தானே ஙெ்ல்லப்போகிறோம் என்ற எண்ணத்தில் ஒருமுறை தலைக்கவசம் அணியாமல் வண்டி எடுக்க எத்தனிக்கும்போது விக்கியப்பா ஹெல்மெட் போடல! என்று  எச்சரித்திருக்கிறான் பிள்ளை. சிவப்பு விளக்கு இருக்கும்போது கடக்கும் வாகனங்களைக் கவனித்து, பச்சை இருக்கும்போதுதானே போகணும்! ஏன் சிவப்பு இருக்கும்போதே போறாங்க? என கேள்வி எழுப்பி இருக்கிறான்.

சமீபத்தில் பக்கத்தில் ஒரு கடைக்குச் சென்றபோது, ஏன் இப்படிப் போறே என்றான் கடைக்குப் போகணும்ல என்றேன்? ஏன் இந்த பக்கம் போறே? இடது பக்கம்தானே போகணும்! என்றான். சின்னச் சின்ன விஷயங்களையும் குழந்தைகள் கூர்ந்து கவனிக்கின்றனர்.

அவர்களின் செயல்பாடு, பழக்க வழக்கங்கள், ஆளுமை எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவர்களின் முன் நாம் நடந்து கொள்ளும் முறையே! வீட்டில் இருக்கும்போது அவ்வப்போது சமைப்பது என் வழக்கம். பையனுக்கு ஒரு வயதாக இருக்கும்போதே, அவனைத் தூக்கிக் கொண்டே சமைக்க வேண்டும் என்பான், இப்போது 5 வயதாகிறது, சப்பாத்தி பிசைய, சிறு சிறு காய்கறிகளை நறுக்க ஆரம்பித்திருக்கிறான். இது சின்ன விஷயமாக இருக்கலாம், ஆனால், வீட்டுவேலை என்பது பெண்களுக்கானது மட்டுமே என்ற எண்ணத்தை அவனிடம் திணிக்காது.

சின்னவளுக்கு இரண்டு வயது, நாளை பையன் அவளை தாத்தா பாட்டிகள் நம்மை நடத்தியது போல் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பதால் இப்போதே இருவரையும் ஒரே மாதிரிதான் சமமாக நடத்துகிறேன். அவனும் நான் எப்படி சின்னவளிடம் நடந்து கொள்கிறேன் என்று கவனித்துக் கொண்டே இருக்கிறான்.

ஒருநாள் சின்னவள் ஒரு நாற்காலியைத் தள்ள முடியாமல் தள்ளிக்கொண்டு வந்து என் மனைவியிடம் உக்காரு என்றாள். ஒருநிமிடம் எங்களுக்குப், புரியவில்லை. அப்புறம்தான் புரிந்தது, மனைவி அலுவலக விஷயமாக நின்றபடியே கணினியில் வேலை செய்து கொண்டிருந்தார். வழக்கமாக நான்தான் நாற்காலியை எடுத்துக்கொண்டு வருவேன். நேற்றைக்கு சின்னவள் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாள்.

குழந்தைகள், முதல் இரண்டு வயதுவரை மட்டுமே அம்மாவை மிகவும் சார்ந்து இருப்பார்கள், அதன்பின் அம்மா மட்டுமல்ல; அப்பாவும் பெரிய ரோல் மாடல். தன் தகப்பனுக்கு எல்லாமே தெரியும், தன் தகப்பன் செய்யும் எல்லாமே சரி என்று குழந்தை நினைக்கும். சிறு வயதில் நீங்கள் என்னவாக குழந்தைகளிடம் இருந்தீர்கள் என்பதே உங்கள் குழந்தையின் நாளைய ஆளுமையாக உருவெடுக்கும். அதுவே உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கருவி!

நீங்கள் நல்ல அப்பாவா இல்லையா என்பதை தீர்மானிப்பவரும் நீங்கள்தான்.

குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கு முக்கியமா? ஏன்? எப்படி?

குழந்தைகளின் சின்னச் சின்ன ©சய்கைகளுக்கும், பெற்றோர் பதறுவது, அவர்களிடம், ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும் திறனைக் குறைக்கிறது என்று நான் முழுமையாக நம்புகிறேன். இதை நான் அனுபவப்பூர்வமாகவே உணர்ந்திருக்கிறேன்.

முதல் பிள்ளை என்பதால் மூத்தமகளுக்கு செல்லம் கொஞ்சம் அதிகம். கீழே விழுந்தாலோ தடுக்கினாலோகூட உடனே தூக்கி ஆறுதல் சொல்வது தொடங்கி, கவனிப்பு அதிகமாய் கொடுத்தோம். சிறிய விஷயத்துக்கும் அளவுக்கு அதிகமாய் அவள் பதற்றப்படுவாள். மெல்ல மெல்ல அதீத கவனிப்பைத் தவிர்த்து அவளை அவளாகவே பார்த்துக்கொள்ளவிட்டாலும்கூட, இப்பொழுதும் அவள் பதற்றப்படுவது மொத்தமாக மாறவில்லை.

ஆனால் சிறிய மகள், அதற்கு நேர் எதிர். தடுக்கி விழுந்தாலும், ஒண்ணும் இல்லைம்மா துடைச்சுட்டு வா என்று அவளிடம் சொல்லிக்கொண்டே இருக்கத் தொடங்கினோம். வலியை எடுத்து தூரப்போடு என்று சொல்லி கற்பனையாக வலியைப் பிடுங்கித் தூர எறிவோம். உடனே அவள் சிரித்துக்கொண்டே வலி போயிடிசே? என்று சொல்லிவிட்டு, விளையாட ஓடிவிடுவாள்.

ஒருமுறை அண்ணன் மகளும் பெரியவளும் ஷட்டில் காக் விளையாடிக் கொண்டிருந்தபோது இவள் நடுவில் ஓடிவிட்டாள். ஓங்கி அடித்த பேட் நேராக குழந்தையின் இடது கன்னத்தில் பதிந்து விட்டது. நானாக இருந்தாலுமே அந்த அடிக்கு சற்று நேரம் துவண்டு வீழ்ந்திருப்பேன். கன்னத்தில் சிவப்பாக பெரிய கோடு விழுந்தது. 

அவள் என்னிடம் ஓடிவந்தாள். இப்பா, ஊ ஆச்சு.. வலி போ.. சொல்லுப்பா என்றாள். என்ன ஆனது என்று கேட்டபோது, அவள் அக்காவைக் குற்றம் சாட்டிப் பேசவே இல்லை. அக்கா விளையாடுனாங்க.. நான் ஓடிட்டேன். ஊ ஆச்சு.. ரொம்ப வலிக்குது... வலி போ சொல்லு என்று நின்றாள். கற்பனையாக வலியைப் பிடுங்கி எடுத்துப் போட்டதும் திரும்பவும் அக்காவுடன் விளையாடப் போய்விட்டாள். அழைத்து வந்து மஞ்சள் பத்து போட்டுப் படுக்க வைத்தாலும் வலி போ, சொன்னா போய்டுச்சுப்பா. மருந்து வாணரீ என்கிறாள்.

குழந்தைகள் முன் நாம் பதற்றமடைவதை விட்டுவிட்டால், அவர்களும் இயல்பாக இருக்கக் கற்றுக்கொள்வார்கள் என்பதை இரண்டாவது மகள் மூலம் கற்றுக்கொண்டேன்.

குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கு முக்கியமா? ஏன்? எப்படி?

என் குழந்தைகளுக்கு இரண்டு திறன்களை அவசியம் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று நினைத்தேன். ஒன்று வாசித்தல். மற்றொன்று பயணம் நேசித்தல்.

தமிழ், ஆங்கிலம் மற்றும் படங்கள் நிறைந்த புத்தகங்கள் என வீடு முழுக்க இருக்கும்படி பார்த்துக் கொண்டோம். அதோடு, வீட்டில் இருக்கும் நேரங்களில் தொலைக்காட்சிகளில் மூழ்காமல், புத்தகங்களை வாசித்து வந்தோம். குழந்தைகளுக்கு எப்போதுமே பெற்றோரே ரோல்மாடல். நம்மைப் பார்த்து வளரும் குழந்தைகளும் அப்படியே நம்மைப் பின்பற்ற நினைப்பார்கள். இன்று எங்கள் வீட்டில் என் குழந்தைகளுக்கும் புத்தகங்களின் மீது ஆர்வம் வந்துள்ளது. வாசிப்பின் மூலம் அவர்கள் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வர்.

அடுத்தது, பயணம். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நேரத்திற்கு ஏற்ப பயணங்கள் மேற்கொள்கின்றோம். புதிய ஊர், புதிய உணவு, மாறுபட்ட கலாச்சாரம்,கிடைத்ததை உண்ணும் பழக்கம், அனைத்தையும் ரசிக்கும் உள்ளம், மனிதர்களை அணுகும் விதம், இயற்கையை நேசிக்கும் பழக்கம் என்று பயணங்களின் வழி நிறைய கற்றுக்கொள்ள அவர்களுக்குக் கிடைக்கிறது. நாம் நினைப்பதைவிட எண்ணிலடங்கா மாறுதல்கள் பயணம் மூலம் அவர்களுக்குக் கிடைக்கின்றன.

வலிந்து திணிப்பதை விட, அவர்களின் முன்னால் நாம் வாழ்ந்து காட்டினாலே போதும் என்பது எங்களின் எண்ணம்.