குளூட்டன் ஒவ்வாமை

குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமைகளில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் குளூட்டன் ஒவ்வாமை குறித்து விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் சாந்தா நாராயணன்.

By சு. கவிதா  • 10 min read

குளூட்டன் ஒவ்வாமை

குளூட்டன் என்பது என்ன?

குளூட்டன் என்பது ஒருவகைப் புரதம் ஆகும். நிறைய உணவுப்பொருட்களில், முக்கியமாக தானியங்களில் இந்தப் புரதம் காணப்படுகிறது. ஒவ்வொரு தானியத்திலும் எண்டோஸ்பெர்ம் எனப்படும் பகுதியில் இந்த குளூட்டன் புரதம் சேமிக்கப்படுகிறது. குளூட்டன் எனப்படும் இந்தப் புரதம் அடங்கிய உணவை உட்கொள்வதால் உடலில் உடனடியாக சிறிய அல்லது பெரிய மாற்றங்கள் அல்லது தாக்கங்கள் ஏற்படுவதையே குளூட்டன் ஒவ்வாமை அல்லது குளூட்டன் சென்ஸிட்டிவிட்டி என்று அழைக்கிறோம்.

குளூட்டன் ஒவ்வாமை எவ்வாறு ஏற்படுகிறது?

குளூட்டன் ஒவ்வாமை என்பது ஒரு ஆட்டோ இம்யூன் (autoimmune disease) நோய் ஆகும். அதாவது நம்முடைய நோயெதிர்ப்பு அமைப்பே நமது உடலின்மீது தவறுதலாகத் தாக்குதல் நடத்தினால் அதனால் நமது உடலில் உண்டாகும் பிரச்னைகளை நாம் ஆட்டோ இம்யூன் நோய் (autoimmune disease) என்று அழைக்கிறோம்.

குளூட்டன் உள்ள உணவுகளை உண்ணும்போது அவை குழந்தைகளின் நோயெதிர்ப்பு அமைப்பைத் தாக்குகின்றன. இதன் காரணமாக நோயெதிர்ப்பு அமைப்பானது, ஆபத்தை உண்டாக்கும் காரணிகள் என்று தன்னுடைய திசுக்களையே தவறுதலாக நினைத்து அவற்றை அழித்துவிடுகிறது. திசுக்கள் அழிவதால் அதில் உள்ள செல்களும் அழிந்து போகின்றன. இப்படி செல்கள் அழிவதால் அவை செய்யவேண்டிய வேலைகளும் அழிந்து போகின்றன.

குளூட்டன் புரதத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

ஆட்டோஇம்யூன் நோய்கள் -சீலியாக் நோய், குளூட்டன் தள்ளாட்டம் (GLUTEN ATAXIA), Dermatitis herpetiformis எனப்படும் தோல் சார்ந்த நோய்கள்

சீலியாக் அல்லாத குளூட்டன் கூருணர்வுத்திறன் (Non-celiac gluten sensitivity )

அலர்ஜிக் உணவு ஒவ்வாமை (Bakers asthma),Contact dermatitis எனப்படும் தோல் சார்ந்த பாதிப்புகள் போன்றவை குளூட்டன் புரதத்தால் உண்டாகின்றன.

குளூட்டன் உள்ள உணவுப்பொருட்கள்

கோதுமை, பார்லி, போன்ற எல்லா வகையான தானியங்களிலும் குளூட்டன் என்கிற புரதம் இருக்கிறது. பாஸ்தா, பிரெட் அல்லது ரொட்டி, பேக் செய்யப்பட்ட மாவுப் பொருட்கள் போன்ற உணவு வகைகள் குளூட்டன் உள்ள உணவுகளாக இருக்கின்றன. 2017-க்குப் பிறகு உலக நாடுகளில் குளூட்டன் ஒவ்வாமை பாதிப்பு அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

குளூட்டன் ஒவ்வாமை பிரச்சனை குழந்தைகளைப் பாதிக்க காரணம்?

குழந்தைகள் உட்பட பலரும் இந்த குளூட்டன் ஒவ்வாமையால் பாதிக்கப்பட பல காரணங்கள் இருக்கின்றன.

நம் பாரம்பரிய உணவு வகைகளை மறந்து மேல் நாட்டு உணவு முறைக்கு குழந்தைகளை பழக்கப்படுத்துவதே குளூட்டன் ஒவ்வாமையால் குழந்தைகள் பாதிக்கப்பட மிக முக்கியக் காரணமாக இருக்கிறது.

குறிப்பாக அரிசிக்குப் பதிலாக கோதுமை உணவுகளை குழந்தைகளுக்கு அதிகமாகக் கொடுக்க ஆரம்பித்துவிட்டோம்.

மத்தியத்தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இஸ்ரேல், துருக்கி போன்றவற்றில் கோதுமை போன்ற முழு தானியங்கள் முக்கிய உணவாக இருக்கின்றன. சிறுதானியங்கள் நம்முடைய பிரதான உணவுப் பொருட்களாகும். ஆனால், நாகரீகம் என்கிற பெயரில் முழு தானியங்களை உணவாக உண்ணும் போக்கு நம்மிடையே அதிகரித்துள்ளது. குளூட்டன் ஒவ்வாமை ஏற்பட இதுவும் ஒரு காரணம்.

தற்போது விளைகின்ற கோதுமையில் சைடோடாக்ஸிக் குளூட்டன் பெப்டிடெஸ் (cytotoxic gluten peptides) என்கிற குளூட்டன் புரதத்தின் அளவு அதிகபட்சமாக இருப்பதும் குளூட்டன் ஒவ்வாமை ஏற்பட ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

சீலியாக் நோய்

குளூட்டன் புரதம் உள்ள கோதுமை, பார்லி போன்ற உணவுகளைச் சாப்பிடும்பொழுது குழந்தைகளின் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பானது மிகத் தீவிரமாக வினையாற்றுவதால் உண்டாகும் பாதிப்பை சீலியாக் நோய் என்று அழைக்கிறோம். நமது உடலின் எதிர்ப்பு சக்தி சம்பந்தப்பட்ட நீண்டநாள் நோயாக இது உடலில் இருக்கும்.

இந்த சீலியாக் நோய் ஏற்பட சுற்றுச் சூழல் சார்ந்த காரணிகளும், மரபு சார்ந்த காரணிகளும்கூட காரணங்களாக அமைந்திருக்கின்றன.

சீலியாக் நோய் உள்ள குழந்தைகளின் உடலில் குளூட்டன் புரதம் உட்புகும்பொழுது அது அவர்களின் mucous membrane எனப்படும் கோழைச் சவ்வில் வீக்கத்தை ஏற்படுத்தி குடலை செயல் நலிவு அடையச் செய்துவிடும். கூடவே குடல் வில்லைகளும் பாதிக்கப்படும். இந்தக் குடல் வில்லைகள் மூலம்தான் நாம் உட்கொள்ளும் சத்துக்கள் குடலால் உறிஞ்சப்படுகின்றன. ஆனால் இந்த வில்லைகள் அழியும்போது சத்துக்கள் குடலால் உறிஞ்சப்பட முடியாமல் போய்விடுகிறது. குறிப்பாக, இந்த சீலியாக் நோய் குடலை மட்டும் தாக்கும் நோயல்ல. உடலின் மற்ற உறுப்புக்களையும் தாக்கும் தன்மை கொண்டது. சில குழந்தைகளுக்கு நோய் தாக்கியது தெரியாமலே கூட இருக்கலாம். இன்னும் சில குழந்தைகளுக்கு கோழைச் சவ்வில் மட்டும் வீக்கம் இருக்கலாம்.

இந்த நோயின் அறிகுறிகள் என்னென்ன?

நாள்பட்ட பேதி, வயிறு உப்புசம், விட்டமின் மற்றும் தாதுச்சத்துக்கள் குடலால் உறிஞ்சப்படாமல் இருப்பது, பசியின்மை, உடல் வளர்ச்சி குறைவது, எலும்பில் வலி, வாயில் புண்கள், மனத்தளர்ச்சி, வலிப்பு போன்றவை சீலியாக் நோயின் அறிகுறிகளாக இருக்கின்றன. பொதுவாக இந்த சீலியாக் நோய் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் தாக்குகிறது.

இந்த நோயின் விளைவுகள் என்னென்ன?

குளூட்டன் புரதமானது குடலை பாதிக்கும் என்பதால், சீலியாக் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கும் சத்துக்களைக் குடலால் உறிஞ்சிக்கொள்ள முடியாது. இதன் காரணமாக ரத்தசோகை என்னும் பிரச்னையால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

சிறு வயதிலேயே எலும்புகள் வலுவிழந்து பலவீனமடையும். குடல் பகுதியில் லிம்போமா எனப்படும் புற்று நோய் உண்டாகும்.

நரம்பு மண்டலத்தில் பாதிப்புகள் ஏற்படும்.

இந்த சீலியாக் நோய் கடுமையாகும்போது இதன் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்படுவதுண்டு.

அதுமட்டுமல்லாமல் இந்த சீலியாக் நோய் மற்ற ஆட்டோ இம்யூன் நோய்களான டைப்-1-சர்க்கரைநோய், குளூட்டன் தள்ளாமை (Ataxia), சோரியாசிஸ், முதுமை வெண்தோல் படலம் (Vitiligo), ஆட்டோ இம்யூன் கல்லீரல் வீக்கம், டெர்மடைடிஸ் (தோல் அழற்சி) போன்ற பல நோய்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது. சீலியாக் நோய் என்பது மரபு சம்பந்தப்பட்ட நோயாகவும் இருப்பதால் ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு தேவை.

இந்த நோயைக் கண்டறிவது எப்படி?

குடும்பத்தில் யாருக்கேனும் சீலியாக் நோய் சார்ந்த அறிகுறிகள் எதுவும் தென்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அப்படி எதேனும் அறிகுறிகள் இருப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி குடலின் சிறு பகுதியை எடுத்து பயாப்ஸி செய்து அதன் தன்மையைப் பொறுத்து சீலியாக் நோய் தாக்கியிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.

தோற்றம் பற்றிய மரபணு சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் சீலியாக் நோய் நம் குடும்பதில் யாருக்கேனும் வந்துள்ளதா என்பதைக் கண்டறிந்து கொள்ளலாம்.

ரத்தத்தில் IgA என்கிற ஆண்ட்டிபாடியின்(antibody) அளவை மருத்துவர்கள் கணக்கிடுவார்கள்.

Human Leukocyte Antigen (HLA) என்கிற எதிர் உயிரின் (foreign substance) அளவு கணக்கிடப்படும்.

இவை போன்ற பரிசோதனைகளின் அடிப்படையில் மருத்துவர் குழந்தைக்கு சீலியாக் நோய் இருக்கிறதா என்பதை முடிவு செய்வார்.

தீர்வு என்ன?

குளூட்டன் இல்லாத உணவுகளை வாழ்நாளின் கடைசிவரை உட்கொள்வதே இதற்கான ஒரே தீர்வாக இருக்கிறது.

நான் கிளாஸிகல் (non -classical) சீலியாக்

இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களை நான் கிளாஸிகல் (non-classical) சீலியாக் நோய் அறிகுறிகள் தாக்குகின்றன. இந்த அறிகுறிகள் பொதுவாக குடல் சம்பந்தப்பட்ட அறிகுறிகளாக இருக்கும். அதேபோல நம்முடைய உடலின் ஒருங்கிணைப்பையும், சமநிலையையும் சரியாக வைக்க மூளையின் செரிபெல்லம் என்கிற பகுதி உதவி செய்கிறது. ஆனால், நான்கிளாஸிகல் சீலியாக் நோயால் பாதிக்கபட்டால் சமநிலை குறைந்து செரிபெல்லார் என்கிற தள்ளாமை நிலை ஏற்படும் வாய்ப்பும் உண்டாகும்.

குளூட்டன் ஒவ்வாமை

குளூட்டன் கூருணர்வுத்திறன்

இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், பதின்பருவ வயதினர் மற்றும் பெரியவர்களுக்கும் இப்பிரச்சனை வர வாய்ப்புண்டு. இந்தப் பிரச்சனையின் விளைவுகள் அதிகபட்சமாக இல்லாததால் நாம் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

குளூட்டன் புரதம் உடலுக்குள் செல்லும்பொழுது குடல் அல்லது குடல் அல்லாத மற்ற உடல் பாகங்களில் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால் அதனை Non -celiac gluten sensitivity என்று அழைக்கிறோம்.

இந்த வகை ஒவ்வாமையின் அறிகுறிகள் சீலியாக் நோயின் அறிகுறிகள் போலவே இருக்கும். மற்ற ஒவ்வாமைகளை விட இந்த Non-celiac gluten sensitivity மக்களிடையே ஆறு முதல் பத்து மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. இப்பிரச்சனை எதனால் ஏற்படுகிறது என்பது கணிக்க முடியாததாக இருக்கிறது. ஆனால், குளூட்டன் உணவுகளை விலக்கியதும் இந்தப் பிரச்சனை சரியாகிவிடும்.

இதன் அடையாளங்கள், அறிகுறிகள்?

இந்த குளூட்டன் கூருணர்வுத்திறன் பாதிப்பின் அறிகுறிகள் பார்ப்பதற்கு சீலியாக் நோய் போலவோ அல்லது கோதுமை ஒவ்வாமைபோலவோ தெரியும். இவற்றில் குடல் சம்பந்தப்பட்ட அறிகுறிகள், குடல் அல்லாத அறிகுறிகள் ஆகிய இரண்டு வகையான அறிகுறிகள் இருக்கின்றன.

குடல் சம்பந்தப்பட்ட அறிகுறிகள்

வயிற்று வலி, வயிறு உப்புசம், பேதி அல்லது மலச்சிக்கல், ஓக்காளம், அதிகமான காற்று குடலுக்குள் சேரும் ஏரோபைஜியா என்னும் நிலை, சாப்பிட்ட உணவானது எதிர்த்துக் கொண்டு உணவுக் குழாய்க்கு வருவது (GERD- Gastroesophageal reflux disease), வாய்ப்புண்கள் போன்றவை குடல் சார்ந்த அறிகுறிகளாக இருக்கின்றன.

குடல் அல்லாத அறிகுறிகள்?

தலைவலி, மைக்ரைன், உடலில் தளர்ச்சி, தசைநார்வலி, தசை மற்றும் எலும்புவலி, கைகால்கள் மரத்துப் போவது, கைகால்களில் கூச்சம் ஏற்படுவது, எக்ஸீமா எனப்படும் தோல் அழற்சி உண்டாகுதல், தோலில் சிவப்புத் திட்டுக்கள் உருவாதல், ஆஸ்துமா, மனச்சோர்வு, பதட்டம், கவலை, ரத்தசோகை,நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், மற்ற ஆட்டோ இம்யூன் நோய்கள் போன்றவை Non-celiac gluten sensitivity-யின் அறிகுறிகளாக இருக்கின்றன.

இப்பிரச்னைக்கான தீர்வு?

குளூட்டன் இல்லாத உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இந்தப் பிரச்சனை வந்தவுடன் அதை சரியாகக் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை ஆரம்பித்தால் இந்த நோயின் அறிகுறிகளிலிருந்து விடுபட வாய்ப்புண்டு. அல்லது இதன்மூலம் நோயின் முன்னேற்றத்தைத் தடுக்கலாம்.

More For You

More for you

We are unable to find the articles you are looking for.