மழைக்கால ஒவ்வாமை

மழை மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய ஒரு நிகழ்வு என்றாலும் மழைக்காலத்தில் குழந்தைகள் நோய்களாலும் ஒவ்வாமையாலும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது.

By சு கவிதா

மழைக்காலத்தில் வழக்கமான நோய்கள் தவிர, தோல் சம்பந்தமான ஒவ்வாமை நோய்களும் குழந்தைகளிடத்தில் பரவலாக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார் குழந்தைநல மருத்துவர் சாந்தா நாராயணன். அவர் தரும் விரிவான தகவல்கள் உங்களுக்காக... மழைக்காலத்தில் குழந்தைகளை என்னென்ன நோய்கள் தாக்கக்கூடும்?

மழைக்கால ஒவ்வாமைகள்!

சிலருக்கு குளிர்ந்த காற்று, குளிர்ந்த நீர் படும்போது ஒவ்வாமை ஏற்படும். இதனை cold urticaria என்று அழைப்பார்கள். சில குழந்தைகளுக்கு இது பிறவியிலிருந்தே இருக்கும். இன்னும் சில குழந்தைகளுக்கோ இந்த ஒவ்வாமை அவர்களது 18 முதல் 25 வயதுகளில் கூடத் தோன்றலாம்.

அதேபோல குழந்தைகள் குளிர்ந்த பானங்களைக் குடிப்பதாலும் குளிர்ந்த நீரில் நீந்துவதாலும்கூட இந்த ஒவ்வாமை உண்டாகலாம்.

COLD URTICARIAL என்கிற ஒவ்வாமையின் வகைகள்

PRIMARY ACQUIRED COLD URTICARIA: இந்தவகை ஒவ்வாமையில் தோலில் தடிப்புகள் ஏற்படும். மழை, குளிர்ந்த காற்று வீசும்போதும் குளிர்ந்த நீரில் நீந்தும்போதும் இந்த ஒவ்வாமை வரலாம்.

SECONDARY ACQUIRED COLD URTICARIA: இந்த வகை ஒவ்வாமை குழந்தைகளுக்கு மிக அரிதாகவே வரும். இந்த ஒவ்வாமையும் தோலில் தடிப்புகளை ஏற்படுத்தக் கூடியதே.

REFLEX COLD URTICARIAL: இந்த வகை ஒவ்வாமை தோலின் கீழ்பகுதியில் ஏற்படும் ஒவ்வாமை ஆகும்.

FAMILIAL COLD URTICARIA: மிக அரிதாக வரும் இந்தவகை ஒவ்வாமையில் தடிப்புகள், கண் சிவந்துபோவது, காய்ச்சல், குளிர் மற்றும் மூட்டுக்களில் வலி போன்றவை உண்டாகும்.

மழைக்கால ஒவ்வாமை

ஹிஸ்டமைன் ரியாக்ஷன் ஒவ்வாமை

குளிர்ந்த நீர், குளிர்ந்த காற்று போன்றவற்றால் உண்டாகின்ற ஒவ்வாமை இது. இந்த ஒவ்வாமைக்கான காரணத்தை பொதுவாகக் கண்டுபிடிக்க இயலாது. ஆனால், சிலருக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் இந்த ஒவ்வாமை ஏற்படுவதற்குக் காரணம் என்று மருத்துவ உலகம் சொல்கிறது.

நம்முடைய உடலில் குளிர் படும்பொழுது தோலில் தடிப்புகள் ஏற்பட்டு அங்கு அரிப்பு ஏற்படும். இவை சில நிமிடங்கள் முதல் சிலநாட்கள் வரை நீடிக்கும். மனிதருக்கு மனிதர் இந்த ஒவ்வாமை மாறுபடும். சில சமயங்களில் இந்தத் தடிப்புகள் வட்டமாகவும், நீளமாகவும் கூட இருக்கும். தோலில் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடையும்போது, அதில் உள்ள திரவம் வெளியேறுவதால் மேற்சொன்ன தடிப்புகள் உண்டாகின்றன. இந்தத் தடிப்புகளை அழுத்தினால் அந்த இடத்தில உள்ள தோல் வெளிரும். சில சமயங்களில் பாதிக்கப்பட்ட தோலில் எரிச்சலும் உண்டாகும்.

இந்த ஒவ்வாமையை எவ்விதம் கண்டறிவது?

ஒவ்வாமையை கண்டுபிடிக்கும் மருத்துவர்கள் அல்லது ஒவ்வாமை சிறப்பு மருத்துவர்கள் மூலமாக இந்த ஒவ்வாமையைக் கண்டறியலாம்.

அலர்ஜிக் ரைனைடிஸ்

மூக்கின் உட்பாகத்தில் ஏற்படுகின்ற வீக்கமே அலர்ஜிக் ரைனைடிஸ் என்று அழைக்கப்படுகிறது. மகரந்தத் தூள்களாலும் நாய், பூனை, போன்றவற்றின் தோலில் உள்ள செதில்களாலும் தூசு, பாசி போன்றவற்றாலும் இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்த வகை ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு ஆஸ்துமா, கண்ணில் அரிப்பு, பிறவித் தோல் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றன.

நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலம் காற்றில் உள்ள காரணிகளால் தூண்டப்படுவதால் ஒவ்வாமை ஏற்பட்டு இதன் காரணமாக மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தும்மல், அரிப்பு, கண்களிலிருந்து நீர் வடிவது, கண்ணில் உள்ள வெண்படலம் வீங்குவது,சிவந்து போவது,கண்ணிமைகள் வீங்குதல், கண்களின் கீழ் நீர் சேர்தல், காதினுள் நீர் சேர்வது போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன.

கண்டறிவது எப்படி?

அறிகுறிகளைக் கேட்டறிவதன் மூலமாகவும் தோலில் PRICK TEST மேற்கொண்டும் இந்த ஒவ்வாமையைக் கண்டறியலாம். இந்தவகை ஒவ்வாமையானது இரண்டு வாரத்துக்கு அதிகமாகவும் இருக்கும். இந்த ஒவ்வாமையினால் உண்டாகும் சளி சாதாரண சளியிலிருந்து மாறுபட்டு இருக்கும். இதனை ஒவ்வாமை சிறப்பு மருத்துவர்கள் நுட்பமாகக் கண்டறிவர்.

மழைக்கால ஒவ்வாமை

குளிர்கால தடிப்புகள்

பொதுவாகவே குளிர்காலப் பருவம், சில தோல் சம்பந்தப்பட்ட நோய்களைத் தூண்டும் காரணியாக இருக்கும். குறிப்பாக குளிர்காலங்களில் குளிர்ந்த மற்றும் உலர் காற்றினால் தோலின் ஈரப்பதம் குறைவதால், தோலில் அரிப்பு மற்றும் தடிப்புகள் ஏற்படும். இந்த வகை ஒவ்வாமை பெரும்பாலும் கை, கால்களையே அதிகம் பாதிக்கும்.

சில சமயங்களில் உடல் முழுவதும் கூடத் தடிப்புகள் காணப்படும்.குளிர்காலத்தில் ஏற்படும் தோல் சார்ந்த மேலும் சில ஒவ்வாமைகளைப் பார்க்கலாமா...

டெர்மடிடிஸ்

தோலில் ஏற்படுகின்ற வீக்கத்தை நாம் டெர்மடிடிஸ் என்று அழைக்கிறோம். தோலில் ரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பதும் வேறு சில காரணிகள் தோலின் மீது படுவதுமே இப்பிரச்சனை வருவதற்குக் காரணமாக இருக்கிறது.

ரோசாசியா

பாக்டீரியாவால் உண்டாகும் தோல் நோய் இதுவாகும். முகம் சிவந்து போவது, பருக்கள் உருவாவது போன்றவை இதன் அறிகுறிகள்.

சொரியாசிஸ்

குளிர் மற்றும் உலர் காற்று இந்த தோல் சார்ந்த நோய்க்குக் காரணிகளாக இருக்கின்றன.

குளிர்கால எக்சீமா

குளிர்காலங்களில் குழந்தைகளைத் தாக்கும் தோல் நோய் இதுவாகும். குளிர்காலத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவதால் தோலில் மாற்றங்கள் ஏற்படும். தோல் வறண்டு செதில்கள் பிரிந்து காணப்படும். அப்படி பாதிக்கப்பட்ட தோல் பகுதியில் மிகுந்த அரிப்பு இருக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் அதிகமாக அரிக்கும். சிறிய கட்டிகள் ஏற்படும். அதை சொறியச் சொறிய புண்ணாக மாறி அதன் மேல்பகுதி வறண்டுவிடும்.

ஐந்து வயதிற்குள் இருக்கும் குழந்தைகளில் பத்தில் ஒரு குழந்தைக்கு இந்த எக்சீமா பிரச்னை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் குழந்தைகள் பருவம் அடைந்தவுடன் எக்சீமா தோல் நோய் பெரும்பாலும் சரியாகிவிடும்.

எக்சீமா வராமல் இருக்க...

சருமத்தை அதிகமாக உலரச் செய்யும் சோப்பை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

சூடான நீரில் குளிக்கக்கூடாது. ஏனென்றால் சூடான நீர் சருமத்தின் வறட்சியை இன்னும் அதிகமாக்கி அதிக பாதிப்பைத் தந்துவிடும்.

சுயமருத்துவம் செய்யாமல் மருத்துவரின் ஆலோசனை கேட்டு சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் மருந்துகளை குழந்தைக்குப் போட்டுவிடலாம்.

கம்பளி, நைலான் போன்றவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

குழந்தைகளை நிறையத் நீர் குடிக்கச் செய்யலாம். இதனால் சருமம் உலராமல் பாதுகாக்கப்படும்.

மருத்துவரின் ஆலோசனையுடன் வைட்டமின்- மாத்திரைகளைக் கொடுக்கலாம்.