கொரொனா பதற்றத்தில் இருந்து பிள்ளைகளைக் காக்க…

கொரொனா பீதி, படபடப்பில் இருக்கும் குழந்தைகளை அமைதிப்படுத்த நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

By நளினா ராமலஷ்மி

கொரொனா பதற்றத்தில் இருந்து பிள்ளைகளைக் காக்க…

இன்று எங்கு பார்த்தாலும் கொரொனா வைரஸ் குறித்த பேச்சு, பயம், பதற்றத்தைத்தான் நாம் பார்க்கிறோம். சமூக ஊடகங்கள் நண்பர்களுடன் அரட்டை என்று எல்லாவற்றிலும் இந்நோய் எந்தளவுக்கு பரவுகிறது?; எப்படியெல்லாம் பள்ளிகள், திரையரங்குகள், உணவகங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்படுகின்றன என்பதுதான் பேச்சாக இருக்கிறது. அதனால்தான் இந்நோய் தங்களையோ அல்லது தங்களின் அன்புக்குரியவர்களையோ தாக்கி விடுமோ என்ற அச்சம் குழந்தைகள் பீடிக்கிறது..

பதற்றத்தைப் புரிந்துகொள்வோம்:

இப்போது ஒரு அச்சுறுத்தல் இருக்கிறதோ (அல்லது இருப்பதாக நினைத்துக்கொள்கிறோமோ) உடனடியாக நமது மூளை நம்மை தற்காத்துக் கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கி விடுகிறது. அதேநேரத்தில் உணர்வுகள் மேலோங்கி தெளிவாக சிந்திப்பதையும் தடை செய்து விடுகின்றன. எனவே அச்சத்தில் இருக்கும் ஒரு குழந்தையிடம் காரண-காரியங்களை விளக்கிப் பேசிக் கொண்டிருப்பதால் பயனில்லை.

நேரங்களில் பெற்றோராகிய நாமே குழந்தைகளை அதீதமாக பயமுறுத்திவிடுகிறோம். “ஜாக்கிரதையாக இரு; கைகளைக் கழுவிக் கொண்டே இரு; இதைத்தொடாதே!; அதைத் தொடாதே,; நோய்த்தொற்று வந்துவிடும் வெளியே போகாதே, வைரஸ் தொற்றி கொண்டு விடும்” என்றெல்லாம் சொல்லுகிறோம். ஆனால் உண்மையில் உங்கள் குழந்தைக்கு தேவை ஒரு பாதுகாப்பு உணர்வும் அரவணைப்பும்தான்.

உங்களுக்குள் அச்சமா?

முதலில் இந்த நோய் தொற்று தொடர்பான உங்கள் அச்சத்தைக் களை எடுங்கள். வயிறு தொடர்பான நம்பகமான தகவல்களை மட்டும் நீங்கள் சார்ந்து இருக்கலாம். உங்களை அச்சமூட்டக்கூடிய விஷயங்கள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுங்கள். அவற்றைக் களைவதற்கான வழிகளையும் பட்டியலிட்டு, சரி செய்யலாம் . அவ்வாறு செய்தால், நிலைமை கையாளத்தகுந்ததுதான் என்ற முடிவுக்கு வருவீர்கள். பயமும் பறந்தோடும்.

அச்சப்படும் குழந்தையிடம் என்ன சொல்ல வேண்டும்?

கொவிட்-19 வைரஸ் தொற்று விஷயத்தில் அச்சத்துடன் இருக்கும் குழந்தையிடம் கீழ்க்காணும் அறிகுறிகளை நீங்கள் காணலாம்”

*அதிக முன் ஜாக்கிரதை உணர்வு

*அடிக்கடி கைகளைக் கழுவிக்கொண்டே இருப்பது

*மக்களைக் கண்டு பயப்படுவது

* வைரஸ் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது

* சிறிய தும்மல் அல்லது இருமல் வந்தால்கூட பதற்றமடைவது

* தாங்கள் தெரிந்துகொண்ட விஷயங்களை உறுதிப்படுத்துவதற்காக தொடர்ந்து கேள்விகளை எழுப்புவது

இவையும் இருக்கக்கூடும்…

• வேகமாக மூச்சு விடுவது அல்லது சுவாசிப்பதில் பிரச்சனை

• இதயத்துடிப்பு அதிகரிப்பது

• பாதங்களில் வியர்ப்பது

• குமட்டல்

• தலைவலி, வயிற்றுவலி

• கைகள் பரபரத்தல்

• பெற்றோரையே ஒட்டிக்கொண்டு உலவுவது (Clingy)

• திடீர் அழுகை, ஆத்திரம்

• உறங்கச் செல்வதில் பிரச்சனை/நிலைகொள்ளாமை

• கெட்ட கனவுகள்

• படுக்கையில் சிறுநீர் கழிக்கத் தொடங்குவது

• இயல்புக்கு மாறான மற்ற தொந்தரவுகள்

மேற்கண்ட அறிகுறிகளை நீங்கள் உங்கள் குழந்தையிடத்தில் காண நேர்ந்தால் உங்கள் குழந்தை அச்சத்தில் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு, அவர்களுக்கு உதவ முடியும்.

எச்சரிக்கை: குழந்தைகள் பதற்றத்தின் உச்சத்தில் இருந்தால் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. அவர்களுக்கு சுவாசிப்பதில் பிரச்சனை, தங்கள் உடல் மீதான கட்டுப்பாட்டை இழப்பது ஆகிய சவால்களை சந்திக்கக்கூடும். இது உங்கள் குழந்தையின் பள்ளி செல்லுதல் உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டால் தொழில்முறை உளவியல் ஆலோசகரின் உதவியை நாடுங்கள்.

பதற்றத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு எப்படி உதவலாம்?

பயம், பதற்றம் தொற்றிய குழந்தைகளை அவற்றிலிருந்து மீட்க உங்கள் ஆதரவும் புரிதலும் ரொம்பவே கைகொடுக்கும்.

குழந்தைகளை ஆற்றுப்படுத்த 10 டிப்ஸ்

• உங்கள் குழந்தை பயத்திலும் பதற்றத்திலும் இருப்பதைப் புறக்கணிக்காதீர்கள். உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். “முட்டாள்தனமாக இதற்கெல்லாம் பயப்படாதே” என்று பொத்தாம்பொதுவாக சமாதானப்படுத்த முயலாதீர்கள்.

• ”நீ அச்சத்தில் இருப்பது எனக்குத் தெரியும். என்னால் உன் கவலையைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று சொல்லுங்கள்.

• எதனால் அவர்களுக்கு கொரொனா குறித்த கவலை ஏற்படுகிறது என்று கேளுங்கள்.

• ‘ஒருவேளை இப்படி நடந்துவிட்டால்?’ என்பதே பிள்ளைகளை அச்சுறுத்தும் ஐயமாக இருக்கிறது. ‘எனக்கு அந்த வைரஸ் தொற்றிவிட்டால்?;பாட்டிக்கு இந்நோய் வந்துவிட்டால்?; அவர் இறந்துவிடுவாரா?; ஒருவேளை மளிகைக்கடையில் எல்லா உணவுப்பொருட்களும் தீர்ந்துவிட்டால்…? ; ஒருவேளை என்னை தனிமைப்படுத்திவிட்டால் எப்படி பெற்றோரைச் சந்திப்பது?....’ என்று அது ஒரு பெரிய பட்டியலாக நீளும்.

• ’ஏதாவது ஒரு மோசமான சூழல் ஏற்பட்டால் நீ என்ன செய்வாய்?’ என்று கேட்கலாம். எந்த அளவுக்கு உங்கள் பிள்ளை அதீதமாக அஞ்சுகிறது என்பதை இதன்மூலம் நீங்களும் அவர்களுமே புரிந்துகொள்ள முடியும்.

• ‘நீ ஒரு சரியான பயந்தாங்குள்ளி’ என்று முத்திரை குத்திவிடவே வேண்டாம்.

• உங்கள் குழந்தையின் எல்லாவிதமான கேள்விகளுக்கும் வயதுக்கேற்ப உண்மைத் தகவல்களுடன் விடையளியுங்கள்.

• நிதானமாக சுவாசிப்பது உள்ளிட்ட ஆற்றுப்படுத்தும் யோசனைகளை நடைமுறைப்படுத்தலாம். குறைந்தபட்சம் 5 தடவைகளாவது இவ்வாறு செய்யவைத்து, கண்காணிக்கலாம்.

• உங்கள் மகன்/மகளுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வதுபோல கற்பனை செய்யச் சொல்லலாம். அதேபோல அவன்/அவளுக்கு தைரியமூட்டும் நூல்களைப் படிக்கச் செய்யலாம்.

• அவன்/அவளுடன் சேர்ந்து விளையாடுவது, அவர்களுக்குப் பிடித்த இதர செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது, அரட்டை அடிப்பது என்று இணைந்திருங்கள்.அ

• அச்சமுற்ற குழந்தையிடம் சொல்லக்கூடாத 5 விஷயங்கள்

• ’கவலைப்படாதே….சரியாயிடும்’

• ’இதில் கவலைப்பட ஏதுமில்லை’

• ’எதற்காவது கவலைப்பட்டுக்கொண்டே இருப்பதுதான் உனக்கு வேலை’

• ’நீ எதற்காக இப்படி பயப்படுகிறாய், கவலைப்படுகிறாய் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை’

அமைதிப்படுத்த அற்புதமான 10 கட்டளைகள்

• எனக்குப் புரிகிறது.

• நீ எப்படி உணர்கிறாய் என்று சொல்.

• பயப்படுவது என்பது இயல்பானதுதான். நான்கூட அஞ்சியிருக்கிறேன்.

• உன்னிடமே நீ ‘நான் இதனைக் கடந்து வருவேன்’ என்று சொல்லிக்கொள்.

• கண்களை மூடி உனக்குப் பிடித்த விஷயங்களைக் கற்பனை செய்துகொள்.

• ஆழமாக சுவாசி. 1-10 வரை எண்ணத் தொடங்கு.

• வந்து என்னைக் கட்டிக்கொள் செல்லம்!

• உன்னைப் பாதுகாப்பாக உணர வைக்க எனக்கு உதவு.

இதமான பதில்கள்

பதற்றத்தின் காரணமாக உங்கள் பிள்ளைகள் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்பர். அப்படிப்பட்ட பொதுவான , அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளையும் அவற்றுக்கு நீங்கள் எப்படி விடையளிக்கலாம் என்பதையும் இங்கு பார்க்கலாம்.

1. கேள்வி: ஏன் பள்ளிக்குச் செல்லக்கூடாது? ஏன் நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்க வேண்டும்?

என்ன சொல்ல்க்கூடாது? : அரசு அப்படித்தான் சொல்கிறது. கொரொனா ஒரு கொடிய வைரஸ். அது விரைவில் பரவி, நம்மை நோயாளியாக்கிவிடும்.

உங்கள் குழந்தையின் சிந்தனை: இது பயங்கரமாக இருக்கிறதே! நம் எல்லோருக்கும் நோய் வந்து சாகப்போகிறோம்.

என்ன சொல்லலாம்?: இந்த வைரஸ் மனித உடல்களுக்குள் மட்டும்தான் உயிர்வாழும். நாம் வீட்டுக்குள்ளேயே இருந்தால் வைரஸ் நம்மை அணுகாது. வீட்டுக்குள் இருக்கும் மனிதர்களைத்தேடி இந்த வைரஸ் வருவதில்லை. எனவே, தானாகவே அழிந்துவிடும். மக்களை அது கொல்வதற்குள் நாம் அதனைக் கொன்றுவிடவேண்டும்.

இப்போது உங்கள் குழந்தையின் சிந்தனை: ஆக, வீட்டுக்குள் இருப்பதே இக்கிருமிக்கு எதிரான போராட்டம்தான்.

2.குழந்தையின் கேள்வி: எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போகுமா? பாட்டிக்கும் அப்படித்தானா?

சொல்லக்கூடாதது: கவலைப்படாதே….எல்லாம் சரியாகும்.

குழந்தையின் சிந்தனை: என்னைச்சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அச்சத்தில் இருக்கின்றனர். அதனால்தான் எனக்கும் பயமாக இருக்கிறது. ஏன் என் பெற்றோர் அதனைப் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்?

என்ன சொல்லலாம்?: கொரொனா குறித்த தகவல்களைக் கேள்விப்பட்டதிலிருந்து நீ கவலைக்குள்ளாயிருப்பாய் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நாம் அடிக்கடி கைகளைக் கழுவுவது, கூட்டத்திலிருந்து விலகியிருப்பது, உடலை உறுதி செய்ய ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இதன் விளைவாக, நாம் நோய்வாய்ப்பட மாட்டோம்.

குழந்தையின் தற்போதைய மனவோட்டம்: எனது கவலைகளை என் அம்மா புரிந்துகொண்டுவிட்டார். நாங்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாக மாட்டோம்.

3.உங்கள் குழந்தையின் கேள்வி: நான் தனிமைப்படுத்தப்பட்டால் என்னவாகும்? என்னுடன் நீங்கள் இருப்பீர்களா?

சொல்லக்கூடாதது: ஏன் அதையெல்லாம் நினைக்கிறாய்? உனக்கு ஒன்றும் ஆகாது.

உங்கள் குழந்தையின் சிந்தனை: நான் பயந்துபோய் இருக்கிறேன். பெற்றோர் இல்லாமல் என்னால் இருக்க முடியாது.

என்ன சொல்லலாம்?: தனிமை குறித்த உன் பயம் எனக்குப் புரிகிறது. ஒருவேளை நீ அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டால் நான் அங்கு இருந்து உன் பாதுகாப்பை உறுதி செய்வேன்.

இப்போது உங்கள் குழந்தையின் மனவோட்டம்: என் அம்மா என்னை கவனித்துக்கொள்வார்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இதுபோன்ற பதற்றமான சூழலில் குழந்தைகள் அமைதியிழப்பதும் அச்சமடைவதும் இயற்கையானது. உங்கள் குழந்தைக்குத் தேவையனதெல்லாம் உங்கள் புரிதலும் ஆதரவும்தான். பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்துகொண்டிருப்பீர்கள். ஆக, இது உங்கள் குழந்தைகளுடன் விளையாடவும் பொழுதுபோக்கவும் நல்ல வாய்ப்பு இது. பயத்தை அகற்ற மட்டுமல்ல, குழந்தைக்கும் உங்களுக்கும் இடையிலான பந்தத்தை மேலும் நெருக்கமானதாக ஆக்க இது உதவும்.

(கட்டுரையாளரைப்பற்றி: நளினா ராமலஷ்மி, பேரண்ட் சர்க்கிள் இதழின் தலைமை ஆசிரியர்)

More For You

More for you

We are unable to find the articles you are looking for.