கதை சொல்லும் தேவதைகள்

பெற்றோர் கதை சொன்னது அந்தக்காலம். பிள்ளைகள் கதை சொல்ல, நாம் கேட்பது இந்தக்காலம். குழந்தைகளிடம் கதை சொல்லும் திறனை மென்மேலும் வளர்ப்பது எப்படி? கதைக்கலாம் வாங்க !

By சுகுணா ஸ்ரீனிவாசன்

கதை சொல்லும் தேவதைகள்

அன்று முதல் இன்றுவரை குழந்தைகளைத் தம்பால் ஈர்க்கக்கூடியவை கதைகள். முன்பொருமுறை நான் என் மகளுக்கு பாட்டி வடை சுட்ட கதையைச் சொல்லிக் கொண்டிருந்தேன். என் கதையைப் பாதியிலேயே நிறுத்தச் சொன்னாள் என் மகள்.

"ஏனம்மா, கதை வேண்டாமா?" என்று நான் கேட்க,

"இல்ல...இல்ல.. மீதிக் கதையை நான் சொல்லட்டுமா?" என்று கேட்டாள். சரி" என்றேன்.

பாட்டி சுட்ட வடையை எடுத்த காக்கா பறந்து மரத்து மேலே உட்கார்ந்துச்சா, அங்க வந்த நரி காக்காவ பாட்டு பாடச் சொல்லிச்சு. காக்கா வடையை தன் வாயிலிருந்து எடுத்து காலில் வைத்துக் கொண்டு நரிக்கு பாட்டுப் பாடிச்சு. நரி ஏமாந்து போச்சு!" என்று கூறி முடித்தாள்.

"என்னடா கதை இது?" என்று கேட்க,

"அதான்மா, நரி காக்காவ ஏமாற்றப் பார்த்துச்சு. ஆனா முடியல அவ்ளோதான் கத முடிஞ்சுபோச்சு" என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள். சரிதான். நாம் அந்தக்காலத்தில் இக்கதையின் மூலம் நம் பிள்ளைகளுக்கு நன்னெறியைக் கற்றுக் கொடுத்தோம் என்றால் நம் பிள்ளைகள் அடுத்தவரிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி என்று நமக்கே பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர் என்று நான் புரிந்து கொண்டேன்.

எல்லோரும் கதை சொல்லிகளே!

சரி, குழந்தைகள் எல்லோரிடமும் கதை சொல்லும் திறன் உண்டா? ஆம், குழந்தைகளிடத்தில் கதை சொல்லும் திறன் இருக்கவே செய்கிறது. அதைக் கேட்க நமக்குத்தான் பொறுமை வேண்டும்.

இன்று குழந்தைகளுடன் பெற்றோர் தரமான நேரத்தைச் செலவு செய்யும் பட்டியலில் குழந்தைகள் உறங்கச் செல்லும்போது கதை சொல்லும் நேரத்தையும் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் கதை சொல்லும் பழக்கம்தான் அந்தக்காலம் தொட்டு நம்மிடையே இருந்து வந்திருக்கிறது. தெருக்கூத்தில் தொடங்கி பல விஷயங்கள் நம்மிடையே பாரம்பரியமாக இருந்து வருகின்றன. இதை விடுத்து நாம் எதற்கு படுக்கை நேரக் கதைகளைத் தேட வேண்டும்?

பள்ளியிலிருந்து...

பெரும்பாலான குழந்தைகள் சிறு வயது முதலே பள்ளி விட்டு வீட்டுக்குள் நுழைந்தவுடன் அன்று காலையில் தொடங்கி என்ன செய்தனர்; வகுப்பில் ஆசிரியர் என்ன சொன்னார்? அருகில் இருக்கும் நண்பன் என்ன சொன்னான்? யாருடன் சண்டை போட்டனர்? இப்படி பள்ளி முடியும்வரை நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் ‘கடகட‘வென சொல்லும் வழக்கத்தைக் கொண்டிருப்பர். இது தினமும் நடக்கும் ஒரு விஷயம் என்றபோதிலும், அவர்களுக்கு அப்படி சொல்லியே தீர வேண்டும். நீங்கள் நடுவில் எங்கு நிறுத்தி என்ன கேட்டாலும் மீண்டும் விட்ட இடத்திலிருந்து சொல்லி முடிக்கும்வரை ஓய மாட்டார்கள். இத்தகைய குழந்தைகள் மிக அழகாக, கோர்வையாகக் கதை சொல்லக் கூடியவர்களே.

சென்னையைச் சேர்ந்த ‘கதை சொல்லியான சுதா ராஜேஷின் அனுபவம் மிகவும் சுவையானது. அவரது வாயாலேயே அதைக் கேட்போம்.

ஒவ்வொன்றும் ஒரு விதம்

என் வகுப்பில் 1 முதல் 5ஆம் வகுப்புவரை படிக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர். இங்கு நான் மட்டும் கதை சொல்வது கிடையாது. அவர்களையும் கதை சொல்லச் சொல்வேன். அவர்களைப் பேச வைப்பதுதான் நோக்கமே. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம். சில குழந்தைகள் கோர்வையாகக் கதை சொல்வர். சிலர் தட்டுத் தடுமாறிக் கதை சொல்வர். ஒரு சில குழந்தைகள் கதை சொல்லும்போது இடையில் தவறுகள் செய்யக்கூடும். தவறாக ஏதேனும் சொன்னாலோ செய்தாலோ பொதுவாக நாம் என்ன செய்வோம்? உடனடியாகச் சிரிப்போம். ஆனால், என் வகுப்பில் அது இருக்காது. குழந்தை சொல்லும் கதையில் எங்கேனும் தவறு நடந்தால் அதை நான் திருத்துவேன். மற்ற குழந்தைகள் ‘ஓ, இப்படி சிரிக்கக்கூடாதுபோல என்பதைப் புரிந்து கொண்டதுடன், தவறாகச் சொல்லும்போது அதைத் திருத்தவும் என்னிடமிருந்து கற்றுக் கொண்டனர்.

எளிதில் புரியணுமா?

நாம் எல்லாவற்றையும் பாடமாகவே நடத்துகிறோம். மாறாக ஒவ்வொன்றிலும் ஒரு சிறு கதையை உட்புகுத்திச் சொல்லிப் பாருங்கள்... நிச்சயம் எளிதாகப் புரிந்து கொள்வர். குழந்தைகள் அடுத்தடுத்து கதை சொல்லச் சொல்ல மற்ற குழந்தைகளும்

‘நான்... நீ என்று போட்டி, போடத் தொடங்கிவிடும். அதே நேரம் எல்லாக் குழந்தைகளும் இப்படி இருப்பர் என்று சொல்ல முடியாது.

எனக்கு ஏன் கொடுக்கல?

சில நேரங்களில் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரம் கொடுத்து ஒரு குட்டி நாடகம் ஒன்றை உருவாக்கி நடிக்க வைப்பதும் உண்டு. அப்படி ஒரு முறை ஒரு நாடகத்தை ஏற்பாடு செய்தபோது, இரட்டைக் குழந்தைகள் மிகவும் சிறியவர்கள் என்பதால் அவர்களுக்கு எந்த கதாபாத்திரத்தையும் நான் ஒதுக்கவில்லை. அதில் ஒருவன் அமைதியாக இருந்தான். 

மற்றவனோ ‘எனக்கு நீ ஏன் கதாபாத்திரம் எதுவும் கொடுக்கவில்லை? என்று கேட்டு அழவே தொடங்கிவிட்டான். நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதன்பின் ‘ஸாரி கண்ணா, அடுத்தமுறை கண்டிப்பாக உனக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கிறேன் என்று விளக்கியபின்தான் அமைதியானான். இரட்டையர்களிலேயே எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்.

முதலில் பேசத் தயங்கும் பிள்ளையிடம் ‘உன்னைப் பற்றி ஏதேனும் சொல்லேன் என்று நான் கேட்பதுண்டு. ‘என்னைப் பற்றியா? என்ன சொல்வது? என்று கேட்கும் அக்குழந்தையிடம் ‘உனக்கு பிடிச்ச சாப்பாடு, பூ இப்படி ஏதேனும் சொல் என்று சொன்னதுதான் தாமதம், நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே இருந்த பிள்ளைகள் பலர் . இப்படி ஒருசில குழந்தைகள் முதலில் பேசத் தயங்கும். நாம் அதற்கு ஒரு தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் போதும், அதன் பின்னர் இலகுத் தன்மையுடன் இருக்கத் தொடங்கிவிடும்.

‘சரி இன்று 10 நிமிடம் பேசிவிட்டாயல்லவா, நாளை 3 நிமிடம் மட்டும் பேசினால் போதும். எப்படி பேசுவது, என்ன பேசுவது என்று நீயே தயார் செய்து கொண்டுவா பார்க்கலாம் என்று ஒரு சிறு சவாலான விஷயத்தையும் அவர்களுக்குக் கொடுப்பதுண்டு. சில குழந்தைகள் பேசிக்கொண்டே இருப்பர். ‘டேய் எப்போதடா முடிப்பாய்? என்று கேட்டால் ‘இதோ...இதோ இன்னும் ஒன்றே ஒன்று சொல்லி முடித்துவிடுகிறேனே... என்று கேட்க வேறு செய்வர்.

கதை சொல்லும் தேவதைகள்

கண்டுபிடியுங்கள்

குழந்தைகளுக்குக் கதை சொல்லும் திறன் இருக்கிறதா இல்லையா என்பதைப் பெற்றோர்தான் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளில் சிலர் வீட்டுக்குள் மட்டும் பேசுபவர்களாகவும் கூச்ச சுபாவம் கொண்ட குழந்தைகளாகவும் இருப்பர். இவர்கள் வெளியில் யாரிடமும் அவ்வளவாகப் பேசமாட்டார்கள். அதற்காக அவர்களைக் கட்டாயப்படுத்தாதீர்கள். அவர்களின் இயல்பை உடைக்காதீர்கள். அவர்கள் போக்கில் அப்படியே விடவும்.

என் வகுப்பிலும் இதுபோல் இரண்டு மாணவர்கள் இருந்தார்கள். அவர்களைத் தனியே சந்தித்துப் பேசினேன். ‘உனக்கு எல்லோர் முன்பாக கதை சொல்லக் கஷ்டமாக இருந்தால் பரவாயில்லை. சொல்ல வேண்டாம். என்னிடம் தனியாக சொல்கிறாயா? என்று கேட்டேன். ‘சரி என்றதுடன் சொல்லவும் செய்தார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் மற்ற குழந்தைகளைப் போல் எல்லோர் முன்பாகவும் நின்று மளமள வென கதை சொல்லவும் தொடங்கினர்.

அதேபோல் கோர்வையாகக் கதை சொல்லும் ஒரு குழந்தை, ஒருநாள் கதை சொல்லிக் கொண்டிருந்தபோதே திடீரென என்னை மட்டும் பார்த்துச் சொல்லத் தொடங்கிவிட்டான். எனவே, எந்த இடத்திலும் எப்போதும் குழந்தைகளை எதற்கும் கட்டாயப்படுத்துதல் என்பது அறவே கூடாது. இது இயல்பு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படிக் கதை சொல்லும் திறன் காரணமாக குழந்தைகளின் கற்பனை சக்தி அதிகரிக்கிறது. அவர்கள் இரக்க மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கின்றனர். மொழித்திறன் வளர்கிறது. பேச்சுத் திறனும் அதிகரிக்கும். பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறன், கோர்வையாகப் பேசும் திறன், சரியான தகவல் பரிமாற்றம் ஆகியவற்றுக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது.

எல்லாமே நேரில்தான்

அந்தக் காலத்தில் நமக்கெல்லாம் கதை சொல்லி சாப்பாடு ஊட்டினர். ஆனால், இன்றைக்கு வேலை விரைவில் முடிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அலைபேசியில் ஏதேனும் ஒரு வீடியோவை ஓடவிட்டு சாப்பாட்டை ஊட்டி விடுகின்றனர். பிள்ளையும் என்ன சாப்பிடுகிறோம் என்றே தெரியாமல் சாப்பிட்டு முடித்துவிடுகிறது. இதில் கேட்ஜட்களுக்குக் குழந்தைகள் அடிமையாகிவிட்டார்கள் என்று நாம் சொல்வது எந்தவிதத்தில் சரி?

முக்கியமாக, இதனைத் தவிர்ப்பதற்காகவே எனது வகுப்புகள் எதுவுமே இணையத்தில் கிடையாது. என் வகுப்புகள் குறித்து அறிய வேண்டும் என்றாலும், இதனைப் பார்க்க வேண்டும் என்றாலும் நீங்கள் நேரடியாகத்தான் வந்தாக வேண்டும். நான் வகுப்பு நடத்தும் இடத்தில் என் குழந்தைகளையும் என்னுடன் அமரவைத்துக் கொண்டுதான் என் வகுப்பை நடத்துகிறேன்" என்கிறார் சுதா ராஜேஷ்.