கோவில் எனும் கலை, பண்பாட்டுச் சுரங்கம்

தமிழகத்தில் அறியப்படாத அற்புதமான கோவில்களை நாம் வலம் வந்துகொண்டிருக்கிறோம். அவ்வரிசையில் இந்த மாதம் நாம் பார்க்கப் போவது தனிச்சிறப்பு வாய்ந்த இரு கோவில்களை!

By கமலன்

கோவில் எனும் கலை, பண்பாட்டுச் சுரங்கம்

பேரூர் பட்டீசுவரர் கோவில்

கோயம்புத்தூருக்கு பலமுறை சென்றிருப்பீர்கள். ஆனால், நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் பேரூரில் உள்ள தேவாரத்தில் பாடல் பெற்ற கோவிலுக்குச் சென்றிருக்கிறீர்களா? இப்போது அங்குதான் நாம் போகப் போகிறோம்.

கோவை மாநகரிலிருந்து மேற்கில் வெள்ளியங்-கிரி, சிறுவாணி செல்லும் சாலையில் 6 கிலோ மீட்டர் தொலைவில் பச்சைநாயகி அம்பாள் உடனுறை பட்டீஸ்வரர் கோவில் அமைந்துள்-ளது.

தமிழகத்தின் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இந்தக் கோவில் விளங்குகிறது. தொன்மையும் பெருமையும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய இந்தக் கோவில் கி.பி. 650க்கு முன்பே கட்டப்பட்டதாக கணக்கிடப்படுகிறது. ‘சோழன் பூர்வ பட்டயம் என்ற செப்பேடு இக்கோவிலை கரிகாலன் கட்டியதாகக் கூறுகிறது.

கோவிலின் மண்டபத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட நடராஜர் சிலை உள்ளது. மற்ற சிவாலயங்களில் ஆடும் நிலையில் உள்ள நடராஜனை நீங்கள் தரிசித்திருக்கலாம். ஆனால், இக்கோவிலில் ஆடி முடிக்கப்போகும் நிலையில் நடராஜர் உள்ளதை நீங்கள் காணமுடியும். சிதம்பரத்துக்கு அடுத்தபடியாக இங்கு திருவாதிரை திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவதால் இத்தலம் ‘மேலச்சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது.

கோவில் மண்டபத்தின் தூண்களில் அழகிய சிற்பங்களும் அதன் மேற்கூரையில் கல்லாலான சங்கிலியும் தமிழர்களின் சிற்பக்கலையின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன.

இக்கோவிலில் ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் மிகுந்த கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. கோவிலின் மேற்கூரையில் 63 நாயன்மார்களின் உருவங்களும், கோவிலின் தல வரலாற்றை கூறும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.

சதுரமான பிராகாரத்தின் உள்ளே வட்டமான கர்ப்பக்கிரகம் உள்ளது. நான்கு அடுக்குகளைக் கொண்ட விமானம், முதல் மூன்று மாடிகள் சதுரமாகவும் மேலேயுள்ள மாடி வட்டமாகவும் உள்ளன.

கோவிலின் முன் மூடு மண்டபம் உள்ளது. அதில் சோழர் காலத்துக்கே உரிய தனித்துவமான சுவர்களும், அவற்றில் அழகிய வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன. மேலும் கூரையின் உட்புறத்தில் சிறுகோவில்களும் உள்ளன.

கோவிலில் முருகப்பெருமான், விசுவநாதருக்கும் விசாலாட்சி அம்மையாருக்கும் நடுவில் மேற்கு முகமாக நின்ற கோலத்தில் பால தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கின்றார்.

கோவிலின் முன் உள்ள மண்டபத்தின் தூண்கள் பல்லவர் கால பாணியிலேயே உள்ளன. ஒருகாலின்மேல் மறுகாலை வைத்த தோற்றமுடைய இரு தூவாரபாலகர்கள் சிலைகள் நுழைவாயிலில் உள்ளன. ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இக்கோவிலில் தேவாரப் பாடல்களைப் பாடியுள்ளார்.

பிற்காலத்தில் முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சியில் இக்கோயிலில் அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு, கோயிலுக்கு அளிக்கப்பட்டது அங்குள்ள சுவர்களில் ஆவணப் படுத்தப்பட்டுள்ளது.

பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆண்டுக்கொருமுறை நாற்று நடும் விழா நடக்கிறது. படும் துன்பங்கள் ‘பனிபோல் விலகும் பட்டீஸ்வரர் திருவருளால் என்று நம்பப்படும் இக்கோவில் முக்தித் தலமாகத் திகழ்கிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

கோவிலில் பட்டி விநாயகர் சன்னிதியும், அரச மரத்தடியில் அரசம்பலவாணர் சன்னிதியும் உள்ளன. புளியமரம் மற்றும் பனைமரம் ஆகியவை கோவிலின் தல விருட்சங்களாக உள்ளன. சோழர் கால சிற்பக்கலையை அறிய கட்டாயம் இந்த கோவிலுக்குச் சென்று வரவேண்டியது அவசியம்.

எப்படிச் செல்வது?

கோயம்புத்தூரிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில்தான் பேரூர் உள்ளது. பேருந்து வசதி உள்ளது. கோயம்புத்தூரிலிருந்து தங்கிக் கொண்டு வாகனத்திலும் கோவிலுக்குச் சென்று வரலாம்.

நடை திறப்பு நேரம் :

காலை 6 மணி முதல் 12 மணி வரை

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை .

தொடர்பு எண். 91 422 260 7991

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில்

நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான தலத்துக்குத்தான் நாம் அடுத்து போகப்போகிறோம். மதுரையிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில்.

இந்த ஊருக்குச் செல்லும் போது நம்மை முன் நின்று வரவேற்பது யானையைப் போன்ற யானைமலை. இங்குள்ள பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுத்தவர். தேவர்களை ரட்சிப்பதற்காக விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்ததால் இவ்வூர், திருமோனவூர் என்றிருந்து பின்பு திருமோகூர் என்று அழைக்கப்படுகிறது.

காளமேகப்பெருமாள் கோவிலில் மந்திர எழுத்துக்களோடு காணப்படும் சக்கரத்தாழ்வார் இங்கு மட்டுமே இருக்கிறார். அனைத்து பெருமாள் கோவில்களில்போல இங்கு உள்ள பெருமாள் சிலை இல்லை. பதினாறு கைகளிலும், பதினாறு ஆயுதங்களோடு பெருமாள் வித்தியாசமாய் திருமோகூரில் காட்சி தருகிறார். அவரின் பின்புறம் யோக நரசிம்மர் காட்சி தருவதால் இப்பெருமாள் நரசிம்ம சுதர்சனம் என்று அழைக்கப்படுகிறார்.

காளமேகப்பெருமாள், மோகனவல்லித் தாயார், ஆண்டாள், கருடாழ்வார், கிருஷ்ணன், ஆழ்வார்கள், ஹனுமார், நரசிம்ஹர், சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.

இக்கோவிலையொட்டி அற்புதமான குளம் உள்ளது. பாற்கடலில் அமிர்தம் கடையும் போது அதிலிருந்து ஒரு துளி அமிர்தம் இக்கோயிலில் உள்ள குளத்தில் விழுந்ததால், இக்கோயில் குளத்துக்கு பெரிய திருப்பாற்கடல், சிறிய திருப்பாற்கடல் என்ற பெயர் உண்டானது என்று கூறப்படுகிறது.

காளமேகப்பெருமாள் கிரீடம், சங்கு, சக்கரம் ஆகியவை வெண்கற்களால் செய்து அணிவிக்கப்பட்டுள்ளது.

கோவிலில் சக்கரத்தாழ்வார் சன்னதியில், ஒரு கல்லில் சக்கரத்தாழ்வாரை சுற்றி 154 எழுத்துக்களும் 48 கடவுள் உருவங்களும் 6 வட்டங்களுள் பொறிக்கப்பட்டுள்ளன.

இக்கோவிலில் உள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர்கள் திருப்பணியாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சன்னிதி உயரமான அதிட்டானத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள கற்கோவிலாகும். தாயார் மோகனவல்லி எனப்படுகிறார்.

இக்கோவிலின் கம்பத்தடி மண்டபத்தில் ஒற்றைக்கல்லில் மிக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய சிலைகள் உள்ளன. அதில் ராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அறிதாக யாளிகளின் உருவங்களைத் தாங்கிய தூண்களும் உள்ளன.

காளமேகப் பெருமாள் முகப்புக்கு முன் உள்ள மண்டபம், மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். அக்கோவில் முன் மருது சகோதரர்களின் சிலைகள் கம்பீரமாய் காட்சி தருகின்றன. வெளிநாட்டினர் அதிகம் வந்து பார்வையிடும் வகையில் ஏராளமான சிற்பங்களைக் கொண்ட இக்கோவில் மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது

எப்படிச் செல்வது?

மதுரை எம்ஜிஆர் (மாட்டுத் தாவணி) பேருந்து நிலையத்திலிருந்தும், பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் பல நகர பேருந்துகள் திருமோகூர் கோவிலுக்குச் செல்கின்றன. மதுரையிலிருந்து ஒத்தக்கடை சென்று, அங்கிருந்து ஆட்டோவிலும் இந்த கோவிலுக்குச் செல்லலாம்.

தரிசன நேரம்

காலை 6 முதல் 11 மணி வரை . மாலை 5 மணி முதல் 8 மணி வரை. தொடர்புக்கு எண்: 098420 84866.