குழந்தையும் பெற்றோரும் அறிந்திருக்க வேண்டிய சட்டங்கள்

குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்துப் பெற்றோர் அவசியம் அறிந்திருக்க வேண்டும். அவை குறித்த அடிப்படையான விஷயங்களைப் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம்.

By கா. சு. துரையரசு

குழந்தையும் பெற்றோரும் அறிந்திருக்க வேண்டிய சட்டங்கள்

தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு கொஞ்சம் திகைப்பு ஏற்பட்டிருக்கும். சட்டத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்தான். ஆனால் அதற்கு ஒரு வயது இருக்கிறதே! எதற்காக குழந்தைகளுக்கு

சட்டத்தைப்பற்றித் தெரிய வேண்டும்? இதுதானே உங்களது ஐயம்?

‘அட, குழந்தைகளை விடுங்கள்... பெரியவர்கள் பலருக்கே இன்னும் பல அடிப்படையான சட்ட நுணுக்கங்கள் பற்றி தெரியவில்லையே! என்பது வேறு விஷயம். ஆனால் சட்டத்தைப்பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டியது அவசியம்.

‘சட்டத்தைப்பற்றிய அறியாமைக்கு மன்னிப்பு கிடையாது என்கிற பழைய பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? திருடினால் சிறை தண்டனை கிடைக்கும் என்று எனக்குத் தெரியாது. எனவேதான் திருடி விட்டேன்" என்று ஒருவர் சொன்னால் சட்டம் அதை ஏற்றுக் கொள்ளுமா? ஏற்றுக்கொள்ளாது. ஏனென்றால் சட்டத்தைப் பற்றிய அடிப்படை அறிவு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த அடிப்படையில் இவை எல்லாம் எதிர்பார்க்கப்படுகின்றன?

சட்டங்களை எழுதியோர் மனம் போன போக்கில் எதனையும் சட்டமாக வடித்து வைக்கவில்லை. மாறாக பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்கள், நமது கலாச்சார பழக்க வழக்கங்கள், பொது நீதி ஆகியவற்றையெல்லாம் யோசித்துத்தான் சட்டங்களை வடித்தனர்.

பாரம்பரிய பழக்க வழக்கமாக இருந்தாலும் அவை அறிவுக்கு ஒவ்வாமல் இருந்திருந்தால் அவற்றை நீக்கினர். சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் உயிரினங்களையும் சூழலையும் கருத்தில் கொண்டே பொது நீதியை மையமாகக் கொண்டு சட்டங்கள் இயற்றப்பட்டன. அதனால்தான் பொது நீதிக்குப் பயந்து நீங்கள் நடந்தாலே பெரும்பாலும் சட்டத்துக்கு உட்பட்டு நடப்பவர் ஆகிவிடுவீர்கள். அவற்றை மீறும்போது நீங்கள் செய்ததை சட்டவிரோதம் என்றும் சட்டம் சொல்லி விடுகிறது" என்கிறார் வழக்குரைஞரும் குளோபல் லா பவுண்டேஷன் என்ற அமைப்பின் நிறுவனர்- தலைவருமான திரு.சரவண அரவிந்த்.

மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருவோம். பெரியவர்கள் சட்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது சரிதான். ஆனால் குழந்தைகளுக்குச் சட்டம் குறித்த அறிவு தேவைதானா?

உங்கள் கேள்வி சரிதான். குழந்தை வளர்ப்பு என்பது நமது வீட்டுக்குள் மட்டும் நடக்கிற விஷயமில்லையே! அதில் சமூகமும் சம்பந்தப்பட்டிருக்கிறதே! நாம் காலாகாலத்துக்கும் குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருப்பதில்லை. பிள்ளைகள் தங்களது பதின்பருவத்தை முடிக்கும்போதிலிருந்தே (18 வயது) ஓரளவுக்கு அவர்கள் சுயமாக முடிவெடுக்கும் தகுதியை சட்டப்படியாகவும் உடல் ரீதியாகவும் பெற்றுவிடுகின்றனர். 

ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் (முன் பதின் பருவம், பதின் பருவம்) நாம்தான் குழந்தைகளை அடிப்படையான சட்ட விழிப்புணர்வுடன் வளர்க்க வேண்டும். சட்டத்துக்குட்பட்டு நடக்கும் குடிமகனை/ளை சமூகத்துக்குத் தர வேண்டியதும் நமது கடமைதானே! அதற்கு அடிப்படையான சில சட்டங்களைத் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவற்றுள் சில இங்கே...

மோட்டார் வாகனச் சட்டம்

இச்சட்டத்தின்படி 18 வயதுக்குக் குறைவான குழந்தைகள் வாகனங்களை ஓட்டக்கூடாது. 18 வயதைக் கடந்தவர்களுக்கே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. என்னதான் நமது குழந்தை சிறந்த முறையில் வாகனம் ஓட்டுவதாக நாம் நினைத்தாலும் ஒரு விபத்து என்று வந்து விடும் பொழுது குழந்தைகளால் அச்சூழலை சமாளிக்கவும் தவிர்க்கவும் தெரியாது. அவர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கு விளைவித்துக் கொள்வதுடன் மற்றவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும். எனவேதான் சட்டப்படியான வயது வலியுறுத்தப்படுகிறது.

எனவே பெற்றோர் குழந்தைகளை எக்காரணத்தைக் கொண்டும் மோட்டார் வாகனங்களை இயக்க அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு குழந்தைகள் வாகனம் ஓட்டுவது தெரியவந்தால் மோட்டார் வாகன சட்டம் 181 ஆவது பிரிவின்கீழ் ரூ.500 அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறை தண்டனை ஆகியவை கிடைக்கக்கூடும். குழந்தைகளை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோருக்கும் தண்டனை உண்டு. இது தவிர, குழந்தைகள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் அதனால் பாதிக்கப்படுவோருக்கு நட்ட ஈடு பெற்றுத் தருவதற்கான வழக்குகளில் நமக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.

அந்தரங்க உரிமையைக் காக்கும் சட்டங்கள்

இப்போது அடிக்கடி ‘குழந்தைகளைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியவர் கைது என்பனபோன்ற செய்திகளை பார்க்கிறோம். அப்படிப்பட்ட சூழலில் குழந்தைகள் அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் சட்டங்கள் குறித்த புரிதல் பெற்றோருக்குத் தேவை. அதேபோல நம் குழந்தைகளுக்கு சட்டத்தின் பிரிவுகள் குறித்து நுணுக்கமாக விளக்காமல் சட்டம் என்ன சொல்கிறது?; என்னென்ன விஷயங்களை செய்யக்கூடாது, எவையெல்லாம் குற்றம், என்ன தண்டனை? என்பனவற்றை சுருக்கமாகச்சொல்லி வைக்கலாம்.

குழந்தையிடம் யாரேனும் அத்துமீறினால் குழந்தை எப்படி நடந்துகொள்ள வேண்டும்?; எப்படி அவர்கள் தப்பிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லித் தருகிறோம் அல்லவா! அத்தோடு ‘தனக்கு இது குறித்துத் தெரியும் எனவும் காவல்துறை இதற்கு எப்படிப்பட்ட தண்டனை தருவார்கள் என்று தெரியும் எனவும் குழந்தை சொன்னாலே குற்றவாளி தலை தெறிக்க ஓடி விடுவான்.

அந்த வகையில் போக்ஸோ சட்டம் குறித்து நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம் ஆகிறது. இச்சட்டத்தின் 3 மற்றும் 4 வது பிரிவின்படி குழந்தைகளை பாலியல் துன்புறுத்துதல் கடுங்குற்றம். அச்செயலில் குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர் ஆசிரியர் போன்றோரும் ஈடுபட்டால் தண்டனை இன்னும் அதிகரிக்கும் (10 ஆண்டுகள் சிறை). ஆபாசப் படங்களைக் காண்பித்து குழந்தைகளின் மனதை மாற்றுவதும் குற்றமே. அதில் ஈடுபடுவோர், குழந்தையின் பெற்றோர், பாதுகாவலர், ஆசிரியர், காவல் துறை அலுவலராக இருப்பின் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

சுற்றுச்சூழல், வனச் சட்டங்கள்

குழந்தைகள் இயற்கையை விரும்பும் இதயத்தை இயல்பிலேயே கொண்டவர்கள். அதனால் இயற்கையை நேசிக்க நாம் மெனெக்கெட்டு சொல்லித்தரவேண்டியதில்லை. ஆனால் எவையெல்லாம் இயற்கையை அழிக்கின்றன என்பதைக்குறித்து நிச்சயம் சொல்லித்தான் ஆக வேண்டும். இந்திய வனச்சட்டம், வனப் பாதுகாப்புச் சட்டம் வனவுயிர்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை காடுகள், வன உயிர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம், அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகளைச் சொல்கின்றன. அவற்றைப்பற்றிய அடிப்படை அறிவை நாம் சேகரித்துக்கொண்டு எளிய முறையில் அவை குறித்த விபரங்களைக் குழந்தைகளுக்கு நாம் விளக்க வேண்டும்.

அதேபோல சுற்றுச்சூழல் சீர்கேடு என்பது முக முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. மாசுக்கட்டுப்பாடு தொடர்பான அடிப்படையான விஷயங்களை நம் பிள்ளைகளிடம் அவ்வப்போது விவாதிப்பது பலன் தரும். மேலும் நம் இருப்பிடத்தை எப்படித் தூய்மையாக வைத்துக்கொள்வது?; மறுசுழற்சி, மறுபயன்பாடு ஆகியவை ஏன் சிறந்த தத்துவங்கள்?; எவையெல்லாம் எவ்வகையான மாசுபாடுகளை ஏற்படுத்துகின்றன?; அவை எவ்வாறு சட்டப்படி தவறு?- என்பன முதலான விஷயங்களைக் குழந்தைகளுக்கு எளிய முறையில் கற்றுத்தரலாம்.