ஓசையின்றி ஒரு சூழல் புரட்சி

சுற்றுச் சூழலைக் காப்பதில் பெரியவர்களுக்குத்தான் பங்கு உண்டு என்பதில்லை. குழந்தைகளுக்கும் பங்குண்டு. அதனை உணர்ந்து களத்தில் இறங்கியிருக்கும் சில நம்பிக்கை நட்சத்திரங்கள் இங்கே!

By கமலன்  • 10 min read

ஓசையின்றி ஒரு சூழல் புரட்சி

இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தும் சொல்லாக இருப்பது சுற்றுச்சூழல் மாசுதான். இதனால் ஏற்படும் இழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உலக நாடுகள் முழுவதும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகின்றன.

இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் உரையாற்றிய ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பெர்க் முக்கியத்துவம் பெறுகிறார். முதன்முறையாக 2018ல் தனது 15வது வயதில், ஸ்வீடன் பாராளுமன்றத்துக்கு வெளியே பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதன்பின், உலக அரங்கில் சூழலியல் குறித்து பல்வேறு கூட்டங்களில் அவர் உரையாற்றத் தொடங்கினார். அமெரிக்காவின் நியூயார்க்கில் 2.5 லட்சம் பேர் கலந்துகொண்ட பேரணியிலும் கலந்து கொண்டார். பருவநிலை மாற்றங்களால் உலகில் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து வெவ்வேறு விதமான தனது உரைகள் போராட்டங்கள் ஆகியவற்றால் உலகம் முழுவதும் ஆதரவைப் பெற்றிருக்கிறார்.

மேற்குலகத்தில் மட்டும்தான் என்றில்லை, நம்மூரிலும் மாணவச் செல்வங்கள் சூழலைக் காப்பதற்காக ஓசையின்றிப் பணியாற்றி வருகின்றனர். அவர்களுள் சிலரை இங்கு அறிமுகப்படுத்துகிறோம். அவ்வகையில் விருதுநகரில் அமைதியாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியில் ஒரு அமைப்பு தொடர்ந்து 3 ஆண்டுகளாக பயணித்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 14 மாநில விருதுகளைப் பெற்றுள்ளது. அந்த அமைப்பின் பெயர் ‘விருதை விழுதுகள் குழு’. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்தான்.

ஓசையின்றி ஒரு சூழல் புரட்சி

வாரத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இவர்கள் ஒரு பகுதியைத் தேர்வு செய்து மரக்கன்றுகளை நடுகின்றனர்.

இந்த குழுவைச் சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் நா.நிதின்ரேவந்தன் செல்லமேவிடம் பேசியபோது, எனக்கு பசுமையை ரொம்ப பிடிக்கும். மரங்கள் நிறைய இருந்தால்தான் பசுமையாக இருக்கும். அப்படி இருந்தால் கிளி உள்ளிட்ட நிறைய பறவைகள் வரும். அந்தப் பறவைகள் பாடுவது அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். மரம் இல்லாவிட்டால் அது எப்படி வாழ முடியும்?" என்றார் மழலை மொழி மாறாமல். 

விருதுநகரில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி தீபிகா, வேறு ஒரு கோணத்தில் நம்மிடம் பேசினார். விருதுநகர் மாவட்டம், கந்தகபூமியாகும். தூசு நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் காக்க வேண்டும் என்று எனது அப்பா துவங்கிய ‘விருதை விழுதுகள் குழு மூலம்தான் மரம் நடும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு வாரமும் தவறாமல் ஞாயிற்றுக்கிழமை வந்தால் மரம் நடுவதற்கு விருதுநகரில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்று விடுவோம். இதற்கென வாட்ஸ்அப் குழுவும் உள்ளது. நாங்கள் மொத்தம் 45 பேர். 8 பேர் கொண்ட குழுவாக பிரிந்து மரம் நட ஆரம்பிப்போம். அந்த மரத்தைப் பாதுகாக்க சுற்றி வலை அமைத்து தருகிறோம். நாங்கள் மரங்கள் நடுவதைப் பார்த்து ‘எங்கள் பகுதியில் வந்து மரக்கன்று நட்டுத் தாருங்கள் என பலர் அழைக்கின்றனர். என்னிடம் இருந்த இப்பழக்கம், இப்போது என்னுடைய கல்லூரி மாணவிகள் மூலம் அவர்கள் பகுதியிலும் பரவியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

11 ஆம் வகுப்பு படிக்கும் ஷத்திரியா கூறுகையில், சுத்தமான காற்று, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு மரங்கள்தான் மூலதனம். நாங்கள் கிராமம், கிராமமாக சென்று மரம் நடுகிறோம். இதன் மூலம் சுத்தமான காற்றால் எங்கள் மாவட்ட மக்கள் நன்றாக இருப்பர் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்கிறார்.

எட்டாம் வகுப்பு படிக்கும் ஜீவா நம்மிடம் பேசுகையில்," வேம்பு, புங்கை மரங்களை அதிகம் நடுகிறோம். வேம்பு அதிகக் குளிர்ச்சியைத் தரக்கூடிய மரம். புங்கை மரம் 100% கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சக்கூடிய தன்மை கொண்டது. இதன் மூலம் சுத்தமான காற்று கிடைக்கும். இந்தத் தொடர் பயணத்தால் எங்கள் ஊரில் பிற்காலத்தில் யார் வீட்டிலும் குளிர்சாதன வசதி இருக்காது. இயற்கைக் காற்றுக்கு அவ்வளவு மரங்கள் வந்து விட்டால், பிறகெதற்கு குளிர்சாதன வசதி?" என்கிறார்.

ஆறாம் வகுப்பு படிக்கும் கிஷோர் மரக்கன்று நடுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர். அவரிடம் ‘மரக்கன்றுகளை நட்டபின் அது வளர்ந்து விட்டதா என பார்ப்பீர்களா? எனக்கேட்டதற்கு," மரக்கன்று நடும் போதே அதைச்சுற்றி வலை அமைப்போம். குறிப்பிட்ட காலத்தில் மரக்கன்று வளரும் போது வலை தேவைப்படாது. அப்போது அதை அகற்றச் செல்வோம். பொதுவாக மரக்கன்றுகளை பராமரிக்க ஆசைப்படுபவர்கள் உள்ள பகுதியில்தான் நடுகிறோம். இதன் மூலம் தொடர்ந்து அந்த மரக்கன்றுகள் பாதுகாக்கப்படுகின்றன. அதற்கு அவர்கள் நீரும் ஊற்றுவதால் கால்நடைகளில் இருந்தும் அந்த மரங்கள் பாதுகாக்கப்படும். முதலில் 3 மாதங்கள், பிறகு 6 மாதங்கள் கழித்து நாங்கள் வைத்த மரக்கன்றுகளைப் போய் பார்ப்போம்" என்றார்.

இக்குழுவின் செயலாளர் மித்ரு நாகேந்திரன் கூறுகையில், ”ஞாயிறு அன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை மரக்கன்றுகளை நடுவோம். இதுவரை 2122 மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். அவை தற்போது 1800 மரங்களாக மாறி நிழல் வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் விருதுநகரில் பறவைகள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இந்தப் பறவைகள் உண்ட பழங்கள், விதைகள், எச்சங்கள் மூலம் ஏராளமான மரங்கள் உருவாகின்றன. எங்களுடன் சேர்ந்து பறவைகளும் இப்போது அந்த பணியை செய்து கொண்டிருக்கின்றன" என்று கூறினார்.

ஓசையின்றி ஒரு சூழல் புரட்சி

இயற்கை மீதான ஈர்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால், அதைக்காக்க வேண்டும் என்ற நினைப்பு சிலருக்குத்தான் இருக்கிறது. அப்படி சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஒரு அமைப்பினர் நிலத்தடி நீரைப் பெருக்குவதற்காக பனை மரங்களை நடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

‘நமது உரிமைப் பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரில் 5 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த அமைப்பில் 60க்கும் மேற்பட்டோர் மரம் நடுவது, மரங்களில் அறையப்பட்ட ஆணிகளை அகற்றுவது, கண்மாய்களைத் தூர்வாருவது போன்ற பணிகளில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். 1 லட்சம் மரங்களை வளர்ப்பது என்ற லட்சிய நோக்குடன் இந்த அமைப்பினர் இயங்கி வருகின்றனர். இப்பணியில் ஏராளமான மாணவ, மாணவியர் ஈடுபட்டுள்ளனர்.

மரம் நடுவதில் பெரும் ஆர்வம் காட்டும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி யாழினி கூறுகையில், பசுமையைப் பாதுகாப்பது என்ற நோக்குடன் ஒவ்வொரு வாரமும் மரக்கன்றுகளை நடுவதற்குச் செல்கிறேன். சாலையோரங்களில் மட்டுமின்றி பள்ளிகளிலும் மரக்கன்றுகளை நடுகிறோம். பள்ளி நிர்வாகம் நாங்கள் நடும் மரங்களைக் கண்ணும் கருத்துமாக பாதுகாப்பதைக் கண்டு உண்மையிலேயே எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிகம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் குழந்தைகளுக்கு பரிசும் வழங்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் மத்தியில் மரம் நடுவதில் ஆர்வம் வருகிறது" என்றார்.

ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் நவ்ரேவ் ஸ்டாலின் கூறுகையில், பனை மரங்களை கண்மாய் பகுதிகளில் நடுகிறோம். நடப்படும் விதை தலை நீட்ட ஒரு வருடமாகிறது. கடந்த 3 ஆண்டுகளாக மரக்கன்று நடப்போகிறேன். நான் நட்ட விதைகள் இப்போது செடியாக வளர்ந்துள்ளதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

கல்லூரி மாணவர் யாசித் அராபத் கூறுகையில், எங்கள் அமைப்பு இதுவரை 24 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டத்தில் 30 ஆயிரம் மரங்கள் வளர்ந்துள்ளன. காரைக்குடியில் குடிநீர் பிரச்சனை உள்ளது. பல இடங்களில் பணம் கொடுத்துதான் தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது. இந்த நிலை மாற வேண்டுமானால் நிலத்தடி நீர்மட்டம் உயர வேண்டும். அதற்கு நிறைய மரங்கள் வளர வேண்டும். இதனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடும் மரக்கன்றுகளின் எண்ணிக்கையை அதிகமாக்கி வருகிறோம்" என்றார்.

அதேபோல மதுரை மாவட்டத்தில் திருநகரில் ‘நீர்வனம், ஊர்வனம் என்ற அமைப்பு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரம் நடுதல், கண்மாய் தூர்வாரல் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. குறிப்பாக நாட்டு மரங்களான வேம்பு, புங்கை, அரசமரம், அத்தி, மந்தாரை, இயல்வாகை, மருதமரம், கொடிக்கா, ஆச்சா போன்ற மரங்களை அதிகம் நடுகின்றனர். நட்டதோடு விட்டாமல் அன்றாடம் தண்ணீர் ஊற்றி வருகின்றனர். இவர்களின் சேவையைப் பார்த்து அப்பகுதி மக்களின் தண்ணீர் வாகனத்தை வாங்கித் தந்துள்ளனர். இந்த அமைப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சாம்சன் கிருபாகரன் கூறுகையில், நாங்கள் நடும் மரங்களைக் காப்பது பெரும் சவாலாக உள்ளது. மரக்கன்றை சுற்றி வைத்துள்ள வலைகளைத் திருடிச் சென்று விடுகின்றனர். இதனால் அன்றாடம் மரக்கன்றுகளைப் பார்க்க வேண்டியதுள்ளது. வீட்டு வாசலில் சருகு விழுகின்றதே என பலர் மரத்தை வேரோடு பிடுங்கி வீசி விடுகின்றனர் என்றார்.

இவர்களும் ஞாயிற்றுக்கிழமையன்று திருநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பசுமையை துளிர்விக்கும் வேலையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். 5 வயது முதல் 60 வயது வரை உள்ள 50 பேர் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

குனிந்த தலை நிமிராமல் செல்போனுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறைக்கு மத்தியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இப்படியான பெரும் மாணவர் படை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாய் இருக்கிறது. பிறர் மகிழ்ச்சிக்காக, தங்களது விடுமுறை நாளைக்கூட தியாகம் செய்துவிட்டு நாளைய தலைமுறை களமிறங்கியிருப்பது உச்சி முகர்ந்து வாழ்த்த வேண்டிய விஷயம். நமது பிள்ளைகளுக்கும் சுட்டிக்காட்ட வேண்டிய விஷயம்.