டெங்கு காய்ச்சல்

தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையே மிரட்டிவருகிறது டெங்கு காய்ச்சல். அதிலிருந்து எப்படி நம் பிள்ளைகளைக் காப்பது என்று இங்கே பார்ப்போம்!

By செல்லமே குழு  • 8 min read

டெங்கு காய்ச்சல்

'சிறு துரும்பும் பல்குத்த உதவும்' என்ற வரிகள் நாம் அறிந்ததே! ஆனால் ஒரு சிறு புள்ளியாய் கண்ணுக்குப் புலப்படும் கொசுக்கள் செய்யும் அக்கிரமம்தான் சொல்லி மாளவில்லை. உலகில் மனித குலத்தின் பொது எதிரியாக கொசு மாறி வருகிறது. இதை நான் சொல்லவில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization - WHO) ஆய்வறிக்கையின்படி,கொசுக்களின் மூலம் பரவும் நோய்களான மலேரியா, டைபாய்டு, டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா போன்றவை மூலம் உலக அளவில் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது அந்தச் செய்தி. இப்படி பாதிக்கப்பட்ட மக்களில் இறந்தவர்கள் 10 லட்சம் பேர். டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற கொடிய நோய்களைப் பரப்பும் கொசுக்களின் வகைகள் என எடுத்துக் கொண்டால் அளவு 3500 க்கும் மேற்பட்டவை. இதில் ஏடிஎஸ் என்ற கொசுதான் டெங்குவைப் பரப்பி உயிரைப் பறிக்கிறது.

நன்னீரில் உருவாகும் ஏடிஎஸ் வகை கொசு கடித்தால், முதலில் அதிகக் காய்ச்சல் வரும். அடுத்து தலைவலி, தலைசுற்றல், வாந்தி, தோல் சிவந்து போகும், மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், உடலில் ரத்தப்புள்ளிகள் தோன்றுதல், அடிமூட்டுகளில் அரிப்போ, உடல் முழுவதும் அரிப்போ ஏற்படும். கடைசியில் உயிர் போகும். இதுதான் டெங்கு.

இங்கே எல்லாம் ஜாக்கிரதை!

எந்த இடத்தில் தண்ணீர் தேங்குகிறதோ, அந்த இடத்தில் கொசுக்கள் குடிபுக ஆரம்பிக்கின்றன. குறிப்பாக மழைநீர் தேங்கும் இடத்தில் எல்லாம் கொசுக்கள் பெருக ஆரம்பிக்கும். மழைக்காலங்களில், வீட்டில் பயன்படுத்தும் பூந்தொட்டிகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள், மணி ப்ளான்ட் கொடிகள் இருக்கும் கண்ணாடிக் குடுவைகள் போன்றவற்றில் சுலபமாக நீர் தேங்கிவிடும். அதேபோல கொட்டாங்கச்சி, பயன்படுத்தாமல் போடப்படும் சைக்கிள் டியூப்கள் போன்றவற்றிலும் மழை நீர் தேங்கும். இப்படித் தேங்கும் நீரின் மேலேதான் கொசுக்கள் ஜம்மென்று தங்கி இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்துவிடுகின்றன.

வீட்டின் வெளியே மட்டுமல்ல, வீட்டின் உள்ளேயும் இதே கதைதான். முறையான விதத்தில் மூடப்படாமல், திறந்தே இருக்கும் நீர்ப் பாத்திரங்களின் மேலே கொசுக்கள் குடிபுக ஆரம்பித்துவிடும். அதனால் முடிந்த வரை மழை நீரைத் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

பொதுவாகவே கொசுக்களில், பகல் நேரத்தில் கடிப்பவை, இரவு நேரத்தில் கடிப்பவை என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. டெங்கு காய்ச்சல் என்று அழைக்கப்படும் வைரஸ் கிருமி நோய் பகல் வேளையில் கடிக்கும் கொசுக்களால் உண்டாகிறது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்த வகைக் கொசுக்கள் சுத்தமான நீரில் வசிக்கக் கூடியவை. இரவு நேரங்களில் கடிக்கும் கொசுக்களால் மலேரியா, பைலேரியா போன்ற நோய்கள் உண்டாகின்றன. இந்த இரவு நேரக் கொசுக்கள் கடிக்கும் போது அந்த இடங்களில், அரிப்பு, தடிப்பு, மற்றும் புண்கள்கூட உண்டாகலாம்.

டெங்கு

நான்கு வகையான டெங்கு வைரஸ்கள் உண்டு என்பது பலருக்கும் தெரியாத விஷயம். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான ஜுரம், உடல் வலி, சோர்வு, கண்களுக்குப் பின்னே வலி ஆகியவை அறிகுறிகளாக வெளிப்படையாகத்தெரியும். மயக்கமும் வாந்தியும் கல்லீரல் பாதிப்பினால் ஏற்படலாம். நோய் தீரும்போது அரிப்பு ஏற்படலாம்.

ஆரம்பத்தில் வெள்ளை ரத்த அணுக்கள் குறைந்துபோகலாம். பின்னர் மெல்ல மெல்ல சீராகும். ரத்த தட்டுக்கள் எண்ணிக்கையும் 10000 (150000 - 300000 இருப்பது வழக்கம்) ஆக குறைந்துபோகலாம். நான்கைந்து நாட்களில் நோய் குணமாகலாம். ரத்தத்தட்டுகள் குறைவதால், ஈறு, தோல், மலவாய் வழியாக ரத்தம் வெளியேறவும் செய்யலாம். டெங்கு காய்ச்சலுக்கு இருவகையான தடுப்பூசிகள் இருக்கின்றன. அதேபோல வருமுன் காக்கும் நடவடிக்கையாக நில வேம்பு கஷாயம் பருகுவது அதிகரித்துவருகிறது. தமிழக சுகாதாரத்துறையும் இதர தன்னார்வ அமைப்புகளும் இலவசமாகவே நில வேம்பு கஷாயத்தை மக்களிடம் விநியோகித்துவருகின்றனர். தமிழகமெங்கும் பரவலாகப் பல பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நில வேம்பு கஷாயத்தைக் கொடுக்க பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டுவருவது ஆரோக்கியமான விஷயம்.

தயாரிப்பது எப்படி?

டெங்குக் காய்ச்சலுக்கு மிகச் சிறந்த மருத்துவம் என்றால் அதற்கு சர்வரோக நிவாரணியாக சித்தவைத்தியத்தில் கொடுக்கப்படும் நிலவேம்புக் குடிநீரைச் சொல்லலாம்.

இந்த நிலவேம்புக் குடிநீரை அப்படியே குடிக்க முடியாது. அதற்கு ஒருமுறை இருக்கிறது. அது இதுதான்:

நாட்டு மருந்துக்கடைகளில் நில வேம்புப் பொடி கிடைக்கும். 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 5 கிராம் நிலவேம்பு பொடிக்கு 100 மி.லி நீர் விட்டு அது 20 மி.லியாக வற்றும் வரை நன்றாக கொதிக்கவைத்துக் கொடுக்க வேண்டும்.

12 வயதுக்கு மேற்பட்டோர் 50 கிராம் நிலவேம்பு பொடிக்கு 200 மி.லி நீர் விட்டு அது 50 மி.லியாக வற்றும் வரை நன்றாக கொதிக்கவைத்துப் பருக வேண்டும்.

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த கஷாயத்தைக் கொடுப்பதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.

வரும் முன் காப்போம்

டெங்கு காய்ச்சல்

கடந்த ஆண்டு டெங்குவால் நாடு முழுவதும் 19,704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10,289 பேர் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர இந்த ஆண்டு இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 474 பேர். கன்னியாகுமரியில் மட்டும் 1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்மக்காய்ச்சலால் 25 பேர் மரணமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 35 கிராமங்களில் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. சேலம், திருப்பூர், நாமக்கல் என இந்த டெங்கு காய்ச்சல் மளமளவென பரவி வருகிறது.

ஒரு சில இடங்களில் வைரஸ் காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சலாக மாறிவருகிறது என்கின்றனர் மருத்துவர்கள். இப்படி இந்த ஆண்டு தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பலியானோர் எண்ணிக்கையும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கேரளாவில் 29 ஆயிரத்து 969 பேர் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. தமிழக அரசும் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.