பேரிடர் மேலாண்மையைப் படிக்கலாம்

பேரிடர் மேலாண்மையைப் படிக்கலாம்

By ஐயன் கார்த்திகேயன்

பேரிடர் மேலாண்மையைப் படிக்கலாம்

பேரிடர் மேலாண்மை... இச்சொல் நமக்குப் புதிதன்று. புயல், வெள்ளம் என அடிக்கடி சவால்களை சந்திக்கும் போதெல்லாம் பேரிடர் மேலாண்மை (Disaster Management) பற்றிய பேச்சு வரும். பேரிடர் மேலாண்மை இயற்கை பேரழிவுகளுக்கு மட்டும் அல்ல, சுற்றுச்சூழல் அவசர நிலைக்கும் பொருந்தும். 

எடுத்துக்காட்டாக.. தொழிற்சாலை விபத்து, காட்டுத்தீ, விஷவாயுப் பரவல், தற்போது வட இந்தியாவில் வேளாண்மையைப் பதம்பார்த்துவரும் வெட்டுக்கிளிகளின் தாக்குதல், உள்நாட்டுப் போர் போன்ற சூழல்களிலும் கொரொனா முதலிய பெருந்தொற்றுகள் சூழல்களிலும் தேவைப்படும் முக்கியமான விஷயம்தான் பேரிடர் மேலாண்மை .

இடரை நிர்வகிப்பதில் பொதுவான நிர்வாகம் என்பதற்கும் அவசரகால நிர்வாகம் என்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. பொதுவான நிர்வாகம் என்பது ஒரே மாதிரியான வேலை அல்லது சூழலாக இருக்கும். ஆனால், அவசரகாலம் என்பது முற்றிலும் வேறானது. அதேபோல ஒவ்வொரு அவசரகாலத்துக்கும் வெவ்வேறு வகையிலான சவால்கள் இருக்கும். ஆக, சவாலான முக்கியமான துறை இது. மேலை நாடுகளில் இது விரைவாக வளர்ந்துவரும் துறை ஆகும்.

பேரிடர் மேலாண்மை (Disaster Management) என்பது ஒரு அவசரகாலத்துக்கு நாம் எவ்வளவு தயாராக இருக்கிறோம் (Preparedness) என்பதிலிருந்து தொடங்குகிறது. பணியில் இருப்பவர்களுக்குப் பயிற்சி வழங்குதல், அவசரகால மாதிரி நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சிகள் (எடுத்துக்காட்டாக, புயலோ அல்லது பெரு வெள்ளமோ வரும் எனக் கணித்த உடன் எந்தெந்தப் பகுதிகளில் எல்லாம் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை அறிந்து அந்தப் பகுதி மக்களை வேறு எங்கு மாற்றலாம் என்பதை திட்டமிட்டு மாற்றுதல், அதேபோல் புயல், மழையால் மின்சார விபத்து ஏற்படலாம். எனவே, மின்சார சேவையை துண்டித்தல் முதலியவை) இவற்றுக்கான திட்டமிடுதல் மற்றும் தயார்படுத்துதல் ஆகியவை சேர்ந்ததுதான் முதல் கட்டம்.

உடனடியாக செய்ய வேண்டியவை

சரி, பேரிடர் சூழல் வந்து விட்டது. உடனடியாக செய்ய வேண்டியது என்ன? யார் யாருக்கெல்லாம் என்ன மாதிரியான உதவிகள் தேவை என்பதை அறிவதுதான். மருத்துவ உதவி, மீட்பு நடவடிக்கை, உணவு, தங்குமிடம் போன்றவற்றை ஒருங்கிணைப்பதும் பேரிடர் மேலாண்மையில் முக்கியமான வேலைகள்.

மீட்பு , புனரமைப்பு , உடனடியாக அடிப்படை தேவைகளான போக்குவரத்து, மின்சாரம் போன்றவற்றை சீரமைப்பது எப்படி போன்றவை மிகவும் முக்கியம். மேலும், பழைய நிலைக்கு மக்களையும் இடத்தையும் மாற்றுவதும் அவசியம். இச்சூழலில் கிட்டத்தட்ட ஒரு சூப்பர் ஹீரோபோல வேலை செய்ய வேண்டியிருக்கும். இவற்றையெல்லாம் தற்போது கல்லூரிப் படிப்பிலேயே கற்றுத்தருகின்றனர்.

எங்கு படிக்கலாம்?

துரதிஷ்டவசமாக இப்படிப்பட்ட துறை சார்ந்து கற்றுத்தரும் கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் அதிகம் இல்லை என்பதுதான் உண்மை. கொள்ளை நோயியல் (Epidemiology) குறித்து பில் கேட்ஸ் சொன்னதுதான் நினைவு வருகிறது. கொள்ளை நோய் வந்தால் நம்மை மீட்க படத்தில் வருவதைபோல கொள்ளை நோயியல் படித்த பலர் வந்து நிற்பார்கள் என கனவு காண வேண்டாம். அத்தனை நிபுணர்கள் இல்லை" என்றார். இந்த வரிகள் பேரிடர் மேலாண்மைக்கும்பொருந்தும்.

பேரிடர் மேலாண்மையைப் படிக்கலாம்

வேறு எங்கு உண்டு?

1. தில்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிஸாஸ்டர் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் (National Institute of Disaster Management) குறுகிய காலத்தில் பேரிடர் மேலாண்மைப் படிப்பை மேற்கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ 1,500 மட்டுமே. இந்தக் கல்வியை கற்கும் காலமும் 6 வாரங்கள்தான். விருப்பம் உள்ள அனைவரும் கற்றுக் கொள்ளலாம்.

(கூடுதல் தகவலுக்கு: http://www.onlinenidm.gov.in/pages/course_2.php)

2 செஞ்சிலுவைச் சங்கம் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறது. பயிற்சிக் காலம் 12 மாதங்கள்வரை.

(கூடுதல் தகவல்களுக்கு: https://www.ifrc.org/en/get-involved/learning-education-training/certified-professional-development-courses/online-certificate-programme-in-disaster-management/)

3 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் எம்.ஏ பேரிடர் மேலாண்மை பாடப்பிரிவு இயங்கி வருகிறது.

4 இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் பேரிடர் மேலாண்மையில் ஓராண்டு பட்டயப் படிப்பு (PG Diploma) உண்டு தொலைதூரக் கல்வியாக பயில விரும்புவர்களுக்கான கட்டணம் ரூ.6,000 மட்டுமே.

5 நாகாலாந்தில் உள்ள தி குளோபல் ஓபன் யுனிவர்சிட்டி, முதுகலை அறிவியல் படிப்பில் பேரிடர் மேலாண்மையை முழு நேரப் படிப்பாக வழங்குகிறது. இதற்கான கட்டணம் ரூ.18,125.

6 மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயன்ஸில் பேரிடர் மேலாண்மை படிப்பு ( எம்.ஏ, எம்.எஸ்ஸி) உள்ளது. இதற்கான கட்டணம் ரூ.5.20 லட்சம்.

7 எம்.பி.ஏ பேரிடர் மேலாண்மை படிப்பு இந்தூரில் உள்ள தேவி அஹில்யா விஸ்வவித்யாலயா கல்லூரியில் உள்ளது. இதற்கான கட்டணம் ரூ.1.3 லட்சம்.

8 தில்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் எகாலஜி அண்ட் என்விரான்மெண்ட் நிறுவனத்தில் பேரிடர் மேலாண்மை முழு நேர படிப்பு (எம்.எஸ்ஸி) இருக்கிறது . இதற்கான கட்டணம் ரூ.18,125.

எங்கெல்லாம் வேலை கிடைக்கும்?

பேரிடர் மேலாண்மை படித்தோருக்கு இங்கெல்லாம் வாய்ப்புகள் உண்டு:

தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம்

வறட்சி மேலாண்மைத் துறைகள்

நிவாரண முகவர் காப்பீட்டு நிறுவனங்கள்

பெட்ரோலியம், சுரங்கம், ரசாயனம் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவற்றிலும் வேலை கிடைக்கும் .

வெளிநாட்டு வாய்ப்பு

ஐக்கிய நாடுகள் நிறுவனம்

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

தன்னார்வ சேவை நிறுவனங்கள் போன்றவற்றிலும் பணியாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன.