கொரொனா வைரஸ் குறித்து குழந்தைகளிடம் பேசுவது எப்படி?

இன்று கொரொனா வைரஸ் குறித்த செய்திகள் அனைவரிடத்திலும் ஒரு பதற்றத்தை உருவாக்கி இருக்கின்றன. இவ்வேளையில் விழிப்புணர்வைப் பரப்புவதே அவசியம்.. நம் வீட்டுக்குள் இதனை எப்படி செய்வது?

By மேக்னா சிங்கால்

கொரொனா வைரஸ் குறித்து குழந்தைகளிடம் பேசுவது எப்படி?

உங்கள் குழந்தையிடம் கொரொனா வைரஸ் குறித்து எப்படி பேசுவது என்று உங்களுக்கு கவலையாக இருக்கிறதா? நீங்கள் மட்டுமில்லை உங்களைப் போல தவிக்கும் பெற்றோர் பலருக்கு இக்கட்டுரை பலனளிக்கும்.

பல பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன என்ற அறிவிப்பு ஒரு பக்கம், கொரொனா வைரஸ் பரவுதல் மற்றும் அது தொடர்பான இறப்புகளின் தலைப்புச் செய்திகள் மற்றொரு பக்கம். இவை எல்லாமே Covid-19.அதிகரிப்பின் அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளன. சமூக ஊடகங்களிலும் இது குறித்த செய்திகள்தான் நம்மை அச்சுறுத்துகின்றன. நாம் தொலைபேசியில் யாருடனாவது தொடர்புகொள்ள முயற்சி செய்யும்போது, அங்கேயும் இந்த வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள என்னவெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற செய்தியைத்தான் முதலில் கேட்க வேண்டிய நிலை உள்ளது. இதைத் தொடர்ந்து பயணக் கட்டுப்பாடுகள், ரத்து செய்யப்பட்ட நிகழ்வுகள், அதிகப்படியான மக்கள் கூடும் நிகழ்வுகளை ஆகியவை தடை செய்யப்பட்டு வருகின்றன.

இச்சூழ்நிலையில் நம்மையும் நம் குழந்தைகளையும் பாதுகாப்பது அதில் முன்னிலை வகிக்கின்றன. அதே நேரத்தில் இச்செய்தி அவர்களுக்கு தவறான தகவலாக இருத்தல்கூடாது என்பதுடன் இது அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

கொரொனா உலகெங்கிலும் பல நாடுகளில் படிப்படியாக பரவி வருகிறது. இது குறித்து உங்கள் குழந்தையுடன் பேசித்தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை. சரி இந்த வைரஸ் குறித்து உங்கள் குழந்தையிடம் எப்படி சொல்வது? என்று அறிந்து கொள்வதற்கு முன்

• இந்த வைரஸ் எப்படிப் பரவுகிறது?

• இதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள. இதன் பரவலைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

என்பவை குறித்து முதலில் நீங்கள் முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்..அதன்பின் உங்களது கவலைகளை பட்டியலிடுங்கள்.

• என் குழந்தையை பள்ளிக்கோ அல்லது விளையாட்டு மைதானத்துக்கு அனுப்பினால் அவனுக்கு/அவளுக்கு நோய் வருமா?

• என் குடும்பம் கொரொனா வைரஸ் நோய் வருவதற்கான ஆபத்தில் உள்ளதா?

உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.

• அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

• உங்கள் குழந்தைகள் கை கழுவுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

• இயன்றவரை பயணத்தை தவிர்ப்பது பாதுகாப்பானது.

• உலக சுகாதார அமைப்பு வலைதளம் அல்லது தேசிய நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையம் போன்ற நம்பகமான வலைதளங்களிலிருந்த தகவல்களைப் பெறுங்கள்.

• மோசடி மற்றும் நோய் தொடர்பான போலி செய்திகளை கவனமுடன் தவிர்த்திடுங்கள்.

மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை:

கொரொனா வைரஸ் – மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோயை ஏற்படுத்தக்கூடியது. இந்த கொரோனா வைரஸ் ஒரு மிகப்பெரிய வைரஸ் குடும்பத்தைச் சார்ந்தது. மனிதர்களைப் பொறுத்தவரை இந்த வைரஸ் காரணமாக சுவாசக் கோளாறு முதல் சாதாரண சளித் தொல்லையில் தொடங்கி சிவியர் அக்யூட் செஸ்பரேட்டரி சிண்ட்ரோம் (Severe Acute Respiratory Syndrome(SARS)) என்ற மிகத் தீவிரமான நோயாக மாறக்கூடும். வெகு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரொனா வைரஸ்தான் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சைனாவில் வூஹானில் வெளிக்கிளம்பிய COVID-19 என்ற கொரொனா வைரஸ் நோய்க்கு காரணமாகிறது.

இன்குபேஷன்

இன்குபேஷன் காலம் என்பது கொரொனா வைரஸ் உள்நுழைந்து அதன் அறிகுறிகள் தெரியும்வரையிலுமான காலகட்டம். பெரும்பாலும் மதிப்பீடு செய்யப்பட்டவரை COVID-19ன் இன்குபேஷன் காலம் என்பது 1 முதல் 14 நாட்களுக்குள் தெரியும். பொதுவாக ஐந்து நாட்களுக்குள்ளும் தெரியவரும்.

பெருந்தொற்று 

 இது உலகளாவிய அளவில் பரவி வரும் ஒரு புதிய நோய் இதனால் மக்களில் பலர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எனினும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுவும் ஒரு மோசமான நோய்தான்.

தள்ளியே இருங்கள்

உங்கள் எதிரில் இருப்பவர் தும்மும்போதோ, இருமும்போதோ அதிலிருந்து வெளிப்படும் எச்சிலின் சிறு துளி மூலமாகக்கூட இந்த நோய் தொற்றும் அபாயம் உள்ளது. எனவே உங்களுக்கும் உங்கள் எதிரில் இருப்பவருக்கும் குறைந்தபட்சம் மூன்று அடி தூரமாவது இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம்.

கவனத்துடன் பேசுங்கள்

கொரொனா  வைரஸ் குறித்து உங்கள் குழந்தையிடம் பேசும் போது பதட்டப்படாமல் பேசுங்கள். “நீ மாஸ்க் போட்டுக் கொள்ளவில்லை என்றால் உனக்கு கொரோ வைரஸ் தொற்று ஏற்படும்“ என்று பேசும்போது உங்களுக்குள் இருக்கும் பதட்டத்தை உங்களை அறியாமல் உங்கள் குழந்தைக்குள் புகுத்துகிறீர்கள் என்றுதான் பொருள். இது தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் மட்டுமே என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் குழந்தையிடம் பேசுங்கள்.

குழந்தைக்கு என்ன தெரியும்?

நீங்களும் உங்கள் குழந்தையும் இலகுவாக இருக்கும்போது கொரோனா வைரஸ் குறித்து இயல்பாக பேசுங்கள் . ஒரு விவாதம்போல் கூட இதை பேசலாம். இன்னமும் சுவையாக இருக்கும்.

அதன்பின் உங்கள் குழந்தையிடம் எளிமையான ஒரு சில கேள்விகளைக் கேட்கலாம்

• கொரொனா ..வைரஸ் குறித்து நீ என்ன கேள்விப்பட்டிருக்கிறாய்?

• இது எப்படி பரவுகிறது என்று உனக்குத் தெரியுமா?

• பள்ளியில் என்னவெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

சற்றே பெரிய பிள்ளைகளிடம்...

• உன் நட்பு வட்டத்தில் இந்த வைரஸ் குறித்து என்ன பேசிக் கொள்கிறார்கள்?

• வலைத்தளத்தில் இந்த வைரஸ் குறித்து ஏதேனும் படித்திருக்கிறாயா?

என்பதுபோன்ற கேள்விகளைக் கேட்டு உங்கள் குழந்தைகளை பேசவிடுங்கள்.

கேள்விக்கு பதில் சொல்லுங்கள்

உங்கள் குழந்தைகள் என்ன கேள்வி கேட்டாலும் பொறுமையாக பதில் சொல்லுங்கள். அதே நேரம் தேவைக்கு அதிகமான தகவல்களையும் அவர்களுக்கு சொல்ல வேண்டாம். இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். நீங்கள் அவர்களுக்கு அளிக்கும் தகவல்கள் தெளிவானவையாக இருத்தல் அவசியம். இதுவே அவர்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

சிறு குழந்தைகளிடம் வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்களில் பலர் இந்த வைரஸின் தாக்கத்தால் நோய்வாய்பட்டிருக்கின்றனர். இதில் நல்ல செய்தி என்னவென்னால் நாம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் இந்த நோய் நம்மைத் தாக்காமல் தற்காத்துக் கொள்ளலாம். என்று சொல்லுங்கள்.

சற்றே பெரிய குழந்தைகளிடம் அதுவும் வலைதளத்தில் சர்வசாதாரமாக தகவல்களை அன்றாடம் படிக்கும் குழந்தைகள் என்றால் நிச்சயம் அவர்களை கவனமாகத்தான் கையாள வேண்டும். அவர்களது வயதுக்கு ஏற்ற, நம்பகமான, தகவல்களின் ஆதாரங்கள் எங்கு கிடைக்கும் என்பதை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுங்கள். உங்கள் குழந்தைகளின் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல இயலவில்லை என்றால் நீங்கள் இருவருமே சேர்ந்து இதற்கான பதிலை கண்டுபிடியுங்கள்.

தெளிவுபடுத்துங்கள்

உங்கள் குழந்தைக்கு கவலையோ பயமோ இருந்தால் அதைத் தெளியவைக்கவும்.

எடுத்துக்காட்டாக…

• இந்த நோய் தாக்கக்கூடிய அடுத்த ஆள் நானாக இருப்பேனோ?

• என் பெற்றோருக்கோ எனது தாத்தா, பாட்டிக்கோ இந்த நோய் வந்துவிட்டால் நான் என்ன செய்வேன்?

உங்கள் குழந்தை என்ன சொல்ல வருகிறது என்பதை காது கொடுத்து கேட்டால் அவர்களது உணர்வுகளை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

• நான் ஏன் பள்ளிக்குச் சொல்லக்கூடாது?

• நான் ஏன் வண்ண நீரால் ஹோலி பண்டிகை கொண்டாடக்கூடாது?

அவரவர் இருக்கும் சூழல், படிக்கும் பள்ளி இப்படி பலவற்றின் காரணமாக ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான கவலைகள், கேள்விகள் இருக்கவே செய்யும். ஒருவேளை உங்கள் குழந்தை தனது கவலையை, பயத்தை வெளிப்படுத்துகிறது என்றால்…

• ஓ அப்படியா இது ஒன்றுமே இல்லை. இதற்கெல்லாம் யாராவது கவலைப்படுவார்களா.

• இது சீனாவில் மட்டும்தான் நடக்கிறது.

எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது அவர்களது கவலைகளைச் சொல்ல வரும்போது அதற்கு மதிப்பளித்து கேளுங்கள்.

“எங்களில் ஒருவருக்கு நோய் வரக்கூடும் என்று நீ கவலைப்படுவதுபோல் தெரிகிறது. இது உனக்கு சற்றே பயத்தை அளிக்கிறது என்பதும் எனக்குப் புரிகிறது“ என்று சொல்வதுடன் அடுத்த உங்களது பேச்சை இப்படியாகத் தொடருங்கள்…

” நீ என்னோடு பாதுகாப்பாக இருக்கிறாய்”

”எனக்குத் தெரியும் இது உனக்கு பயமாக இருக்கிறது என்று”

”Covid-19 நோய் தொற்று என்பது அதுவும் குறிப்பாக குழந்தைகள், இளம் வயதினர் ஆகியோரைப் பொறுத்தவரை மிகவும் குறைவுதான்”

”இது சூழல் எல்லாம் வெகு சீக்கிரத்தில் முடிந்துவிடும். நீயும் உன் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிடலாம்”

” இந்த வைரஸைத் தடுப்பதற்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணிகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்”

மாஸ்க் அணிய வேண்டுமா?

மாஸ்க் அணிந்திருக்கும் படம்தான் கொரொனா வைரஸ் குறித்த செய்திகளில் மிக முக்கியமான படமாக, பரவலாக எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. எனவே உங்கள் குழந்தை “நான் மாஸ்க் அணிய வேண்டுமா?“ என்று கேட்டால் “கட்டாயம் அணியத்தான் வேண்டும். இதுவும் ஓர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றுதான்“ என்று சொல்லுங்கள்.

அடிக்கடி கை கழுவுவதோடு இந்த மாஸ்கையும் அணியும்போதுதான் இது மிகச் சிறந்த பயணளிக்கிறது. அப்படி இந்த மாஸ்கை நீங்கள் அணிகிறீர்கள் என்றால், அதை எப்படி பயன்படுத்துவது என்பதையும் முறையாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தையுடன் நேரத்தைச் செலவிடுங்கள்

பள்ளியோ விடுமுறை, வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை. வெளியில் விளையாடவும் செல்ல முடியாது. பின் குழந்தை நாள் முழுவதும் வீட்டில் என்னதான் செய்யும். உங்கள் குழந்தையுடன் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். உங்களைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கான நேரம் இது.

சற்று பெரிய குழந்தைகள் மிகவும் தனிமை படுத்தப்பட்டதுபோல் நினைப்பர். அவர்களை தொலைபேசிமூலம் நட்புவட்டத்துடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உரிய பாதுகாப்புடன் இணைய தளத்தையும் பயன்படுத்தச் சொல்லுங்கள்.

குழந்தையுடன் ஜாலியாக விளையாடக்கூடிய விஷயங்கள் என்னவெல்லாம் இருக்கின்றன என்று ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். இதில் உங்கள் குழந்தையையும் ஜோடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

பொறுப்பேற்க உதவுங்கள்

குடும்பமாக என்னவெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உங்கள் குழந்தையுடன் பேசுங்கள். இதற்கான பொறுப்பையும் உங்கள் குழந்தையிடமே கொடுங்கள்.

• கையை சோப்பு போட்டு நன்றாகக் கழுவவேண்டும்

• கண், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றைத் தொடக்கூடாது.

• தும்மும்போதும் இருமும்போதும் முழங்கையை வைத்துத் தடுத்துக் கொள்ள அவண்டும்.

• ஒருவருக்கொருவர் கைகுலுக்குவதற்கு மாறாக வணக்கம் என்று இருகைகூப்பிச் சொல்லுங்கள்.

• நீர் பருகும் பாட்டில்கள் அல்லது பாத்திரங்களை பகிர வேண்டாம்.

• உங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் வீட்டிலேயே தங்குங்கள்.

• போதுமான தூக்கம் அவசியம்.

இவை எல்லாவற்றையும் இயல்பாக பின்பற்றுதல் அவசியம். அத்துடன் யாரும் முகத்தைத் தொடக்கூடாது என்பதை குடும்பம் முழுவதுமாகவே ஒரு சவாலாக ஏற்று செயல்படுத்தலாம்.

பிறந்தநாள் பாட்டை பாடிக் கொண்டே உங்கள் குழந்தை தன் கையை கழுவ வேண்டும். அந்த பாடல் பாடி முடியும்வரை கைகழுவும் செயல் மட்டும் நிற்கவேகூடாது என்பதுதான் விஷயமே.

எந்த அளவுக்கு உங்கள் குழந்தைகளை இந்தத் திட்டத் தயாரிப்பில் நீங்கள் சேர்த்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர்களுக்கு மிகவும் நல்லது.

நேர்மறையான தகவல்கள்

நாட்டில் இந்த வைரஸ் நோய் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற என்னவெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்ட வருகின்றன என்பது குறித்து பேசுங்கள். சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த நோயாளி ஒருவர் இந்த நோயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவலையும் கூறுங்கள்.

இந்த வைரஸ் நோய் காரணமாக நீங்கள் வீட்டில் என்ன நடவடிக்கை எடுத்திருந்தாலும் குழந்தைகளுக்குச் சூழலைச் சொல்லிப் புரியவையுங்கள்.

இப்போது இருக்கும் இச்சூழலை சற்றே பயப்படக்கூடிய அளவுக்கு கொண்டு சென்றுவிட்டவை சமூக ஊடகங்கள். ஆனால் நீங்கள் பயப்படத் தேவையில்லை. முன்னெச்சரிக்கையாக இருந்தால் மட்டும் போதும். எதுவானாலும் குழந்தைகளுக்குச் சொல்லிப் புரிய வைக்கவும்.

(தமிழில் – சுகுணா ஸ்ரீனிவாசன்)