உங்க குழந்தையின் கோபத்தைக் கையாள சூப்பர் டிப்ஸ்!

இன்றைய குழந்தைகளுக்கு எளிதில் கோபம் வந்துவிடுகிறது. இதனை எப்படிப் புரிந்துகொள்வது? எப்படி சமாளிப்பது?

By நளினி சந்திரசேகரன்

உங்க குழந்தையின் கோபத்தைக் கையாள சூப்பர் டிப்ஸ்!

தற்போதைய சூழலில் மிகச் சிறிய வயது குழந்தைகூட, இன்று கோபம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தத்தொடங்கிவிட்டது. 

தனக்கு விருப்பமில்லாத விஷயத்தை பெற்றோர் புகுத்தும்போதோ, சாப்பிட, தூங்க, படிக்க தன்னை வற்புறுத்துவதுபோல உணரும்போதோ, தன்னுடைய விருப்பம் நிறைவேறாமல் போனாலோ அல்லது தாமதமானாலும்கூட, இன்றைய குழந்தைகளுக்கு சட்டென கோபம் வந்துவிடுகிறது. 

அதீத அளவில் அழுது புரண்டு, கத்தி, சில சமயங்களில் கையில் உள்ள பொருட்களைப் போட்டு உடைத்தும் அது தனது கோபத்தை வெளிப்படுத்துகிறது. இது குழந்தைகளின் அப்போதைய திருப்தி இல்லாத மனநிலையைக் காட்டினாலும், ’குழந்தைதானே, செய்துவிட்டு போகட்டும்’ என்று விட்டுவிடக் கூடாது. இது கவனித்து மாற்றவேண்டிய ஒரு குணாதிசயம்.

இங்கு நாம் கோபத்தின் வகைகளையும், ஏன் கோபம் வருகிறது என்பதற்கான மூல காரணங்களையும், கோபமான மனநிலையில் உள்ள குழந்தைகளை எவ்வாறு கையாளலாம் மற்றும் இதற்கான நிரந்தரத் தீர்வுகள் என்னென்ன என்பதையும் பார்க்கலாம்.

கோபமும் காரணமும்: காரணமுள்ள கோபம் மட்டும் குழந்தைகளுக்கு வரவேண்டும் என்பதில்லை. காரணமற்ற கோபங்களும் வரலாம். குறிப்பாக, பசி அதிகமானாலும்கூட, அதுவும் கோபமாக வெளிப்படலாம். போதிய தூக்கம் இல்லாததுகூட கோபம் வர காரணமாகிறது.


இதற்கு வேதியியல் காரணம் என்று பார்க்கும்போது, உடலில் சுரக்கும் கார்டிசால் என்னும் ஹார்மோனின் அளவு அதிகமாகும்போது, குழந்தைகளுக்குக் கோபம் கூடுதலாக வரலாம். அடுத்து, பெரியவர்களைக் கண்டு அதேபோலக் கோபப்படுவதும் பெரும்பாலான குழந்தைகளிடம் காணப்படுகிறது. மன அழுத்தம் உள்ள குழந்தைகளும் கோபப்படுவர் .

வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தம்பதியினர், தங்கள் 6 வயது குழந்தை அனுவுடன் என்னைச் சந்தித்துப் பேசினர். குழந்தை சமீபகாலமாக அதிகம் கோபப்படுவதாகவும், சில கெட்ட வார்த்தைகளைக்கூட பயனபடுத்துவதாகவும் கூறி வருந்தினர்.


குழந்தைகளின் எந்த ஒரு செய்கைக்கும், கட்டாயம் ஒரு சிறு மூல காரணமாவது இருக்கும். அதேபோலத்தான் இங்கும்! அவர்கள் வாழ்க்கைமுறை பற்றி விசாரித்தேன்.


அவர், தங்கள் காதல் திருமண வாழ்க்கையில் பெரிய விரிசல் வந்ததையும், அதனால் தினம் வீட்டில் வாக்குவாதம் மற்றும் சண்டை வருவதையும்

அழுதுகொண்டே விவரித்தார். பின்னர் தயங்கியபடி தானும் தன் கணவரும் வீட்டில் குழந்தையின் முன்பு மிகக் கடுமையான வார்த்தைகளைப் பேசுவதையும் ஒப்புக்கொண்டார். ”கோபம் அதிகமாகும்போது நானும் சமயத்தில் அவரைத் திரும்ப அடித்து பொருட்களைப் போட்டு உடைத்துள்ளேன். என்னால அந்தச் சமயத்தில் என் கோபத்தை அடக்க முடிவதில்லை” என்றார். குழந்தை எங்கிருந்து கோபமான நடத்தையைக் கற்றுகொண்டது என்பது புரிந்துவிட்டது. 


பின்னர் மெல்ல அவர்கள் இருவரிடமும், குழந்தைக்கு விரும்பத்தகாத சூழ்நிலையை பெற்றோரே தந்துவிட்டதை விளக்கி, இனி அந்தத் தவறு நடக்காமல் இருப்பதற்கான வழிகளை கவுன்சிலிங் மூலம் விளக்கினேன்.


அடுத்த வகை என்னவென்றால், கவன ஈர்ப்புச் செயல். அதாவது, ’பெற்றோர் என்னைக் கவனிக்கத் தவறி மற்ற விஷயங்களில் (புதிதாகப் பிறந்துள்ள தம்பி தங்கை பாப்பா, ஆபீஸ் வேலை, குடும்ப வேலை) கவனம் செலுத்துகிறார்களோ’ என்று குழந்தைகள் சில ஏங்கும். அந்த ஏக்கத்தில் கத்துதல், ஏதேனும் கேட்டு அடம் பண்ணி அழுதல் போன்ற செயல்கள் மூலம் கவன ஈர்ப்பை வெளிப்படுத்துகிறது. இது ஒருவித மறைமுக கோப உணர்வு!


வீட்டில் பிறந்த முதல் பேரக் குழந்தை, முதல் பெண் குழந்தை போன்ற சென்டிமென்ட் காரணங்களால், வீட்டினர் தேவையின்றி அதிகச் செல்லம் தந்துவிடுவர். அதனால், தான் எந்நேரமும் எப்படி வேண்டுமானாலும், எதற்காக வேண்டுமானாலும் கத்தி அடம் பண்ணலாம் என்று நம்பும் குழந்தை மற்றொரு வகை.

ஒருசில குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டாலும், தனது அசௌகரியத்தை கோபத்தின் மூலம் வெளிப்படுத்தும். காயம், விளக்கமுடியாத வலி போன்றவற்றால் அவதிப்படும்போதும் கோபப்பட்டு கத்துவார்கள். இதையும் கூர்ந்து கவனித்து, புரிந்துகொண்டு பெற்றோர் செயல்படவேண்டும். எண்ண ஓட்டங்களில் சட்டென ஏற்படும் மாறுதல்களும், ஓர் ஆவேசமான நடத்தையின் மூலம் வெளிப்படும். தங்களையும் அறியாமல் கோபப்பட்டுவிட்டு, பின் மன்னிப்பு கேட்கும் குழந்தைகளும் உண்டு

கையாளும் முறைகள்...

பெற்றோர் முதலில் செய்யவேண்டியது, குழந்தையின் அந்தக் கோபத்தின் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிந்து, நிதானத்துடன் அதைச் சரி செய்யலாம்.

  • கண்டிப்பாக அவர்கள் கத்தலைக் கண்டு பதற்றமடைந்து, உடனே அவர்கள் வேண்டுவதைக் கொடுக்க வேண்டாம். இது அக்குணத்தை அதிகரிக்கவே செய்யும்.
  • குழந்தையின் தேவைகளை, விருப்பங்களை முன்கூட்டியே அறிந்து பூர்த்தி செய்யலாம்.
  • குழந்தை அடம் பண்ணி கோபத்தை வெளிப்படுத்தும்போது, நீங்களும் டென்ஷன் ஆகி கத்தி அடக்க முயல வேண்டாம். நிதானமாக அணுகுங்கள்..
  • சிறிய அளவில் எச்சரிக்கை தரலாம். இதன்மூலம் உன் தேவையை நீ பெற முடியாது என்பதுபோல!
  • நீ இவ்வாறு செய்யும் பிள்ளை இல்லையே! நீ சமத்து பாப்பாவாச்சே போன்ற எளிமையான, ஊக்கமூட்டும் பேச்சுக்கள்.
  • சட்டென்று அவர்களுக்குப் பிடித்த உணவு, டிவி ஷோ, விளாயாட்டுப் பொருட்களில் கவனத்தை திசை திருப்புதல்.
  • ’நீ இப்படிக் கோபப்பட்டு நடந்துகொள்வதால், பாரு! அம்மாவுக்குக் கவலையில தலைவலி வந்துடுச்சு. ஜுரம் வரப்போகுது, தொண்டை வலிக்குது... நானும் ஜுரத்துல படுத்துட்டா உன்னை யார் பார்த்துக்குவாங்க?’ என்று கூறி, பிள்ளைக்கு உங்கள் சிரமத்தை, தேவையைப் புரிய வைக்கலாம்.
  • ’புது தம்பிப் பாப்பா வந்தாலும், நீதான் எங்களுக்கு மிக முக்கியம்’ என்று அடிக்கடி சொல்லி, அதனை அவர்கள் மனதில் பதிய வைக்கலாம்.
  • பிள்ளை கோபப்பட்டு அழும்போது அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லதுதான்! அழுது புரள்வதைப் பார்க்க ஆள் இருக்கிறது என்ற எண்ணமே அவர்களின் அடத்தை அதிகரிக்கும்.

நிரந்தரத் தீர்வுகள் சில...


  • கோபப்பட்டால் ஏற்படும் விளைவுகளை, குழந்தை நல்ல மனநிலையில் இருக்கும்போது நிதானமாக, கலகலப்பாக விளக்கலாம்.
  • கண்டிப்பாக எந்த ஒரு பிரச்சனையையும், குழந்தையின் முன் கடுமையான வார்த்தைகள் பேசி விவாதிப்பதை அறவே விடவேண்டும்.
  • கோபத்தைக் கட்டுபடுத்த பெற்றோர் முயலும்போது, தாத்தா, பாட்டி, உறவினர் தலையீடு இருக்கக் கூடாது.
  • நான், இந்த உன் செய்கையினால் சந்தோஷமாக இல்லைீ என்பதைப் புரியவைக்க முயலுங்கள்.
  • அந்தச் செய்கையை ரசிக்கவோ ஊக்குவிக்கவோ வேண்டாம்.
  • ’இவன் கோபக்காரன், அவளுக்குக் கோபம் வந்தா அவ்வளவுதான்’ என்பன போன்ற விமர்சனங்களைத் தவிர்க்கவும்.
  • அடிப்பதோ தண்டிப்பதோ பலன் தராது.
  • அவர்களின் கோபத்தைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டாலும், நாளடைவில் அந்த ஆயுதத்தை அவர்கள் விட்டுவிட வாய்ப்புண்டு.
  • கோபித்தால் காரியம் கை கூடாது என்று அவன் / அவள் உணரட்டும்.
  • அதிகம் கோபப்படும் குழந்தைகளுக்கு மூச்சுப் பயிற்சி, யோகா போன்றவை மாற்றம் தரும். 
  • ஏதேனும் குறிப்பிட்ட வன்முறை மிகுந்த டிவி தொடர்களை, குழந்தைகள் உன்னிப்பாகப் பார்க்கிறார்களா என்பதைக் கண்காணித்து, அதிலிருந்து அவர்களை திசை திருப்பவும்.
  • சிறு வயது முதலே தன் தேவை மற்றும் குறைகளை, எதிர்பார்ப்புகளைப் பற்றி வெளியே பெற்றோரிடம் விளக்க குழந்தைகளைப் பழக்கலாம்.
  • அவர்களுடைய இதுபோன்ற தகாத செய்கைகளைப் பெரிதுபடுத்துவதை விட, அவர்களிடம் தென்படும் நல்ல குணங்களை அதிகமாகப் பாராட்டிப் பேசும்போது, நாளடைவில் கோப குணத்தை விட்டுவிடுவர்.
  • உங்கள் குழந்தைகளின் நண்பர்களையும் கண்காணிக்கலாம். அவர்களில் எவரிடமிருந்தும் கூட இந்த அதீத கோப குணம் வந்திருக்கலாம்.

திறன் மிகுந்த பெற்றோராக விளங்கிட...


  • படபடப்பான அணுகுமுறை வேண்டாம்
  • தன்னம்பிக்கை, கண்டிப்பாகப் பலன் தரும்
  • உங்கள் பாஸிட்டிவ் பிம்பம் அவசியம்
  • தளர்வாக இருங்கள்
  • அளவான கண்டிப்பும் தேவை
  • தாய் - தந்தை இருவரும் ஒரே அணுகுமுறையைப் பின்பற்றவும்

இறுதியாக இதை நினைவில் கொள்ளவும், குழந்தைகளுக்கு நாம்தான் முதல் உலகம். நம்மிடமிருந்து கற்றுக்கொள்வதுதான் நிறைய! நமது செயல்களைப் பார்த்தே, குழந்தைகள் நல்ல அல்லது தவறான விஷயத்தைக் கற்றுக்கொள்கிறார்கள்.

யோசியுங்கள். உங்களின் கையாளும் முறைகளில் மாற்று வழிகளை மேற்கொள்ளுங்கள். சந்தோஷமான குடும்பத்தை உருவாக்க முயலுங்கள்.

வாழ்த்துக்கள்!! 

குழந்தை வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகள், கட்டுரைகளைப் படிக்க விரும்பினால்   இங்கே  க்ளிக் செய்யவும். Connect with us on Facebook | Twitter | Instagram | YouTube