ஃபேஸ்புக் தலைமுறையின் பிரச்னைகள்!

சமூக ஊடகங்கள் நம் குழந்தைகளை ஆளும் காலமிது. இதன் சாதக-பாதகங்களை நாமும் நம் பிள்ளைகளும் அறிந்திருக்கிறோமா?

By அருணா ரகுராம்  • 10 min read

ஃபேஸ்புக் தலைமுறையின் பிரச்னைகள்!

இணையமும் சமூக வலைத்தளங்களும் பல கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் பெரிய பிரச்னையாக இன்று பார்க்கப்படுகிறது. மாணவர்களும் மாணவிகளும் பள்ளிகளுக்கு மொபைல் போனைக் கொண்டுவருவதற்கு ஒருபுறம் தடை இருப்பதைப் போலவே, ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் புழங்குவதையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றனர். இதையெல்லாம் மீறி, இளைஞர்கள்தான் சமூக வலைத்தளங்களில் குவிந்திருக்கின்றனர். ’ஃபேஸ்புக் தலைமுறை’ என்றே இந்தத் தலைமுறை அழைக்கப்படுகிறது.

டீன் ஏஜ் வயதினர் மட்டுமல்ல, எட்டு முதல் 13 வயது வரையுள்ள ப்ரீ-டீன் ஏஜ் வயதினரும் ஃபேஸ்புக் பைத்தியம் பிடித்து அலைகின்றனர். இதனால், எண்ணற்ற கவலைகள் பெற்றோரையும் ஆசிரியர் சமூகத்தையும் பிடித்து ஆட்டுகிறது. சமூக வலைத்தளங்களின் அதீத பயன்பாடு பற்றி பல ஆய்வுகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. அவை தெரிவிக்கும் தகவல்கள் பெரிதாக பயப்படும்படி இல்லை; அதேசமயம் நம்பிக்கை அளிப்பதாகவும் இல்லை.

தொடர்பு கொள்ளுவதில் சிக்கல்

எப்போதும் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்துகொண்டு நண்பர்களோடு பேசவும் பழகவும் செய்யும் இளைஞர்கள், அவர்களை மற்றவர்கள் நேரடியாகத் தொடர்புகொள்ளும்போது தவிர்க்கின்றனராம். அமெரிக்காவில் உள்ளது வர்ஜினியா பல்கலைக்கழகம். அதில் உள்ள பேராசிரியர் கெல்லி க்ரோலே என்பவர் இதைப் பற்றிப் பேசும்போது,  “மாணவர்கள் என்னோடு நேரடியாகப் பேச கூச்சப்படுகின்றனர். எப்போதும் கம்ப்யூட்டருக்குப் பின்னே ஒளிந்துகொள்ளும் மனோபாவம் கொண்டதால் அவர்களிடம் நேருக்கு நேர் பேசும் தன்மை குறைந்துவிட்டது. இப்படி நேரடியாக ஒருவரைச் சந்தித்துப் பேசும் திறன் இல்லையென்றால், இன்டர்வியூக்களை எப்படி சமாளிப்பார்கள்?”

பாடி-லேங்குவேஜ் தெரிவதில்லை

ஒருவருடைய பேச்சைவிட, அவருடைய பாடி-லேங்குவேஜ் முக்கியம். எதைச் சொல்லும்போதும் கூடவே சிரிப்பார்கள், அல்லது எரிச்சல்படுவார்கள், தோளைக் குலுக்குவார்கள், அல்லது கைகளை அசைப்பார்கள். இதெல்லாம் பேசுபவர்  சொல்லும் செய்தியைவிட வலுவானது. அவருடைய குணத்தையும் எண்ணங்களையும் அது தெளிவாகப் புரியவைத்துவிடும். ஆனால், கம்ப்யூட்டர் முன்னால் எப்போதும் எழுத்துகளையே பார்த்துக்கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட நான் - வெர்பல் கம்யூனிகேஷனே புரியாமல், தெரியாமல் போய்விடலாம்.

எப்போதும் கம்ப்யூட்டர் முன்னாலேயே உட்கார்ந்திருப்பது இன்னொரு பிரச்னையையும் கொண்டு வரும். முக்கியமாக, கம்ப்யூட்டர் இல்லாமல் வெளியே சக மனிதர்களோடு பழகவேண்டிய சூழல்களில் அவர்களுக்கு எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரியவில்லை.

மொழி சிதைகிறது

இன்னொரு மிகப் பெரிய பிரச்சனை, மொழி. அவர்கள் எழுதுவது பிரிட்டிஷ் இங்கிலீஷும் இல்லை, அமெரிக்கன் இங்கிலீஷும் இல்லை. சமூக வலைத்தளங்களில் எழுதப்படும் ஆங்கிலத்துக்கு இலக்கணமே இல்லை என்று  சொல்லிவிடலாம். எல்லாவற்றையும் சுருக்கி 140 எழுத்துகளுக்குள் (டிவிட்டரில் 140 எழுத்துகள்தான்) எழுத வேண்டும் என்பதால், புதுவித ஆங்கிலத்தை இளைஞர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். அதை எழுதப் பழகியபின்னர், பள்ளிகளில், கல்லூரிகளில் ஒழுங்கான இலக்கண சுத்தமான கட்டுரைகளோ, பிற விடைகளோ எழுத திணறுகிறார்கள். அதேபோல், அவர்களுடைய கையெழுத்தும் திருத்தமாக, அழகாக இருப்பதில்லை; புரியும்படி இருப்பதில்லை. விளைவு, மோசமான ஆங்கிலம், மோசமான மதிப்பெண்கள்.

தனிமை

எல்லாவற்றையும் விட மிக முக்கியமான பிரச்னை, தனிமை. நாலு பேர் நடுவேதான் இருப்பார்கள். மற்றவர்கள் பேசி சிரித்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், சமூக வலைத்தளங்களின் போதையில் மாட்டிக்கொண்ட இளைஞர்கள், அந்தக் கூட்டத்தின் நடுவே கூட, தன் மொபைல்போனில் ஃபேஸ்புக் ஸ்டேடஸ்  ம் மெசேஜ் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். சுற்றியிருக்கும் சமூகம் பற்றிய கவனம் முற்றிலும் போய்விடும்.

அபாயமான தகவல்கள்

சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்களும் வெட்டி அரட்டையும்தான் அதிகம். அதேபோல், அவர்களுக்குத் தேவையற்ற அபாயமான விஷயங்களும் தெரிய வருகின்றன. கம்ப்யூட்டர் முன்னாடியே உட்கார்ந்திருப்பதால், வேறு விளையாட்டுகளிலோ உடற்பயிற்சிகளிலோ அவர்கள் ஈடுபடுவதே இல்லை.. அது அவர்களுடைய ஆளுமை வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த மன நல ஆலோசகர் சரஸ் பாஸ்கர்ஙெ்ன்னை.

ஒருவகையில், இப்படி மற்றவர்களோடு பழகும்போது, அவர்கள் தங்களுடைய அழுத்தம், டென்ஷன் போன்ற பிரச்னைகளைச் சமாளித்துக்கொள்கின்றனர். அதே சமயம், அதுபோன்ற பிரச்னைகள் தீர்வதில்லை, அதைப் பற்றிப் பேசிப் பேசி மேன்மேலும் குழப்பத்தையே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் என்கிறார்கள் சிலர்.

தகாத நட்புகள்

டீன் ஏஜ் வயதுக்காரர்களுக்குத் தங்களுக்கு என்று ஒரு சுய பிம்பம் அவசியம். அதை இந்த சோஷியல்  நெட்வொர்க்கிங் தளங்கள் மூலம் கண்டடைகிறார்கள். அப்பாவும் அம்மாவும் வேலைக்குப் போகும் ஒரே குழந்தையுடைய குடும்பங்களில், அந்தப் பிள்ளைக்கு தனிமையே அதிகமாக இருக்கும். அவனோ, அவளோ, சமூக வலைத்தளங்களில் எல்லோருடனும் பழக ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களுடைய உணர்வுரீதியான தேவைகளுக்கு சமூக வலைத்தளங்கள் வடிகாலாக இருப்பது உண்மைதான். மேலும் கூச்ச சுபாவம் உடையவர்களே எளிதில் ஆன்லைன் நண்பர்களாக ஆகிவிடுவார்கள் என்கிறார் அகமதாபாதில்  உள்ள மகாத்மா காந்தி இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் அஞ்சு முஸாஃபி. .

பழகத் தெரிவதில்லை

ஆனால், இளைஞர்களுக்கு இணையதளங்கள் மூலம் சகமனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் பக்குவமோ, நெருக்கமோ கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. நேரடியாக பழகும்போது கிடைக்கும் பக்குவம், நெருக்கம் இங்கே மிஸ்ஸிங்! அதேபோல், பெற்றோரைவிட நண்பர்களோடு ஆன்லைனில் பழகும் நேரமே அதிகம். ஆன்லைன் நட்பு அவ்வளவு வலுவாக இல்லை என்று பல ஆய்வுகள் கண்டுபிடித்திருக்கின்றன. நேரடியாக கொள்ளும் நட்பைவிட, ஆன்லைன் நட்பு பொய்யாகவும் வலுவில்லாமலும் இருக்கிறதாம். ஆன்லைன் நண்பர்களை நேரே பார்க்கும் சமயங்களில், ’இவரிடமா இவ்வளவு காலமும் பேசிக்கொண்டு இருந்தோம்’ என்று ஒருவித வெறுப்பு ஏற்பட்ட ங்ம்பவங்களும் உண்டு.

படிப்பில் ஆர்வம் குறைதல்

சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு அதிகமாக அதிகமாக, மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் குறைந்துபோய்விடுகிறது. எதையும் ஆழமாகப் படிக்கவேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் போய்விடுகிறது. எல்லாமே நுனிப்புல் மேய்தல். அதேசமயம், எல்லாவிஷயங்களையும் தெரிந்துகொள்கிறார்கள் என்பதும் உண்மை. ஆழமற்ற அகலத்தால் என்ன பிரயோஜனம்? -என்று கேட்கிறார் டாக்டர் தர்ஷன் ஷா.

ஃபேஸ்புக் தலைமுறையின் பிரச்னைகள்!

நன்மைகளும் உண்டு

இதற்கு மாற்றான கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. சமூக வலைத்தளங்களின் மூலம், தம்  சொந்தத் திறன்களை வெளிப்படுத்தவும் பிரபலமடையவும் பல இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பலர் தங்கள் பாடல் ஆல்பங்களை, ஓவியங்களை, இதர கலைத்திறமைகளை ஆன்லைனில் வெளியிட, அதன் மூலம், வெளியுலகுக்குத் தெரிய வந்திருக்கின்றனர்.

பீடியாட்ரிக்ஸ் ஜர்னல் என்ற ஆய்விதழ் சொல்லும் செய்தி சுவாரசியமானது. உள்ளூர், நாடு, உலக விஷயங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பேசப்படுவதால், விவாதிக்கப்படுவதால், இளைஞர்களின் கண்ணோட்டமும் அறிவும் விங்ாலமாகிறதாம். தங்கள் ஹோம் ஒர்க், பிராஜக்ட் ஒர்க், அசைன்மெண்ட்கள் பற்றியும் மற்றவர்களோடு பேசி மேன்மேலும் விவரங்களைச் சேகரித்துக் கொள்கின்றனராம்.

சமூக வலைத்தளங்களில் உள்ள ஒரு முக்கிய பிரச்னை, நீங்கள் என்ன எழுதுகிறீர்களோ, அதெல்லாம் அப்படியே அங்கேயே இருக்கும் என்பதுதான். பல ஆண்டுகள் கழித்தும் நீங்கள் எழுதியவற்றை கூகுள் செய்து கண்டுபிடித்துவிடலாம். டிஜிட்டல் காலடிச்சுவடு என்று இதற்குப் பெயர். பல பெரிய நிறுவனங்கள், ஆளெடுக்கும்போது, கேண்டிடேட்டுகளின் டிஜிட்டல் ஃபுட்பிரிண்ட்டைத் தேடுகின்றனவாம்.

நீங்கள் அதுநாள் வரை எப்படிப்பட்ட நபராக இருந்தீர்கள், என்னென்ன விஷயங்களைப்பேசினீர்கள், யாரோடு மோதினீர்கள், என்ன கருத்துகளைக் கொண்டிருந்தீர்கள் என்றெல்லாம் கண்டுபிடித்து, உங்களை வேலைக்கு தேர்வு செய்யலாமா வேண்டாமா என்று முடிவு  செய்கிறார்களாம்.

பல ஆண்டுகள் ஆசிரிய அனுபவம் கொண்ட, மொழிப் பயிற்சியாளரான மீரா மாடப்பா சொல்வது இங்கே கவனிக்கத்தக்கது.  சமூக வலைத்தளங்களின் பாதிப்பால், மாணவர்களை நேருக்கு நேர் பார்த்துச் சொல்லிக்கொடுக்கும் முறையின் அருமை யாருக்கும் புரிவதில்லை; அதேபோல், நின்று நிதானமாக ஆய்வு செய்யவும் புரிந்துகொள்ளவும் தேவையான பொறுமை முற்றிலும் போய்விட்டது. விளைவு, மாணவர்களால்,சிறந்த ஆய்வாளர்களாக ஆக முடியாது போய்விடலாம். 

கல்வியிலும் சமூகப் பழக்கவழக்கங்களிலும் இளைஞர்கள் பின்தங்கிவிடக் கூடிய அபாயம் சமூக வலைத்தளங்களால் ஏற்படாமல் இல்லை. அதே சமயம், எந்த அறிவியல் முன்னேற்றத்தையும் புரிந்துகொண்டு, தேவைக்கேற்பபயன்படுத்தினால், அதனால் விளையும் பலன்களும் ஏராளம். சமூக வலைத்தளங்கள் இதற்குச் சரியான உதாரணம்!