இசையால் வசமாகும் இதயமா?

உங்கள் குழந்தை ஒரு இசைக் கலைஞராக உருவெடுத்தால் அது அவனுடைய அல்லது அவளுடைய ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

By அருணா ரகுராம்

உங்கள் குழந்தை ஒரு இசைக் கலைஞராக உருவெடுத்தால் அது அவனுடைய அல்லது அவளுடைய ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இசை என்பது உலகுக்கே ஆன்மாவை அளிக்கக்கூடியது, மனதுக்கு சிறகை அளிக்கக்கூடியது, கற்பனைக்கு பறக்கும் சக்தியை கொடுக்கக்கூடியது, எல்லாவற்றுக்கும் வாழ்க்கை அளிக்கக் கூடியது- --என்றார் கிரேக்க தத்துவ அறிஞர் பிளேட்டோ.

இசை, எப்பொழுதுமே நமது உணர்வுகளை தட்டி எழுப்புகிறது. ஒன்றிணைக்கிறது. சிறு வயதில் நாம் கேட்கும் பாடல்களால் குழந்தையின் இடது மற்றும் வலது மூளையின் வளர்ச்சி மேம்படுகின்றன என்று தனது நூலில் கூறியிருக்கிறார் பிரபல நரம்பியல் வளர்ச்சி சார் கல்வித்துறையில் ஆலோசகரான சாலி காடட் ப்ளைத். மேலும் அந்த சின்னஞ்சிறு வயதில் மூளை வளர்ச்சி பெற்று, ஒரு வடிவம் பெற்று வரும் சூழலில், இசை, வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என்கிறார் அவர்.

குழந்தைக்கு இசையை அறிமுகப்படுத்தும் போது நாம் அதற்கு ஒரு புதிய உலகத்தை திறந்துவிடுகிறோம். ஒவ்வொரு குழந்தையும் இசையோடு இயைந்ததாகத் தான் பிறக்கிறது என்று நம்பப்படுகிறது. ஆனால், உண்மையில் வழக்கத்தின் வாயிலாகத்தான் குழந்தை இசையோடு இணையத் தொடங்குகிறது. குழந்தைக்கு இசை ஆர்வத்தை எப்படி ஊட்டுவது? இசைத்துறையில் நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கல்விதான் எல்லாம்

ஷைனிச்சி சுசூகி என்ற ஜப்பான் வயலின் கலைஞர் (ஆசிரியரும்கூட) சொல்வதைக் கேளுங்கள்: திறமை என்பது முயற்சியாலும் பயிற்சியாலும்தான் வருவது; பிறப்பால் வருவது அல்ல. சரியான சூழல், ஆசிரியர்களின் வழிகாட்டுதல், முறையான பயிற்சி, பெற்றோரின் ஆதரவு ஆகியவை கிடைத்தாலே ஒரு குழந்தை சிறந்த இசைக் கலைஞராக உருவெடுத்துவிடும் என்கிறார் சுசூகி. இசையைக் கேட்பதன் மூலமாக வாழ்வின் பல்வேறு சூழல்களில் அது உங்கள் பிள்ளைக்கு கைகொடுக்கும்.

இசையால் வசமாகும் இதயமா?

இப்படியும் கற்கலாம் இசையை

இசையைக் கற்றுக் கொடுப்பதற்கு வெவ்வேறு வகையான செயல்முறைகளை பயன்படுத்தலாம். அவற்றை இங்கே பார்ப்போம்.

பச்சிளம் குழந்தைகளும் சிறு குழந்தைகளும்

குழந்தைகள் ஒரு பாடலின் பொருள் புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ நிச்சயமாக இசையின் இனிமையை உணர்ந்து கொள்கிறார்கள். ஒரு நேர்த்தியான இசையைக் கேட்கும் பொழுது அதன் தொனி, விவரம், ஒழுங்கு ஆகியவை குழந்தையின் மனதில் பதிகின்றன. சிறந்த இசை வல்லுநர்களின் இனிய இசை உங்கள் வீடு முழுவதும் பரவட்டும்.

குழந்தையின் முன்னிலையில் பாடலைப் பாடுங்கள் . அவளும்/னும் உங்களைப்போலவே பாடலை முணுமுணுக்க முயலுவான்/வாள்.

உணவு ஊட்டும்போது சிறிய பாடல்களைப் பாடலாம்.

குழந்தை உறங்கும்போது தாலாட்டுப் பாடல்களை பாடலாம். இதற்கு நீங்கள் பெரிய பாடகராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

அதேபோல் நாக்கால் ஒலி எழுப்புவது, விரல்களால் ஒலி எழுப்புவது ஆகியவற்றின்மூலம் புதிய இசையை நீங்களே உருவாக்கலாம்.

குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு ஆடலுடன் பாடலைக் கேட்பதுதானே சுகம்!

இசைக் கருவிகளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. மழையின் ஓசை, நீர் விழும் ஓசை ஆகியவற்றைக்கூட இசையாகப் பயன்படுத்தி பாடத் தொடங்கலாமே!

வேடிக்கையான சொற்களைக் கொண்டு நிரப்பி வித்தியாசமாகப் பாடலாம். அது குழந்தையைக் குதூகலப்படுத்தும். அதேபோல வாட்டர் பாட்டில் முதலியவற்றைப் பயன்படுத்தி குழந்தைகளைத் தாளமிட வைக்கலாம்.

இசையால் வசமாகும் இதயமா?

பாலர் பள்ளிக் குழந்தைகள்

குழந்தைகள் செயல் முறைகள் மூலமாக விஷயங்களை தெரிந்து கொள்ளும் வயது இது. எனவே, அது பள்ளிக்கூடப் பாடம்போல அமைந்துவிடாமல் களிப்புடன் பயில்வதாக அமையட்டும்.

இசையால் நிரம்பட்டும் இல்லம்

ஒருவேளை உங்களால் பாட முடியவில்லை என்றால் நீங்கள் விதவிதமான பாடல்களை வீட்டில் ஒலிக்கச் செய்யலாம் (கர்னாடக இசை, ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசை முதலியன). இசை குறித்த அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொள்ள குழந்தைக்கு இவை உதவும்.

பாடுவதை ஊக்கப்படுத்துங்கள்

நீங்கள் உங்கள் குழந்தையுடன் காரில் செல்வதாக இருந்தால் உங்கள் பயணம் இசையுடன் கூடியதாக அமையட்டும். காரில் வழிந்தோடும் இசையோடு இணைந்து பாடும்படி உங்கள் குழந்தையைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதேபோல பள்ளியில் பாடப்படும் நர்சரி பாடல்களாக இருந்தாலும் சரி, பொதுவான பாடல்களாக இருந்தாலும் சரி, நீங்கள் பாடும்போது குழந்தையை உங்களோடு சேர்ந்து பாடச் சொல்லுங்கள். பாடுவதில் பிழைகள் ஏற்பட்டால் அவற்றை நிறுத்த வேண்டாம். சுதந்திரமாகவும் சொந்த முயற்சியில் ஒரு குழந்தை பாடட்டும். குழந்தைகள் பலராலும் முழுவதுமாக ஒரு பாடலைப் பாடி விட முடியாது, அல்லது துல்லியமாகப் பாடிவிட முடியாது. இது ஐந்து வயதுவரை பொருந்தும்.

இல்லத்தில் உருவாகட்டும் இசை

உங்கள் குழந்தையின் உதவியுடன் நீங்களே வீட்டில் இசைக்கருவிகளை உருவாக்கலாம். இசை நிகழ்ச்சியில் அல்லது இசை வகுப்புகளில்தான் இசைக்கான எல்லா சாத்தியக்கூறுகளும் உண்டு என்று நாம் நினைக்க வேண்டியதில்லை. உங்கள் சமையலறைப் பாத்திரங்களையே இசைக் கருவிகளாக மாற்றிவிட முடியும். கல்லும் மண்ணும் மணியும் இசைக்கருவிகள் தானே! அதேபோல கண்ணாடிப் பாத்திரங்களில் நீர் நிரப்பினால் அதுதானே ஜலதரங்கம்!

ஆடலும் பாடலும்

இசை ஒலிக்கும்பொழுது குழந்தை நடனமாடுவதை ஊக்கப்படுத்துங்கள். நடனமாடும்பொழுது குழந்தையின் நண்பர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தட்டும். இந்த மகிழ்ச்சியான பொழுதுகள் பசுமை மாறாத நினைவுகளாக குழந்தை வாழ்க்கையில் தொடரும். உங்கள் குழந்தை நடனமாடும்பொழுது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்களும் கரவொலி எழுப்புங்களேன்!

இசையால் வசமாகும் இதயமா?

இசையும் கதையும்

உங்கள் குழந்தைகளிடம் இசை ஆர்வத்தைத் தூண்டக்கூடிய கதைகளை வாசித்துக் காட்டலாம். அவை படக்கதைகளாக இருந்தால் மிகவும் சிறப்பு.

தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு

குழந்தைகளை முறையான இசைப்பயிற்சிக்கு அனுப்புவதற்கு இதுதான் சரியான பருவம். குழந்தையின் ஆர்வத்திற்கேற்ப உங்களுக்கு வசதியான இசை வகுப்புகளில் குழந்தையை தாராளமாகச் சேர்க்கலாம்.

இவற்றையும் முயலலாம்

வீட்டில் பல்வேறு இசை மேதைகளின் பாடல்களை ஒலிக்க விடலாம். இதன் மூலம் ஸ்வரம், த்வனி, பாவம் உள்ளிட்ட பல்வேறு சங்கதிகளைக் குழந்தைகள் சிறுவயதிலேயே அறிந்து கொள்வர். அதே போல் ஒரு குறிப்பிட்ட வரியைக்கூறி, பாடலின் முதல் வரியைக் கண்டுபிடிக்கச் சொல்லி விளையாடலாம்.

(தமிழில்: கா.சு.துரையரசு)