நீர்ச்சத்துக் குறைபாடு! அறியவேண்டிய தகவல்கள்

குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்தைப் பேணுவது இக்கோடை காலத்தில் மிகவும் அவசியம்.

By சு.கவிதா  • 10 min read

நீர்ச்சத்துக் குறைபாடு! அறியவேண்டிய தகவல்கள்

மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக தனித்து இயங்கத் தொடங்குகின்றனர். இதன் காரணமாக அவர்களது உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால் அதைக் கண்டறிவது என்பது உண்மையிலேயே பெற்றோருக்கு சவாலான காரியமாகவே அமைந்து விடுகிறது. எனவே, மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாடு குறித்த மிக முக்கியத் தகவல்களைப் பகிர்கிறார் சென்னயைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் சோமசுந்தரம்.

நீர்ச்சத்துக் குறைபாடு

உடலில் நீர்ச்சத்துக் குறைவதை ஆங்கிலத்தில் டீஹைட்ரேஷன் (Dehydration) என்று அழைக்கிறோம். நீர்ச்சத்துக் குறைபாடு என்றால் உடலில் உள்ள நீரின் அளவு குறைவது மட்டுமன்று. நம்முடைய உடலில் நீருடன் சேர்ந்து சோடியம், பொட்டாசியம், குளோரைடு போன்ற தாதுக்களும் சேர்ந்தே இருக்கின்றன. எனவே, உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது என்றால் அத்துடன் சேர்த்து மேற்சொன்ன தாதுக்களின் அளவுகளும் குறைக்கின்றன என்பதுதான் இதில் இருக்கக்கூடிய அறிவியல் உண்மை.

இரண்டு விதங்களில் ஏற்படலாம்

குழந்தைகள் உடலுக்குத் தேவையான நீரைப் பருகாமல் இருப்பதால் நீர்ச்சத்துக் குறைபாடு வரலாம். அதேபோல அவர்களது உடலில் இருக்கும் நீர் அதிக அளவில் வெளியேறுவதாலும் குழந்தைகளுக்கு நீர்ச்சத்துக் குறைபாடு வரலாம்.

வாந்தி மூலம்

வியர்வை மூலம்

மூன்றாவதாக வயிற்றுப்போக்கு ஏற்படும்போது அதன் வழியாக உடலில் இருக்கின்ற நீர் வெளியேறலாம்.

டயபடீஸ் மெலிட்டஸ் (Diabetes mellitus (DM)) அல்லது டயபடீஸ் இன்ஸிபிடஸ் (Diabetes insipidus) ஆகிய பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு அதிக அளவு வெளியேறும் சிறுநீரும் இந்த வழிகளில் ஒன்றாக சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இப்படி குழந்தைகள் நீர் பருகும் அளவு குறையும்போதோ அல்லது உடலிலிருந்து நீர் வெளியேறும் அளவு அதிகரிக்கும்போதோ அவர்களுக்கு நீர்ச்சத்துக் குறைபாடு பிரச்னை உண்டாகிறது.

நீர் பருகும் அளவு குறையுமா?

குழந்தைகள் சில சமயங்களில் விளையாட்டு மும்முரத்தில் தேவையான அளவு நீர் பருகாமல் இருந்துவிடுவர். இதன் காரணமாக உடலின் நீர்ச்சத்து குறையும். இது ஒருபுறம் என்றால், வைரஸ் காய்ச்சல் போன்றவற்றால் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கும்போது, குழந்தை உடலுக்குத் தேவையான அளவு நீரை பருகாது. இதன் விளைவாகவும் குழந்தைக்கு நீர்ச்சத்துக் குறைபாடு உண்டாக வாய்ப்பிருக்கிறது.

நாம் பருகும் நீர், சிறுகுடலுக்கும் பெருங்குடலுக்கும் சென்றால்தான் அதனை நம் உடலால் உறிஞ்ச முடியும். ஆனால், குழந்தைகள் வாந்தி எடுக்கும்போது குழந்தைகளின் வயிற்றுக்குள் செல்கின்ற நீர் குடலுக்குச் செல்வதற்கு முன்பே வாந்தி மூலமாக வெளியே வந்துவிடும். இதுவும் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட ஒரு முக்கியக் காரணம். அதேபோல குடலைக் கிருமிகள் தாக்கும்போது குடலால் நாம் உட்கொள்ளும் உணவுகளில் இருக்கும் நீரையும் சத்துக்களையும் உறிஞ்ச முடியாமல் போய்விடுகிறது. இதன் காரணமாக உடலில் இருக்கும் நீர்ச்சத்து வயிற்றுப்போக்கு மூலமாக வெளியேறி விடுகிறது.

மூன்று முதல் ஆறு வயதுள்ள குழந்தைகள் லேசாகக் காய்ச்சல் வந்தாலே சரியாகச் சாப்பிட மாட்டார்கள். தேவையான அளவு நீர் பருகமாட்டார்கள். எனவே இந்த வயதுக் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் பருகும் நீரின் அளவு குறைவதாலேயே நீர்ச்சத்துக் குறைபாடு உண்டாகிறது. ஆனால், ஆறுவயதுக்கு மேற்பட்ட குழந்தைகளில் பலர் இது போன்ற வைரஸ் காய்ச்சலை சமாளித்து ஓரளவுக்கேனும் உடலுக்குத் தேவையான நீர் மற்றும் உணவை உட்கொள்வதால் நீர்ச்சத்துக் குறைபாட்டால் பெரும்பாலும் பாதிக்கப்படமாட்டார்கள்.

நீர்ச்சத்துக் குறைபாடு! அறியவேண்டிய தகவல்கள்

உடல் எடையும் நீரும்

மனித உடலில் ஒவ்வொருவரின் உடல் எடைக்கு ஏற்ப அவர்களது உடலில் உள்ள நீரின் அளவும் மாறுபடும். எடுத்துக்காட்டாக 10 கிலோ எடையுள்ள குழந்தையின் உடலில் இருக்கும் நீரின் அளவுக்கும் 25 கிலோ எடையுள்ள குழந்தையின் உடலில் இருக்கும் நீரின் அளவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. 10 கிலோ எடையுள்ள குழந்தைக்கு ஐந்து முறை வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கும், 25 கிலோ எடையுள்ள குழந்தைக்கு அதே ஐந்து முறை வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கும் வித்தியாசம் உண்டு. வயிற்றுப்போக்கு ஏற்படும்போது பத்து கிலோ எடையுள்ள குழந்தைக்கு சற்று சீக்கிரமாகவே உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும். ஆனால், இந்தக் குழந்தையோடு ஒப்பிடும்போது 25 கிலோ எடையுள்ள குழந்தைக்கு அவ்வளவு சீக்கிரம் நீர்ச்சத்துக்குறைபாடு ஏற்படாது.

சோர்வு

நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும்போது குழந்தைகள் மிகவும் சோர்வாகத் தெரிவர். வைரஸ் நோய்த்தொற்று காரணமாக குழந்தைகள் சோர்வாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், உடலுக்குத் தேவையான அளவு நீர் மற்றும் உணவை உட்கொள்ளாத காரணத்தால்கூட அவர்கள் சோர்வடையலாம்.

முக்கிய அறிகுறிகள்

உதடுகள் காய்ந்துபோகும். நாவு வறண்டுபோய்க் காணப்படும். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தோல் விறைப்புத் தன்மையை இழந்து வயதானவர்களுக்கு இருப்பதுபோல தளர்வாக, தொளதொளவென்று இருக்கும். 

நான் முன்பே சொன்னதுபோல உடலின் நீர்ச்சத்து குறையும்போது, சோடியம், பொட்டாசியம், குளோரைடு போன்ற தாதுக்களின் அளவும் குறையும். இவையே நம் உடல் உறுப்புக்கள் சரிவர இயங்க மிகவும் தேவை. நம் குடல் சரியாக இயங்க பொட்டாசியம் தேவை. மூளை சரியாக இயங்க சோடியம் உப்பு தேவை. இதன் அளவு குறையும்போது மூளையின் செயல்பாடு சற்று மந்தமடையும். இதன் காரணமாகவே குழந்தைக்கு மேற்சொன்ன சோர்வு உண்டாகிறது.

குழந்தையின் சிறுநீர் வெளியேற்றத்தின் அளவு குறையும். அதையும் மீறி சிறுநீர் கழித்தால்கூட வெளியேறும் சிறுநீரில் குறைந்த அளவு நீரும், எல்லாத் தாதுக்களும் கலந்திருப்பதால் அந்தச் சிறுநீரானது அடர்மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

அதேபோல சிறுநீர் கழிக்கும்போது அவ்விடத்தில் குழந்தைகள் எரிச்சலை உணர்வார்கள்.

மேற்சொன்னவை நீர்ச்சத்து குறைபாட்டின் பொதுவான அறிகுறிகளாகத் தென்பட்டாலும், ஒவ்வொரு நீர்ச்சத்துக் குறைபாட்டின் அளவைப் பொறுத்து அதன் அறிகுறிகள் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

நீர்ச்சத்துக் குறைபாடு! அறியவேண்டிய தகவல்கள்

நீர்ச்சத்துக் குறைபாட்டின் நிலைகள்

உடலில் ஐந்து விழுக்காடு அளவுக்கு நீர்ச்சத்து குறையும்போது மிதமான அளவில் நீர்ச்சத்துக் குறைபாடு உண்டாகி மேற்சொன்ன அறிகுறிகள் குழந்தையின் உடலில் தெரிய ஆரம்பிக்கும்.

இதுவே தீவிரமான நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும்போது குழந்தைக்கு கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டு, குழந்தை உணவும் நீரும் எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் நீர்ச்சத்துக் குறைபாட்டின் அறிகுறிகளும் தீவிரமாக மாறும். நீர்ச்சத்துக் குறைபாடு கடுமையாக இருக்கும்போது ஒவ்வொரு உறுப்புக்கும் செல்லும் ரத்த ஓட்டம் குறைய ஆரம்பிக்கும். இதனை மருத்துவ உலகம் ஷாக் (shock) என்று அழைக்கிறது.

குழந்தையின் நாடித்துடிப்பு பலவீனமாக இருக்கும். எட்டு முதல் பத்துமணிநேரம் ஆனால்கூட குழந்தை சிறுநீர் கழிக்காது. சோடியம் உப்பின் அளவு குறைவதால், ரத்த அழுத்தமும் குறைந்து, குழந்தை மயக்க நிலைக்குச் சென்றுவிடும். பின்னர் மூளையின் ஒவ்வொரு பகுதியும் பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நமது இதயம் ஆரோக்கியமாக வேலை செய்ய உதவக்கூடியவை.

நீர்ச்சத்துக் குறைபாடு உண்டாக்கும்போது, இந்தத் தாதுக்களின் அளவும் குறைவதால் இதயத்தில் பாதிப்பு உண்டாகும். அதேபோல சிறுநீரகங்களுக்குச் செல்கின்ற ரத்த ஓட்டம் குறையும்போது சிறுநீரகங்கள் செயலிழக்க ஆரம்பிக்கும். குடலின் இயக்கத்துக்கு பொட்டாசியம் மிக முக்கியத் தேவையாக இருக்கிறது. ஆனால், நீர்ச்சத்துக் குறைபாடு உண்டாகி பொட்டாசியத்தின் அளவு குறையும்போது குடலின் அசைவு நின்றுவிடும். இதன் காரணமாக குடலின் அளவு பெரிதாகி வயிற்று உப்புசம் உண்டாகிவிடும்.

கல்லீரலும் கடுமையான நீர்ச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுவிடும். இப்படி உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக பழுதடைவதற்கு MULTI ORGAN FAILURE என்று பெயர்.

நீர்ச்சத்துக் குறைபாடு! அறியவேண்டிய தகவல்கள்

கைகொடுக்கும் ORS

வாந்தி, வயிற்றுப்போக்கு மட்டுமே இருந்து நீர்ச்சத்துக் குறைபாடு எதுவும் குழந்தைக்கு இல்லை என்றால் அது நோ-டீஹைட்ரேஷன் ஆகும். அதுவே குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை இருந்து கூடவே நீர்ச்சத்துக் குறைபாடும் இருந்தால், இதனுடைய அளவு மற்றும் தன்மையின் அடிப்படையில் குழந்தைக்கு வாய்வழியாக ORS (Oral Rehydration Salts) கரைசலைக் கொடுக்கலாமா அல்லது ஐவி மூலமாக திரவத்தைச் செலுத்தி குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் நீரிழப்பை சரி செய்யலாமா என்பதைத் தீர்மானித்து அதற்கேற்ற சிகிச்சைகளை மருத்துவர் வழங்குவார்.

கவனம் மிக அவசியம்!

கோடை விடுமுறைக்காலத்தில் கொளுத்தும் வெயிலில் குழந்தைகள் அதிகம் விளையாடுவர். இதன் காரணமாக அவர்களுக்கு வியர்வை பெருக்கெடுத்து ஓடும். ஆனால், நீரைக் குடிக்காமல் விளையாடிக் கொண்டே இருப்பர். ஆனால், எவ்வளவுதான் விளையாட்டில் ஈடுபாடு காட்டினாலும் அவ்வப்போது நீர் பருகி உடலை நீர்ச்சத்து குறையாமல் வைத்துக் கொள்ளவேண்டும் என்பதை குழந்தைகளுக்குப் பெற்றோர் அடிக்கடி அறிவுறுத்த வேண்டும்.

அடிக்கிற வெயிலில் குழந்தைகள் சில்லென்று பழச்சாறு அருந்தவும் மிகவும் விரும்புவார்கள். சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் முறையில் பழச்சாறுகளை வாங்கிப் பருகும் குழந்தைகள் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட நிறைய வாய்ப்பிருக்கிறது.

அதேபோல குறிப்பிட்ட சில உணவுப்பொருட்கள் குறிப்பிட்ட சீதோஷணத்தில் குளிர்சாதனப் பெட்டியில் பராமரிக்கப்பட்டு தேவையானபோது எடுத்துப் பயன்படுத்தப்படவேண்டும். ஆனால், கோடைகாலங்களில் அடிக்கடி மின்வெட்டு நிகழும் என்பதால், இந்த விஷயத்திலும் பெற்றோர் கவனமுடன் செயல்படவேண்டும்.

பிரச்சனைகள் தொடங்கும்போதே மருத்துவரின் ஆலோசனையை நாடினால் குழந்தைகளை நீர்ச்சத்துக் குறைபாட்டின் ஆரம்ப நிலையிலிருந்து மீட்டெடுத்து விடலாம்.