தப்பா பேசக் கூடாது செல்லம்!

இன்றைய குழந்தைகள் வெகு இயல்பாக கெட்ட வார்த்தைகள், சுடு சொற்கள், இழிவான, அவமானப்படுத்தக் கூடிய சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். இது எங்கிருந்து வருகிறது? இப்பழக்கத்தை எப்படி சரி செய்யலாம்?

By சு கவிதா  • 7 min read

தப்பா பேசக் கூடாது செல்லம்!

”நான்காம் வகுப்பு படிக்கும் எனது மகன், தேர்வு முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தான். ’எப்படி கண்ணா எழுதியிருக்கே?’ என்று கேட்டேன். ’ஐயோ! எக்ஸாம் சரியான மொக்கைமா! ஒழுங்கா எழுதல’ என்றான் கூலாக. தூக்கிவாரிப் போட்டது எனக்கு. தேர்வு கடினமாக இருந்தது என்பதை, ’மொக்கை’ என்பது போன்ற தடாலடி வார்த்தையைப் பயன்படுத்தி என் மகன் சொன்ன விதம் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், என்ன செய்ய? என் மகன் மற்றும் அவனது நண்பர்கள் வகுப்பறையில் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தித்தான் பேசிக்கொள்கிறார்கள். இதுதான் உண்மை” என்கிறார் வேலூரைச்சேர்ந்த குடும்பத் தலைவியான சுகன்யா திருமலை. சுகன்யா என்றில்லை... நிறைய அம்மாக்களுக்கு தங்கள் குழந்தையின் தினசரி வார்த்தைப் பயன்பாடு குறித்த கவலை நிறையவே இருக்கிறது.

”பள்ளி செல்லும்வரை எனது மகன் இயல்பாகத்தான் இருந்தான். ஆனால், பள்ளிக்குச் சென்றபிறகு தான் அவனது பேச்சு வழக்கு மாற ஆரம்பித்தது. ’டேய்.. கொன்னுடுவேன்!, தோடா.. பிலிம் காட்டாத!’ என்கிற ரீதியில்தான் என் மகனின் வார்த்தைகள் இருக்கின்றன” என்று வருந்துகின்றனர் பெயர் வெளியிட விரும்பாத பெற்றோர் பலர். இவர்களது கருத்தை முற்றிலும் ஆமோதிக்கிறார், சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த அமிர்தா பிரசன்னா.

தப்பா பேசக் கூடாது செல்லம்!

பின்னிடுவேன்.. ஜாக்கிரதை!

”எனது மகன் யு.கே.ஜி. படித்து வருகிறான். நாங்கள் வசிக்கும் ஃபிளாட்டில் உள்ள மற்ற குழந்தைகளோடு அவன் விளையாடும்போது, அவனிடம் புதுப் புது வார்த்தைகள் வந்து விழுவதைக் கவனித்து வருகிறேன். அதேபோல வீட்டில் அவன் பொம்மை வைத்து விளையாடும்போது பொம்மைகளிடம், ’பின்னிடுவேன்.. ஜாக்கிரதை!’ என்கிற ரீதியில் பேசிக்கொண்டு இருப்பான். ஓஹோ... இப்படித்தான் அவன் பள்ளியிலும் தனது நண்பர்களோடு பேசிக்கொண்டிருப்பான் போல என்று நான் நினைத்துக்கொள்வேன்.

’செல்லம், இது மாதிரி எல்லாம் பேசக் கூடாது. இவையெல்லாம் நல்ல வார்த்தைகள் இல்லை’ என்று அவனுக்குச் சொல்லிக் கொடுப்பேன். குழந்தைகள் வகுப்பறையில் எப்படிப் பேசிக்கொள்கிறார்கள் என்பதை அவர்கள் வீட்டில் பேசும் வார்த்தைகளை வைத்தே ஓரளவு யூகித்துவிடலாம். இதற்கு, குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டியது ரொம்பவே அவசியம்” என்கிறார் அமிர்தா.

”குழந்தைகள், வகுப்பறையில் விரும்பத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்வது இருக்கட்டும். இதுபோன்ற வார்த்தைகள் எங்கிருந்து குழந்தைகளை வந்தடைகின்றன என்பதை முதலில் உற்றுநோக்க வேண்டும்” என்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருக்கும் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஜெயசிங்.

அர்த்தமே தெரியாமல்...

”அடிப்படையில் நான் ஒரு ஆசிரியர். என்னுடைய இத்தனை வருட கால பள்ளி வாழ்க்கையில் எண்ணற்ற மாணவர்களைக் கையாண்டு வருகிறேன். வகுப்பறையில் குழந்தைகள், 'கம்மனாட்டி’ போன்ற வார்த்தைகளை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவார்கள். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இதுபோன்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்றுகூட அவர்களுக்குத் தெரியாது. ஆனால், இந்த வார்த்தைகள் குழந்தைகளால் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல. இதுபோன்ற வார்த்தைகள், அவர்களது வீட்டு உறுப்பினர்களாலோ அல்லது டி.வி போன்ற சமூக ஊடகங்களாலோ இவை அவர்களுக்குப் பரிச்சயமாகின்றன. இதைப் பார்த்தே வளரும் குழந்தைகள், மிக இயல்பாக இந்த வார்த்தைகளை வகுப்பறையில் பயன்படுத்துகின்றனர்.

வீடுதான் காரணம்

பல வீடுகளில் குழந்தைகளுக்கு முன்னால் பெற்றோர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். அப்போது அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், குழந்தைகள் மனதில் ஆழப் பதிந்துவிடுகின்றன.

’ஓ.. கோபம் வந்தால், இதுபோன்ற வார்த்தைகளைத்தான் பயன்படுத்த வேண்டும் போலிருக்கிறது’ என்று நினைக்கும் இவர்கள், வகுப்பறையில் சக மாணவரோடு கோபம் கொள்ளும்போது, தங்கள் பெற்றோரிடமிருந்து தெரிந்து வைத்துக்கொண்ட விரும்பத்தகாத வார்த்தைகளை அந்தச் சூழ்நிலையில் வெளிப்படுத்துகிறார்கள். அவை சங்கிலித் தொடர்போல ஒரு மாணவனிடம் இருந்து மற்றொரு மாணவனுக்குப் பரவுகின்றன. ஆக, பிரச்னையின் வேர் வகுப்பறை அல்ல; ஒரு குழந்தை வாழும் சூழ்நிலைதான்.

எனவே, பெற்றோர் இந்த விஷயங்களில் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். வகுப்பறையில் ஒரு மாணவன் விரும்பத்தகாத வார்த்தையைப் பயன்படுத்தினால், அந்த நேரத்தில் ஆசிரியர் அதைத் தவறு என்று கூறி, சிறுவனை நல்வழிப்படுத்த முயலலாம். ஆனால், வீடு மற்றும் தினசரி தொடர்பில் இருக்கும் பல விஷயங்கள், திரும்பத் திரும்ப நாகரீகமற்ற வார்த்தைகளைப் பேச அம்மாணவர்களைத் தூண்டினால், அவர்களைச் சரி செய்வது, எங்களுக்கு அத்தனை சுலபமாக இருக்காது” என்கிறார் ஜெயசிங்.

”நான் கிராமப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினேன். என்னுடைய பணிக்காலத்தில் பள்ளியின் வகுப்பறையில், நிறைய குழந்தைகள் தரக்குறைவான வார்த்தைகளை கூச்சம் எதுவுமின்றி தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். ஆரம்பத்தில் நானும் குழந்தைகளை அருகில் அழைத்து, அவ்வாறு பேசக் கூடாது என்று எடுத்துச் சொன்னேன். ஆனால், பிரச்னை குழந்தைகள் அல்ல; அவர்களின் பெற்றோர்தான் என்பது எனக்குப் பின்னர் புரிந்தது. அதனால் பெற்றோரை அவ்வப்போது அழைத்து, குழந்தைகளிடம் எப்படிப் பேசவேண்டும் என்பது குறித்து அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். இந்த கவுன்சலிங் பயனளித்தது. அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்தனர்” என்கிறார் ஓய்வுபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியரான ஜெயலட்சுமி.