"அம்மா - மகள் உறவு அலாதியானது" நடிகை ரேவதியின் நேர்காணல்

சர்வதேச மகளிர் தினத்தை (மார்ச் 8) முன்னிட்டு திரைப்பட நடிகை ரேவதி செல்லமேவுக்கு அளித்த விரிவான நேர்காணல் இது.

By சிந்து சிவலிங்கம்  • 13 min read

"அம்மா - மகள் உறவு அலாதியானது" நடிகை ரேவதியின் நேர்காணல்


செல்லமே: அஞ்சலி, மார்கரிடா வித் ௭ ஸ்ட்ரா ( Margarita with a straw) இந்த இரு படங்களிலும் நீங்கள் ஏற்று நடித்த அம்மா கதாபாத்திரம் குறித்து?

ரேவதி: அஞ்சலி திரைப்படம்தான் நான் முதன் முதலாக அன்னை கதாபாத்திரத்தில் நடித்த படம். அந்த வயதுக்குண்டான அம்மா கதாபாத்திரத்தை நான் ஏற்று நடித்தேன். என்னைப் பொறுத்தவரை மணிரத்னத்தின் வார்த்தைகள், அவருடைய எழுத்துக்கள் ஆகியவைதான் அப்படத்தில் என்னை உருவாக்கின.

பொதுவாக எனக்குக் குழந்தைகளை மிகவும் பிடிக்கும். அவர்களுடன் சேர்ந்து நடிப்பது எளிதானது. அவருடைய எழுத்துக்களுடன் என்னைச் சுற்றி நான் பார்க்கும்போது அன்னையரின் உள்ளுணர்வை புரிந்து கொண்டு அதையே அந்தக் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தேன். அது இளம் குழந்தைகளுக்கானது.

"அம்மா - மகள் உறவு அலாதியானது" நடிகை ரேவதியின் நேர்காணல்

மார்கரிடா வெளிவந்தபோது சரியாக 20 ஆண்டு இடைவெளி இருந்தது. இத்திரைப்படத்தில் மீண்டும் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும்போது ஷொனாலியின் மிகச் சிறப்பான எழுத்துக்கள், என் வயது, தொடர்ந்து மாற்றுத் திறனாளி குழந்தைகள் அமைப்புடன் பணிபுரிந்த எனது அனுபவம், இக்குழந்தைகளின் அம்மாக்களின் உள்ளுணர்வை அறிந்து கொள்ளும் அனுபவம் ஆகியவை நான் அக்கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்யக் காரணமாக இருந்தன.

செல்லமே: ஒரு தாயாக உங்கள் அனுபவம்?

ரேவதி: ஒரு அம்மாவாக இருப்பது மற்ற அனைத்தையும் விட மிகவும் உயர்வான விஷயம். என் மஹி நான் மிகவும் ஆசைப்பட்டுப் பிறந்தவள். அவள் பிறந்த அந்தக் கணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. என் மகள் மஹி... அவளை என் கையில் ஏந்தியபோது சொர்க்கமே என் கையில் அழகான பரிசாக அவளைக் கொண்டு வந்து கொடுத்தது போன்றதோர் உணர்வு. அம்மா என்ற பகுதி என் வாழ்க்கையில் மிகவும் தாமதமாக வந்தபோதும் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ஆனால், இந்த வயதில் ஒரு குழந்தை. அவள் மனதில் ’என்ன நமக்கு மட்டும் இவ்வளவு வயதான அம்மாவா?’ என்ற எண்ணம் இருக்கிறதா என்றுகூட எனக்குத் தெரியாது. அவள் வளரும்போது எனக்கு வயதாகிவிடும். அந்தகால கட்டங்களில் அவளுக்குள் கேள்விகள் எழும். அக்கேள்விகளை என்னிடம் கேட்கும்போது என்ன பதில் சொல்வது? இப்படியெல்லாம் எண்ணம் ஓடிய போதிலும் சற்றே சுயநலம் இருக்கவே செய்கிறது.

என்னைப் பொறுத்தவரை என் குழந்தை என் வாழ்க்கையில் வந்தது என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் என்பேன். மீண்டும் ஒரு பிறப்பு என்றுகூட சொல்லலாம். எல்லாமே மகிழ்ச்சியான தருணங்கள்தான் என்றெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால் என் குழந்தையை நான் துளித் துளியாக ரசிக்கிறேன். அந்த உணர்வை நான் அனுபவிக்கிறேன். இந்த உணர்வையும், மகிழ்ச்சியையும் எந்தத் திரைப்படமோ, எழுத்தோ- கொடுக்க முடியாது.

செல்லமே: உங்களது அழகான தருணங்கள் எவை?

ரேவதி: மிக அழகான தருணங்கள் என்றால் அவள் நடு இரவில் இருட்டில் என்னைத் தேடி தன் கைகளுடன் பிணைத்துக் கொண்டு உறங்கும் அந்தத் தருணங்கள்தாம். அவை என்னை மிகவும் ஆட்கொள்பவை.

செல்லமே: கேட்ஜட்கள் குறித்துச் சொல்லுங்கள்!

ரேவதி: கேட்ஜட் மோகம் என்பது மிகப் பெரிய சவால்தான். முதலில் எடுத்ததும் கேட்ஜட்டுக்கு ‘நோ’ சொல்வதை விடுத்து, ”கண்ணா, தோட்டத்தில் அன்னிக்கு போல ப்ளாண்ட் நடலாம் வர்றியா?” என்றோ, ”காய் கட் பண்ணலாம் வர்றியா?" என்றோ நான் கேட்பதுண்டு. அவ்வளவுதான்... கையிலிருக்கும் கேட்ஜட்டை கீழே வைத்துவிட்டு ”போகலாம் வாங்க" என்று எழுந்துவிடுவாள். இப்படிக் குழந்தைகளின் கவனத்தை மாற்றினாலே போதும். இதற்கு அதிகபட்ச பொறுமை வேண்டும்.

அதேபோல், இதுவரை எதற்காகவும் மஹி என் போனை கேட்டதில்லை. மொபைல் போன் பெரியவர்களுக்கானது என்று அவள் மனதில் பதிய வைத்திருக்கிறேன். பிஸியாக இருந்தாலுமே ”நோ" தான்.

செல்லமே: மஹியிடம் மிகுந்த கண்டிப்பு காட்டுவதுண்டா?

ரேவதி: குழந்தைகளை அளவுக்கு அதிகமாகக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைப்பது தவறானது. என் குழந்தையின் இயல்பை எனக்காக மாற்றிக் கொள்ளச் சொல்ல முடியாது. குழந்தை, குழந்தையாக வளர வேண்டும் என்பதுதான் என் ஆசை. என் மகளையும் அப்படித்தான் வளர்க்கிறேன்.

செல்லமே: உங்கள் வீட்டில் ‘முடிவெடுப்பவ’ர் யார்?

ரேவதி: குழந்தையைக் குறித்து முடிவெடுக்கும் விஷயத்தில் என்னைத் தவிர என் சகோதரி மட்டும்தான் முடிவுகளை எடுப்பார். மற்றவர்களின் அறிவுரைகளில் தேவையானதை எடுத்துக் கொண்டு மற்றவற்றைக் காற்றிலே கரைய விட்டுவிடுவேன்.

செல்லமே: அம்மா - குழந்தை உறவு எப்படிப்பட்டது?

ரேவதி: அம்மா -குழந்தை இருவருக்குமான உறவு மிகவும் அற்புதமானது. அவர்களது புரிதலும் அப்படிப்பட்டதுதான். என்றாவது மிகவும் களைப்பாக இருந்தால் ”கண்ணா எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. நான் ஒரு மணி நேரம் ஓய்வெடுக்கிறேன்" என்று சொன்னால் அவள் அதைப் புரிந்து கொண்டு என்னைத் தொந்தரவு செய்யாமல் இருப்பாள். அதே சமயம், சரியாக ஒரு மணி நேரம் கழித்து வந்து என்னை அழைக்ககவும் மறக்கமாட்டாள். அம்மா -குழந்தை இவ்விருவரின் உலகம் மிகச் சிறியது. இது சரியாக இருந்தாலே அம்மா- அப்பா, இருவருக்கும் இடையேயான இணைப்பு சரியாக இருக்கும் என்பது என் எண்ணம்.

செல்லமே: உங்களின் பல வேலைகளுக்கிடையே ஏற்படும் அழுத்தத்தை எப்படி கையாளிகறீர்கள்?

ரேவதி: இது போன்ற சமயங்களில் முதலில் செய்ய வேண்டியவற்றைக் குறித்துப் பட்டியிலடுவேன். நான் மட்டுமல்ல, எல்லா அம்மாக்களும் இதுபோலப் பட்டியல் போட வேண்டும்.

அந்தப் பட்டியலில் எனக்கு எது முக்கியம், எதை முதலில் செய்ய வேண்டும் என்பதை நான் பார்க்க வேண்டும். மொத்தத்தில் வாழ்க்கையை பேலன்சிங்காக நடத்துவது மிக முக்கியம்.

செல்லமே: மஹிக்கு என்னவெல்லாம் பிடிக்கும்?

ரேவதி: இந்த வயதில் அவர்களுக்கு என்று ஒரு முறை இருக்கிறது. இதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் மிக மிக முக்கியமானது. அதைவிடுத்து நாம் நினைப்பதை அவர்கள் விளையாட வேண்டும் என்று அதை அவர்களிடம் திணிக்கக் கூடாது.

அவளுக்கு வரைவதும் சமைப்பதும் பிடித்தமான விஷயமே. சமையலில் எனக்கு சின்னச் சின்ன உதவிகளைச் செய்யும் பழக்கம் அவளுக்கு உண்டு.சாப்பிட்டபின் அவள் தட்டைக் கொண்டுபோய் சமையலறையில் உரிய இடத்தில் வைக்கும் பழக்கமும் அவளுக்கு உண்டு. ”இன்டியன்ஸ் ஆர் சோ பார்சியல் டூ யுவர் டாட்டர்ஸ்" என்பாள். (ஆண் பிள்ளைகளுக்கு எதுவும் சொல்லிக் கொடுப்பதில்லையாம்!)

பொதுவாக எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயது வரை அம்மாவின் தேவை மிக முக்கியம். அந்தக் காலகட்டங்களிலேயே குழந்தை தனக்கு உண்மையிலேயே எது வேண்டும், வேண்டாம் என்று பிரித்தறிந்து சொல்வதைக் காணலாம். மஹி, இப்போதே தனக்கு இதுதான் பிடிக்கும், இதெல்லாம் பிடிக்காது என்ற தெளிவுடன் இருக்கிறாள். என் மகள் மிகவும் புத்திசாலி. எதையும் கவனித்து உள்வாங்கிக் கொள்வாள். அவளுக்கு என்ன வேண்டும் என்பதை நான் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.

"அம்மா - மகள் உறவு அலாதியானது" நடிகை ரேவதியின் பிரத்யேக பேட்டி

"அம்மா - மகள் உறவு அலாதியானது" நடிகை ரேவதியின் நேர்காணல்

செல்லமே: படிப்பு ?

ரேவதி: படிப்பு... அதுவும் மிகப்பெரிய சவால்தான். நம்மைக் குழந்தையுடன் இணைக்கக்கூடிய பாலம் இது. அது அழகானது. அவளுக்கான சுதந்திரத்தை நான் எப்போதும் கொடுப்பேன். நம் மொத்த பொறுமையையும் சோதனை செய்யக்கூடிய ஒரே விஷயம் இது.

அவளுக்கு 20 வயதாகும் போது நான் மிகவும் வயதானவளாகியிருப்பேன். மஹியின் எதிர்காலம் குறித்த அனைத்தையுமே திட்டமிட்டு வைத்திருக்கிறேன். அவள் உயர்கல்வி படிக்கச் செல்லும் காலத்தில் அதற்கான போதிய பொருளாதார வசதியும் என்னிடம் உண்டு.

செல்லமே: நீங்கள் சொன்ன எதிலுமே பிரபலத்தின் பெண் என்ற அடையாளமே தெரியவில்லையே!

ரேவதி: எங்கள் வீடு மிகவும் சாதாரணமானதுதான். என் அம்மா எனக்கு என்னவெல்லாம் செய்தாரோ, அவற்றையெல்லாம் நான் என் மகளுக்கு செய்கிறேன். நடிப்பு என்பது என் தொழில், அவ்வளவுதான். வீட்டுக்குள் நுழைந்தால் நான் ஒரு சாதாரணப் பெண். எனது நட்பு வட்டத்திலும் அதை நான் கடைபிடிக்கிறேன். அதனால்தான் என்.ஜி.ஓ.க்களில்கூட என்னால் பணியாற்ற முடிகிறது. அவர்களுக்கும் என்னை மிகவும் சாதாரணமானவளாக மட்டுமே தெரியும்.

செல்லமே: தொண்டு நிறுவனப் பணி குறித்துச் சொல்லுங்கள்.

ரேவதி: நான் பணிபுரிந்து கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். மஹி வந்தபின் எல்லோரிடமிருந்தும் விலகி என் குழந்தையுடன் மட்டும் செலவழிக்க மட்டுமே இந்த நாட்கள். எனக்கு வேறு எதற்கும் நேரம் இல்லை. நான் என் மகள், என் பெற்றோர், என் தொழில் ஆகியவை மட்டும்தான். ”உங்களுக்கு என் உதவி தேவை எனில் என்னைக் கூப்பிடுங்கள்” என்று கூறிவிட்டு எல்லாவற்றிலிருந்தும் விலகி வந்துவிட்டேன்.

செல்லமே: உங்கள் நேரத்தை எப்படி செலவிடுகிறீர்கள்?

ரேவதி: என் தொழிலில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், எனக்கான முடிவுகளை நான் எடுக்க முடியும். அதன்படி நான் சனி, ஞாயிறுகளில் பணிக்கு வர இயலாது என்று கட்டாயமாகச் சொல்லிவிடுவேன். அந்த இரண்டு நாட்களும் என் மகளுடன்தான் இருப்பேன். அந்த இரு நாட்கள் எங்களுக்கே எங்களுக்கானவை.

செல்லமே: உங்களுக்கென்று செலவிட நேரம் தேவைப்படுமே! அதை எப்படி சமாளிக்கிறீர்கள்?

ரேவதி: நீங்கள் உங்களுக்கான நேரத்தை ஒதுக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் தவறேதும் இல்லை. அதற்காக வருந்தவும் அவசியமில்லை.

செல்லமே: பயணங்கள்?

ரேவதி: நானும் மஹியும் கேரளாவுக்குச் சென்றோம். மிக அற்புதமான பயணம் அது. கூகுள் மேப் கற்றுக் கொடுத்திருக்கிறேன். அவளே வாகனம் எந்தப் பாதையில் போகிறது என்று பார்த்துவிடுவாள். இங்கிருந்து பாண்டிச்சேரிக்கு அடிக்கடி செல்வதுண்டு. சில நேரம் கதைகள் கொண்ட சிடியை காரில் போட்டு மஹியைக் கேட்க வைப்பதுண்டு. அதிலிருந்து கேள்விகள், அதன் பின் அக்கதை குறித்த பேச்சு. பாட்டு இப்படி பயணத்தில் நிறைய விஷயங்கள் உண்டு.

செல்லமே: உங்கள் மகளை எப்படி வளர்க்க ஆசைப்படுகிறீர்கள்?

ரேவதி: என் மஹி படிப்பில் முதலாவதாக வரவேண்டும், மற்ற விஷயங்களில் 'இந்த இடத்தைப் பிடிக்க வேண்டும்’ என்ற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. என் மஹி உண்மையானவளாக இருக்க வேண்டும். தன்னிடம் உண்மை பேசுபவளாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசையே!

’தவறு செய்கிறாயா? அதை எதிர் கொள். அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்’ மஹிக்கு நான் கற்றுக் கொடுக்க விரும்புவது இதைத்தான். என் குழந்தை தோல்வியை எதிர்கொள்ளக் கற்க வேண்டும். பெற்றோர் அவரவர் குழந்தைகளுக்கு என்ன திறமை இருக்கிறதோ அதைத்தான் ஊக்குவிக்க வேண்டுமே தவிர மற்றவர்களோடு ஒப்பிடக்கூடாது.

எல்லா நேரமும் எப்படி சரியானவனாக/வளாக இருப்பது என்று சொல்லிக் கொடுப்பதற்கு பதில் எப்படி வலுவாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள். இதை நாம் வீட்டில்தான் கற்றுக் கொடுக்க வேண்டும். வேறு வழியில்லை.

செல்லமே: உங்களுக்குப் படிக்கப் பிடிக்குமா? உங்கள் இருவருக்கும் பிடித்த புத்தகம் எது?

ரேவதி: படிப்பதும் எழுதுவதும் எனக்குப் பிடிக்கும். மிகமிகப் பிடித்தமான புத்தகம் என்பது மாறிக் கொண்டே இருக்கிறது. இப்போது ‘Dr seuss எழுதிய புத்தகங்கள் எல்லாம் மிகவும் பிடித்தவை. அது ரைமிங் ஆக இருக்கும் அதனால் மஹி சந்தோஷமாகவே பாடுவாள். பல மொழி புத்தகங்களையும் அவள் படிக்க கற்றுக் கொடுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

செல்லமே: நட்பு வட்டம் குறித்துச் சொல்லுங்களேன்!

ரேவதி: நம் நட்பு வட்டத்தில் 4,5 பேராவது இருக்க வேண்டும். இதை நான் மிகவும் தனிமையாக இருந்தபோது உணர்ந்தேன். அப்பொழுது என் சகோதரி என் தலையில் தட்டிச் சொல்லிக் கொடுத்தாள். எல்லாவற்றையும், எல்லா நேரமும் நானாகத்தான் வந்து கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே. முதலில் உன் தேவையை நீ கேட்கக் கற்றுக் கொள்" என்று சொல்லிக் கொடுத்தாள். அப்போது கற்றுக் கொண்டேன், பரஸ்பரம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளக்கூடியதுதான் நட்பு என்று.

செல்லமே: திடமான பெண் என்பவள் யார்?

ரேவதி: பொருளாதாரம் மட்டுமே ஒரு பெண் சுதந்திரமானவள் என்று சொல்லப் போதுமானது கிடையாது. சுதந்திரம் என்பது பல முகங்களைக் கொண்டது. நம் முன்னோர்களைப்போல் நாம் இல்லை. அவர்களிடம் இருந்த தெளிவு நம்மிடமில்லை. வேண்டும், வேண்டாம் என்பதிலேயே நமக்குக் குழப்பம். எதைச் சொன்னால் தப்பாக நினைத்துக் கொள்வார்கள் என்ற எண்ணமே ஓடிக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து நாம் விடுபட்டு வெளிவரவேண்டும். இன்றைக்கு நினைப்போம். அது நாளைக்கு நடக்காது. நானும் சாதாரணமானவள்தான். என் வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் உண்டு. எனக்கும் கலவையான உணர்வுகள் உண்டு.

செல்லமே: உங்கள் பெற்றோர் குறித்துச் சொல்லுங்கள்.

ரேவதி: என் எல்லா நேரங்களிலும் என்னோடு பொறுமையாக இருந்தவர்கள் என் பெற்றோர். அவர்களின் ஆதரவு, அவர்கள் எனக்கு அளித்த பாதுகாப்பு ஆகியவற்றால் நான் உடலாலும் மனதாலும், பொருளாதார ரீதியிலும் திடமானவளாக இருக்கிறேன். என் அம்மா, அப்பா எனக்குக் கொடுத்த அதே பாதுகாப்பை நான் என் குழந்தைக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.

செல்லமே: ஹெச்.ஐ. வி விழிப்புணர்வுக்கு நீங்கள் உதவியது, என். ஜி. ஓ பணி ஆகியவற்றைப்பற்றிச் சொல்லுங்கள்.

ரேவதி: எனது பிரபலத்தை பயன்படுத்தி மக்களிடத்தில் இதற்கான விழிப்புணர்வை கொண்டு சென்றால் அது சரியான இலக்கை அடையும் என்பதை அறிந்தேன். திரைப்படத்தைத் தாண்டி என்னை மனிதாபிமானமுள்ள ஒருத்தியாய் உருவாக்கியவை இதுபோன்ற அமைப்புகள்தாம்.