சிறப்பான வாழ்க்கைக்கு சி.ஏ படிப்பு

பட்டயக் கணக்கியலா? அது மிகவும் கடினமானதே?! படித்து முடிக்கவே வருடக் கணக்கில் ஆகுமே... என்று எண்ணுவோருக்கான ஒரு சிறு அறிமுகம்தான் இக்கட்டுரை.

By கா சு துரையரசு  • 6 min read

சிறப்பான வாழ்க்கைக்கு சி.ஏ படிப்பு


அந்தக் காலத்திலெல்லாம் ஆடிட்டர் படிப்பு என்ற படிப்பைப் பற்றி சிலாகித்துப் பேசுவார்கள். இளமைப்பருவத்தில் ‘அது ஒரு படிப்புபோல என்று நானும்கூட நினைத்திருந்தேன். ஆனால் அது, ‘பட்டயக் கணக்கியல் என்ற பாடத்தைக்குறிக்கிறது என்பது பின்னாட்களில்தான் தெரிந்தது. ஒரு பட்டயக் கணக்காளரின் பணியான தணிக்கையைத்தான் ஒரு படிப்பாக சொல்லிக்கொண்டிருந்தார்கள் அன்று.

பார்வை மாறட்டும்!

இன்று காலம் மாறியிருக்கிறது. சார்ட்டர்டு அக்கவுண்டன்சி எனப்படும் பட்டய கணக்கியல் என்ற சொல் நமக்குப் பரிச்சயமாகியிருக்கிறது. ஆனால், நம் பிள்ளைகளின் உயர்கல்வி என்று வரும்போது நாம் இப்படிப்பை பரிசீலிக்கத் தவறிவிடுகிறோம். மருத்துவம், பொறியியல் என்றுதான் நமது பட்டியல் தொடங்குகிறது. இனியாவது குறைந்த கல்விக்கட்டணத்தில் கிடைக்கும் அற்புதமான தொழிற்படிப்புகளின்மீது கண் வைப்போம். அந்தப் பக்குவத்துக்கு நாம் வந்துவிட்டால் நமக்கு முன்னே நிற்கும் சில வணிகவியல் சார்ந்த தொழிற்படிப்புகளில் முக்கியமானது பட்டயக் கணக்கியல் படிப்பு.

படிப்படியாக...

அறிமுக நிலை (Foundation), இடைநிலை (Intermediate), இறுதிநிலை (Final) என்று மூன்று நிலைகளாக பட்டயக் கணக்கியல் படிப்பு வழங்கப்படுகிறது. அறிமுகநிலைப் படிப்புக்கான தேர்வை பொதுத்திறன் தேர்வு (Common Proficiency Test -CPT) என்று அழைக்கிறார்கள். இத்தேர்வுகளை இந்தியப் பட்டயக் கணக்காயர் கல்வி நிறுவனம் (The Insititute of Chartered Accountants of India) நடத்துகிறது. உலகமெங்கும் உள்ள பட்டயக் கணக்காளர்/கணக்காயர் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மூலமும் தொடர் புரிந்துணர்வு மூலமும் தொடர்ச்சியாகத் தன்னைத் தரத்தில் உயர்த்திக்கொண்டே வருகிறது இவ்வமைப்பு.

செலவு குறைவு

மற்ற தொழிற்கல்விப் படிப்புகளோடு ஒப்பிடும்போது பட்டயக் கணக்காளர் படிப்புக்கான செலவு மிகவும் சொற்பம் என்றே சொல்ல வேண்டும். அறிமுக நிலைக்கு ரூ.10,000 வரையிலும் இடைநிலைப்படிப்புக்கு ரூ.20,000க்கு மிகாமலும் இறுதித்தேர்வுக்கு ரூ.22,000ஐயும் கட்டணமாக நிர்ணயித்துள்ளனர்.

வீட்டிலேயே கல்வி

இப்படிப்புக்கான கல்லூரி எங்கே இருக்கிறது என்று பலருக்கும் ஐயம் இருக்கும். ஆனால், இது முழுக்க முழுக்க தொலைநிலைக் கல்வி (distance learning) என்பதுதான் இதில் வியப்பூட்டும் செய்தி.

சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா முதலிய பெரு நகரங்களில் வசிப்போர், ஐ.சி.ஏ.ஐ அமைப்பின் மண்டல அலுவலகங்களில் நடத்தப்படும் தினசரி பயிற்சி வகுப்புகளுக்குச் (குறைந்த கட்டணம் உண்டு) சென்று பயன்பெறலாம். நாடெங்கும் இப்படிப்புக்கான தனியார் பயிற்சி மையங்கள் ஆயிரக்கணக்கில் செயல்படுகின்றன. அவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கடினமான படிப்பா?

இப்படிப்பை எல்லோராலும் படிக்க முடியாது; ‘ஐ.ஏ.எஸ் தேர்வைவிட இது கடினமான தேர்வு; ‘ஒரு பாடத்தில் தோல்வியுற்றால்கூட அனைத்துப்பாடத் தேர்வுகளையும் மொத்தமாகத் திரும்ப எழுத வேண்டும் என்றெல்லாம் பல கருத்துக்கள் இப்படிப்பைப்பற்றி சுழலுகின்றன. ஆனால், இவை எவையுமே உண்மையன்று. முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் படித்தால் முதல் முயற்சியிலேயே மூன்று தேர்வுகளையும் வென்று, பட்டயக் கணக்காளர் தொழில் செய்யலாம்.

சிறப்பான வாழ்க்கைக்கு சி.ஏ படிப்பு

நேரடிப்பயிற்சி

மூன்று தேர்வுகளையும் வெற்றிகரமாகக் கடந்தவர்கள் மூன்றாண்டு செய்முறைப்பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும். பதிவுபெற்ற பட்டயக் கணக்காளரிடம் உதவியாளராகத் தொழில் கற்க வேண்டும் (வழக்கறிஞர் தொழிலில் கடைபிடிக்கப்படுவதுபோல) என்பதே இதன் பொருள். இடைநிலைக் கல்வியின்போதே பயிற்சியில் சேரலாம். இதற்கு ரூ.2000 கட்டணம். பயிற்சிக்காலத்தில் பயிற்சியளிக்கும் பட்டயக் கணக்காளர் உதவித்தொகை (stipend ) வழங்குவார்.

கணினியில் திறன்

எந்தத் தொழிற்படிப்பாக இருந்தாலும் கணிப்பொறி அறிவும் இன்று கட்டாயத் தேவையாகிவிட்டது. பட்டயக் கணக்கியல் படிப்பும் இதற்கு விதிவிலக்கன்று. மூன்று நிலைத்தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் கணிப்பொறித்தேர்வில் (Information Technology and Orientation Program) தேர்ச்சி பெறவேண்டும். இதற்கு ரூ.14,000 வரை செலவாகும்.

மென் திறன்கள்

அதேபோல வாழ்க்கைக்குத்தேவையான மென் திறன்களைக் கற்பிக்கும் 4 வாரப் பயிற்சியையும் (Advanced Integrated Course on Information Technology and Soft Skills -AICITSS) மாணவர்கள் நிறைவு செய்ய வேண்டும். மேலே கண்ட அனைத்துத் தேர்வுகள், பயிற்சிகளை நிறைவு செய்தவர்கள் இந்தியப் பட்டயக் கணக்காளர் அமைப்பில் பதிவெண் பெற்று தொழில் செய்யலாம்.

என்ன பெற்றோரே, இப்படிப்பை உங்கள் பிள்ளையின் எதிர்கால உயர்கல்வி திட்டமிடலுக்கான பரிசீலனைக்குள் கொண்டுவந்துவிட்டீர்களா? ரொம்ப நல்லது. அதற்கு முன்பாக https://www.icai.org/

என்ற இணையதளத்துக்குள் சென்று தற்போதைய கட்டணம், வாய்ப்புகள் குறித்து கூடுதல் விபரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள். 


More For You

More for you

We are unable to find the articles you are looking for.