குழந்தை வளர்ப்பு பற்றி - மனம் திறக்கிறார் ஜோதிகா சூர்யா

சினிமாத் துறையிலும், சொந்த வாழ்விலும் கொண்டாடப்படுவது சூர்யாஜோதிகா ஜோடி. தங்களது அன்றாட வாழ்க்கை, குழந்தை வளர்ப்பு ஆகியவை குறித்து திருமதி.ஜோதிகா செல்லமேவுக்காக அளித்த நேர்காணல் இது:

By சிந்து சிவலிங்கம்

குழந்தை வளர்ப்பு பற்றி - மனம் திறக்கிறார்  ஜோதிகா சூர்யா

செல்லமே: சரியான குழந்தை வளர்ப்பு என்று ஏதாவது இருக்கிறதா?

ஜோதிகா: இல்லை. ஒரு குழந்தையைப்போல இன்னொரு குழந்தை இருப்பதில்லை. எங்கள்வீட்டைப்பொறுத்தவரை எங்கள் இரு குழந்தைகளை வளர்ப்பதில் நான் எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை. இருப்பினும் ஒருவருக்கொருவர் மிகவும் மாறுபட்டவர்கள். அவர்களுக்கு நல்ல நடத்தை, மதிப்பீடுகள் விஷயங்களில் நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதற்கான கால அவகாசம் அளிப்பதும் முக்கியமானது.

செல்லமே: குழந்தை வளர்ப்பு உங்களுக்குள் இயல்பாகவே இருந்ததா? அல்லது இருவரும் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையை ஏற்றுக் கொண்டீர்களா?

ஜோதிகா: நாங்கள் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையை ஏகமனதாக ஏற்றுக் கொண்டோம். எடுத்துக்காட்டாக இதைச் சொல்லலாம்: நாங்கள் இருப்பது திரைத்துறையில். எங்கள் குழந்தைகள் நாங்கள் நடித்த படத்தைப் பெருமையுடன் பார்க்க வேண்டும். எனவே நாங்கள் நடிக்கும் படங்களை கவனமுடன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

அதேபோல் வீட்டிலும் இயல்பான நிலையையே அவர்களுக்கு உருவாக்கும் முயற்சியை செய்தோம். எங்களது இரு குழந்தைகள் படிக்கும் பள்ளியில் பிள்ளைகளின் பெற்றோர் குழுக்கள் உள்ளன. அதிலுள்ள உறுப்பினர்கள் எங்களுக்கு நெருங்கிய நண்பர்களும்கூட. இதன் மூலம் தாங்களும் மற்ற குழந்தைகளைப்போன்றவர்கள்தான் என்ற உணர்வு எங்கள் பிள்ளைளுக்கு ஏற்படும். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் பணியாற்றுகிறோம். அவ்வளவுதான். எல்லோரும் சமம்தான்.

செல்லமே: உங்கள் இருவரில் யார் ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸர்?

ஜோதிகா: நான்தான் அது (சிரிக்கிறார்).

சூர்யாவைப் பொறுத்தவரையில் குழந்தைகள் அவர்கள் விரும்புவதைச் செய்ய அனுமதித்துவிடுவார். அவர் ‘நல்லவர். நான் தான் அவர்களைப்பொறுத்தவரை கண்டிப்பான அதிகாரி.

செல்லமே: குழந்தைகளிடத்தில நீங்கள் ‘கண்டிப்பாக வேண்டாம் என்று சொல்லும் விஷயங்களுக்கு சூர்யா ‘ஓகே சொல்வது நடந்திருக்கிறதா?

ஜோதிகா: ஐஸ்க்ரீம் தொடங்கி வீட்டுப்பாடம்வரை ஒரு முடிவே இல்லாத பெரிய பட்டியலே உண்டு. அப்பாவிடம் அவர்களுக்கு எல்லா விஷயங்களுமே எளிதானவை. என்றாவது நான் படப்பிடிப்பு முடிந்து வீடு செல்ல தாமதம் ஆகும் நாட்களில் அவர்கள் அப்பாவுடன் இரவு 9.30ஐக் கடந்தபின்னும் ஜாலியாக கதை பேசிக் கொண்டிருப்பர்.

செல்லமே: தினமும் சீக்கீரமாகவாகவே தூங்கச் சென்றுவிடுவீர்களா?

ஜோதிகா: வேறு ஏதாவது தவிர்க்க முடியாத சமய சந்தர்ப்பங்கள் தவிர இரவு 9 மணிக்கு நாங்கள் அனைவரும் உறங்கச் சென்றுவிடுவோம். குழந்தைகள் காலை 6 மணிக்கு எழுந்து 7 மணிக்கு பள்ளிக்குக் கிளம்பிவிடுவர். வார இறுதி நாட்களிலும் பியானோ உள்ளிட்ட சில பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதால் 6 மணிக்கு இல்லாவிட்டாலும் காலையில் எழும் பழக்கம் குழந்தைகளிடம் உண்டு.

வெகு சமீபத்தில்தான் நாங்கள் வீடு மாறியிருக்கிறோம். குழந்தைகளுக்கென்று தனி அறையை அழகாகக் கட்டியிருக்கிறோம். இருப்பினும் அவர்கள் எங்களை விட்டு விலகுவதில்லை. எனவே நாங்கள் நால்வரும் ஒரே அறையில் உறங்குவதுதான் வழக்கம்.

செல்லமே: வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் உங்களது பொழுதுபோக்கு?

குழந்தை வளர்ப்பு பற்றி - மனம் திறக்கிறார்  ஜோதிகா சூர்யா

ஜோதிகா: பயணம் செய்வது எங்களுக்கு வழக்கம். குழந்தைகளுக்கு இப்போது மலையேறுதலில் ஆர்வம் வந்திருக்கிறது. அண்மையில் கடல் மட்டத்திலிருந்து 9 ஆயிரம் அடி உயரம் கொண்ட டிரியுன்ட் (Triund) என்ற மலைக்குச் சென்று திரும்பினோம். அங்கு 6 மணிநேரம் குழந்தைகள் மலையேற்றத்தில் ஈடுபட்டனர். செங்குத்தான மலை என்பதால் இரவு அங்கு தங்கிவிட்டோம். ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளை இதுபோன்ற மலையேற்றத்துக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஏதேனும் ஒரு இடத்துக்கு அவர்களை அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறோம்.

செல்லமே: உங்கள் குழந்தைகளின் ஜாலியான வேறு விளையாட்டுக்கள்?

ஜோதிகா: குடும்பமாக டாபூ, ஸ்ட்ராடஜி (taboo, strategy)போன்ற பல்வேறுவிதமான விளையாட்டுக்களை நாங்கள் விளையாடுவது உண்டு. அப்பாவும் மகனுமாக ஐ-பேடை (Ipad) வைத்துக் கொண்டு என்னவெல்லாமோ விளையாடுவார்கள் (சிரிக்கிறார்).

செல்லமே: நீங்கள் விளையாட மாட்டீர்களா?

ஜோதிகா: இல்லவே இல்லை. ஆனால் தினமும் அதில் விளையாட குழந்தைகளுக்கு 30 நிமிடம் அனுமதி உண்டு. அவர்கள் பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்குச் செல்கின்றனர். விளையாட்டுப் பயிற்சி வகுப்புகளும் உண்டு. இருவரும் பியானோ, பேட்மின்டன் வகுப்புகளுக்குச் செல்கின்றனர். இது தவிர தியா பரதநாட்டிய வகுப்புக்கும், தேவ் கராத்தே பயிலவும் செல்கின்றனர். படிப்பைத் தவிர இருவரும் பல்வேறு விஷயங்களில் எப்போதுமே பிஸிதான்.

செல்லமே: இந்த வகுப்புகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் நிறைந்தவை?

ஜோதிகா: இந்த வகுப்புகள், குழந்தைகள் தங்களது திறனை வெளிப்படுத்திக் கொள்ள பெரிதும் உதவுகின்றன. என் இளம் வயதில் எனக்கு இது போன்றதொரு சந்தர்ப்பம் கிடைத்ததில்லை.மேலும் நேரத்தை எப்படி பயனுள்ள வழியில் செலவழிக்கலாம் என்பதையும் சுய ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கின்றன. பிற குழந்தைகள் தங்களது இலக்கை அடைய என்ன செய்கின்றனர் என்பதை அவர்கள் அங்கு நேரடியாகப் பார்க்கின்றனர். பல்வேறு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் எல்லோருடனும் இயல்பாகப் பழகக் கற்றுக் கொள்கின்றனர். நாமெல்லாம் ஜாலியாக தெருவில் சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடியதுபோல் இல்லை இந்தக் காலம்.

எந்த குழந்தை என்றாலும் ஒரு இசைக்கருவி, ஒரு விளையாட்டு ஆகியவற்றைப் பயில்வது அவசியம். இன்று நமக்குக் குழந்தைகளுடன் செலவு செய்ய நேரமே இருப்பதில்லை. விளைவு?.... பெற்றோர் வெளியில் சென்றவுடன் தொலைக்காட்சி அல்லது ஐ-பேட் தான் அடுத்த நண்பனாக குழந்தைகளுக்கு இருக்கும். இவற்றை அவர்களிடத்திலிருந்து வலுக்கட்டாயமாக பறிப்பதற்கு மாறாக ஏதேனும் பயிற்சி வகுப்புகளில் சேர்த்துவிடுவதன்மூலம் அவர்கள் கவனத்தைத் திசை திருப்பலாமே!

செல்லமே: ‘இன்று பயிற்சி வகுப்புக்கு போக மாட்டேன் என்று பிள்ளைகள் சொன்ன நாட்கள் உண்டா?

ஜோதிகா : ஆம், பள்ளியிலிருந்து மிகவும் களைப்புற்று வீட்டுக்கு வந்த ஒரு சில நாட்கள் அப்படி கூறியதுண்டு. என் குழந்தைகள், தங்கள் வகுப்புகளுக்குத் தாமாகவே செல்வதை விரும்புவர். பயிற்சி வகுப்பில் சேர்க்கும்போதே அவர்களுக்கு அங்கே நண்பர்கள் இருக்கிறார்களா என்ற கவனத்துடன்தான் சேர்த்தேன். தினமும் வகுப்புக்குப் பின் ஜாலியாக விளையாடக்கூடிய ஒரு நட்பு வட்டம் எங்களுக்கு உண்டு. அவர்கள் எல்லோரும் இங்கு வந்து ஆடி, ஓடி, விளையாடி களைத்து இரவு உணவு முடித்து திரும்பிச் செல்வர்.

செல்லமே: உங்களின் அன்றாட வேலைகள் என்னென்ன?

ஜோதிகா: காலையில் குழந்தைகளை பள்ளியில் விட்டபின் எனக்கு படப்பிடிப்பு இருந்தால் அங்கு செல்வேன். இல்லாத நாட்களில் என் நட்புவட்டத்துடன் ஒரு காஃபி. அதுவும் இல்லை என்றால் என் அறையில் டிவி பார்ப்பது, யோகா, பாட்டு கேட்பது என என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் செய்வேன். இப்படி 1 மணி வரை எனக்கான நேரம். அதன்பின் குழந்தைகள் வந்ததும் அவர்களுக்கான மதிய உணவு கொடுப்பது; பின் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புவது. அது முடிந்தபின் தினசரி வீட்டுப் பாடங்களை ‘நைசாகப் பேசி செய்ய வைப்பது (சிரிப்பு); அடுத்து இரவு உணவுக்கான நேரம்; பின்னர் உறக்கம். இரவு எல்லோரும் விரைவில் உறங்கச் செல்வது வழக்கம். இதன் காரணமாக இரவு நேரத்தில் நாங்கள் வெளியில் உணவருந்தச் செல்வதில்லை. அப்படியே உணவருந்தச் செல்வதாக இருந்தாலும் மதிய நேரத்தில் சென்று திரும்புவோம். ஆக, ஒரே மாதிரியான விஷயங்கள்தான் எப்போதும். ஸ்பெஷலாக ஒன்றும் இல்லை (சிரிக்கிறார்).

செல்லமே: ஒரு அப்பாவாக சூர்யா எப்படி?

ஜோதிகா: சூர்யா, ஞாயிற்றுக் கிழமைகளில் படப்பிடிப்பு கூடாது என்பதைக் கவனமுடன் கடைபிடிப்பவர். காலையிலேயே உடற்பயிற்சியை முடித்துவிடுவார். மாலை 6.30 அல்லது 7.00 மணிக்கு வீட்டில் இருப்பார். அதன்பிறகு இரவு

9 வரை குடும்பத்துக்கான நேரம்தான். பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாய நிகழ்வுகளைக் குறித்துவைத்துக் கொண்டு அவற்றுக்கு தவறாமல் செல்லும் வழக்கம் உண்டு. இதுவரை பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு தினம் மற்றும் ஆண்டு விழா ஒன்றைக்கூட சூர்யா தவறவிட்டதில்லை. வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் குழந்தைகளை பார்த்துக் கொள்வது, அவர்களைத் தூங்க வைப்பது என்று குழந்தைகளைச் சுற்றிதான் இருப்பார்.

செல்லமே: ஒரு பெற்றோராக குழந்தை வளர்ப்பில் மிகச் சிறப்பான தருணம் என்று நீங்கள் நினைப்பது

ஜோதிகா : பெற்றோர் என்பதே மிகவும் சிறப்பான ஒன்றுதான். ‘அம்மா என்ற ஒரு சொல் அதைவிடச் சிறப்பானது. எங்கள் குழந்தைகள் இருவரும் பிறந்தபோது நானும் சூர்யாவும் சேர்ந்தே குழந்தைகளைக் கையில் பிடித்திருக்கும்போது, குழந்தை எங்களைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தருணம் மிகவும் அற்புதமானது. அந்த உணர்வு வார்த்தையால் விளக்க முடியாதது. எல்லாவற்றிலும் மிகச் சிறப்பான தருணம் அதுதான்.

ஒரு நாளின் சிறப்பான பகுதி என்றால் என் குழந்தைகளைத் தூங்க வைக்கும் நேரம்தான். உறக்கத்துக்கு முந்தைய அவர்களுடனான அந்த 10 நிமிடம் அலாதியானது. அவர்களுக்குக் கதை பேச வேண்டும். முந்தைய நாள் என்ன கனவு கண்டனார் என்று சொல்ல வேண்டும். என்ன வேண்டும் என்பதை சொல்ல வேண்டும் அல்லது அவர்களுக்கு விருப்பமான புத்தகம் படிக்க வேண்டும் என இப்படி அந்த பத்து நிமிஷத்துக்குள் அத்தனையும் செய்வர். மிக அருமையான நேரங்கள் அவை. அந்த நேரத்தில் ‘ஐ லவ் யூ அம்மா வைப் பல முறை கேட்கலாம்.

செல்லமே: உங்கள் குழந்தைகள் உங்கள் இருவரில் யாரை ஜாலியானவர் (coolest parent) என்பீர்கள்?

ஜோதிகா : என் மகனைப் பொறுத்தவரை அப்பாதான். மகள் தியாவுக்கு நான். ஆம், தேவ் தற்போது சூப்பர் ஹீரோ ஸ்டேஜில் இருக்கிறான். எப்போதும் அப்பா அவனுக்கு ஆதரவாகத்தான் இருப்பார். என் மகளுக்கு என்னை மிகவும் பிடிக்கும். நான் புல்லட் ஓட்டினால் அவளுக்கு மிகவும் பிடிக்கும். இன்னமும் சொல்லப்போனால் புல்லட்டில் பள்ளிக்கு வந்து தன்னை அழைத்துச் செல்லும்படி கேட்பது வழக்கம்(சிரித்துக் கொண்டே).

செல்லமே: நீங்கள் அப்படி அழைத்து வந்ததுண்டா?

ஜோதிகா : ஆம், 2 அல்லது 3 முறை அதுபோன்று அழைத்து வந்திருக்கிறேன். ஆனால் அவள் தினமும் அதையே கேட்கிறாள். அதைச் செய்ய முடியாதே (சிரிக்கிறார்).

செல்லமே: நீங்கள் பிரபலமானவர்கள். இதை குழந்தைகள் எப்படி கையாள்கிறார்கள்?

ஜோதிகா : எங்கள் மாமனார் தொடங்கி எங்கள் வீட்டில் அனைவருமே பிரபலமானவர்கள்தான். ஆனால் எங்கள் குழந்தைகளுக்கு எங்கள் படங்கள் எல்லாம் அவ்வளவாகத் தெரியாது. தவிர அவர்களுக்கு திரைப்படம் குறித்து இன்னமும் அந்த அளவுக்குத் தெரியவில்லை.

வீட்டிலும் என்ன மாதிரியான படங்கள் அவர்கள் பார்க்கலாம் என்பதில் நாங்கள் கவனமாகவே இருக்கிறோம். பள்ளியிலும் அவர்கள் வழக்கமான குழந்தைகள்தான். மேலும் அவர்களது நண்பர்கள் எல்லாமே வடஇந்தியர்கள்தான்.

அவர்களுக்கு நாங்கள் யார் என்றே தெரியாது. ஆக, பள்ளியில், வீட்டில், பயிற்சி வகுப்புகளில், நட்பு வட்டத்தில் என எங்குமே தாங்கள் பிரபலங்களின் குழந்தைகள் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டதில்லை.

செல்லமே: திரைப்படங்கள் பார்ப்பதை எவ்வாறு கட்டுப்படுத்துகிறீர்கள்?

ஜோதிகா: அவர்கள் இன்னமும் சிறு குழந்தைகளே. அதனால் இணையதளம் குறித்து அவர்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. நாங்கள் கூகுளுக்கு பதிலாக அவர்களுக்கு கிடில்-ஐ (kiddle ) அதிகமாக பழக்கப்படுத்தியுள்ளோம். இதில் குழந்தைகளுக்கான அனைத்துவகைக் கட்டுப்பாடுகளும் உண்டு. குழந்தைகளின் கணினியும் எங்கள் வீட்டின் நடுவில்தான் உள்ளது. அவர்களுக்கு அதில் ஏதாவது பார்க்கவேண்டும் என்றால் எங்களிடம் வந்து கேட்பர். எந்தத் திரைப்படங்களை பார்க்கலாம் என்பது எங்களது விருப்பம்தான். இன்று வரும் படங்களில் 80 விழுக்காடு மோசம் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. முதல் விஷயம் பெண்கள் உருப்படியாக ஆடை அணிவதே இல்லை. மொழியையும் தாண்டி என் குழந்தைகள் எல்லாப் படங்களையும் பார்க்க வேண்டாம் என்று நான் சொல்ல அதுதான் முக்கிய காரணமே.

செல்லமே: பெற்றோர் அவசியம் செய்ய வேண்டியதாக நீங்கள் கருதும் 3 விஷயங்கள் என்னென்ன?

ஜோதிகா : ஒரு மணி நேரமாவது தங்கள் குழந்தைகளுக்கென்று ஒதுக்க வேண்டும். இரவு உணவை அவர்களுடன் சேர்ந்து உண்பது. தடையில்லா உரையாடல், விருப்பமான விளையாட்டுக்கள் ஆகியவையும் அவசியம். இதன் காரணமாக குழந்தைகள் பெற்றோரிடம் எல்லாவற்றையும் எளிதில் பகிர்ந்து கொள்வர். அவர்கள் என்ன நினைக்கிறார்கள். அவர்களின் நட்பு வட்டத்தில் யாரை மிகவும் பிடிக்கும், யாரைப்பிடிக்காது, அவர்களுக்குப் பிடித்தமானது எது, பிடிக்காதது எது, வகுப்பில் ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது என அத்தனையையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வர். குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்கும்போது அனைவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரிக்கும். ஓர் எடுத்துக்காட்டாய் இருங்கள். தயவு செய்து உபதேசம் செய்யாதீர்கள். 

செல்லமே: நீங்கள் வளர்ந்தவிதம் உங்கள் குழந்தை வளர்ப்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

ஜோதிகா : எனக்கு 2 சகோதரிகள் ஒரு சகோதரர். அனைவரும் பணிபுரிகின்றனர். என் பெற்றோர் எங்கள் அனைவரையும் சரிசமமாகத்தான் பார்த்தார்கள். நிறைய நம்பிக்கை கொடுத்தார்கள். சுதந்திரமாக இருக்கக் கற்றுக் கொடுத்தவர் என் அம்மா. என்னைப் பொறுத்தவரை வலுவான அப்பாவைவிட திடமான அம்மாவே மிக முக்கியம். சூர்யா, கார்த்தி இருவரும் பெண்களின்மேல் அதிக மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். பணிபுரிந்தபோதும் சரி, அதற்குப் பின்னரும் சரி, சூர்யா என்னை எப்போதும் அவருக்கு சரிசமமாகத்தான் பார்த்திருக்கிறார். எனக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார். இதுவே அவர்கள் வளர்க்கப்பட்ட விதத்தை சொல்லாமல் சொல்லும்.

சமத்துவமும் மரியாதையும் தொடங்குமிடமே வீடுதான். உங்களுக்கு நீங்களே தூண்டுகோலாக இருப்பது முக்கியம். நான் வெளியில் சென்று 10 ஆண்டுகள் பணி செய்தேன். வீட்டில் இருந்து வீட்டுப் பணிகளையும் செய்துவிட்டேன். வெளியில் சென்று பணி செய்வதும் எளிது என்று நான் உணர்கிறேன். வீட்டில் நாம் செய்யும் பணிகள் கண்டுகொள்ளப்படுவதும் இல்லை, கவனிக்கப்படுவதும் இல்லை. பல்வேறு வகையான பணியைச் செய்யக்கூடிய பெண்களாகிய நாம் மிகவும் சிறந்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதை எண்ணி பெருமைப்படவேண்டும். உணவு மேசையில்கூட அனைவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடும்போது எல்லோரும் சரிசமம் என்பது உணர்த்தப்படுகிறது.

செல்லமே: பெற்றோருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

ஜோதிகா: பெற்றோரே, நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். எந்த பிரச்சனையையும் (அது குழந்தைகள் தொடர்பானது என்றாலும்) அவர்கள் முன் விவாதம் செய்யாதீர்கள். பெற்றோர் எப்போதுமே குழந்தைகளிடத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசக்கூடாது.

எந்த விஷயமானாலும் முதலில் உங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்தபின்னரே அதை குழந்தைகளிடத்தில் தெரிவிக்க வேண்டும். ‘அம்மா இருந்தா இப்படி பண்ணிருப்பாங்க இல்லப்பா அல்லது ‘இதெல்லாம் அப்பாதான் சரியா சொல்லிக் கொடுப்பார் என்பது போன்ற நிலை வராமல் கவனமுடன் செயல்படுதல் அவசியம்.