”விருப்பங்களைத் திணிக்கக்கூடாது” -செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ்பாபு.

”பிள்ளைகளின் விருப்பங்கள் எந்தத்துறையில் இருக்கின்றனவோ, அவற்றில் அவர்கள் முன்னேற நாம் ஊக்கம் தரவேண்டும்”

By கா.சு.துரையரசு.


”விருப்பங்களைத் திணிக்கக்கூடாது” -செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ்பாபு.

உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்

நாங்கள் ஒரு நடுத்தர வர்க்க குடும்பம். நான் கூட்டுறவு வங்கி ஒன்றில் மேலாளராகப் பணிபுரிகிறேன். என் மனைவி நாகலட்சுமி ஓர் இல்லத்தரசி. மகள் வைஷாலி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறார். மகன் பிரக்ஞானந்தா (வயது 12) 8 ஆம் வகுப்பு படிக்கிறார்.

பிரக்ஞானந்தாவுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

அது யதேச்சையாக ஏற்பட்டதுதான். அவனது அக்கா சதுரங்கத்தில் ஆர்வம் மிக்கவர். வுமன் இண்டர்நேஷனல் மாஸ்டர் தகுதியைப் பெற்றவர். மூன்றுமுறை தேசிய அளவிலான சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறார். அவர் விளையாடுவதை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருப்பது பிரக்ஞானந்தாவுக்கு விருப்பமான பொழுதுபோக்கு. தொலைக்காட்சிகளில் தேவையற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப்பார்ப்பதைவிட இது ஒரு பயனுள்ள பொழுதுபோக்காகத் தோன்றியது. எனவே நாங்கள் இதனை ஊக்குவித்தோம்.

எந்த வயதிலிருந்து பிரக்ஞானந்தாவுக்கு சதுரங்கத்தில் ஆர்வம் ஏற்பட்டது?

மூன்று வயதிலிருந்தே ஆர்வம் ஏற்பட்டது. முதலில் பொழுதுபோக்காகத் தொடங்கியது. அதில் அவரது ஆர்வத்தைக் கண்டபிறகு இதனை முறைப்படுத்த வேண்டும் என்று எங்களுக்குத்தோன்றியது. அதனையடுத்து 4 ஆவது வயதில் ப்ளூம் செஸ் அகடமி என்ற பயிற்சி மையத்தில் சேர்த்தேன்.

அதன்பின் என்ன நடந்தது?

பொதுவாக சதுரங்கத்தில் ஒரு படிநிலை உண்டு. முதலில் வெவ்வேறு அகடமிகளால் நடத்தப்படும் போட்டிகளில் (இரண்டு நாள் டோர்னமெண்ட்) வெல்லவேண்டும். இவ்வாறு விளையாட விளையாட குழந்தைகளுக்கு பயம் போய்விடும். பின்னர் தரப்புள்ளிகளை அதிகரிக்கச் செய்யும் தரவரிசைப்போட்டிகளில் (மாநில அளவில்) கலந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள முடியும். இந்தப்படிநிலைகள் எல்லாவற்றையும் கடந்து உலகிலேயே இந்த வயதில் கிராண்ட்மாஸ்டர் தகுதியைப்பெற்ற இரண்டாவது வீரர் என்ற நிலையை பிரக்ஞானந்தா பெற்றிருக்கிறார்.

இதுவரை பெற்ற வெற்றிகள்?

ஆசிய அளவில் 2 தங்கப்பதக்கங்களை பிரக்ஞானந்தா வென்றிருக்கிறார். உலக இளையோர் பிரிவில் இரண்டு தங்கப்பதக்கங்களும் மற்ற போட்டிகளில் பல வெள்ளிப்பதக்கங்கள், வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார். புனேவில் 7 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான போட்டிகளில் இரண்டாவது இடத்தையும் அண்மையில் பிடித்தார்.

விளையாட்டுப்போட்டிகளுக்காக பிரத்யேக உணவுக்கட்டுப்பாடு எதையும் உங்கள் குடும்பத்தில் பின்பற்றுகிறீர்களா?

இல்லை. வழக்கமான உணவுகள்தான் பிரக்ஞானந்தா உட்கொள்கிறார். ஆனால் தவறியும் தேவையற்ற குப்பை உணவுகளை (junk food) உண்பதில்லை.

பிரக்ஞானந்தாவின் பள்ளி எந்த அளவுக்கு கைகொடுக்கிறது?

அவர் படிக்கும் முகப்பேர் வேலம்மாள் பள்ளி மிகவும் ஆதரவாக இருக்கிறது. அதுதவிர, வெளியூர்களுக்கு விளையாடச் செல்லும்போது பொருளாதாரம் உள்ளிட்ட பல உதவிகளை அவர்கள் செய்கின்றனர்.

விளையாட்டில் ஆர்வம் மிக்க குழந்தைகளை வளர்ப்பது என்பது குழந்தை வளர்ப்பில் மாறுபட்ட பாணியா?

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தைகளைப்பொறுத்தவரை நாம் எவ்விதமான அழுத்தத்தையும் தந்துவிடக்கூடாது. ஆர்வம் சுயமாக வரவேண்டும். அப்படி வரும் ஆர்வத்துக்கு நாம் ஊக்குவிக்கும் பணிகளைச் செய்ய வேண்டும். அவ்வளவுதான்.

அதேபோல விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். ஒரு போட்டியில் பிள்ளை வெல்லும்போது நாம் மகிழ்ச்சியடைகிறோம். அதேநேரத்தில் தோல்வியடைந்துவிட்டால் எதிர்மறையாகப் பேசக்கூடாது. அவர்களைத்தேற்றி, அடுத்த போட்டியில் வெற்றிபெற ஊக்கம் கொடுக்க வேண்டும். கிராண்ட்மாஸ்டர் நிலையை அடைவதற்கான போட்டிக்கு முந்தைய போட்டியில் பிரக்ஞானந்தா சுமாராகத்தான் விளையாடியிருந்தார். இதனை ஏற்கும் பக்குவம் பெற்றோருக்கு இருக்க வேண்டும். கடும் உழைப்பு, ஊக்கம், கடவுள் அருள்-இவை மூன்றும்தான் வெற்றியைக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன்.

பிரக்ஞானந்தாவின் போட்டிகளின்போது நீங்களும் பிஸியாகிவிடுவீர்கள்தானே?

ஆம். முன்கூட்டியே பயண முன்பதிவு செய்வது, அவரைப் போட்டிக்கு அழைத்துச் செல்வது என்று தொடர்ச்சியாக நேரம் தேவைப்படும். டோர்னமெண்ட் போட்டிகள் என்றால் எளிதாக 10 நாட்கள்வரை ஆகிவிடும். தற்போது எனது மனைவி இந்தப்பணியை என்னுடன் பகிர்ந்துகொள்கிறார்.

குறிப்பிட்ட வயதுக்குப்பிறகு பிள்ளைகளின் விருப்பத்தில் மாறுதல் ஏற்பட்டால் என்ன செய்வது?

அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டியதுதான். படிப்பு, விளையாட்டு ஆகிய இரண்டிலும் உங்கள் விருப்பங்களைப் பிள்ளைகள்மீது திணிக்கவே கூடாது.

சதுரங்கப்போட்டிகளுக்குத் தயார்படுத்த செலவு அதிகம் பிடிக்குமோ?

பயிற்சி அகடமியில் பயிற்சிக்கான கட்டணம், வெவ்வேறு போட்டிகளுக்காக வெளியூர், வெளிநாடு செல்லும் பயணக்கட்டணம், தங்குமிட செலவுகள் ஆகியவைதான் கணிசமாக செலவு வைக்கும். உங்களுக்கு வசதி இருந்தால் தொடக்கத்திலேயே வெளிநாட்டுப்போட்டிகளில் விளையாடலாம்.

உங்களுக்கு ஸ்பான்ஸர்கள் இருக்கிறார்களா?

ஆம். தற்போது ராம்கோ குழுமம் எங்களுக்கு பெரிதும் ஆதரவளித்து வருகிறது.

இன்றைய பெற்றோருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நாம் வளர்ந்த காலம் என்பது வேறு. இன்றைய குழந்தைகள் முற்றிலும் வேறானவர்கள். எனவே அவர்களிடம் நண்பர்கள்போலப் பழக வேண்டும். அவ்வாறு பழகினால்தான் உங்களிடம் எல்லாவற்றையும் அவர்கள் பகிர்ந்துகொள்வர். வெளிப்புற நட்பில் நல்லதும் இருக்கும்; கெட்டதும் இருக்கும். ஆனால் பெற்றோருடனான நட்பான அணுகுமுறையின் விளைவாக, வெளிப்புற நட்பில் நல்லதை மட்டும் நாடிச் செல்லும் சூழல் உருவாகிவிடும். குழந்தை வளர்ப்பில் முக்கியமான அம்சம் என்றால் அது ‘பொறுமைதான்’. அதனை நாம் நிச்சயம் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

“ஸ்பெஷலெல்லாம் ஏதுமில்லை”-பிரக்ஞானந்தா.

செல்லமே: தினமும் எவ்வளவு நேரம் செஸ் விளையாடுவீர்கள்?

பிரக்ஞானந்தா: சுமார் 4-5 மணி நேரம் விளையாடுவேன். இரவில் கம்ப்யூட்டரோடு செஸ் விளையாடுவேன். எனவே உறங்கச் செல்ல 11 மணிவரை ஆகிவிடும்.

அதிகாலையில் விளையாடுவீர்களா?

இல்லை. பகலிலும் இரவிலும் மட்டும்தான் விளையாடுகிறேன். நேரம் கிடைக்குபோது நானும் அக்காவும் விளையாடுவோம்.

உங்கள் பயிற்சியாளர் யார்?

முதலில் திரு.தியாகராஜன் என்பவரிடம் பயிற்சி பெற்றேன். தற்போது ஆர்.பி. ரமேஷ் என்பவரிடம் பயிற்சி பெறுகிறேன். அவரும் கிராண்ட் மாஸ்டர்தான்.

உங்கள் பள்ளி எந்த அளவுக்கு உங்களுக்கு உதவியாக இருக்கிறது?

மிகவும் உதவியாக இருக்கிறது. படிப்பு, விளையாட்டு -இரண்டுக்குமே நிறைய ஆதரவு தருகிறது.

உங்கள் பள்ளியின் நாயகன் நீங்கள்தானே?

அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் சாதாரணமானவன்தான். அங்கு நான் ஒரு மாணவன் மட்டுமே.

செஸ், அறிவாளிகளுக்கான விளையாட்டு என்கிறார்களே?

இல்லை. இது, ஆர்வமுள்ளவர்களுக்கான விளையாட்டு.

குழந்தை வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகள், கட்டுரைகளைப் படிக்க விரும்பினால் இங்கே க்ளிக் செய்யவும். Connect with us on Facebook | Twitter | Instagram | YouTube