30+ வயதுப் பெற்றோரா நீங்க? இதப் படியுங்க முதல்ல!

மத்திம வயதுப் பெற்றோரா நீங்கள்? இந்த டிப்ஸ் உங்களுக்காகத்தான்..!

By கா.சு.துரையரசு  • 7 min read

30+ வயதுப் பெற்றோரா நீங்க? 
இதப் படியுங்க முதல்ல!

கடந்த காலத்தில் பிள்ளை வளர்ப்பு குறித்து அறிவுரை சொல்வதற்கு, வீட்டுக்கு வீடு தாத்தா- பாட்டி இருந்தனர். அதனால், குழந்தை வளர்ப்பு குறித்த ஐயங்களில் தெளிவுபெறுவதற்கு, வெளி உலகை நாடவேண்டிய தேவை இருந்ததில்லை. ஆனால், நாம் இப்போது நாகரீக காலத்தில் வாழ்கிறோம் இல்லையா! அதனால், கூட்டுக்குடும்ப முறை சிதைந்து, சுருங்கிய தனிக்குடும்பமாக ஆகியிருக்கிறோம். 

இப்போதெல்லாம் குழந்தை வளர்ப்பு குறித்து, வீட்டுக்குள் ஆலோசனையோ அறிவுரையோ கிடைப்பதில்லை. மாறாக இணைய தளங்கள், மருத்துவ ஆலோசனைகள், பத்திரிகைகள் என்று வெளி உலகில் இருந்தே இவற்றைப் பெறுகிறோம். போதாத குறைக்கு குழந்தைகளுக்குத் தேவையான மருந்துகள், உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் இது தொடர்பான ஆலோசனைகளை விளம்பரங்கள் மற்றும் சிறு சிறு துண்டுப் பிரசுரங்கள் மூலம் அளிக்கின்றன.

குழந்தைகள், சிறுவர்கள் ஆகியோருக்குத் தேவையான ஆலோசனைகள் எளிதில் கிடைத்துவிடுகின்றன. இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல், அதற்கேற்ப சுறுசுறுப்பு ஆகியவை இருப்பதால், உடல்நலன் விஷயத்தில் அவர்கள் பெரிய சவாலை எளிதில் எதிர்கொள்ள நேர்வதில்லை. ஆனால், சிறு குழந்தைகளைப் பெற்றுள்ள மத்திய வயது பெற்றோர் பலரும் தங்களது உடல்நலனைப் பேணுவதில் கவனம் செலுத்துவதில்லை. இது கவலையளிக்கும் விஷயம் என்கிறார்கள் வல்லுநர்கள். மத்திம வயதுப் பெற்றோரா நீங்கள்? இந்த டிப்ஸ் உங்களுக்காகத்தான்..!

1. உங்களுக்கும் வயசாகுது பாஸ்!

நமது வாழ்க்கைமுறை மாறியிருக்கிறது என்பதை, நீங்கள் நிச்சயம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். 30-களின் தொடக்கத்தில்தானே இருக்கிறோம்... நம்மைப் பார்த்தால் எந்த நோய் அறிகுறியும் இருப்பவர் போல் இல்லையே! நமக்குத்தான் எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லையே! நாம் எதற்கு ரொம்ப அலட்டிக்கொள்ள வேண்டும்? என்றெல்லாம் நீங்கள் நினைப்பவராக இருந்தால். நிச்சயம் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். வாழ்க்கைப் பாணி சார்ந்த நோய்கள் வயது பார்த்து வருவதில்லை. பள்ளி செல்லும் சிறுவர்களுக்கும்கூட சர்க்கரை நோய் வருகிற காலம் இது!

2. என்னதான் நடக்கும், நடக்கட்டுமே..!

வாழ்க்கையை, போகிற போக்கில் அணுகிக்கொள்ளலாம் என்ற எண்ணம், பெற்றோர் பலருக்கும் இருக்கிறது. “எனக்கெல்லாம் வாழ்க்கையில் பெரிய பிடிப்பு இல்லீங்க... சேமிப்பு, முதலீடு அப்படீன்னு ஓரளவுக்குத் தயாரா வெச்சிருக்கேன். காப்பீடும் போதுமான அளவுக்கு இருக்கு. வாழ்வும் சாவும் நம்ம கையிலா இருக்கு? நான் இல்லாட்டியும் குடும்பம் தவிச்சுப் போயிடாது” என்று, தத்துவம் பேசும் பலரையும் பார்க்கிறோம். நிலையாமை என்பது வாழ்க்கையில் இருக்கிறதுதான். ஆனால், அதனையே வாழ்வதற்கான சித்தாந்தமாக எடுத்துக்கொள்ள முடியுமா என்ன? நீங்கள் இல்லாதபோது ஏற்படுகிற பொருளாதார சிக்கலைச் சமாளிக்க வேண்டுமானால், காப்பீட்டுத் தொகையும் சேமிப்பும் முதலீடும் உதவலாம். ஆனால், உங்கள் குழந்தைக்கு அன்பான அப்பா, அம்மா கிடைப்பார்களா? கொஞ்சம் யோசியுங்கள்!

3. வீழ்த்தும் உடற்பருமன்..

இன்றைய நவயுகத்தில் பலரும், அலுவலகத்தில் கணிப்பொறியின் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்களாகவே இருக்கின்றனர். தேநீர் முதல் உணவு வரை எல்லாமே, இருக்கைக்கே தேடி வந்துவிடுகிறது. இது ஒருபுறமிருக்க, பீட்ஸா, பர்கர், நொறுக்குத் தீனி, குளிர்பானங்கள் ஆகியவற்றையும் சாப்பிட்டு உடல் பெருத்துப் போகிறோம். நாமோ, ‘என் குழந்தைக்கு என் தொப்பைதான் விளையாட்டு மைதானம்’ என்று சொல்லி, பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அதிகக் கொழுப்பு, இதயத்தைப் பாதித்து மாரடைப்புக்கு வழிவகுக்கும் என்பதை மறக்கக் கூடாது. “உடல் உழைப்பின்மை, அதிகமாக உண்பது, உப்பு நிறைந்த நொறுக்குத் தீனி, அலுவலகமே கதியாகக் கிடந்து வேலை செய்வது, தொடர் மன அழுத்தம் ஆகியவற்றால் இன்றைய இளைய தலைமுறைக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வந்துவிடுகின்றன. நாட்டிலேயே தமிழகம், மகாராஷ்ட்ரா, சண்டிகர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில்தாம் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகம்” என்கிறார் சென்னை எஸ்.என்.என். மருத்துவமனையைச் சேர்ந்த சிறப்பு பொது (இதய நோய்கள்) மருத்துவர் எஸ்.என்.நரசிங்கன்.

4. உணவுப் பழக்கம்...

கேழ்வரகு, சோளம், கம்பு, தினை, சாமை, குதிரைவாலி அரிசி என்று நீளும் பாரம்பரியமான சிறுதானிய உணவு எதுவும் நமது சாப்பாட்டுத் தட்டில் இல்லை. எல்லோருமே அரிசிக்கு அடிமையாகிவிட்டோம். உடல் உழைப்பு இல்லாமல் மூளை உழைப்பை மட்டுமே செலுத்துவதாலும் மற்றும் செயற்கை குளிர்பானங்களும் நமக்கு நீரிழிவு நோயை, வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து வருகின்றன. ஒருமுறை நீரிழிவு நோய் வந்துவிட்டால், அது பல்வேறு பிரச்சனைகளையும் சேர்த்து அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறது. உடலில் ஏற்படும் சிறு காயம்கூட, ஆறுவதற்கு நாள் பிடிக்கிறது. இந்தத் தொல்லையெல்லாம் இளம்வயதில் தேவையா பெற்றோரே?! அப்பாவை சூப்பர்மேன் ஆகவும், அம்மாவை சூப்பர் ஹீரோயினாகவும் பார்க்கும் உங்கள் குழந்தையின் முன்பு, கைநிறைய மருந்து மாத்திரைகளை வைத்துக்கொண்டு சீக்காளியாகத் தோற்றம் தரவா விரும்புகிறீர்கள்?

5. விழித்திடுங்கள் பெற்றோரே!

நீண்டகாலம் உங்கள் குழந்தையோடும் குடும்பத்தோடும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால், நீங்கள் உயிரோடு இருக்க வேண்டும். அதற்கு நீங்கள், நோய் நொடியின்றி இருக்கவேண்டும். எனவே தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வதுடன், அரிசி பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு சிறு தானியங்களின் பக்கம் திரும்புவதும், ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை ஆகியவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுதலும் நலம். நீங்கள் நன்றாக இருந்தால்தான், உங்கள் செல்லங்களின் கனவை நனவாக்க முடியும் இல்லையா!